September 17, 2011

தேசிய கீதம் (தமாம் பாலா)


தேசிய கீதம் - தமாம் பாலா 


 
இந்தியாவின் தேசிய கீதம், ஜன..கன..மன.. என்பதையும் அதை இயற்றியவர் திரு. ரபீந்தர நாத் தாகூர் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு செய்தி. உலகில் இரண்டு நாடுகளுக்கு தேசிய கீதம் எழுதியவர் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுவும் தாகூர் தான் என்பதே சரியான விடை. அந்த இன்னொரு நாடு, நாம் விடுதலை வாங்கித் தந்த பங்களா தேஷ் என்கிற வங்க தேசம்!

இந்தியாவின் தேசிய கீதம் தெரியும்; நம் தமிழர்களின் தேசிய கீதம் அல்லது மாநில கீதம் ஒன்று தனியாக இருக்கிறது, அது உங்களுக்குத் தெரியுமா? விடையை இங்கேயே உடைத்து சொல்லி விட்டால் கட்டுரை இங்கேயே முடிந்து விடக்கூடும் என்பதால், கொஞ்சம் இடைச்செருகலுக்குப் பின் அறியத் தருகிறேன்.


“தாய் தின்ற மண்ணே, பிள்ளையின் கதறல்
தாய் தின்ற மண்ணே, பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல், பேரரசன் புலம்பல்

-திரைப்பட பாடல், (புதிய) ஆயிரத்தில் ஒருவன். விஜய் ஏசுதாஸ் குரலில் உள்ளத்தை உருக்கும் ஒரு பாடல். இந்த பாடலில் என் புதிருக்கான பதில் ஒளிந்திருக்கிறது, நண்பர்களே!

இன்னும் ஒரு வாய்ப்பு கேட்கும் நம் புத்திசாலி நண்பர்களுக்காக, உங்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு குட்டிக்கதை. ஒரு நிறுவனத்தில் தமிழனும், மலையாளியும், கன்னடனும், பஞ்சாபியும் (சர்தார்ஜி என்று சொன்னால் எளிதில் விளங்கும்) வேலை செய்தார்கள்; தினமும் சேர்ந்து உட்கார்ந்து மதிய உணவு சாப்பிடுவார்கள். எல்லாம் வீட்டிலிருந்து கொண்டு வரும் கட்டுசாதம் தான். தினம் தினம் அதே நேரம், அதே மனிதர்கள், அதே சாப்பாடு; அவர்களுக்கு அலுத்தே போய்விட்டது!

தமிழன் தன் உணவுப் பெட்டியை (டிபன் பாக்ஸ்) திறந்தான். “சே இன்னைக்கும் அதே தயிர்சாதம்; இனி நான் வாழ்வதே வீண் என்று சொல்லி விட்டு அந்த 5ம் மாடி சன்னல் வழியே வெளியே குதித்து உயிரை விட்டான்.
மலையாளி, “ஓ! அதே புட்டு.. என்று கூவி ஜன்னல் வழியே குதித்திட, கன்னடன், “தினா வாங்கி பாத் நோடி பேஜாராய்த்து என அவனைத் தொடர்ந்திட, மிஞ்சியது சர்தார்ஜி மட்டுமே. நிதானமாக தனது உணவுப் பொட்டலத்தை திறந்த அவன், “ஆஜ் பி ஒயி சப்பாதி க்கானா படேகா? என்று கேட்டுவிட்டு, ஜன்னல் வழியே குதித்தும் விட்டான்!

இதெல்லாம் முடிந்த பின்னே அவர்களது மனைவிமார்கள் அலுவலகம் வந்தார்கள். தமிழன், மலையாளி,கன்னடன் மனைவிகள் இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் தினமும் உணவு வகையை (மெனு) மாற்றி இருப்பேனே என்று தன்னைத்தானே நொந்து கொண்டார்கள்; பஞ்சாபியின் மனைவியைத் தவிர. அவள் முகத்தில், துக்கத்தையும் மீறி ஒரு வியப்பு தென்பட்டது. 

“எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் புரியல்ல.. என்றாள் மெல்ல;
 “தினமும் சர்தார்ஜிதான் அவருக்கான மதிய உணவை கட்டி எடுத்துக் கொண்டு போவார். பின்னே ஏன் இப்படி?!?

இப்போது நம் புதிருக்கான விடை.. நம் அன்புத் தமிழர்களின் தேசிய கீதம்.. அதுதான்.. புலம்பல்!! இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் பொதுவானது புலம்பல் தான். தொடர்ந்து இரண்டு நாள் வெயில் அடித்தால், “என்ன சார் இது, இப்பிடி கொளுத்துது? என்று புலம்புவோம். மழை பெய்தாலும், குளிர் அடித்தாலும் அதே கதை தான்.

இன்னும் சில பேர் இருக்கிறார்கள். “என்னமோ தெரியலை சார். என் வீட்டிலே எல்லாமே ரிப்பேர் ஆயிட்டே இருக்கு.. போன வாரம் டிவி, நேத்திக்கு டிவிடி ப்ளேயர், இன்னைக்கு லாப் டாப் என்று மிகவும் அலுத்துக் கொள்வார்கள். இது அளவுக்கு அதிகமாக வைத்து இருப்பவர்கள் வகை!

“ஒரேடியா வேலை கொடுத்து கொல்றான்அல்லது “வேலையே தராம சும்மாவே உட்கார வச்சிருக்காங்க, ஒரு வேளை அனுப்பிச்சிடுவாங்களோ போன்ற புலம்பல்கள் அலுவலகங்களுக்கே உரித்தான அக்மார்க் புலம்பல்கள்.

