November 18, 2021

ஆண்டவனும் நானும்

ஆண்டவன் அருளால்
தாண்டவம் ஆடுவதாக
மகிழ்ச்சி வாழ்விலென
மனமார வாழ்த்தினார்

மகிழ்ச்சியும் வாழ்வும்
தாண்டவமும் அருளும்
புரிந்த எனக்கு ஒன்று
புரியவில்லை யாரந்த

ஆண்டவன் அவனும்
நீண்டகாலம் முன்னே
ஆண்டவனா நாட்டை
ஆட்சியில் கடந்தகால

இறந்தகாலத்தில் வரும்
இவன் இன்றும் ஆளும்
இல்லை ஆளப்போகும்
இன்னொரு அவதாரமா

நேற்றைய ஆண்டவனின்
இன்றைய தேடலில் நாம்
சுயநலப் பேய்களாய் மாறி
பணப் பேய்களாய் திரிந்து

ஆள்பவர் காலில் விழுந்து
ஆசிகள் பெற்று சொல்வது
ஆண்டவன் அருளால் என
தாண்டும் பாம்புக் கயிறாய்

November 15, 2021

கடவுள் இல்லை

காலையில் பிள்ளையார்
கோயிலில் பூசை செய்து
மாலையில் ஆஞ்சநேயர்
கோயிலில் வடைமாலை

சார்த்தியும் குடும்பத்தில்
பார்க்கவே முடியவில்லை
நிம்மதி மகிழ்ச்சி சிரிப்பை
வெகுமதி நல்வளர்ச்சியை

வேண்டும் தெய்வங்களின்
சுயவிபரம் வரசித்தி படித்து
வட இந்திய சாய்பாபாவை
திடமாக நம்பினேன் ரொம்ப

காலம் பலன் தந்த பாபாவும்
ஆலகால கோவிட் வந்தபின்
சீலம் குறைந்து போனாரோ
மேல வீதி ராமரைப் பார்த்து

நாலு கேள்வி நறுக்கென்று
நானும் கேட்டிடலாம் என்று
எட்டி நடை போட்டேன் என்
எதிரில் வந்தார் கறுப்பில்

சட்டை போட்டு கண்சிவந்த
குட்டைத் தோழர் ஒருவரும்
கடவுள் இல்லை இல்லவே
இல்லை பகுத்தறி என்றார்

அறிவில் உண்டோ பகுத்த
மற்றும் பகுக்காததும் சுட்ட
பழம் சுடாத பழம் போலவும்
பழனியப்பன் ஔவையின்

உரையாடல் போல கடவுள்
இல்லை என்பதை கடவுள்
கோயிலில் மட்டும் இல்லை
சிலையினுள் ஒளிந்திடவும்

இல்லை என்றும் நம்பிக்கை
மூடம் ஆகும்போது மனிதன்
முடம் ஆகிறான் சொன்னது
கடவுள் மறுப்பின் பெரியார்

கடவுள் மறுப்பு மனிதத்தின்
திடமான ஏற்பு உனக்குமுன்
உள்ள மனிதனை நம்பாமல்
உள்ளத்தில் உள்ளதாக ஒரு

இறையை நம்புகின்றாயோ
திரையை செலுத்துவாயோ
திரை விலக்கி தரை பார்க்க
விரைவில் வரும் பகுத்தறிவு

என் பக்கம்

எத்தனையோ ஆண்டுகள்
புத்தகங்களைத் படித்தேன்
மதிப்பெண் மூலம் எனது
விதிப்பயன் மாற்றினேன்

வாழ்க்கையெனும் புத்தகம்
வாழ்ந்து பார் நீயும் என்றது
அதில் ஒரு பக்கம் முடிந்து
அடுத்த பக்கம் தொடங்குது

இறைவன் என் பக்கமா என
இன்னொரு பக்கம் தேடும்
இனிய பொழுதிலே வந்த
இந்த சிந்தனையும் தந்தது

படிப்பினை புத்தகம் மட்டும்
படித்தால் போதாது மனிதம்
படித்து உணர்தல் வேண்டும்
படிப்படியாய் பணி செய்திட

மனிதர் என் பக்கம் இருக்க
இனி நான் அவரை மட்டுமே
புனித நூலாய் படித்திருக்க
கனிந்தது காலம் இப்போது







October 26, 2021

காதில் விழும் கதைகள்

காதில் விழும் கதைகள்
தமாம் பாலா

பிரபஞ்சம் உங்களிடம் பேசி இருக்கிறதா? கதை சொல்லி இருக்கிறதா? என்னிடம் சொல்கிறது.

