June 27, 2010

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 5

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 5
தமாம் பாலா                                                                              For Sa Pa 5 Audio, Please click here

    Sapa Church near Market
போன தொடரிலே, லவ்வர்ஸ் மார்கெட் பற்றி குறிப்பிட்டேன் அல்லவா? அது பற்றி அரசல் புரசலாக இணையத்திலும், வியட்நாம் நண்பர் மூலமாகவும் கேள்விப்பட்டிருந்தோம். ஒவ்வொரு வாரமும், சனி இரவு லவ்வர்ஸ் மார்கெட்டில் ஒரு குட்டி சுயம்வரமே நடக்கும் என்றும், பெண்கள் இருட்டில் அமர்ந்திருப்பார், ஆண் பாடிக்கொண்டே செல்ல, பாடல் பிடித்துவிட்டால் பெண்ணும் முதலில் பாடலிலும் பின் நிரந்தரமாக வாழ்க்கையிலும் இணைந்து கொள்வாள் என்று பல பல கதைகள். இதை கேள்விப்பட்ட நம் தமிழ் நண்பர்கள, முன்னேற்பாடாக சங்கீத சாதகத்தை மானசீகமாக தொடங்கி விட்டார்கள்!

அது வெள்ளி காலை தான், நண்பர்கள் அனைவரும் ஸம்மிடிலிருந்து கால்நடையாக மார்கெட் உலா புறப்பட்டோம் ; ஜிங் மற்றும் தோழிகள் புடை சூழ. அந்த பெண்கள் ஒவ்வொருத்தியும் இங்லீஷில் சும்மா பொளந்து கட்டுகிறார்கள். (பொதுவாக வியட்னாமிகள் ஆங்கிலத்தில் பேசுவது கொஞ்சம் தான், ஹனாயில் ; ஆனால் ஸாபாவில் சின்ன பெண் கூட நன்றாக ஆங்கிலம் பேசுவதை கவனித்தேன், எல்லாம் சுற்றுலா தொழில் செய்யும் மாயம்!)

    Sapa local market

முதலில் வந்தவுடன் ‘ஆர் யு இண்டியன்? வாட் இஸ் யுர் நேம்?” என்று கேட்டாள். நண்பர்கள் சொல்லி வைத்தார் போல பேரை மாற்றி மாற்றி சொல்லிவிட்டனர். ரவி, ராம்கி ஆகி, சுரேஷ் ரவி ஆகி ஒரே பெயர் குழப்பம் ஆகிவிட்டது! நான் பொய் சொல்வதில் கொஞ்சம் சோம்பேறி, ஆகவே என் பெயர் ‘சுப்ரா’ என்று சொல்லிவிட்டேன்.

தண்ணி இல்லாத காலத்து நம் ஊர் கபாலீஸ்வரர் கோயில் குளம் போல மார்கெட் படிக்கட்டுகளுடன் பள்ளத்தில் இருந்தது. வழக்கம் போல எல்லா பொருட்களும், அத்தியாவசம் இல்லாத அதே சமயம், ஸாபாவிலே வாங்கினேன் என்று சொல்லிக் கொள்ள கூடிய ‘ஸவொனிர்’ பொருட்கள். வழக்கமாக வாங்கி குவித்து விட்டு பின் ராதிகாவிடம் ‘வாங்கி கட்டி கொள்ளும்’ அபாயம் கருதி நான் பர்ஸை தொடாமல் விரதம் காத்தேன். பொருள் விலையை மட்டும் நான் கேட்டுவிட்டு பேரம் பேசாமல் போவதால் ஸாபா வியாபாரிகள் சற்று குழம்பித்தான் போய்விட்டார்கள். மணி அய்யா, ஒரு சுத்தியலுடன் இணைந்த ஸ்பானர் போன்ற ஒரு விசித்திரமான ஒன்றை வாங்கினார். ரவி களத்தில் இறங்கி, பேரம் பேசி அங்கே ஒரு ‘அறிவிக்கப்படாத ஆடித்தள்ளுபடியையே உருவாக்கி விட்டார். கடைசியில் நானும் குறைந்த விலையில் சில கீ-செயின் பொம்மைகளை வாங்கி விட்டேன்.

