August 28, 2021

கம்பலை

ஆற்றில் பாயும் நீர்
காற்றின் ஒலி அது
கரை உரசும் போது

அதில் அன்னங்கள்
உதறும் சிறகினை
பதறி படபட வென

அணை அணைத்த
மலை மடை திறக்க
வெள்ளம் பேரொலி

பாரில் ஒலித்திடும்
போரின் வில் ஒலி
நீரிடம் தோற்றிடும்

இடக்கை ஒலி

வலதுகையால் கொடு
வாங்கு அதுதான் சரி
வழக்கமாய் சொல்வது

உன் கை தொட்டாலது
உகந்தது கால் பட்டால்
உண்டாகும் பாவம் என

கையை உயர்த்தி உன்
காலைத் தாழ்த்தினார்
உடலின் மேல்புறத்தில்

இருப்பதாலே கைகள்
இருகால்களை விடவும்
பெருமை கொள்வதோ

கொடுக்கும் இடதுகை
கெடுக்கும் வலதுக்கு
தூய்மையான பாதம்

கறைபடிந்த கரத்துக்கு
அரைமடங்கு மேல் என
திரைவிலக்கிப் பார்க்க

வலதுகை இல்லாவிடில்
இடதே வலதாக ஆகிடும்
இருகை இல்லாதவனின்

கால்களே கையாய் மாறி
கடமையை ஆற்றுவதும்
காலத்தின் கட்டாயமாகும்

உடுக்கை ஒலிக்காவிடில்
இடக்கை ஒலியுடன் கூடி
இசைக் கச்சேரி நடக்கும்

வல்வில் ஓரி

வல்வில் ஓரி
தமாம் பாலா

மழை போர்த்திய மலையோன்
இழை போர்த்திய யானையை
கழலணிந்த கரங்களால் தரும்

போரில் வெல்ல முடியாத ஓரி
மாரி போல் வாரி வழங்குதல்
கோரிச் சென்றவர் மகிழ்ந்திட

வாசமிகு மலர் மாலைகளை
விலைமிகு ஆபரணங்களை
பாசமிகுந்து பரிசிலளித்திட

பெற்றவர் பசிபிணி மறந்தார்
மற்ற தம் ஆடல் பாடல் கலை
கற்றதும் துறந்த வன்பரணன்

August 19, 2021

மனைவி அமைவதெல்லாம்


கல்யாணம் முடிந்த பின்
கணவனும் மனைவியும்
ஆவார் ஒரு நாணயத்து
இரு பக்கமாய் மறைந்து

திருமணம் செய்தல் தகும்
நல்ல மனைவி மகிழ்ச்சி
தருவாள் கெட்ட மனைவி
கிடைத்தவன் ஒரு ஞானி

அற்புதமான இலக்குகளை
அடையத் தூண்டிடுவாள்
அடைந்திடவும் இயலாமல்
தடை போடுவாள் அவளே

நான் அவளிடம் ஓரிரண்டு
வார்த்தைகள் சொன்னேன்
பதிலுக்கு பலபல பத்திகள்
அதிகமாய் விடை தந்தாள்

மின்னஞ்சலையும் மிஞ்சும்
பணப் பரிவர்த்தனை ஒரு
திருமணத்தை விட வேறு
எந்த வழியிலும் முடியாது

ஒரு நல்ல மனைவி தனது
கணவனை என்றென்றும்
மனதார மன்னித்திடுவாள்
அவள் தவறு செய்தாலும்

காதலிக்கும் போது எதுவும்
ஆச்சரியம் கல்யாணம் ஆன
பின் ஒரே ஆச்சரியம் தான்
என்ன ஆச்சு எனக்கென்று

திருமணம் ஒரு அழகிய காடு
முரட்டு சிங்கத்தை அங்கே
மென்மையான மான் ஒன்று
வென்று கொன்றிடும் காண்

August 16, 2021

இன்றே செய்

நான் மறைந்த பின் வழியும்
உன் கண்ணீர் ஆனாலதை
என்னால் உணர இயலாது
இன்றே அழுதிடு என்னோடு

மலர் வளையம் அனுப்புவாய்
பலர் அறிய என்னைத் தவிர
சில பூக்களை கொடுத்தனுப்பு
நலமாய் நானிருக்கும் போதே

