May 11, 2022

பயணிகளின் கனிவான கவனத்துக்கு

பயணிகளின் கனிவான கவனத்துக்கு
தமாம் பாலா

பயணிகளின் கனிவான கவனத்துக்கு; இரயில் நிலைய அறிவிப்பில் நாம் கேட்ட அழகான அன்பான பெண்குரல். அந்த குரலுக்குச் சொந்தக்காரர் யாரோ தெரியாது ஆனால் குரல் மட்டும் மிக பரிச்சயமானது.

எண்பதுகளில் வானொலி கேட்டவருக்கு டில்லி சரோஜ் நாராயண சாமியும், இலங்கை வானொலியில் ராஜேஸ்வரி சண்முகம் என நினைக்கிறேன் அவர் குரலும் நாம் வியந்தவை.

பிற்காலத்தில் தொலைக்காட்சியில் ஷோபனா ரவி மற்றும் அழுத்தமான வணக்கம் சொல்லும் நிர்மலா பெரியசாமி வரை குரலழகியர் பட்டியல் முடிவில்லாத ஒன்று.

பெண் வாசனையே அற்ற அரேபிய ஆணுலகத்திலும் ஆங்காங்கே பெண் குரல் தென்படுவதுண்டு. தனது காரில், கூகுள் வரைபடத்தை வழிகாட்டும் பெண்குரலைக் கேட்பதற்கே தெரிந்த வழியாயினும், மீண்டும் மீண்டும் வழி கேட்போம் என  நண்பர்கள்  கூறுவதுண்டு. யூ டர்ன் என்பதை, டர்ன் லெப்ட் அண் டர்ன் லெப்ட் என்று அவள் கூறும் அழகை ரசிக்க ஒரு ரகசிய ரசிகர் மன்றமே அமைத்து விட்டார்கள் மானசீகமாக.

அலுவலகத்துக்கு, கம்பெனி காரிலோ, க்ராப் டாக்ஸி அல்லது க்ராப் பைக்கில் செல்வதில் எந்த சுவாரசியமும் இல்லை. சைகானில் பேருந்தில் சென்றால் இன்னும் கூட நமது அந்தக்காலம் போல குழந்தைகள் எழுந்து பெரியவருக்கு இடம் தருவது அற்புதமான காட்சி.

பேருந்தில் ஒவ்வொரு நிறுத்தம் வரும் போதும், பதிவு செய்த குரலில் ஒரு பெண், பாபு காக்கா என்றும் செ சப் டிஞ்சா என்றும் அறிவிப்பு செய்கிறாள். அவள் அதை முடிக்கும் முன் அடுத்த நிறுத்தமே வந்து விடுகிறது. ஆங்கில சொற்களை வியட்நாமிய மொழியில் கொஞ்சிக் கொஞ்சி சொல்லும் அந்தப் பெண், டைகோ என்றால் டைகர்- ஹைனிக்கன் பியர் தொழிற்சாலை வந்து விட்டது என்று பொருள். கன் ட்ரி ஹவுஸஸ் என்ற உணவு மற்றும் குடிப்பிடங்களை அவள் குறிப்பிட்ட போது எனக்கு இது பற்றி எழுதா விட்டால் தலை வெடித்து விடும் விக்கிரமாதித்தா என்றே ஆகி விட்டது.

ஹோச்சி மின் சிட்டியின் இன்னொரு பக்கத்துக்கு மாறிய பின் வேறொரு பதிவுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். அது வரை வணக்க்கம்!

April 3, 2022

தோய் அன்

தோய் அன்
தமாம் பாலா

இது ஒரு ஞாயிற்றுக் கிழமை. சைகானில் ஏப்ரல் மாத மதிய வெயில் மழைச்சாரல் போல் பெய்து கொண்டிருக்கிறது. நண்பர் ஒருவரைப் பார்க்க ஒரு மணி நேரப் ப்யணம் கூடவே கைபேசியில் தோய் அன் தட்டச்சு.

வியட்நாமில் கோவிட் காலம் முடிவடைவது போல இல்லை. இருந்தாலும் பன்னாட்டு விமான சேவை தொடங்கி விட்டது. இரண்டாண்டு கடந்து, ராதிகாவும் சென்னைக்கு, ஊரெல்லாம் சுற்றி ஹோசிமின்-ஹனாய்-டில்லி-சென்னை என்று கடந்த மாதம் சென்று சேர்ந்திருக்கிறாள்.

நானும் ஹோசிமின் நகரம் விமான நிலையத்தில் இருந்து மாவட்டம் 12ல் எங்கள் குழுமத்து வீட்டுக்குக் குடி மாறி விட்டேன். முன்பு இருந்த நகரத்து 15ம் மாடி அடுக்கு மாடி குடியிருப்புக்கும், மாவட்டம் 12ந் தோய் அன் புற நகர் பகுதிக்கும் எத்தனையோ வித்தியாசங்கள் உண்டு.

குறைந்தது 1 மணி நேரப் பயணம், 10.12 கிமீ தூரத்துக்கு. காலையில் சீக்கிரம் எழுந்து கிளம்புவது சிரமமாக இருக்குமோ என நினைத்தேன், ஆனால் அது எளிதாகவே இருக்கிறது. சாப்பாட்டுப் பிரச்சினை என்பது மட்டும் எளிதில் தீர்க்க இயலாதது, அதுவும் வெளிநாடுகளில் வாழும் போது.