    Scorpion wine(?!)

மதிய உணவு வேளை வந்துவிட, ஸம்மிட் திரும்பி, தரை தளத்து உணவு விடுதியில் சூடாக அரிசி சாதம் மட்டும் வாங்கிக் கொண்டு, ஹனாயிலிருந்து கொண்டு வந்திருந்த சபாத்தி (உபயம் ராம்கி), காரகுழம்பு, மிளகு குழம்பு மற்றும் புளிக்காய்ச்சலுடன் பசி தீர்ந்தது!

    Sa Pa Doom Doom Sa Pa Doom Doom!

சின்ன ஓய்வுக்கு பிறகு, மலையடிவாரத்து கிராமத்துக்கு போகிறோம் என்றும், பாதி தூரம் பஸ் மூலம் மீதி 2/3 கி.மீ நடந்தும் என்றும் முடிவானது. அந்த பயணம், புகைப்படங்கள் மற்றும் வீட்டுத்தங்கல் பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில்...



ஸாபா தொடரும்.

June 20, 2010

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 4.

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 4.
தமாம் பாலா                                                                                  For audio please click here


டப்பா வாலா தெரியுமா உங்களுக்கு?? பம்பாய்காரர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். வீட்டில் கட்டிய டிபன் கேரியரை, ஆள் மாற்றி மாற்றி, சரியாக அலுவலகம் சேர்த்து, மாலையில் பழையபடி வீட்டில் சேர்ப்பவர்கள் தான் இந்த டப்பா வாலாக்கள். பி.பி.சியில் இவர்களைப்பற்றி சிறப்பு செய்தி வந்தது என்றும் இளவரசர்(இன்னும் எத்தனை வருசத்துக்கு சாமி ?!?) சார்லஸ் இவர்களை பாராட்டி உடன் படம் எடுத்துக்கொண்டார் என்றும் கேள்வி!

இப்போது, ஏன் டப்பா வாலா பற்றி நாம் பேசவேண்டும் என்ற விஷயத்துக்கு வருவோமா? சுற்றுலாவில் பொதுவாக ரெண்டு வகை. தனி பஸ் எடுத்து, வீட்டிலிருந்து கைதட்டிக்கொண்டே ஊர் ஊராக போய் வருவது முதல் வகை. இல்லை, பொது ரயிலிலும் பஸ்ஸிலும் போய், குழுவாக சென்று வருவது இரண்டாவது வகை; இது பெரும்பாலும் தொலைதூரத்துக்கு பொருந்தும்.



ஸாபாவுக்கு நாங்கள் வந்தது இரண்டாவது வகையில்! ஹனாயில் ஏற்றிவிட்டதோடு ஏஜண்ட் குயன் வேலை முடிந்தது. லோகாய் ஸ்டேஷனிலிருந்து ஸாபா வரைக்கும் இன்னொருத்தர். ஸாபாவில், எல்லாம் ஹோட்டல் ஸம்மிட் பொறுப்பு. இங்கே தான் வில்லங்கம் ஆரம்பித்தது. காலங்காத்தாலே, விடுதியில் நுழைந்து சடுதியில் நம் காரியங்களை முடித்து கிளம்பலாம் என்ற நினைப்புக்கு ஆப்பு(!) வைத்து விட்டார் ஏஜண்டு(கள்)

உங்கள் பொருட்களை ஸ்டோர் ரூமில் வைத்துவிட்டு, பொதுவாக குளித்து, காலை சிற்றுண்டி முடித்து கிளம்பலாம்; மாலைக்கு மலையடிவார கிராமத்தில் வீட்டுத்தங்கல் (ஹோம் ஸ்டே) என்று ஸப்பா ஸம்மிட் ரிசப்ஷனில் ஒரு ஸ்டே ஆர்டர் போட்டு விட்டனர். அண்ணன் மணி டென்ஷன் ஆகி, ஹனாய் ஏஜண்டுக்கு மொபைல் கால் போட்டால், அவனது காலை தூக்கத்தில் அது மிஸ்டு காலா(வதி ஆ)கிவிட்டது.

