April 14, 2018

விளம்பி

விளம்பி
(தமாம் பாலா)

கிளம்பிப் போனது பங்குனி
விளம்பி வந்தது சித்திரை
இளம்பிறை வளர்ந்து ஒளி
பளபளக்கும் முழுநிலவாகி

விளிம்புகள் தேய்ந்து பின்
ஒளிந்து கொண்டாலுமே
நளினமான தன் ஈர்ப்பில்
பளிங்கு பாற்கடலையும்

பற்றி இழுப்பது போலவே
வெற்றிகரமான நட்புகள்
சுற்றி வரும் உலகம் இது
போற்றி ஆண்டு அறுபது



April 10, 2018

ஆ(ற்)றுதல்

ஆ(ற்)றுதல்
தமாம் பாலா

அஞ்சுதல் தேவை இல்லாத
அன்பு வாழ்க்கை நல்லதே
அதில் ஆறுதலும் பசிபிணி
அகல நற்பணி ஆற்றுதலும்

சிலரது சிந்தனை செயல்
மலரது மருந்தது ஆற்றும்
மனமது குணமது ஆற்றும்
சினமது தவிர்த்த கருணை

நிறைமாந்தர் கடைக்கண்
உறையும் கனிவில் உண்டு
மறையும் கூறாத ஆறுதல்
இறையும் இவர் வடிவமே

April 3, 2018

இரும்பு மனிதர் டான் ஸ்ரீ ஏ.கே.நாதன்


இரும்பு மனிதர் டான் ஸ்ரீ ஏ.கே.நாதன்
(தமாம் பாலா)

ஆசியாவின் தலைசிறந்த கட்டுமான நிறுவனம்; மலேசியா, ஐக்கிய அரபு எமீரகம், கத்தார் மற்றும் இந்தியாவில் இரும்புக் கட்டுமானத் தொழிற்சாலைகள் என விழுதுகள் வேர்விட்டு வானளாவ வளர்ந்து நிற்கும் “எவர்செண்டாய்” என்ற ஆலமரம்!

அந்த ஆலமரத்தை ஒரு சிறு விதையாய் நட்டு, ஆண்டாண்டுக் காலமாக, உழைப்பு எனும் நீர் ஊற்றி, உற்சாகம் என்ற உரம் இட்டு, விடாமுயற்சி எனும் சூரிய ஒளி பாய்ச்சி வளர்த்தவர் தான் மலேசிய தமிழர், சாதனையாளர் டான் ஸ்ரீ திரு. ஏ.கே. நாதன் அவர்கள்.
இந்திய வம்சாவளியில் பிறந்து, மலேசியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவராகத் திகழும் திரு. நாதனும் அவரது எவர்செண்டாய் நிறுவனமும்  கடந்து வந்த வெற்றிப் பாதையின், எளிய தொடக்கத்தையும், சந்தித்த சோதனைகளை அவர்கள் சாதனைகளாய் மாற்றிய மாயம் பற்றியும் சற்றே விரிவாகக் காண்போமா?

இரும்புக் கட்டுமானத் துறையில் கால் பதித்த அந்த முதல் தருணம் டான் ஸ்ரீ நாதன் அவர்தம் மனதில் இன்றளவும் பசுமையாக நிழலாடுகிறது. அப்போது அவர் 22 வயது இளம் காளை; வாழ்வில் வெற்றி பெறத் துடிக்கும் ஒரு கடின உழைப்பாளி. கல்லூரிப் படிப்பை முடிக்க விடாத கடும் பொருளாதார சிக்கல்களும், எதிர்பாராத சூழல்களால் தொடர முடியாமல் போன அச்சகத் தொழிலும் திரு. நாதனின் முன்னேற்றப் பாதையில் முட்டுக்கட்டை போட முயன்று தோற்றன என்பதே உண்மை.

