June 29, 2008

எனக்கொரு தாத்தா இருந்தார்..அவர் என்னை போலவே இருந்தார்!

மகிழ்ச்சி பொங்கும் விதமாய் வாழ்வை தொடங்கும் மனிதரில், வெகு சிலரால் மட்டுமே பேரன் பேத்தி எடுக்கும் காலம் வரை சந்தோஷத்தை தொலைக்காமல் காப்பாற்ற முடிகிறது.

எனக்கு அப்பா வழி தாத்தா, எட்டாக்கனிதான். அவர்தான், என் அப்பா எஸ்.எல்.சி படிக்கும் போதே போய்விட்டாரே :(

அம்மா வழி தாத்தா தான் எங்கள் ஹீரோ. அவரை நாங்கள் “போபால் தாத்தா” என்று அழைப்போம். (மத்திய பிரதேசத்தில் வேலையில் இருந்ததால்)

அறுபதுக்கு மேல் கூட, டீ ஷர்ட் அணிந்து, உற்சாகமாக இருப்பார். எழுபதுக்கும் மேல், காலமாகும் வரைக்கும் வேலையை விடவில்லை.

அவரது, குறும்பும், இளமையும் கடைசி வரை குன்றவே இல்லை.
“பத்துமாதம் சுமந்திருந்து பெற்றாள்’ என அருமையாய் பாடுவார்.

“இந்த கட்டைக்கு, பாதம் கீர் கிடைத்தால் போதாதா? பழையது வேறே வேண்டுமா?” என அகடவிகடமாய் பேசுவார்.

நம் கையில் இருக்கும் கடலையை தட்டி மேலே அனுப்பிட, அது தானாக உயர பறந்து, கீழே விழும் போது லாவகமாக விழுங்குவார்.

என் முப்பத்தொரு வயது வரை இப்படி ஒரு சூப்பர் தாத்தாவின் அன்பை அனுபவித்த நான், என் குழந்தைகள் – இந்த உறவுகளின் சங்கிலியை அனுபவிக்க இயலவில்லையே என பலமுறை நினைப்பதுண்டு.

காலையில் நினைத்தது மாலையில் நடக்காவிட்டாலேயே துவண்டு போய்விடுகிறது நம் மனது. சொந்த வாழ்வின் சோகங்களை, குளித்து தலை துவட்டி துண்டை உதறி காய போடுவது போல, ஒதுக்கி வைத்து விட்டு உற்சாகத்துடன் நடமாடிய "போபால் தாத்தாவை" நினைத்து பார்க்கும் போது ஒரு வித வியப்பே மிஞ்சுகிறது.

அஞ்சு பெண் பெற்றால், அரசனும் ஆண்டியென்பார்கள். அஞ்சாமல் அசராமல் வாழ்க்கையை முழுவதாக அனுபவித்து, அதில் முத்திரை பதித்த அவரைப்பற்றி "எனக்கொரு தாத்தா இருந்தார், அவர் என்னைப் போலவே இருந்தார்" என்று பாடத்தோன்றுகிறது.

சொர்க்கத்திலிருந்து, "பேராண்டி, எங்க காலத்துல இந்த கம்ப்யூட்டர்/ப்ளாக் எல்லாம் இல்ல.. இருந்தா அதையும் ஒரு கை பாத்திருப்பேன்" என்று தாத்தாவின் கம்பீரமான குரல், சுட்டெரிக்கும் சவுதி வானத்திலிருந்து இறங்கி, தூசிக்காற்றுடன் சேர்ந்து மூச்சு குழலில் நுழைந்து மனக்குகைக்குள் எதிரொலிக்கிறது! உங்களுக்கும் கேட்கிறதா? :-))




June 27, 2008

யாதும் ஊரே யாவரும் கேளிர்

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றார் கணியன் பூங்குன்றனார்.

சொந்ததில்,நெருங்கிய உறவுகளில்-அம்மா-மகள், அப்பா-மகன்,கணவன்-மனைவி,உடன்பிறப்புகள் இடையே கூட சண்டையும்,சச்சரவும் நிரம்பிய காலம் இது. சகிப்புத்தன்மை என்பது காணவும் அரிதான ஒன்றாகி விட்டது.

அதே சமயத்தில், பிறப்பால் குடியால் வேறுபட்ட நண்பர்களிடையே ஒற்றுமையையும், ஒத்த சிந்தனையையும், ஒருங்கிணைவையும், ஒரே அலைவரிசையில் அமைந்த சிந்தனையையும் காண முடிவது இயற்கையின் விந்தையல்லவா?

இந்தியாவின் வணிக தலைநகராம் மும்பையில் வடநாட்டான்/தென்னாட்டான் பேச்சு அடிபடுகிறது. நம் நாட்டுக்கு நாலாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் தொழில் நிமித்தம் வசிக்கும் என் போன்ற தமிழர்களுக்கு, இன்னோரு தமிழ் குரல் கேட்க கிடைப்பதே சொர்க்கம்.. இது பற்றி, நான் எழுதி கீற்று.காமில் வெளிவந்த ஒரு கவிதை உங்கள் வாசிப்புக்கு, இதோ..நண்பர்களே..

மனிதத் துணை
பாலசுப்ரமணியன்

கடல்கடந்து வந்த இடத்திலும்
கண்ணுக்கு எட்டிய தூரத்திலும்
மனிதத் துணையில்லாத நேரம்
மனம் விட்டு பேசி, பழகிடவும்

எந்த நாட்டவன் கிடைத்தாலும்
எனக்கு மகிழ்ச்சிதான்,அதிலும்
சொந்த நாட்டானாக இருக்கவும்
சொர்க்கம் கண்ணில் தெரியும்

தென்னிந்தியனாய் அமைந்திட
தெளிவு பிறக்கும் பிறரைவிட
தமிழனாக நண்பன் கிடைத்திட
தடையிலா இன்பம் அளித்திட

தப்பித்தவறி அந்த நண்பன்
தஞ்சாவூர்காரனாகவும்,ஏன்
தெற்குவீதியை சேர்ந்தவன்
தூரத்து உறவு,சொந்தக்காரன்

என்று பலவிதமான நட்புகள்
இன்று பாலையின் நடப்புகள்
என்ன ஒரே குறை, உறவுகள்
எதுவும் உடன்பிறந்த தம்பிகள்

போல ஒருபோதும் வராது,அது
பாகப் பிரிவினை, பஞ்சாயத்து
பெற்ற தாய்க்கும் செலவழித்து
செய்த செலவை பங்குபிரித்து!