ஒரு வழியாக போராடி எல்லோருக்குமாய் 2 மணி நேரத்துக்கு ஒரு ரூமை பிடித்தோம் ஸம்மிட்.டிலேயே. குளித்து முடித்து, ரவீந்திரர் கைவண்ணத்தில் ரெடிமேட் 3 இன் 1 காபியும், அடியேன் முயற்சியில் ப்ரெட் டோஸ்டுமாய் களை கட்டியது காலை உணவு.  அறையிலிருந்து வெளியே பார்த்த போது, ஆகாயத்திலிருந்து மழைக்கு பதிலாக பசுமையை தூவியது போல அக்கம்பக்கம் செடிகொடிகளும் மலர்களுமாய், கண்ணுக்கு குளிர்ச்சியாக தென்பட்டது.

முன்பே சொன்னது போல், திட்டமிட்ட சுற்றுலாவில் அவ்வப்போது நடைபெறும் தப்புக்களுக்கு நடுவே, சில சரியான விஷயங்களும் நடந்துவிடுவது உண்டு. எங்களுக்காக நியமிக்கப்பட்ட பழங்குடி சுற்றுலா வழிகாட்டிப் பெண் அதில் ஒன்று. (அப்பாடி, கஷ்டப்பட்டு எதனிக் டூரிஸ்ட் கைட்-ஐ மொழி “பெயர்த்து” விட்டேன் :))

நாங்கள் ஊர் சுற்றிப் பார்க்கும் நோக்கத்தில், ஸம்மிட்டுக்கு வெளியே வந்தபோது, வெளியே கண்ணை பறிக்கும் ஊதா நிறத்தில் ஒரே மாதிரி உடை அணிந்த பெண்கள் நின்றிருந்தனர். அவர்கள் வியட்னாமியர் போல வெண்ணை வெள்ளை நிறத்தில் இல்லாமல், பழுப்பேறிய சிவப்பு நிறத்தில், கொஞ்சம் செவ்விந்தியர் போல, முகத்தில் லேசான கிராமத்துக்களையுடன் தென்பட்டனர். அந்த கும்பலிலேயே சற்று தெளிவாகவும், பிரகாசமாகவும் தென்பட்ட ஜிங் என்ற பெண்தான் எங்களுக்காக ஸம்மிட் நியமித்த வழிகாட்டி!


ஜிங் வழிகாட்டுதலில் நாங்கள் பார்த்த லவ்வர்ஸ் மார்க்கெட், மற்றும் அன்று மாலை நாங்கள் செய்த ஹோம் ஸ்டே, இன்னும் பல விஷயங்களை புகைப்பட சான்றுகளோடு வரும் பதிவுகளில் பார்ப்போம் நண்பர்களே; அது வரை நன்றி, வணக்கம்!


 ஸா..பா.. தொடரும்

June 14, 2010

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 3.

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 3.
தமாம் பாலா                                                                        For Audio Please Click Here


சமவெளிகளும், மலைப்பிரதேசங்களும், வெவ்வேறு உலகங்கள்; இந்த உலகங்களை இணைக்கும் மலைப்பாதைகள் எந்த நாட்டில் இருந்தாலும் அவற்றின் இலக்கணங்களும் அமைப்பும் பொதுவானவை. ஸா பா செல்லும் பாதையும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. வளைந்து, உயர்ந்து, சுற்றி முனை தாண்டி என்ன இருக்கிறது எந்த வண்டி வருகிறது என்பதே தெரியாத உத்தேசமான ஒரு பயணம்; சற்றே அகன்ற, ஓரளவு சௌகரியமான கொண்டை ஊசி வளைவுகள்!


