November 23, 2019

குரல்

குரல்
தமாம் பாலா

இனிய குரல் சிலருக்கு
இளமையான குரலுக்கு
சொந்தக்காரரும் உண்டு
சொல்வதை நல்லதாய்

அன்பாய் பண்பாய் அவர்
உன்னிடம் சொன்னால்
நரகத்துக்குக் கூட நீயும்
நகைத்தவாறு செல்வாய்

அன்பின் குரல் கொடுத்திட
அதிகாரத்தின் குரலுடனே
அகம்பாவத்தின் குரலும்
ஆணவத்தின் குரல்களும்

அடக்கி ஆள முயல்கின்றன
அது கொஞ்சகாலம் தானே
எங்கெல்லாம் நேர்மையின்
குரல் நசுக்கப்படுகிறதோ

அங்கே அமைதியாய் இராது
சங்கே முழங்கு சமுதாயமே
கொஞ்சமாய் குரல் கொடு
அஞ்சாதே எது நிரந்தரம்?

ஆண்கள் அழுவதில்லை

ஆண்கள் அழுவதில்லை
தமாம் பாலா

சாண் பிள்ளையானாலும்
ஆண் பிள்ளை என்றார்
உண்மையோ பொய்யோ

முட்டி மோதி முன்னுக்கு
வருவதை பிறக்கும் முன்
கற்றவன் இவன் கர்மவீரன்

படித்து முடித்து முடிக்காமல்
துடிப்பாக தொழில் செய்தும்
மடிப்பு கலைந்த உடையுடன்

இரவுபகலாய் உழைத்து தன்
உறவுகளை உயர்த்துவான்
மறந்தும் தன் துன்பங்களை

எண்ணி ஆண் அழுவதில்லை
கண்ணீரும் வியர்வையும் கூட
தண்ணீரில் கலந்த மீன் போல

எத்தனை அடித்தாலும் தாங்கும்
வித்தகன் இவனே தாங்குவான்
சத்தமில்லாத அவமானங்களை

உவர் நீர் குடித்து வளர்ந்து
இனிப்பு நீர் தரும் தென்னை
ஆண்களில் தான் எத்தனை

ஆண்களுக்கு அங்கீகாரம்
அது தேவையில்லை துளி
அன்பும் பாசமும் போதுமே

November 12, 2019

பீடம்

பீடம்
தமாம் பாலா

கால புருஷ தத்துவத்தில்
சில கிரகங்கள் சுபர்கள்
பல கிரகங்கள் அசுபர்கள்

அல்லது பாபர்கள் என்பர்
நல்லாட்சி தந்த அரசர்கள்
வெல்ல முடியாத வீரர்கள்

கோயில் கொண்ட நாட்டில்
துயிலும் தெய்வங்களும்
மயில் வாகனம் கொண்ட

ஆறுமுகனும் உண்டு தன்
திருமுகம் காட்டாத லிங்க
திருமேனியும் அதன் பின்

உருவம் துறந்த அருவமாய்
துருவம் வடக்கு தெற்காய்
ஒரு இறைமார்க்கம் உண்டு

திரை போட்டு பீடம் வைத்து
கூரை கட்டி சுவரும் எழுப்பி
ஊரைக் கூட்டி வழிபட்டார்

தழை தின்பவரை அழித்து
ஆடு தின்பவர் சில நாளும்
மாடு தின்பவர் பல நாளும்

மாறிமாறி ஆண்டார் பீடம்
ஏறிய சிலைகளை அவரது
கூரிய உளியால் சிதைத்து

சுபர் வீட்டினை அசுபர் பாபர்
அபகரித்து அன்று கட்டினார்
கோபுரம் என்று சொன்னார்

கண்முன்னே இடித்திட்டவர்
கண்ணியவானே என்றார்
கட்டிக் கொள்ளவும் தந்தார்

அனுமதி ஆலயத்துக்காக
மனுதர்மம் பேசும் நாட்டில்
புனுகு பூசியது அயோத்தி

September 19, 2019