அமெரிக்க காப்பீட்டுக் கழகத்தில் முகவராக இருந்த கொஞ்ச நாட்களிலேயே மனிதர்களைப் படிக்கவும், நேசிக்கவும் காந்தம் போல் வசீகரிக்கவும் கற்றுக் கொண்டார், அவர்.

கட்டுமானத் தொழிலில் 1982 ஆம் ஆண்டு ஏ.கே.நாதன் பிரவேசம் செய்ததே ஒரு தற்செயலான நிகழ்ச்சி தான். தயாபூமி திட்டத்தின் தாற்காலிக இரும்பு மேடை அமைக்கும் வேலையை எடுத்து வேறொரு ஒப்பந்தக்காரரிடம் கொடுத்திருந்தார் நாதன். கட்டுமானத் தொழிலுக்கு இவர் புதிது என்பதை பயன்படுத்தி அவரை பலவகையில் ஏமாற்ற முயன்றார் அந்த ஒப்பந்தக்காரர்.

ஒரு கட்டத்திலே, ஏ.கே.நாதன் பொறுமை எல்லை மீற, தகுதி வாய்ந்த பணியாளர்களையும், மேற்பார்வையாளர் ஒருவரையும் தேடிப் பிடித்து, ஏமாற்றுக்கார ஒப்பந்தக்காரரை வெளியேற்றினார். வேலையும் சீராக நடந்தது; இரவு பகலாக அயராது பணியாளருடன் கட்டுமானத் தளத்தில் நின்று தொழில் அறிவைப் பெருக்கிக் கொண்டார் நாதன்.
1983ம் ஆண்டு திரு. ஏ.கே. நாதன் கட்டிய “மலேசிய தேசிய கார் தொழிற்சாலை” (புரோட்டான் தொழிற்சாலை), ஜப்பானிய நிப்பான் இரும்பு நிறுவனம் மூலமாக கிடைத்தது அவரது தொழில் முன்னேற்றத்தின் திருப்பு முனையாக அமைந்தது. நிப்பான் நிறுவனத்துடன் எந்த முன் அனுபவமும் இல்லாத போதும், வேலை ஒப்பந்தத்தை தந்து உதவியர், அதன் ஜப்பானிய மேலாளர் தமேஷி யமாக்கி.

பின் ஒரு சந்தர்ப்பத்தில், எந்த நம்பிக்கையின் பேரில் தமக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது என்று யமாக்கியிடமே கேட்டாராம் நாதன். “நமது முதல் சந்திப்பு நினைவிருக்கிறதா? அப்போது உங்கள் கண்ணுக்குள் உற்று நோக்கினேன் நான்; அப்போது அதில் தெரிந்த உறுதியும் நேர்மையும், உங்களை நான் நம்பியதற்குக் காரணம்” என்றாராம் யமாக்கி.  இரவும் பகலும் மாறி வருவது போல, 1980ஆம் ஆண்டுகளின் நடுவில் வந்த பொருளாதார மந்த நிலை எல்லோரையும் போல ஏ.கே.நாதனையும்  விட்டு வைக்கவில்லை. அப்போதும் அவருக்கு கை கொடுத்தது நிப்பான் நிறுவனம் தான்; இந்த முறை சிங்கப்பூர் உள் அரங்க கட்டுமான ஒப்பந்தம் மூலமாக.

சிங்கப்பூரில் எனது கட்டிட வேலையை செய்யும் வாய்ப்பு கிடைத்த போது, மறுபடியும் கோலாலம்பூருக்குத் திரும்பவே மாட்டேன் என்றே நினைத்தேன்” என்கிறார் நாதன். அத்தனை கடினமான, தொழில்நுட்ப சிக்கல் மிகுந்த வேலையில் தூக்கம் தொலைத்த கர்ம யோக நாட்கள் அவை; அத்தனைக்கு அத்தனை பின்னாளில் துறை சார்ந்த அங்கீகாரத்தையும், மரியாதையையும் பெற்றுத் தந்தன. சிங்கப்பூருக்கு சென்று செய்த வேலை அவரது தொழில் வாழ்வின் நல்ல திருப்பமாகவும், எவர்செண்டாய் நிறுவனத்தின் சீரான வளர்ச்சிக்கு அடித்தளமாகவும் அமைந்து விட்டது.