மேலே போக போக, வெயில் தெரியாமல், லேசாக சிலுசிலுவென்ற காற்றோடு மழைத்தூரலுடன் சூழ்நிலை ரம்மியமாக இருந்தது. இதற்கு அழகு சேர்ப்பது போல, கைபேசியில், எஸ்.பி.பாலுவின் இழைக்கும் குரலில், ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளியை’ (ரோசாப்பூ ரவிக்கைகாரி) தட்டி விட்டேன். தமிழ் நண்பர்களுடன், வேன் ஓட்டுனர், மற்றும் உடன் அமர்ந்திருந்த இன்னொரு வியட்னாமியும் தமிழ் இன்னிசை கேட்டு மகிழும் பேறு பெற்று, ஜென்ம சாபல்யம் அடைந்தனர் என்றே சொல்ல வேண்டும்.

மலையின் ஒவ்வொரு அங்குலமும் குளிருக்கு அடக்கமாக, கனமான பச்சை கம்பளி போர்த்தியிருக்க, பசுமைப் படிக்கட்டுகளில் விவசாயம் நடப்பதும், திரை போட்டு மூடித்திறக்கும் கண்ணாமூச்சி விளையாட்டில் மேகங்களும், அருவிகளும் மும்மரமாக ஈடுபட்டிருப்பதும் அங்கங்கே தெரிந்தது.



நடுவில் ஒரு இடத்தில் சாலைப்பணி நடைபெறுவதால், தாற்காலிகமான சேறும் சகதியுமான மண்பாதையிலும் கொஞ்ச நேரம் பயணித்தோம். மலைப்பாதையின் இறுதியில் ஊருக்குள் நுழைந்த போது, ஒரு அழகான ஏரியும், அன்ன படகுகளும் அதன் கரையில் அழகிய கட்டிடங்களும் தென்பட்ட போது, ஸா பாவில் நுழைந்து விட்டோம் என்று தெரிந்தது. அதன் பின் சற்றே சரிவான கடைத்தெருவைத் தாண்டி, அடுத்த அடுக்கில் உள்ள ஸா பா ஸம்மிட் விடுதியை அடைந்தோம்.

அந்த கட்டிடத்தைப் பார்த்தவுடன் எனக்கு தெருவின் ஒரு பக்கத்தில் தரைத் தளமாகவும், கட்டிடத்தின் பின்புறத்து தெருவில் முதல் மாடியாகவும் இருக்கும் பெங்களூரு வீடுகள் நினைவுக்கு வந்தன. ஆம்; ஸம்மிட் நுழைவாயில் இருந்தது, மூன்றாம் மாடியில். அதற்கு மேலே 3 மாடிகளும், கீழே 3 மாடிகளும் இருந்தன. மலைச்சரிவை சரியாக பயன்படுத்தி அங்கே உள்ள அனைத்து கட்டிடங்களும் கட்டபட்டிருப்பது தெரிந்தது.



உள்ளே போன போது, வரவேற்பறையில், வெளிநாட்டினர் முக்கியமாக ஐரோப்பியர்/அமெரிக்கர் போல பலர் கண்ணில் பட்டனர். பயணக்களைப்பில், எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் கொஞ்சம் இளைப்பாறி, குளித்து முடித்து ஒரு கோப்பை காபியையும் சுவைக்கலாம் என்று தானே நீங்களும் என்னைப் போலவே நினைப்பீர்கள்? நானும் அப்படித்தான் நினைத்தேன்; ஆனால் நடந்தது வேறு!

ஸா..பா.. தொடரும்

June 10, 2010

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 2.

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 2.
தமாம் பாலா                                                                   For Audio Please Click Here



லோ காய் ஸ்டேஷன்லே இறங்கறதுக்கு முன்னே கொஞ்சம் வியட்நாம் மேப் பத்தி கொஞ்சம் பார்ப்போம். உலக வரை படத்திலே இந்தியா எங்கே இருக்குன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்; இல்லையா ?  இந்தியாவுக்கு கொஞ்சம் கிழக்கே வந்திங்கன்னா, பங்க்ளாதேஷ், பர்மா(மியன்மார் இப்போ), தாய்லாந்து, லாவோஸ் அப்புறமா, வியட்னாம்!