காலையில் கியா டிங் பூங்கா முன்பு, ஒரு பெண் அவித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கள், வேக வைத்த சோளம் ஏன் சிறு வாழைப்பழங்கள் கூட அந்த வகையில் தயார் செய்து நடைபாதையில் அமர்ந்திருப்பாள். தினமும் மாறிமாறி வாங்கி அவளது விலைப்பட்டியல் எனக்கும் அதுப்படி ஆகி விட்டது. ஒரு நாள் சோளத்துக்கு சர்க்கரை வள்ளியின் விலை போட்டு மீதி சில்லரை தந்தாள். அவளுக்கு நினைவூட்டி சரி செய்தேன். இன்னொரு நாள் ஏழாயிரம் கேட்டாள், என்னிடம் சில்லரையாக ஆறாயிரமும் முழு நோட்டாக நூறாயிரமும் இருந்தன. ஆறாயிரமே போதும் என்று சொல்லி விட்டாள். பெரிய நோட்டு வாங்கினால் மீதி சில்லரை தரும் பொறுப்பு வந்து விடும் அல்லவா?

நேற்று சனிக்கிழமை, ஊரில் தெலுங்கு வருடப்பிறப்பு பண்டிகை என ராதிகா நினைவூட்டினாள். அரைநாள் வேலை தானே என்று மதியம், மாவட்டம் 1க்கு சென்றேன். அங்கு பனானா உணவகத்தில் மலேசியத் தமிழர் ராமனின் உபயத்தில் நல்ல சைவ சாப்பாடு பரோட்டவுடன். எதேச்சையாக வந்த முன்பு சவூதியில் இணைந்து பணி செய்த தமிழ் நண்பரையும் அங்கு சந்தித்தேன், எதிர்பாராத விதமாக. பழைய கதைகள் நிறைய பேசினோம். மாரியம்மன், தண்டாயுத பாணி கோயில்கள் சென்று விட்டு, இந்திய மளிகைப் பொருள் கிடைக்கும் கடைக்குப் போய் விட்டு நண்பர் விடைபெற்று அவரது ஊருக்கு கிராப் டாக்ஸி பிடித்து சென்று விட்டார்.

நானும் மாலையில் தோய் அன்னுக்கு திரும்பி விட்டேன். இரவு உணவுக்காக அக்கம் பக்கத்து வீதிகளில் சுற்றித் திரிந்த போது, ஒரு காம் சாய் கடை கண்ணில் பட்டது. அரிசி சோறும், கொஞ்சம் போல டோபூ, காய்கறிகள், முளை கட்டிய தானியம், மிளகு சூப் என்று ஒரு வித்தியாசமான வியட்நாமிய சாப்பாடு. கடையின் உள்ளே பெண் புத்தர் படமும் உள்ளூர் மொழியில் போதனைகளும் இருந்தன. பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா என, ருசி அறியாத பசியில் ஒரு கட்டு கட்டி விட்டேன். 

அந்த தோய் அன்னின் முன்னிரவில்,ஆங்காங்கே இருட்டும் வெளிச்சமுமாக மக்கள் அவரவர் வீட்டுக்கு முன் குடும்பத்துடன் அமர்ந்து குடித்து, உண்டு, கதை பேசி மகிழ்ந்திருந்தனர். நான் சந்திர மண்டலத்தில் இறங்கிய நீல் ஆர்ம்ஸ்ட்ராங் போல, அந்த பிரதேசத்தில் காலடி எடுத்து வைத்த முதல் இந்தியனாய் என்னை நினைத்த படி, என் வீடு வந்து சேர்ந்தேன்.

எனது தோய் அன் பதிவு முடிந்தது, நண்பர் வந்து அழைத்துச் செல்ல காத்திருக்கும் இந்த நொடியில்.

January 15, 2022

பொங்கல் 2022

மண்ணில் செய்த பானையில்
மண்ணில் விளைந்த அரிசியும்
மண்ணில் தோன்றி கணுவாய்
விண்ணோக்கிய கரும்பையும்

சாறாக்கி வெல்ல சர்க்கரையாய்
சோறாக்கி நெய்யும் திராட்சையும்
சேர்த்து பாலுடன் பொங்கலிடும்
தருணம்  நாளை வரப் போகிறது

கற்றறிந்தால் துறைபோகியவன்
என்பார்  நீரையும் மண்ணையும் 
கால்நடை செல்வத்தையும் தனது
அனுபவ அறிவால் படித்ததோர்

இயற்கை விவசாயி வயலுக்குள்
அயராது ஆண்டு முழுதும் செய்த
அருந்தவத்தின் பயனை அழகாய்
அறுவடை செய்து அதை பொன்

பொருளாய் மாற்றும் இந்நேரம்
திருமகள் வீட்டின் வாசல் கதவை
தட்டும் சத்தத்தில் கோமாதாவின்
கழுத்து சலங்கை ஒலி சேரட்டும்

பொங்கலோ பொங்கலென்றும்
ஓங்கி ஒலிக்கட்டும் சிறுவர் குரல்
இல்லந்தோறும் நிறைந்திடட்டும்
எல்லாவளமும் நலமும் மகிழ்வும்

January 1, 2022

இன்றிரண்டு

இருபது இருபத்தொன்று என்று
ஒரு ஆண்டு நேற்றோடு முடிந்து
இருபது இருபத்திரண்டு இன்று
வருகிறது புத்தாண்டாக சிறந்து

களங்கமில்லா தேதி மாதமென
விளங்கவரும் ஒன்றும் ஒன்றும்
அளவில்லாத அரிய வாய்ப்புகள்
உளமார உழைப்பவருக்கு தந்து

இரண்டு சுழியம் இரண்டிரண்டில்
புரண்டு படுத்துறங்காமல் எழுந்து
புத்துணர்ச்சியுடன்  கடமை செய்து
அத்துடன் அடுத்தவர் துன்பத்தை

பரிவுடன் பணிவுடன் பண்புடன்
அறிந்துணர்ந்து துயர் களைந்து
செறிவான நிறைவான இலக்கு
தெரிவு செய்து சாதிக்க வாழ்த்து