July 12, 2010

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? வியட்நாம் பயணத்தொடர் 6

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? வியட் நாம் பயணத்தொடர் 6
தமாம் பாலா                                                                                           For Audio, Please click here



    sapa valley view

தொடர் 5ஐ எழுதி இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் ஓடிவிட்டன. இதற்கு மேலும் இடைவெளி விட்டால், இருக்கும் சொற்ப வாசகர்களையும் இழந்துவிடும் அபாயம் இருப்பதால், இன்று திங்கள் இரவு நேரத்தில், விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறேன்.

ஸாபா ஸம்மிட்டிலிருந்து, அன்று மதிய உணவுக்குப்பின், எதனிக் வில்லேஜ் என்று சொல்லக்கூடிய பழங்குடிகள் வசிக்கும் பள்ளத்தாக்கு கிராமத்துக்கு புறப்பட்டோம். கொஞ்ச தூரம் வேனில் பயணம் செய்து, அதன் பின் சில கிலோமீட்டர்கள் மலைச்சரிவில் நடந்து சென்று, மாலை/இரவு நேரம் அங்கேயே வீட்டுத்தங்கல் செய்ய ஏதுவாக துணிமணிகள் எடுத்துக்கொண்டோம்.


இதற்குள்ளாக மணி அய்யாவின் புராதன பெருமை வாய்ந்த பிட்டீஸ் ஷூ வாய் பிளந்து விட்டது. நாங்கள் வண்டியிலே காத்திருக்க, அவரும், ஜிங் மற்றும் ராம்கியும் செருப்பு கடையில் நுழைந்தார்கள். சிறிது நேரத்துக்குப்பின், மணி முன் பக்கத்தில் ஷூ போலவும், பின் பக்கத்தில் ஜன்னல் வைத்த ஜாக்கெட் போலவும் உள்ள பழுப்பு நிற காலணிகளுடன் வேனில் நுழைந்தார். என்ன இது என்றேன் நான்; கொஞ்சம் அசந்துட்டேன், ராம்கி என்னை ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா போல ஆக்கிட்டான் என்றார் அவர், பரிதாபமாக.



இப்போது எங்கள் வண்டியை வழியில் நிறுத்தி, ஜிங்கின் ஒன்று விட்ட தங்கை போல இருந்த இன்னொரு மங்கு பெண் வந்து ஏறிக்கொண்டாள். அவளது பீட்டர் ரவுசும் தாங்கவே முடியவில்லை. வேனின் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு அவ்வப்போது அவள் உருட்டி விட்ட லிச்சி பழங்களை நாங்கள் வழி மறித்து ஸ்வாகா செய்தோம்.

கரடு முரடான பழங்கள், உள்ளே நுங்கு போலே சதைப்பற்றான பழம். ஆசையுடன் கடித்தால் அங்கு தான் ஆபத்து ஆரம்பம், பெரிய அளவு கொட்டை, சும்மா பேருக்குத்தான் பழம். இதற்குள் நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது!


கல்லும் மண்ணும் கலந்த பாதை, மலைச்சரிவில் வளைந்து வளைந்து கீழே இறங்க ஆரம்பித்தது. ஜிங்கின் தோழிகள் சொல்லி வைத்தார் போல் எங்கள் ஒவ்வொருவருக்கும் பக்கத்தில் வந்து நின்று கொண்டார்கள்; நாங்கள் நின்றால் அவர்களும் அதே. நடந்தால்.. அவர்களும்.. என் கூடவே ஒருத்தி வந்தாள். என்னடா இது தர்மசங்கடமாக இருக்கிறதே என்று நினைக்கும் போதே அவள் ஆங்கிலத்தில் குசலம் விசாரிக்க ஆரம்பித்து விட்டாள்.



நான் அவளுக்கு ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிக் கொண்டே கண்ணைப் பறிக்கும் மலை/பள்ளத்தாக்கு காட்சிகளை என் ஃப்யூஜி டிஜிட்டல் காமெராவில் ரொப்பிக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேர நடை பயணத்துக்குப் பிறகு ஒரு காட்டாற்றுப் பாலத்தை அடைந்தோம். பழங்குடிகள் கிராமத்தை சமீபித்து விட்டது தெரிந்தது. உடன் வந்த பழங்குடி பெண்ணிடமிருந்து தப்பித்த மற்றும் வீட்டுத்தங்கல் விவரங்கள் விரைவில் கணினித்திரையில் காண்க :))


ஸாபா தொடரும்.

4 comments:

ராமலக்ஷ்மி said...

முதல் படமும் காட்டாற்றுப் பாலமும் கொள்ளை அழகு.

//விரைவில் கணினித்திரையில் காண்க:)) //

விளம்பரம் அமர்க்களப்படுகிறதே:))!

அது ஒரு கனாக் காலம் said...

அருமையான படங்கள் பாலா .... ரொம்ப தொந்தரவு (? ) இருந்ததோ ?????... இன்னும் கொஞ்சம் கிளிக்கிரிக்கலாமே ( பத்த வச்சுடையே பரட்டை !!!!!)

Dammam Bala (தமாம் பாலா) said...

ராமலக்ஷ்மி said...
முதல் படமும் காட்டாற்றுப் பாலமும் கொள்ளை அழகு.

//விரைவில் கணினித்திரையில் காண்க:)) //

விளம்பரம் அமர்க்களப்படுகிறதே:))!

ச‌ர‌க்கு குறையும் போது
விள‌ம்ப‌ர‌ம் கூடுவ‌தை
ச‌ரியாக‌ க‌ண்டுபிடித்து
விட்டீர்க‌ள் ராம‌ல‌க்ஷ்மி :-))

Dammam Bala (தமாம் பாலா) said...

அது ஒரு கனாக் காலம் said...
அருமையான படங்கள் பாலா .... ரொம்ப தொந்தரவு (? ) இருந்ததோ ?????... இன்னும் கொஞ்சம் கிளிக்கிரிக்கலாமே ( பத்த வச்சுடையே பரட்டை !!!!!)

ப‌த்த‌வைத்த‌து ப‌ர‌ட்டையோ இல்லையோ,
நான் ஒரு (ஒப்புக்குச்) ச‌ப்பாணி என்ப‌தில்
எந்த‌ ச‌ந்தேக‌மும் இல்லை,ஐயா! :)

ஸாபா ப‌ட‌ங்க‌ள் 500+ கைவ‌ச‌ம் உள்ளன‌
ப்ளாக்க‌ர் டாட் காமில் போட‌ ரொம்ப‌வும்
பொறுமை வேண்டும். ஃப்ளிக்க‌ரில் போட்டு
லிங்க் கொடுக்க‌ முய‌ல்கிறேன்.

இதை அடுத்து சென்று வ‌ந்த‌ ஹ‌லாங் பே
ப‌ற்றி ப‌ட‌ங்க‌ளுட‌ன் பிற‌கு எழுதுகிறேன்
குறிஞ்சி முடிந்த‌தும், நெய்த‌ல்...