வியட்னாம், ஒரு கடல் குதிரை மாதிரி, ஒரு கை கால் இல்லாத ட்ராகன் மாதிரி, இந்தியா பக்கம் பாக்குது; லாவோஸும், கம்போடியாவும் சேர்ந்த வாத்து, இங்க்லீஷ் படம் மாதிரி, வியட்னாமோட உதட்டு முத்தம் கொடுத்துக்கிட்டிருக்குது! (பாலா, கண்ட்ரோல்/சென்சார் தேவை, பெண்களும் உன் பதிவை படிக்கிறாங்கப்பா :-)

வியட்னாம் ட்ராகனோட தலையிலே, கண் போல இருப்பது தான் தலைநகர்(?!) ஹனாய். மூக்குக்கு மேலெ, முன் நெற்றியிலே, லோ காய் ஸ்டேஷன் இருக்குது. இப்போ நேரடியா விஷயத்துக்கு வருவோம். லோ காய் நம்ப மேட்டு பாளையம் மாதிரி, ஸா-பா நம்ப ஊட்டி மாதிரி(தான்). லோ காய் ஸ்டேஷன்லேர்ந்து, 1 கி.மீ தூரத்திலே, சீனாவோட எல்லை வந்துடுது; அதை நாம ஸா-பாவிலேந்து திரும்பி வரும்போது பார்ப்போம், என்ன சரியா?


ஹனாய்லேர்ந்து 8 மணி பிரயாணம் முடிஞ்சு, காலை 5 மணிக்கு லோ காய் ரயில்நிலையம் வந்து சேர்ந்தோம். மலை பிரதேசத்துக்கே உரித்தான பசுமையோட அங்கங்கே ஆறு குளமும் தென்படுது, ரயில் பாதைக்கு ரெண்டு புறமும். வண்டியை விட்டு இறங்கும் போதே, சின்னதும் இல்லாமே, பெரிசும் இல்லாமே மழை! ப்ளாட்பாரத்திலேயே குடை வியாபாரமும் இருந்தது. ஒரு குடை விலை 50,000 வியட்னாம் ரூபாய்!! (மயக்கம் போட்டுடாதீங்க, இரண்டரை அமெரிக்க டாலர் தான்; இந்திய ரூபாய் கணக்கு போடறதை உங்களுக்கே விட்டிடறேன்)

பேரம் பேசாமல் ஒரு பொண்ணு(!) கிட்டே கருப்பு குடை ஒண்ணு வாங்கினேன்; பிரிச்சு பார்த்தா, டேமேஜ் பீஸ்; திருப்பி கொடுத்திட்டு, அவள் வெச்சிருந்த வெள்ளை குடையை வாங்கிட்டேன். எல்லோரும் 3 நாளைக்கான 100 கிலோ கட்டு சாத மூட்டையோடே (மானமுள்ள மறத்தமிழன், இங்கே தான் நிக்கிறான், தலை நிமிர்ந்து!) தட்டு தடுமாறி, ஸ்டேஷனுக்கு வெளியே வந்தோம். ஏஜண்ட், எங்களை ஈஸியா கண்டுபிடிச்சு, எங்களை ஸா-பாவுக்கு கூட்டிப்போக காத்திருந்த ப்ரத்தியேக வேனில் எங்களை ஏற்றி விட்டான்!

ஒரு மணி நேர மலைப்பாதை பயணத்தைப்பத்தியும், ஸா-பா ஸம்மிட் ஹோட்டல் தங்கல் பத்தியும் தொடர்ந்து பேசலாமா, நண்பர்களே?






ஸா..பா.. தொடரும்...

June 7, 2010

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 1.

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 1.
தமாம் பாலா                                                                                For Audio Please Click Here



“தலைவரே! வர்ற வெள்ளிக்கிழமை நாம எல்லாரும் ஸா..பா.. போறோம். துணிமணிய பேக் பண்ணிடுங்க; சைனா பாடர் வரைக்கும் போகவும் ஏற்பாடு செய்துகிட்டிருக்கேன்”- அண்ணன் மணி அவர்கள் சொன்னதை கேட்ட போது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது!
சுற்றுலா சொர்க்க பூமியான வியட் நாமுக்கு வந்து ஒரு மாசம் ஆகப்போகுது; இன்னமும் ஆபீஸ்/வீடுன்னு இருக்கோமேன்னு நினைச்சப்போ, ஸா..பா.. பயணம் வந்துடுச்சு. அது என்ன ஸா...பா..?? நம்ப மக ஆஷிகா பாட்டு கத்துக்கிட்ட சரளி வரிசை மாதிரி இருக்கேன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.