“உங்களில் யார் பாவம் செய்யாதவரோ, அவர் இந்தப் பெண் மேல் முதல் கல்லை எறியுங்கள் என்ற ஏசுவின் மொழியைப் போல, “உங்களில் யார் புலம்பியதே இல்லையோ, அவர் புலம்பல் பற்றி பேசுங்கள்; எழுதுங்கள் என்று யாராவது சொல்லி இருந்தால், நானும் கூட இதைப் பற்றி எழுதிட இயலாது.

சர்தார்ஜி கட்டி எடுத்துச் சென்ற சப்பாத்தியைப் போல நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லா செயல்களையும், திட்டங்களையும் நாம்தான் நிறைவேற்றி வருகிறோம். இருந்தாலும், அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள என்றும் நாம் ஆயத்தமாக, இல்லை.. அதுதான் இருக்கவே இருக்கிறதே, புலம்பல் எனும் நத்தையின் கூடு, பலி ஆடு!

ஆதி தமிழன், மாட்டு வண்டிக் காலத்துக்கும் முன்னால் எங்கும் நடந்தே சென்றான். அவன் தலையில் சுமையும், தோளில் கட்டுசாத மூட்டையும் இருந்தது; வழியில் இளைப்பாற நினைக்கும் போது, உதவியவை சுமை தாங்கிக் கல்லும், நிழல் தரும் மரங்களும் தான். இன்றைய நாகரிகத் தமிழன் தலையில் சுமை இல்லை; அது பயம் மற்றும் பலபல கவலைகளாக அவன் தலைக்குள்ளே! அவன் தோளில் கட்டுசாத மூட்டையும் இல்லை; அலுவலக கேண்டீன் உபயத்தால்!

ஆனால் சந்திரமதி காலத்திலிருந்து, நல்ல தங்காள் காலத்திலிருந்து நம் 2ஜி/3ஜி காலம் வரை நம் பரம்பரை சொத்தாக புலம்பல் திகழ்கிறது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. 

“இறைவா, எதை என்னால் மாற்ற முடியுமோ அதை மாற்றி அமைத்துக் கொள்வதற்கும், எதை மாற்ற இயலாதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வதற்கும், இவை இரண்டையும் சரியாக இனம் பிரித்து அறிந்து கொள்வதற்கு ஏற்ற மனப்பக்குவத்தையும் எனக்குத்தா என்று ஒரு வேண்டுகோள் அல்லது வேண்டுதல், புலம்பல் நோய்க்கு அறிஞர்கள் பரிந்துரைக்கும் நன் மருந்து. 

உங்கள் நண்பரோ அல்லது உறவினரோ இனி உங்களிடம் வந்து.. “சே.. ஒரேடிய மண்டை காயுதுங்க.. என்று ஆரம்பித்தால், அவர்களிடம்
இந்த கட்டுரையை கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு... அடியேன் பொறுப்பல்ல!! J

====================================================================
-        முள்ளில்லா ரோஜாவைத் தேடாதே; முள்ளிலா ரோஜா என்று ஆச்சரியப்படு, மகிழ்ச்சி பொங்கும் உன்னுள் தோழனே!

July 31, 2011

பர்ஃப்யூம் பகோடா, வியட்நாம்

பர்ஃப்யூம் பகோடா, வியட்நாம்

நம்ம ஊர் ஜவ்வாது மலை, திருநீர்மலை போல வியட்நாமிலும் வாசனை மலைகள் உண்டு! லேடி புத்தா, வந்து இறங்கியதால் மணக்கும் 'பர்ஃப்யூம் பகோடா செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் கிடைத்தது. 7 கடல் 7 மலை இல்லீங்க! 1மணி நேர கார் பயணம், அதன் பின் யென் ஆற்றில் 1 மணி படகு பயணம். கொஞ்சம் பயம் தான்; படகுக்கு வெளியே சில இஞ்ச் விட்டு நீர் மட்டம்!!

அதன் பின், 10 நிமிட கேபிள் கார் பயணம், அதன் பிறகும் ஏறி இறங்க கரடுமுரடான படிகளும், குகை கோயிலும்! கோயிலுக்கு வந்தால் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கேரண்டி! ஆண்/பெண் குழந்தை தேர்வுக்கு தொட்டுக் கும்பிட தனி தனி கற்கள்!!

குழந்தை வந்த பின்.. பராமரிக்க பணம் வேண்டுமல்லவா?? கவலை வேண்டாம்.. வெள்ளி கல்லையும், தங்க கல்லையும் தொட்டு விட்டால் போதும்!!!  நாடுகள் வேறுபட்டாலும், நம்பிக்கைகள் வேறுபடுவதில்லை!! :)) படங்களை பார்த்து பாக்கியை தெரிந்து கொள்ளுங்கள்!!























வி ரிசார்ட், வியட்நாம்

அன்பு வலை உலக நண்பர்களே, அலுவல் காரணமாக 6 மாதங்களாக, நம் வலைப்பூ பூக்க மறந்து விட்டது. அதை ஈடுகட்ட 2 பதிவுகள் இன்று.

இரு வாரங்கள் முன்பு நம் அலுவலக நண்பர்களுடன் ஹனாயிலிருந்து 60 கிமி தொலைவில் உள்ள வி ரிசார்ட்டில் வார இறுதி நாட்களை கழித்தோம். சீரும் சிறப்புமாக என்று கூற இயலாவிட்டாலும், பீரும் போர்க்குமாக சம்மர் ட்ரிப் நிறைவேறியது.

வழக்கம் போல அடியேனுக்கு மரக்கறி உணவு தர வியட்நாமிய நண்பர்கள் திண்டாடி விட்டார்கள். படங்களை பார்த்து மகிழுங்கள்; கண் கொள்ளா பசுமை கொட்டிக்கிடக்கும் வியட்நாமை! :))