நான் எதிர்கொள்ளும் மனிதர்கள் ஏன் பூனை நாய் கூட தங்களது கதையை பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளனர். நாம் தான் 'சாரி நான் ரொம்ப பிசி' என்று அவர்களை வெட்டி விடுகிறோம்.

மலேசியா தமிழ் நண்பர் ஒருவர் எனக்கு சைகானில் பழக்கம், அவர் சொன்ன ஒரு கதை இது.

மலேசியாவுக்கு ஒரு செட்டியார் தமிழ்நாட்டில் இருந்து கோபித்துக் கொண்டு வந்து விட்டாராம், மனைவியை பிரிந்து. 35 வருடம் இந்தியாவுக்கே போகவில்லையாம். மலேசியாவில் உழைத்து வணிகம் செய்து வீடுவாசல் என்று நல்ல வசதியாம். நம்ம மலேசியா தம்பி செட்டியாருக்கு வயிற்றில் பிறக்காத செல்லப்பிள்ளை. நல்ல அன்னியோனியம் அவர்கள் இடையே. 

இது ரொம்பவும் பழைய கதை, பின்னாளில் செட்டியாருக்கு இனிப்பு நோய் காரணமாக ஒரு காலை வெட்டியதும், பின்னர் தமிழ்நாட்டில் இருந்து அவர் மனைவி வந்து அவருடன் மலேசியாவில் சேர்ந்து கொண்டதும் நடந்த கதை. செட்டியார் இப்போது இல்லை, அவர் காலமாகி பல வருடங்கள் ஆகி விட்டது.

இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்பார்கள். வாழ்க்கையில் நடக்கும் கதைகள் சினிமா போலவே சுவாரஸ்யமானவை என்பது என் எண்ணம், அனுமானம். உங்கள் கதை எப்படியோ அது எனக்குத் தெரியாது.

கதை தொடரும்
தமாம் பாலா 23.09.2021 வியட்நாம்

டனா தெரு

டனா தெரு
தமாம் பாலா

1978ம் ஆண்டு; அப்போது நான் ஏழாவதோ எட்டாவதோ படித்ததாக நினைவு. தஞ்சாவூரில் ராணி வாய்க்கால் சந்தில் எங்கள் வாசம். சியாமளா தேவி கோயிலை ஒட்டி கார் போக இயலாத சிமண்டு போட்ட சைக்கிள் ஸ்கூட்டர் மட்டும் போகக் கூடிய ஒற்றையடிப் பாதை அதுவும் ஒருவழிப் பாதையாக ஒன்று இருந்தது.

அந்த சந்தின் பெயர் சேவு அமிர்தலிங்கம் பிள்ளை தெரு. இப்போது இன்னும் இருந்தால் அதில் பிள்ளையை வெட்டி இருப்பார்கள். தெரு டனா வடிவில் இருக்கும். ஆரம்பத்தில் பள்ளி கரஸ்பாண்டண்ட் ராமதாஸ் அய்யாவின் உயர்ந்த திண்ணை வீடு. கொஞ்சம் தாண்டி டனா வின் முனையில் பாபு வீடு. அவனும் என் வகுப்புதான், சியமளா அக்கா, கீர்த்தி தம்பி, (வி)சாலாட்சி குட்டி தங்கை. எல்லோருமே ஒல்லி அவர்கள் அம்மா போல. அவர்கள் அப்பா எல்.ஐ.சியில் எங்கள் அப்பாவுக்கும் மேலான அதிகாரி.

அவர்கள் வீட்டுக்கு எதிரே என் தோழன் சுந்தர மோகன் வீடு. அவன் என்னை விட ஒரு வயது பெரியவன், நல்லவன் சிரித்த முகம். அவன் தம்பி பாண்டு. அவன் அப்பா கண்ணாடி போட்டு வழுக்கை தலையோடு இருப்பார். அவர்கள் வீட்டின் பின் தோட்டம் தென்னை மரத்துடன் எங்கள் வீடு வரை நீண்டு இருக்கும்.