குரு

குரு
தமாம் பாலா

மாதா பிதா குரு
குருகுலம் அன்று
பள்ளி கல்லூரி
தந்த குரு நேற்று

கூகுள் வந்தபின்
கூவிஅழைக்கும்
குருவினர் பலர்
குழுவினர் பலர்

அரசியல் குருவா
ஆன்மீக குருவா
தொழில் குருவா
தோழமை குருவா

எல்லா குருவுக்கும்
ஏகப்பட்ட தேவை
அகக்கண் திறக்க
அத்தனை குருவும்

மொத்தமாய் கூடி
சத்தமிட்டால் கூட
சித்தத்தின் உள்
புத்தியின் வித்து

முளைக்கும் வரை
முழுமையில்லை
முதலும் முடிவும்
முயற்சியும் குரு

September 13, 2019

பயம்

பயம்
(தமாம் பாலா)

கடலில் கலக்குமுன்
கலங்கியது நதியும்
கடந்து வந்த பாதை
கண்ணில் தெரிய

சிற்றாறாய் மலை
சிகரங்களில் ஊறி
நகரங்கள் தாண்டி
நடுவில் வளைந்து

வந்த நதி முன்னே
பரந்து விரிந்ததாய்
பெருங்கடல் அதில்
சிறு துளியாகிடும்

பயம் கொண்ட நதி
சுயம் தொலைக்க
தயங்கியே நின்றது
இயலாமை மிகுந்து

நதிக்கு மட்டுமல்ல
நமக்கும் இருப்பது
திரும்பிட முடியாத
ஒரு வழி மட்டுமே

அழியாத நதிகள்
கழிமுகம் சேரும்
கடலுடன் கலக்கும்
கடலாகவே மாறும்

(நன்றி: கலீல் கிப்ரன்)

சுழி

சுழி
தமாம் பாலா

ஆற்று நீரில் கண்ட சுழி
விரலின் ரேகையில் சுழி
தலைவகிட்டில் வந்த சுழி

ஏட்டின் தொடக்கமும் சுழி
என்றார் கோட்டுடன் சுழி
சேர்ந்த உகரம் முதல் சுழி

ஏன் எழுத வேண்டும் சுழி
எதற்கு தோன்றியது சுழி
எப்படி வந்திருக்கும் சுழி

தும்பிக்கையும் ஒரு சுழி
துதிப்பாடலும் கூட சுழி
துணையாம் இந்த சுழி

எண்ணின் முதலும் சுழி
எழுத்தின் வடிவமும் சுழி
எல்லைகள் கடந்த சுழி

எப்போதும் போலவே சுழி
மறந்து எழுதிய பின் சுழி
சேர்த்தேன் மேலாக சுழி



July 27, 2019

வேதாள உலகம்

வேதாள உலகம்
தமாம் பாலா

தினம் ஒரு சவால் சமாளி
தினம் ஒரு புது போராட்டம்
திரும்பவும் விக்ரமன் அந்த
மரத்தில் ஏறி வேதாளத்தை

வெட்டி வீழ்த்தி மேல் சுமந்து
எட்டியே நடை போடும் போது
குட்டி வேதாளமது நகைத்து
ஆட்டத்தை ஆரம்பிக்கிறது

இந்தக் கேள்விக்கு விடை
தெரிந்தும் சொல்லாவிடில்
உன் தலைவெடித்து சுக்கு
நூறாகி விடும் என்கிறது

சொல்ல வேதாளம் ஏறும்
முருங்கை மீது மீண்டும்
அல்லது வெடிக்கும் தலை
இதுவே விக்ரமன் நிலை

June 4, 2019

நல்ல நேரம்

நல்ல நேரம் (திருத்திய பதிப்பு)
தமாம் பாலா

சிறியதாய் பெரியதாய் வட்டமாய்
சதுரமாய் செவ்வகமாய் மனிதர்
முகம் போல் பலவித வடிவமாய்
காலநேரம் காட்டும் கடிகாரங்கள்

