May 5, 2008

நினைவுகள்

நினைவுகள்
(தமாம் பாலா)

நினைவுகள்..நினைவுகள்..
தலைக்கு மேல் பலமான
சுமையாக அழுத்த, பிஞ்சு..
மனமோ எடை தாங்காமல்

பிதுங்கி.. உடலெங்கும்
வலியாய்.. சகலமும்
தளர்ந்து கண் மூடினேன்
ஒன்றன் பின் ஒன்றாய்

துருவத்து பனிச்சரிவாய்
எரிமலையில் பீறிடும்
குழம்பாய், குழப்பமாய்
தெய்வமாய், சாத்தானாய்

குழந்தையாய்,கன்னியாய்
அன்னையாய்,உறவாய்
நட்பாய், பகையாய்
ஒரு தலைக்குள் ஓராயிரம்
உருவமாய் தோன்றி,மறைந்து

ஒன்றொடொன்று முட்டி மோதி
ஓலமிட்டு, ஒப்பாரி வைத்து
ஒன்றை ஒன்று வைது
ஒரே கைகலப்பாய்

சண்டையிட்டு குத்தி குதறி
குருதி பெருக்கெடுத்து
சிறு ஓடையாய் வழிந்து
கண் இமை ஓரமாய்

கண்ணீராய் உரு பெற்று
கசிந்துருகி தப்பிக்க..
பகையின் அவமானங்களும்
சாபங்களும், நட்பின்

துரோகமும், தவறான
வழிகாட்டுதலும், முடிவுகளும்
வெற்றிகளும், தோல்விகளும்
மலர் கிரீடங்களும்,முட்படுக்கைகளும்

மனக்கண் முன் தோன்றி
சிறு தூறலான மன வெளியில்
கரு மேகங்கள் சூழ்ந்து..
பெருங்காற்று ஊழியாய் வீச

பளீரென ஒரு மின்னல்
படாரென ஒரு இடி
பக்கத்தில் விழும் சத்தம்
பாளம் பாளமாக மேகங்கள்

உடைந்து பாட்டம் பாட்டமாய்
பெரு மழை கொட்ட
வெள்ளம்.. வெள்ளம்
எங்கும் நீர்.. எதிலும் நீர்

மூக்குக்கு மேல் நீர் போக
மூச்சு திணறல்.. உயிர்
காற்றை உடலில் தக்க வைக்க
மெது மெதுவாய்

மழை நிற்க தேங்கிய நீர்
வடிய தெளிவாய் தொலைவில்
சன்னமாய் இறைவனின் கீதம்
அபூர்வமாய் ஒரு சந்தோஷம்

அன்று கொஞ்சி மகிழ்ந்த
அன்னை, தந்தையின்
ஆண்டுகளுக்கு முன் இருந்த
அன்புத் தோற்றம்,அதே வாசனை..

தொப்பலாய் நனைந்த
வேர்வையில், குப்பென்று
கனவிலிருந்து விழித்தேன் நான்..

சே.. விழித்திருக்கும் போது
புத்தகத்திற்கு,கணினிக்கு
தொழிலுக்கு அடிமையாய்
காலம் கழிக்கும் சுதந்திரம் கூட

கண்மூடி சும்மா இருக்கும் போது
கிடைப்பதில்லை, நினைவுகள்...
உள்ளத்தில் குப்பையாய்
மலையாய் குவிந்துமனிதனை
நசுக்கியே கொன்றுவிடும் போல..!