டனாவின் முனை தாண்டி வரும் போது இரு வழி காலனி இருக்கும். உள்ளே இரண்டு மூன்று குடித்தனங்கள். ரயில்வே பிரேமா அக்காவும் அம்மாவும் ஒரு போர்ஷன். சிகரெட்டு சண்முகம் மாமா அவர் மனைவி, மகள் சாந்தி பானு சின்னக்குட்டி கவிதா. இன்னொரு போர்ஷனில் திருநெல்வேலி தெலுங்கு சமையல் தொழில் பெருங்குடும்பம். விச்சு, அக்காக்கள் ராஜி, அங்கச்சி, இன்னும் ஒர் அண்ணன், மனவளர்ச்சி குன்றிய அழகிய தம்பி கண்ணா.

எங்கள் வீடு ஒரு தனி வீடு, சிறு திண்ணை, ஒரே அறை அதில் தடுத்து சமையல், குளியலறை சுந்தர மோகன் வீட்டு காம்பவுண்டு ஒட்டி இருந்தது. 

எங்களைத் தாண்டி இருபதுக்கு முப்பது திறந்தவெளி அடுத்து வீட்டு ஓனர் ராசாத்தி அம்மாள் தங்கவேல் மூப்பனார் வீடு. வெளியில் உள்ள முருங்கமரம், அதில் உள்ள எல்லா முருங்கை காய்களிலும் அம்பு தைத்து இருக்கும், விளக்குமாறு அம்பு எல்லாம் என் கை வண்ணம்.

எங்கள் வீட்டுக்கு முன் ஒரு ஒதிய மரம் அது நான் உங்களுக்கு சொல்ல விட்டுப் போய் விட்டது. ஒரு நாள் அங்கு நான் பார்த்த காட்சி தான் இந்த கதை.

எங்கிருந்தோ ஒரு அணில் வந்தது. நேராக ஓடி ஒதிய மரம் ஏறி பக்கத்து காம்பவுண்டு சுவர் அளவில் மரத்தில் நின்று, சுவற்றில் தாவியது. ஒரு முறை அல்ல பலமுறை. கூர்ந்து பார்த்த போது அணில் தனியாக இல்லை, கூட அதன் குட்டி அணிலும் இருந்தது. அதற்கு பயிற்சி வகுப்பு தான் அன்று நடந்தது. மரத்தின் மீது ஏறும் வரை அணில் குஞ்சு கற்று விட்டது.

அங்கிருந்து சுவருக்கு தாவுவது தான் அணில்குஞ்சின் பயம் போலும். பல முறை பொறுமையாய் முயன்ற தாய் அணில் இறுதியில் வென்றது குட்டி அணில் சுவருக்குத் தாவிய அந்த வெற்றி நிகழ்வுக்கு பதக்கம் தரவோ அல்லது அதை நேரடி ஒளிபரப்பு செய்யவோ அப்போது தனியார் தொலைக்காட்சி எதுவும் இல்லை.

அமெரிக்காவில் எனது கல்லூரி நண்பர்கள் வீட்டுத் தோட்டத்துக்கு அணில்கள் வந்து தினம் விருந்து சாப்பிடுவதாக அறிந்து கொண்ட இந்த நாளில், என் (மனப்)பையிலிருந்து பூனைக்குட்டி, மன்னிக்கவும் குட்டி அணில் வெளியில் வந்து விட்டது அதுவும் நாற்பது ஆண்டுகள் கழித்து!

October 24, 2021

தன் ஜியா வூ

தன் ஜியா வூ
தமாம் பாலா 20.10.2021

2010ம் ஆண்டு அது. பதினைந்தாண்டு ஸமில் ஸ்டீல் சௌதியில் பணிபுரிந்தபின் நான் ஸமில் வியட்நாமில் இணைந்தது அப்போது தான். 

ஸமில் தொழிற்கூடம் 1994ல் வியட்நாம் ஹனோய் நகரில் வந்தது, அவர்கள் இந்திய புனேயில் கால் பதித்த பல வருடங்களுக்கு முன்பே. நான் நோய்பாய் ஸமில் தொழிற்சாலையில் பொறியியல் திட்ட மேலாளராக பதவி உயர்வு பெற்று வந்தேன்.