காலச்சக்கரத்தில் பத்து இருபது ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிக்கையில், எவர்செண்டாய் இரும்புக் கட்டுமானத் துறையில் முத்திரை பதித்து, தனக்கென சிறப்பான ஒரு இடத்தை பெற்று இருப்பதை அறியலாம். அவர்கள் கட்டிய கட்டிடங்கள், பல்வேறு நாடுகளின் அடையாளச் சின்னங்களாகவே மாறி விட்டன.

அவற்றில் குறிப்பிட்டு சொன்னால், மலேசியாவின் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள், கேஎல்சிசி சுரியா, கேஎல் கோபுரம், கேஎல்ஐஏ விமான நிலையம், துபாய் விமான நிலைய கட்டுப்பாட்டுக் கோபுரம், துபாய் பண்டிகை நகரம், சவுதி அரேபியாவின் கிங்டம் சென்டர், கத்தாரின் கலீபா விளையாட்டரங்கம் மற்றும் அறிவியல் தொழில் நுட்ப பூங்கா, சிங்கப்பூரின் சங்கி விமான நிலைய மூன்றாவது கட்டிடம் மற்றும் செக் லப் கொக் விமான நிலைய விரிவாக்கம்-ஹாங்காங், என பட்டியல் நீள்கிறது. இன்று உலகிலேயே மிகவும் உயர்ந்த கோபுரமாக விண்ணை முட்டி நிற்கும் 828 மீட்டர் உயர புர்ஜ் கலிஃபா (துபாய்) கட்டிடமும் எவர்செண்டாயின் கைவண்ணமே.

இன்றளவிலும், மலேசியாவின் அடையாளச் சின்னமாக திகழும் பெட்ரோனாக்ஸ் இரட்டை கோபுரத்தின் கட்டுமானத்தில் பங்கு கொண்டதை நினைத்துப் பெருமிதம் கொள்கிறார் திரு.நாதன். ஒரு மலேசியனாக இந்த உலகத்திலேயே மிகவும் உயர்ந்த வானளாவிய ஒரு கட்டிடத்தைக் கட்டிவிட வேண்டும் என்ற தீவிர உந்துதல் காரணமாகவே அது நிஜமாகியது. அதற்காக நாதன் அவர்கள் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல; கொரிய ஒப்பந்ததாரரை ஈர்க்கும் வகையில், சிங்கப்பூரில் நடந்து கொண்டிருந்த கட்டுமானப்பணியை காட்டிட, அவர்களே தாமே அழைத்துச் சென்ற ஓய்வில்லாத ஐந்தரை மணி நேர கார் ஓட்டப்பயணம் உள்பட.

பெட்ரோனாக்ஸ் இரட்டை கோபுரங்களை கட்டியது எனக்கு பெருமை தந்த செயல். எனக்குக் கிடைத்ததோ இரண்டாவது கோபுரத்தின் பணி; அதுவும் முதல் கோபுரத்தின் பணி துவங்கி மூன்று மாதங்கள் கழித்து. ஆனால் நாங்கள் இரண்டாவது கோபுரத்தை, முதல் கோபுரம் கட்டி முடிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பே நிறைவு செய்து விட்டோம்” என்கிறார் திரு. நாதன் பூரிப்போடு.

எவர்செண்டாய் கட்டும் கட்டிடங்கள் மட்டுமல்ல, அதன் பெயர் கூட பலருக்கும் அது ஒரு ஜப்பானிய நிறுவனமோ என்ற எண்ணத்தை தந்து விடுகிறது. “பெயரைக் கேட்கும் போது அப்படி ஒரு அபிப்பிராயம் ஏற்ப வாய்ப்பு உண்டு என்பதை நான் அறிவேன்; ஆனால் அது நூற்றுக்கு நூறு சதவீதம் ஒரு மலேசியக் குழுமம்”- டான் ஸ்ரீ ஏ.கே.நாதன், முகத்தில் குறுஞ்சிரிப்புடன்.

