June 30, 2020

அரணும் முரணும்

அரணும் முரணும்
தமாம் பாலா


பாலிருக்க பழமிருக்க
பசி மட்டும் இருக்காது 
பஞ்சணையில் காற்று
வர தூக்கம் வராதென

பாடல் கேட்டது உண்டு
நிஜத்தில் நடக்குமோ
நினைத்துப் பார்க்காத
நிதர்சன சிக்கல் இன்று

சுத்தமானது காற்றும்
மொத்தமாய் மூடியது
கட்டாய முகக் கவசம்
தொட்டால் தொல்லை

பாதைகள் வெறிச்சிட
பயணங்கள் மறக்கும்
பயம் கண் மறைக்கும்
பதுங்கிடல் பாதுகாப்பு

கை சுத்தமான மனிதர்
கை குலுக்கிட மட்டும்
கையாலாகாத நிலை
கை கூப்பும் சூழ்நிலை 

நண்பருடன் செலவிட
நம்மிடம் நேரம் உண்டு
ஒன்று கூடி மகிழ்ந்திட
இன்று காலமில்லை

விதம் விதமாய் உணவு
நிதம் சமைக்க முடியும்
விருந்துக்கு அழைக்க
ஒருவரும் தயாரில்லை

திங்களன்று வேலைக்கு
செல்ல ஏங்கிடும் மனம்
முடிவில்லா சனிஞாயிறு
பிடிவாதமாய் தினமும்

செல்வம் நிறைந்தவரும்
செலவழிக்க இயலாமல்
இல்லாதவர் பிழைத்திட
இல்லையாம் வழிகளும்

கண்ட கனவுகள் இன்று
கனவாகவே போகவும்
காணாத கிருமி ஒன்று
கண்ணாமூச்சி ஆடவும்

உலகம் இன்று மொத்த
முரண்பாட்டின் உருவம்
மருத்துவ பரிசோதனை
மட்டுமே வெற்றியாகும்

June 11, 2020

ஆலயத்துக்கு

ஆலயத்துக்கு செல்லாதீர்
ஆண்டவன் பாதத்தில் மலர்
தூவி வழிபட அதற்கு முன்
தூய அன்பை கருணையை
உமது வீடுகளில் நிறைப்பீர்

ஆலயத்துக்கு செல்லாதீர்
பலிபீடத்தின் முன் தீபங்கள்
ஏற்றிட அதற்கு முன் கூட்டியே
பாவ கர்வ அகம்பாவ இருளை
அகத்திலிருந்து அகற்றிடுவீர்

ஆலயத்துக்கு செல்லாதீர்
தலைவணங்கி தொழுதிட
அதற்கு முன் சகமனிதருக்கு
தலை வணங்கி இழைத்த
அநீதிகளுக்கு வருந்துவீர்

ஆலயத்துக்கு செல்லாதீர்
முழந்தாளிட்டு இறைஞ்சிட
அதற்கு முன் இல்லாதவன்
ஒருவனை தூக்கி நிறுத்த
தரை நோக்கி தலை குனிவீர்
இளையோரை வளப்படுத்த
அன்றி நசுக்கிட நினையாதீர்

ஆலயத்துக்கு செல்லாதீர்
காலமெல்லாம் செய்த பாவம்
தீர மன்னிப்பு கோரி வழிபட
அதற்கு முன் இதயபூர்வமாய்
உங்களை காயப்படுத்தியவர்
எல்லோரையும் மன்னித்திடுவீர்

சுதந்திர சொர்க்கம்

எங்கே பயமறியாத மனமும்
நிமிர்ந்த தலையும் உளதோ
எங்கே அறிவுடமை மனிதர்
எல்லோருக்கும் பொதுவாக
எளிதில் கிடைக்கின்றதோ

எங்கே உலகமானது சின்ன
சின்ன சில்லுகளாய் மனம்
குறுகிய குட்டிச்சுவர்களால்
பிரிக்கப்படாது உள்ளதோ

எங்கே வார்த்தைகள் சுத்த
சத்திய உண்மையின் அடி
ஆழத்தில் பிறந்திடுமோ

எங்கே தளராத முயற்சி
முழுமை நாடி தன்னிரு
கைகளை விரித்திடுமோ

எங்கே வற்றாத நதியாய்
அறிதலும் புரிதலும் தன்
சுயத்தை பாலை மணல்
துகளாய் சிந்தனையை
தொலைத்த சிற்றறிவில்
இழக்காது இருக்கிறதோ

எங்கே மனம் பரந்ததாய்
விரிந்ததாய் எண்ணமும்
செயலும் சிறந்திட்டதாய்

அமைந்து விடும் அந்த
சுதந்திர சொர்க்கத்தில்
எந்தையே என்னாடும்
எழுந்திடவே அருள்வீர்