வாழ்த்தி என்னை பேசிடுவாய்
வாழ்ந்த என் செவிக்கெட்டாது
வாழ்த்திடு இன்றே இப்போது
தாழ்த்திடாமல் காலத்தையும்

என் தவறுகளை மன்னித்திடும்
உன் பெருந்தன்மை என்றாலும்
அதன் பயன் எனக்கும் எட்டாதே
இன்றே நீ மன்னிப்பாய் என்னை

உன்னுடன் நானில்லை என்று நீ
உணரும் வேளையில் அப்போது
தொடுவானம் தாண்டியிருப்பேன்
சடுதியில் வா சந்தித்திடு என்னை

என்னோடு இன்னும் சிலகாலம்
அன்னியோனியமாய் செலவிட்டு
இருக்கலாமோ என குறைபடாது
இன்றே இணைந்திடு என்னோடு

நான் போனபின் இறுதி மரியாதை
தான் செய்ய என் வீடு தேடி வரும்
உன் கால்கள் ஆண்டாண்டுகளாய்
அன்பு வார்த்தை சொல்ல மறந்த

உன் உதடுகள் இன்று பேசட்டும்
நன்றே செய் அதை இன்றே செய்
மென்மையுடன் செவிமடுத்து நம்
தன்மையுடன் நாம் நடந்திடுவோம்

உறவுக்கு நட்புக்கு முக்கியத்துவம்
இறந்தகாலத்தில் தருவதை விட
நிகழ்காலத்தில் தருவதே சிறப்பு
நிரந்தரமாக இழக்கும் முன்னரே

தனியாக நான் சொல் கூறலாம் 
இனிய துணையுடன் பேசலாம்
தனியாக இன்பம் துய்ப்பதற்கு
பனியாக உருகி கொண்டாடும்

துணை கிடைப்பதே ஆனந்தம் 
இணையாத போது புன்முறுவல்
இணைந்தாலோ பெருஞ்சிரிப்பு
அணை கடந்த அன்பு வெள்ளம்

நன்றி: இரவீந்தர நாத் தாகூர்

August 8, 2021

அடை

முட்டையை அடைகாத்து
முழுக்குஞ்சாக பெறுவது
பறவையின் குணமாகும்
பிறவியில் மனிதனாகும்

குழந்தையை தன்னுள்ளே
வழக்கமாய் பத்துமாதமும்
சுமப்பாள் தாய் அதன்பின்
சுமை கை மாறும் தந்தை

மனதில் சேரும் ஆயுளுக்கு
தினமும் உழைத்து மகவை
முன்னேற்றப் பாதையிலே
முடுக்கி விடும் பயணமும்

சுதந்திரக்காற்றை சுவாசி
முதலில் அதன்பின் நான்கு
சுவருக்குள்ளே அடைப்பார்
அவர் உன்னை பள்ளியில்

எல்லா திசைகளிலும் உன்
நில்லாமல் செல்லும் சுய
சிந்தனைகளை கடிவாளம்
தந்து கட்டிப் போடும் காலம்

நினைத்ததை அடைவதே
பனையளவு வெற்றியாகும்
அடைமழையில் நனைந்து
அதில் மனம் கரைகின்ற

சுகமாய் அடைபடாத இன்ப
சுதந்திரம் அடைவதே நமது
மதமாய் ஏற்றுக்கொள்வீர்
அதன் பெயர் எதுவாயினும்

நேரம்

இந்த நேரம் இந்த நிமிடம்
இந்த நொடி நல்ல நேரமா
இந்த கேள்வியின் விடை

நேரத்தில் நல்ல நேரமோ
கெட்ட நேரமோ இல்லை
மணித்துளிகள் பளிங்கு

நீர்த்துளிகள் போலவே
நிறமற்ற தூய்மையான
நித்திய சத்திய துளிகள்

காலத்துளியில் மனதில்
கணத்தில் உதிக்கின்ற
சிந்தனை செயலாகும்

செயலால் விளைந்திடும்
நன்மை தீமைகள் கூறும்
நேரம் நல்லதா கெட்டதா

நண்பருடன் சேர்ந்திருக்க
எல்லா நேரமும் நல்லதே
நண்பர் தின வாழ்த்துகள்