எங்கள் அலுவலகத்தில் இருந்த ஒரு வரைபடம் பற்றியே இந்த கட்டுரை. அது ஒரு உலக வரைபடம். அதில் வியட்நாமும், மற்ற தென்கிழக்காசிய நாடுகளும் ஏன் இந்தியா கூட இடம் பெற்று இருந்தன.

வரைபடத்தில் எல்லா ஊர்களையும் வியட்நாமிய மொழியில் குறிப்பிட்டு இருந்தனர். இருநூறு ஆண்டு முன்பு வியட்நாம் மொழி எழுத சீன எழுத்துகள் பயனில் இருந்தனவாம். பிரஞ்சு காரர் வந்த பின், எழுத்து மொழி ஆங்கில எழுத்துகள், ஆனால் சற்று மாறுதலுடன், ஒலிக்குறிப்பான்களாக (phonetics) கமா, நெற்றித்திலகம், நெற்றி பிறை சந்திரன் போன்ற சிறுகுறிகள் இணைந்ததே வியட்நாம் எழுத்துகள்!

தமிழில் டகரமும் பகரமும் ஆங்கில d,t,b,p போன்று கிடையாது. இது பல நேரங்களில் பலுக்கல் குழப்பம் தரக்கூடியது. அதுவும் இந்தி மொழியில் ka, kha என்று பல்வேறு உள்-உச்சரிப்பு அதிகப்படிகள். அது போல வியட்நாமிய மொழியில் அ என்பதே நாலு ரகம் அல்லது நாலு ராகம். நாம் பேசினால் பாவம் அவர்களுக்கு புரியாது. ஒரே சொல்லுக்கு நான்கு வெவ்வேறு பொருள், வெவ்வேறு பலுவலில். 

கா என்றால் - கோழி, மீன், ரயில் நிலையம் மற்றும் காஸ் சிலிண்டர். என்ன தலை சுற்றுகிறதா?? சொல் இறுதி அவருக்கு முக்கியம் இல்லை, அது இல்லாமலே சொல் புரியும்.

இப்போது வரை படத்துக்கு வருவோம். இந்தியாவில் ஒரு ஊருக்கு "தன் ஜியா வூ" என்று மூன்று பதங்களில் குறிப்பிட்டு இருந்தது. வியட்நாமியர் பெயர் கூட அது போல மூன்று பெயர்களால் ஆனது, பால-சுப்பிர-மணியன் போல.

அவர்கள் குறிப்பிட்ட ஊர் அது என் சொந்த ஊர் 2010ல் ஹனோய் நகரம் 1000 ஆண்டு கொண்டாடிய போது உடன் இணைந்து மகிழ்ந்த நமது தஞ்சாவூர்!

இந்த பெயர் பார்த்ததும் எனக்கு இப்போது தமிழில் வரும் கலைச்சொற்கள் பற்றி ஏனோ ஒரு சிந்தனை வந்தது. கலைச்சொல் மூலச்சொல்லுக்கு கிட்டத்தட்ட அருகாமையில் உச்சரிப்பு வருவது வழக்கில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள ஒரு நிகழ்வு, பாரம்பரியம்.

நாம் இங்க்லீஷ் அதை ஆங்கிலம் என்கிறோம். வியட்நாமியர் அதை அங் என்கின்றனர். நாம் இண்டியன் என்றால் அவர் நம்மை அண்டோ என்கின்றனர்.

அது போல நாம் ஒரு கலைச்சொல் செய்தால், என் கற்பனையில் வாட்ஸ் அப், வாசப்பூ ஆகலாம், யூடியூப் யூதுடிப்பு ஆகலாம். தமிழறிஞர் மன்னிக்க, இப்போது கூகுள் புண்ணியத்தால் பொறிஞர் மற்றும் மருத்துவரும் ஆவார் தமிழறிஞராய். நன்றி மீண்டும் பேசுவோம்.