தொழில்முறை உறவில் வெற்றி கண்டு, நீண்டகால நண்பர்களாக மாறி விட்டனராம், திரு. தமேஷி யமாக்கியும் திரு. நாதனும். யமாக்கியின் சொந்த ஊர் ஜப்பானைச் சேர்ந்த செண்டாய் என்பதாம்; அதன் பொருள் “ஆயிரம் தலைமுறைகள்” ஏ.கே.நாதனின் மனதை கவர்ந்த செண்டாய் உடன் ஆங்கிலத்தின் எவர் (என்றென்றும்) சேர்ந்து, “எவர்செண்டாய்” பிறந்தது, வளர்ந்தது.

தொழில்தர்மம் என்று வரும்போது, ஏ.கே.நாதன் அவர்கள் மூன்று கொள்கைகளில் உறுதியாய் நிற்பது வழக்கம்; அவை, எவ்வித குறைவோ சமரசமோ இல்லாத பாதுகாப்பான வேலையும், உயர்ந்த தரமும், சொன்னது சொன்னபடி முடிக்கும் நேர்மையும். இத்தகைய மிகவும் உயர்தரமான, தொழிலாளர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட, குறிப்பிட்ட கால அட்டவணைக்குள் கண்டிப்பாக முடிக்கப்படும் கட்டுமானப் பணிகளும் அதனால் உண்டாகும் வாடிக்கையாளர் மனநிறைவும், எவர்செண்டாய் என்றுமே இரும்புக் கட்டுமானத்துறையில் விரும்பப்படும் முதல் இடத்தைப் பிடித்திருப்பதின் ரகசியம்.

நான் ஒரு பொறியாளன் அல்லன்; அதற்கான பட்டமும் பெறவும் இல்லை. அன்றைய பொருளாதார சூழலில் என் கல்வி தடைபட்டு விட்டது. ஆனால், பிற்காலத்தில் தொழிலில் எனது அனுபவத்தால், விடாமுயற்சியால் நான் அறிந்த நுணுக்கங்கள், சூட்சமங்கள், பல கற்று அறிந்த பொறியியளாரையே மலைப்பில் ஆழ்த்தியுள்ளன” என்ற ஏ.கே.நாதன் கூற்றில் சிறிதும் மிகை இல்லை.

சேவையில் ஒரு முறை திருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் எவர்செண்டயைத் தேடி வருகின்றனராம், நாதன் அவர்கள் அனுபவத்தில்; பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, எந்த வித விளம்பரமோ, சந்தைப்படுத்துதலோ இல்லாமலேயே, மத்திய கிழக்கு நாடுகளில் இந்த விதமாக.

விற்பனை முகவர்கள் என தனியாக யாரும் கிடையாது, வாடிக்கையாளர்கள், உடன் பணியாற்றிய கட்டிட வல்லுனர்கள், திட்ட மேலாளர்கள், எவர்செண்டாயின் பணியின் தரத்தை நன்கு அனுபவித்து அறிந்தவர்கள்; இவர்களே நல்லெண்ண தூதுவர்களாக மாறி, மீண்டும் மீண்டும் பணி செய்ய அழைப்பு விடுக்கின்றனராம் நாதன் அவர்களுக்கு.

கட்டிடக்கலையில் அடுத்த படியாக, ஏ.கே.நாதனின் எவர்செண்டாய், மிகவும் நவீனமான காம்போஸிட் தொழில்நுட்பத்தை உருவாக்கி வெற்றி கண்டுள்ளது. தனது இயந்திரவியல் மற்றும் பொறியியல் தேர்ச்சியின் அடிப்படையில், எண்ணை மற்றும் எரிவாயு துறைகளிலும் தடம் பதித்து வருகிறது. சிங்கப்பூரின் எண்ணை வள நிறுவத்தின் 20 சதவீத பங்குகளையும் கையகபடுத்தியுள்ளது.

