March 11, 2020

செருப்பு

செருப்பு
தமாம் பாலா

புது செருப்பு வாங்கினவன், புது பொண்டாட்டி கட்டினவன் மன நிலை கிட்டத்தட்ட ஒன்றுதான். யாராவது தூக்கிட்டு போயிடுவாங்களா என்ற அச்சம் தூக்கத்திலும் துரத்தும்.

கோயிலுக்கு போனா செருப்பு கவுண்டரில் வைக்கலாம். ரூ 1 அல்லது 2 போதும். கல்யாண வீட்டுல என்ன பண்றது?? இப்போ எல்லாம் பரவாயில்ல சில இடங்களில் செருப்புக்கு தடா இல்லை.

நிறைய புது செருப்பு தொலைச்ச அனுபவத்தில், செருப்பை தொலைக்காமல் இருப்பது எப்படி என்ற தலைப்பில் பி.ஹெச்.டி படிப்பில் பதிவு பண்ணி இருக்கிறேன். 2030க்குள் முடிச்சிடலாம்.

மகாபாரதத்தில் எனக்கு இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது. பீமன் ஜராசந்தன் போர் கதையிலே. எப்போது கிழித்து போட்டாலும் இணைந்திடுவான் ஜராசந்தன். பீமனும் சளைத்திடுவான். அப்போ கிருஷ்ண பரமாத்மா ஒரு ஓலையை கிழித்து கையை இடம் வலமாய் மாற்றி போடுவார். பீமனும் அதை பின்பற்றிட ஜராசந்தன் க்ளோஸ்.

செருப்பை ஒன்றை மண்டபத்து வாசல் இடது கோடியிலும், இன்னொன்றை வலது கோடியிலும் போடுப் பாருங்க, அப்புறம் கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் (புது) செருப்புதான் !!!

March 9, 2020

சிவசக்தி 3

சிவசக்தி 3
தொ.சூசைமிக்கேல்

சக்தியைப் பெண்ணாக்கி - அவள் 
சரீரமெல்லாம் புண்ணாக்கி - இந்தச்
சமுதாயம் தீங்கிழைத்த காரணத்தால்... காலம் அந்த 
சக்தியையே சிவனாக்கி, 
தீயுமிழ வைக்குது பார் 
திறந்த நெற்றிக் கண்ணாக்கி..

அன்புடன்,
பாலாவின் கவி ரசிகன்
தொ. சூசைமிக்கேல்.

சிவசக்தி 2

சிவசக்தி 2
செங்கை வேங்கடனார்

முகத்தின் கீழே 
நவீன ஆடையோ ஆயின் 
பண்டை தோற்ற முகமோ 
சான்று மூக்கின் அணிகலன் 
நுதலில் இட்ட சந்திர கீற்று 
சூரிய பொட்டும் 
கனன்ற சூலம் ஆயின்
நிமிர்ந்த நோக்கில் குளிர்ந்த பார்வை 
இவள் பேதங்களின் உருவகமோ 
போதனைகளின் கல்வியகமோ 
சிவனின் பாதி அன்றைய தேவை 
இன்று நானே முழுதும் 
முக்கண்ணும் உண்டு 
முக்காலமும் எனது!!

March 8, 2020

சிவசக்தி 1

சிவ சக்தி 1
தமாம் பாலா

மீன்விழி மான்விழி
தன்னை உணர்ந்த
பின் மூன்றாம் விழி
திறந்த பெண்ணே
இருளில் ஒளிரும்
உன் முகம் உடன்
தீயான திரிசூலம்
சந்திர திலகமும்
தங்க புல்லாக்கும்
இந்திர லோகத்து
பெண் சிவனோ
இவள் சக்தியோ
என பக்தி தரும்
படம் இது கீதை

உலக மகளிர் தினம்

பெண்
தமாம் பாலா

மகளாய் பிறந்தாள் அக்கா 
தங்கையாய் வளர்ந்தாள் 
அவள் மாணவியாய் முதல்
மதிப்பெண்களும் எடுத்தாள் 
பாரதி கண்ட புதுமைப்பெண்
இவளோ என்று எண்ணிடவும்
காதலியாய் மகிழ்ந்தாள் தன்
மனம் கவர்ந்தவன் கைபிடித்து
மனைவியாய் ஆனாள் பேனா
பிடித்தவள் கையில் கரண்டி
அம்மாவாய் ஆனாள் தனது
தொலைந்த கனவுகளை தன்
பிள்ளைகளில் விதைத்தாள்
பெண் என்பது வெறும் உடல்
அல்ல அது ஆத்மாவின் குரல்

March 1, 2020

திரிசங்கு


மரக்கிளையில் தொங்கல்
மரத்தை முறிக்கும் யானை
கிளை தின்கின்ற எலிகள்

காலடியில் காத்திருக்கும்
பாம்புகள் மேலே இருக்கும்
தேனடை சொட்டும் துளி

நாவில் ருசிக்க கொட்டும்
தேனீக்கள் என இன்பம்
துன்பம் கலந்த வாழ்க்கை

நம்பிக்கை விடாது நம்பி
கையை விட்டால் கடவுள்
வருவார் பறந்து காத்திட