Er.தமாம் பாலா (எ) பாலசுப்ரமணியன்
220821 வியட்நாம் அ.த.ம 1.0

October 18, 2021

அதுவும் நானும்

அதுவும் நானும்
தமாம் பாலா

இந்த மதத்தில் 
வந்து பிறந்தாய் ஆகமம்
அல்லது கிராமத்து தேவதை 
தருகிறோம் 
பெற்றுக்கொள் என்றார்

அந்த மதத்தில் 
அஞ்சு முறை வெள்ளி 
அல்லது 
ஞாயிறு காலை ஆங்கில
முறைப்படி என்றார்

உருவ அருவ
சிங்க வானர வராகம்
எல்லாம் ஒரு சுழற்சியில் 
கண்டு 
இன்று கறுப்பணிந்து 
கண்ணாடியில்
பார்த்து பகுத்தறிந்தேன்
அதை




 

October 17, 2021

சக்திப்புள்ளி

சக்திப்புள்ளி
தமாம் பாலா

தெருக்கூத்து வைத்தார்
பார்த்தோம்
நாடகம் போட்டார்
கை தட்டினோம்

சினிமா காட்டினார்
விசிலடித்தோம்
பற்றாக்குறைக்கு 
பால் வார்த்தோம்.

வானொலியில் பேசினார்
விடிய விடிய 
கேட்டோம்

தொலைக்காட்சி பார்த்து
தொலைந்து போனோம்
காட்சிக்காக
கண்ணீருக்கு
காசுகொடுத்தோம்.

கண்டதை அருந்தி
கண் அவிந்து போகாதேயென
அதையும் தரமாக தந்தார் 
பெற்று மகிழ்ந்தோம்

இணையத்தில்,
புலனத்தில்
யார் எழுதியதென்று
தெரியாமல்
முன்னேற்றி மூழ்கினோம்.

இன்று 
திடீரென வந்துனின்று
உன்னை வளர்த்து
உயர்த்திப் பிடித்த
அன்னை தந்தை பற்றி
பெருமை கொள்ள
சொந்தமாய் எழுது
சக்திப் புள்ளி செய் 
அதை
சபையில் பேசு என்றால்
எங்கே செல்வோம் நாம்
என்ன செய்வோம்?

August 28, 2021

கம்பலை

ஆற்றில் பாயும் நீர்
காற்றின் ஒலி அது
கரை உரசும் போது

அதில் அன்னங்கள்
உதறும் சிறகினை
பதறி படபட வென

அணை அணைத்த
மலை மடை திறக்க
வெள்ளம் பேரொலி

பாரில் ஒலித்திடும்
போரின் வில் ஒலி
நீரிடம் தோற்றிடும்

இடக்கை ஒலி

வலதுகையால் கொடு
வாங்கு அதுதான் சரி
வழக்கமாய் சொல்வது

உன் கை தொட்டாலது
உகந்தது கால் பட்டால்
உண்டாகும் பாவம் என

கையை உயர்த்தி உன்
காலைத் தாழ்த்தினார்
உடலின் மேல்புறத்தில்

இருப்பதாலே கைகள்
இருகால்களை விடவும்
பெருமை கொள்வதோ

கொடுக்கும் இடதுகை
கெடுக்கும் வலதுக்கு
தூய்மையான பாதம்

கறைபடிந்த கரத்துக்கு
அரைமடங்கு மேல் என
திரைவிலக்கிப் பார்க்க

வலதுகை இல்லாவிடில்
இடதே வலதாக ஆகிடும்
இருகை இல்லாதவனின்

கால்களே கையாய் மாறி
கடமையை ஆற்றுவதும்
காலத்தின் கட்டாயமாகும்

உடுக்கை ஒலிக்காவிடில்
இடக்கை ஒலியுடன் கூடி
இசைக் கச்சேரி நடக்கும்

வல்வில் ஓரி

வல்வில் ஓரி
தமாம் பாலா

மழை போர்த்திய மலையோன்
இழை போர்த்திய யானையை
கழலணிந்த கரங்களால் தரும்

போரில் வெல்ல முடியாத ஓரி
மாரி போல் வாரி வழங்குதல்
கோரிச் சென்றவர் மகிழ்ந்திட

வாசமிகு மலர் மாலைகளை
விலைமிகு ஆபரணங்களை
பாசமிகுந்து பரிசிலளித்திட

பெற்றவர் பசிபிணி மறந்தார்
மற்ற தம் ஆடல் பாடல் கலை
கற்றதும் துறந்த வன்பரணன்

August 19, 2021

மனைவி அமைவதெல்லாம்


கல்யாணம் முடிந்த பின்
கணவனும் மனைவியும்
ஆவார் ஒரு நாணயத்து
இரு பக்கமாய் மறைந்து

திருமணம் செய்தல் தகும்
நல்ல மனைவி மகிழ்ச்சி
தருவாள் கெட்ட மனைவி
கிடைத்தவன் ஒரு ஞானி