ஒளியமான ஒரு சிறந்த எதிர்காலத்தை எதிர்கொள்ள இருக்கிறது, எவர்செண்டாய். அதற்காக இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டி உள்ளது. அதை நான் செய்து முடிப்பதே என் லட்சியம்” என்கிறார் நாதன் மாறாத புன்னகையுடன்.

இரும்புக் கட்டுமானத் துறையில் தனது பல்லாண்டுக்கால உழைப்பின் பலனாக, ஏ.கே.நாதன் பெற்றுக் குவித்த விருதுகளும் பாராட்டுக்களும் பலபல. எர்னெஸ்ட் & யங் வழங்கிய மலேசியாவின் மிகச்சிறந்த தொழில் முனைவோர் பட்டமும், மாட்ரிட் ஸ்பெயின் நாட்டு வணிக தலைமை கழகத்தின் தங்க கட்டுமான பட்டயமும் அதில் அடங்கும்.

உருக்கி வார்க்கப்படும் இரும்பைப் போலவே, எனது தொழிலில் நான் சந்தித்த போராட்டங்கள் என்னை வார்த்து எடுத்து வெற்றிக்கனியைத் தந்து விட்டன என்கிறார், இரும்பு மனிதர் டான் ஸ்ரீ ஏ.கே. நாதன். டான் ஸ்ரீ என்பது அவரது சாதனைகளை கவுரவிக்கும் வகையில் மலேசிய அரசாங்கம் வழங்கிய உயரிய பட்டம். 25 ஆண்டுகளுக்கும் மேலாக, தொழிலில் தான் கண்ட ஏற்ற இறக்கங்கள், அனுபவங்கள் தன்னை பல விதத்திலும் கெட்டிப்படுத்தி, மேலும் மேலும் மன உறுதியையும் முனைப்பையும் கொடுத்ததாக கூறுகிறார் திரு. ஏ.கே.நாதன்.

திரு. நாதன் குடும்பம் அன்பான மனைவியும், அழகான மகளும், அறிவான மகனும் கொண்டது. அவரது குழந்தைகளுக்கு திருமணம் ஆகி, மகன் அவரது நிறுவனத்தின் துபாய் பிரிவை சிறப்புற கவனித்து வர, மகள் தன் கணவருடன் நியூசிலாந்து நாட்டில் வசித்து வருகிறார். அவரது தொழில் குடும்பமோ 15,000 உறுப்பினர்களுக்கு மேல் வளர்ந்து, மலேசியா, அமீரகம், சௌதி அரேபியா, கத்தார் மற்றும் இந்தியாவில் தழைத்தோங்கி வருகிறது.

ஓய்வில்லா உழைப்பின் நடுவே, திரு. ஏ.கே. நாதன் தன் நேரத்தை ஒதுக்குவது கொஞ்சம் கோல்ப் விளையாடி மகிழவும், நெப்போலியன் ஹில் எழுதிய “வெற்றிக்கான விதிகள்” போன்ற சுயமுன்னேற்ற நூல்களைப் படிக்கவும் தான்.

நான் தொழிலை அன்புமணம் புரிந்தவன்; அவள் மீது நான் கொண்ட காதல், என்னை மேலும் மேலும் உற்சாகமாக உழைக்கத் தூண்டுகிறது” எனும் ஏ.கே.நாதனின் சிரிக்கும் கண்கள் மின்ன, கூடவே மின்னுகின்றன அவரது வைரம் பதித்த தங்க கை கடிகாரமும், அவரது ஆழ்ந்த நீல நிற மேல் நாட்டு உடையும்.

இந்த அறுபது வயது இளைஞருக்கு, ஓய்வுக்காலம் என்றும் இல்லை என்றும் நம்புகிறார் அவர். ஏனென்றால் அவர் ஒரு இரும்பு மனிதர்!

(நன்றி: www.top10asia.org and www.eversendai.com)