ஆசையாகவும், ஆர்வமாகவும் வெள்ளி வரைக்கும் ஓட்டிடலாம்னு இருந்த போது, புதன் கிழமை திடீர்னு, எதோ ஒரு உணவு ஒவ்வாமை ஆகி (அது என்னவோ, ஃபுட் பாய்ஸனாமே) ஆபிசுக்கு மட்டம் போட்டாச்சு. தட்டு தடுமாறி, ஃபாமிலி மெடிக்கல் போய், டாக்டரை பார்த்தேன். அவர் ஒரு இஸ்ரேலியர். வெள்ளை கோட் போடாமல், எம்.ஜி.யார் பாணி சிகப்பு சட்டையில் பழம் மாதிரி இருந்தார். மருந்து வாங்கிட்டு, “ஸா பா போகலாமா ஐயா?”ன்னேன். “அது நாளைக்கு, உன் உடம்பு உள்ள நிலையை பொறுத்த்துன்னாரு அவரு. அதுவும் சரிதான், அப்படின்னு நினைச்சுக்கிட்டேன்.

மருந்து புண்ணியத்திலே, வெள்ளி மாலை பெட்டி படுக்கையோடே நண்பர்கள் கூட்டமா கிளம்பிட்டோம். ஒரு பெரிய டொயட்டா இன்னோவா டாக்ஸியை பிடிச்சுட்டோம்; ரயில் நிலையம் போயிடலாம்னுதான் தோணிச்சு. ஆனா வியட் நாமி ஓட்டுனர், பாஷை பிரச்சினையாலே மக்கர் பண்ண ஆரம்பிச்சுட்டான். ஆளுக்கு ஆளு புரிய வைக்க முயற்சி செய்ய, நானும் “கூஊஊ...சிக்கு சிக்குன்னு” அதிரடியா இறங்கியும் ஒண்ணும் பலிக்கலே!


ஒரு வழியா ‘டூர் ஏஜண்டுக்கு மொபைல் போட்டு, டாக்ஸி ட்ரைவர் காதிலே வச்சு, ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் தள்ளிட்டு போய்ட்டோம். கா- ஹனாய், அசப்பிலே நம்ம ஊர் ஸ்டேஷன் மாதிரியே இருந்தது. ப்ளாட்ஃபார்ம் தான் தரையோடு தரையா, கம்பார்ட்மெண்ட் உள்ளே போக ஏணி வச்சமாதிரி ஏற வேண்டியிருந்தது. ஸ்டேஷன் பார்க்க கொஞ்சம் சுமாரா இருந்தாலும், வண்டியும் கோச்சும் வீடு மாதிரி, நல்லாவே இருந்தது.



சரியா இரவு 9:10 மணிக்கு ரயில் புறப்பாடு; நாங்க தான் கடைசி பெட்டி. பெரிசுங்க மணி, ரவி தவிர இளசுங்க ராம்கி, சுரேஷ் மற்றும் ரெண்டுங்கெட்டானா, அரவிந்தும் நானும்; ஆக மொத்தம் ஆறு பேரும் அரட்டை கச்சேரியை தொடங்கிட்டோம். பேச்சு சுத்தி சுத்தி ஆபீஸ் வேலை பத்தியே இருந்தது, அதுக்கு வெளியே வரும் போது, தூக்கம் கண்ணை சுத்த, அடுக்கு படுக்கையிலே நுழைஞ்சுக்கிட்டோம். மீட்டர் கேஜ் ரயில் தாலாட்டுற மாதிரி இல்லாமே, தாறுமாறா அலைபாய்ஞ்சு, வயித்தை கலக்கிட்டு ஓடிக்கிட்டிருந்துச்சு, காலை 5:00 மணிக்கு, லோ-காய் ஸ்டேஷன் வர்ற வரைக்கும்!




ஸா..பா.. தொடரும்...