அற்புதமான இலக்குகளை
அடையத் தூண்டிடுவாள்
அடைந்திடவும் இயலாமல்
தடை போடுவாள் அவளே

நான் அவளிடம் ஓரிரண்டு
வார்த்தைகள் சொன்னேன்
பதிலுக்கு பலபல பத்திகள்
அதிகமாய் விடை தந்தாள்

மின்னஞ்சலையும் மிஞ்சும்
பணப் பரிவர்த்தனை ஒரு
திருமணத்தை விட வேறு
எந்த வழியிலும் முடியாது

ஒரு நல்ல மனைவி தனது
கணவனை என்றென்றும்
மனதார மன்னித்திடுவாள்
அவள் தவறு செய்தாலும்

காதலிக்கும் போது எதுவும்
ஆச்சரியம் கல்யாணம் ஆன
பின் ஒரே ஆச்சரியம் தான்
என்ன ஆச்சு எனக்கென்று

திருமணம் ஒரு அழகிய காடு
முரட்டு சிங்கத்தை அங்கே
மென்மையான மான் ஒன்று
வென்று கொன்றிடும் காண்

August 16, 2021

இன்றே செய்

நான் மறைந்த பின் வழியும்
உன் கண்ணீர் ஆனாலதை
என்னால் உணர இயலாது
இன்றே அழுதிடு என்னோடு

மலர் வளையம் அனுப்புவாய்
பலர் அறிய என்னைத் தவிர
சில பூக்களை கொடுத்தனுப்பு
நலமாய் நானிருக்கும் போதே

வாழ்த்தி என்னை பேசிடுவாய்
வாழ்ந்த என் செவிக்கெட்டாது
வாழ்த்திடு இன்றே இப்போது
தாழ்த்திடாமல் காலத்தையும்

என் தவறுகளை மன்னித்திடும்
உன் பெருந்தன்மை என்றாலும்
அதன் பயன் எனக்கும் எட்டாதே
இன்றே நீ மன்னிப்பாய் என்னை

உன்னுடன் நானில்லை என்று நீ
உணரும் வேளையில் அப்போது
தொடுவானம் தாண்டியிருப்பேன்
சடுதியில் வா சந்தித்திடு என்னை

என்னோடு இன்னும் சிலகாலம்
அன்னியோனியமாய் செலவிட்டு
இருக்கலாமோ என குறைபடாது
இன்றே இணைந்திடு என்னோடு

நான் போனபின் இறுதி மரியாதை
தான் செய்ய என் வீடு தேடி வரும்
உன் கால்கள் ஆண்டாண்டுகளாய்
அன்பு வார்த்தை சொல்ல மறந்த

உன் உதடுகள் இன்று பேசட்டும்
நன்றே செய் அதை இன்றே செய்
மென்மையுடன் செவிமடுத்து நம்
தன்மையுடன் நாம் நடந்திடுவோம்

உறவுக்கு நட்புக்கு முக்கியத்துவம்
இறந்தகாலத்தில் தருவதை விட
நிகழ்காலத்தில் தருவதே சிறப்பு
நிரந்தரமாக இழக்கும் முன்னரே

தனியாக நான் சொல் கூறலாம் 
இனிய துணையுடன் பேசலாம்
தனியாக இன்பம் துய்ப்பதற்கு
பனியாக உருகி கொண்டாடும்

துணை கிடைப்பதே ஆனந்தம் 
இணையாத போது புன்முறுவல்
இணைந்தாலோ பெருஞ்சிரிப்பு
அணை கடந்த அன்பு வெள்ளம்

நன்றி: இரவீந்தர நாத் தாகூர்

August 8, 2021

அடை

முட்டையை அடைகாத்து
முழுக்குஞ்சாக பெறுவது
பறவையின் குணமாகும்
பிறவியில் மனிதனாகும்

குழந்தையை தன்னுள்ளே
வழக்கமாய் பத்துமாதமும்
சுமப்பாள் தாய் அதன்பின்
சுமை கை மாறும் தந்தை

மனதில் சேரும் ஆயுளுக்கு
தினமும் உழைத்து மகவை
முன்னேற்றப் பாதையிலே
முடுக்கி விடும் பயணமும்

சுதந்திரக்காற்றை சுவாசி
முதலில் அதன்பின் நான்கு
சுவருக்குள்ளே அடைப்பார்
அவர் உன்னை பள்ளியில்

எல்லா திசைகளிலும் உன்
நில்லாமல் செல்லும் சுய
சிந்தனைகளை கடிவாளம்
தந்து கட்டிப் போடும் காலம்

நினைத்ததை அடைவதே
பனையளவு வெற்றியாகும்
அடைமழையில் நனைந்து
அதில் மனம் கரைகின்ற

சுகமாய் அடைபடாத இன்ப
சுதந்திரம் அடைவதே நமது
மதமாய் ஏற்றுக்கொள்வீர்
அதன் பெயர் எதுவாயினும்

நேரம்

இந்த நேரம் இந்த நிமிடம்
இந்த நொடி நல்ல நேரமா
இந்த கேள்வியின் விடை

நேரத்தில் நல்ல நேரமோ
கெட்ட நேரமோ இல்லை
மணித்துளிகள் பளிங்கு

நீர்த்துளிகள் போலவே
நிறமற்ற தூய்மையான
நித்திய சத்திய துளிகள்

காலத்துளியில் மனதில்
கணத்தில் உதிக்கின்ற
சிந்தனை செயலாகும்

செயலால் விளைந்திடும்
நன்மை தீமைகள் கூறும்
நேரம் நல்லதா கெட்டதா

நண்பருடன் சேர்ந்திருக்க
எல்லா நேரமும் நல்லதே
நண்பர் தின வாழ்த்துகள்

July 18, 2021

வரங்கள்


தண்ணீர் உணவின்றி
தவமாய் தவமிருந்தும்
வரம் தர வராத கடவுள்
வந்தார் எனது கனவில்

ஒரு வரம் தருகின்றேன்
பெறுவாய் இப்போதே
என்றதும் உயிர் வாழ
எனக்கு உடல்நலத்தை

வேண்டினேன் இரண்டு
வரங்களாய் தருகிறேன்
என்றார் இறைவன் நான்
எனது நட்பும் குடும்பமும்

பெற்றேன் மூன்று வரம்
ஏற்றுக் கொள் என்றார்
ஏட்டுக்கல்வி செல்வமும்
மேட்டுக்குடி பிறப்பையும்

கேட்டுப் பெற்றேன் நாலு
வரம் தருகிறேன் என்றார்
கிழக்கிலும் மேற்கிலும்
வடக்கிலும் தெற்கிலும்

வெற்றி மட்டுமே வேண்டி
சுற்றினேன் உலகெங்கும்
மற்றும் ஐந்து வரம் தரவே
சற்றும் தாமதிக்காமலே

நிலம் நீர் காற்று நெருப்பு
ஆகாயம் அனைத்துமே
எனது கைவசம் ஆகிடவே
ஆண்டவனை வேண்டிட

ஆறாய் வரத்தை கூட்டிய
பேரிறையிடம் அறுசுவை
உண்டியை இறைஞ்சிட
அதுவும் கிடைத்த போது

ஏழு வரம் இதுவே இறுதி
தொழுது கேளென்றான்
வாழுகின்ற காலம் வரை
ஏழு ஸ்வரங்கள் போதும்

இசையே இறையே நீயும்
ஆசை ஆசையாய் கானம்
பாடும் குயிலின் குரலில்
குழலில் வாழ்கிறாய் என

நான் கூறும் போது கனவு
தான் கலைந்தது பூபாளம்
பாடிட புதிதாய் பிறந்தேன்
என்னை நான் மறந்தேன்

July 5, 2021

போகட்டும் விடு

எட்டாக்கனிகளுக்கு ஏங்கி

கிட்டாதவை பற்றி எண்ணி

கொட்டாவி விட்டோம் நாம்


நமக்கு விதிக்கப்படாத பல

நல்லூர் கனவு தேசங்களை

நமது  பயணத்திட்டங்களில்


வைத்து நிறைவேற முடியாத

இத்துப்போன கானல் நீராம்

செத்துப்போன நினைவுகள்


சுமந்து எதிர்பார்ப்பு எதுவும்

கடந்து போன காலத்தினில்

நடந்து நிஜமாகவில்லையே


என்கின்ற மாயையில் சிக்கி

எமது ஆன்மாவை ஆவியை

என்றும் வலிக்க சிறையிட்ட


தவற்றை சரி செய்யும் வழி

காற்றாய் நிரம்பியே வழியும்

அவற்றை மன்னித்து விடல்


மக்கிப்போன எண்ணங்கள்

மனக்கதவு திறந்து வைக்க

தனது வழி பார்த்து அகலும்


இப்போது இருப்பது சுத்தமான

இதயக்கோவில் அதில் அழகிய

புதிய ஓவியங்கள் தீட்டிடுவோம்


போதும் என்ற மனமே பொன் 

செய்யும் மருந்தாய் யதார்த்தம்

உணர்ந்து அறிந்து மகிழ்வோம்


நன்றி: சூஸன் ஃப்ரைபோர்ட்

May 9, 2021

அன்னையின் தினம்

அன்னை யார் அவள்
மனிதப்பெண் தானா
அணில் கோழி ஆடு
மாடுகளிலும் அம்மா

கூடு விட்டுச் சென்று
பாடுபட்டு உணவை
தேடும் தந்தையார்
மீண்டு வரும் வரை

இல்லத்தில் மகவை
பாலூட்டி சீராட்டும்
தேவதை அன்னை
வலியை நோயை

வாய் மொழியால்
சேய் கூறும் முன்
தாய் மொழிக்கும்
முன்பே விழியால்

மொழி பேசுவாள்
அழுகைக்கும் கூட
அர்த்தம் அறிவாள்
அன்னை அவளும்

அன்னையை தேவி
அம்பிகை பராசக்தி
என வழிபடும் நமது
எழில்மிகு இந்தியா

கிரேக்க ரோமாபுரி
கிருத்தவம் தாண்டி
அமெரிக்க நாட்டின்
அன்னா ஜார்விஸ்

கடந்த நூற்றாண்டு
தொடக்கத்தில் தன்
தாய் மீது கொண்ட
தாளாத அன்பினால்

மே மாத இரண்டாம்
ஞாயிறு தினத்தை
அன்னையர் தினம்
என்று அறிவித்தார்

உன் வீட்டு அன்னை
தன்னை போற்றிடு
என்றே அன்னையர்
தினம் அல்ல அதன்

பெயர் அன்னையின்
தினம் என்று அவரும்
இனம் பிரித்த தினம்
இன்று இப்போது என்

அன்னைக்கு நானும்
நன்றி சொல்கிறேன்
நெஞ்சார நண்பரே
நீங்களும் செய்வீரே!





 


January 20, 2021

மருமகள் ஜாக்கிரதை

மருமகள் ஜாக்கிரதை

தமாம் பாலா


பெற்றோரைப் பிரிக்க 

நினைத்தால் அவளை

விவாகரத்து செய்திடு

என்று நீதிமன்றத்தில்


தீர்ப்பு வந்து விட்டதாய்

பெட்டிச் செய்தி ஒன்று

குட்டு வைத்து சொல்ல

குழுவுக்குள் குழப்பம்


பாதிக்கப்பட்ட பெண்

பாதிக்க படாத ஆண்

என்று யதார்த்தம் பேச

என்ன இதன் அடி ஆழம்


பார்ப்போம் பெற்றோரை

பிரித்தல் தவறென்றால்

பெண்ணை பெற்றோர்

பிரியாமல் அவள் எப்படி


உன் வீட்டுக்கு வருவாள்

வீட்டோடு மாப்பிள்ளை

உனக்கு அவமானமோ

வீட்டோடு பெண்ணும்


ஆகுமோ வெகுமானம்

இருபது வயது மரமான

பெண்ணை புதுவீட்டில்

மகளாய் நடத்திட அவள்


மாமியார் மாமனாரை

மதித்திடுவாள் மகள்

அவள் கணவனையும்

மகன் மனைவியையும்


அடக்கி ஆள வேண்டும்

என்று ஆசைப்படுகின்ற

பெற்றோர் பற்றி ஏனோ

நீதிமன்றங்கள் மௌன


ராகம் பாடுகின்ற நிலை

மகளை மருமகளை ஒரே

கண்ணாடியில் பார்த்தால்

மண்ணடியில் போகின்ற


காலம் வரை மகிழ்ச்சியே

சிலரது செல்லரித்த மனம்

பொதுவாக பெண்குலம்

சுமக்கும் சிலுவை ஆனது