பேசவும் பாடவும் தெரிந்த டிக்டிக்
ஓசையில் இதயம் துடிக்க பத்து
ஒரு கண்ணாய் எண்ணிரண்டு
மறு கண்ணாய் தெரிவதுண்டு

பன்னிரெண்டு நெற்றிப்பொட்டு
முள் சிரிக்கும் முகமும் சுளிக்கும்
ஓடும் வினாடி முள் சுட்டி பையன்
ஓரிடத்தில் நிற்காமல் சுற்றிடவும்

காலை உலை வைப்பது முதல்
மாலை வரை இல்லத்தரசியாய்
இடம் மாறும் பெரியமுள் கூடவே
இருந்த இடத்தே எல்லா கடனும்

எடுத்தாளும் கணவன் சின்னமுள்
அவளைத் தொட்டும் தொடாமலும்
என கடிகாரத்துக்குள்ளே குடும்பம்
ஒரே வீட்டில் தனித்தனி உலகமாய்

ஒரு ஊரிலுள்ள மருத்துவர் இருவர்
வருநோய் கணிப்பில் வேறுபடவே
ஒரே வீட்டிலுள்ள இரு கடிகாரங்கள்
ஒரு பொழுதும் ஒரே நேரம் காட்டா

பழம்பெரும் ரோமானிய கடிகாரம்
பதினொன்றா ஒன்பதா தெரியாது
முள்ளிருந்தும் குத்தாத பூப்போல
காற்றில் கொளுத்திய கற்பூரமாய்

மின்னணு கடிகாரத்தில் திறக்கும்
குழாயில் வழியும் நீராய் கண்முன்
கொட்டிடும், எண்ணிடை புள்ளிகள்
சிமிட்டும் தமது யந்திரக் கண்கள்

பேரழகு சேர்க்கும் மணிக்கூண்டாய்
பார்த்து ரசித்த நேற்றைய கடிகாரம்
இருமுறை தினம் சரி நேரம் காட்டும்
இப்போது ஓடாமல் ஓய்ந்த கடிகாரம்

April 18, 2019

விகாரி வாழ்த்து

விகாரி வாழ்த்து

கூரிய வில் அம்பு போல
கூறிய சொற்கள்  போல
ஒருவழிப் பாதை செல்ல
ஒரு வருடம் முடிகின்றது

விளம்பி கிளம்பி விட்டது
விகாரியும் வந்து விட்டது
விடியும் நாளை பொழுது
விலங்குகளை உடைத்து

வெற்றிகளைக் குவித்து
பெற்ற நன்மை அறிந்து
உற்ற நட்பில் திளைத்து
ஏற்றமே தரட்டும் சிறந்து

April 3, 2019

அடையாளம்

அடையாளம்
தமாம் பாலா

திரைப்படம் பார்த்தேன்
யாரையும் தெரியாமல்
தொலைக்காட்சிகளில்
பண்பலைகளில் பலபல

புதுமுகங்கள் குரல்கள்
எதுவும் பரிச்சயமில்லை
அது போகட்டும் என்றே
புது வீட்டின் கண்ணாடி

முன் நின்று கொண்டு
என் முகம் பார்த்தேன்
தன் அடையாளத்தை
அன்றே தொலைத்த

கூட்டத்தில் ஒருவனா
ஆட்டத்தில் ஒப்புக்குச்
சப்பாணியா நானும்
செப்பிடுவீரே நீவிர்

March 17, 2019

சொல்லும் செயலும் - திருந்திய பதிப்பு

சொல்லும் செயலும்
திருத்திய பதிப்பு
(தமாம் பாலா)

அம்மா  சொன்னாள் கண்ணா
சின்னவன் உனக்கு பொம்மை
வாங்கித் தருவேன் நீ வளர்ந்திட

விண்ணுயரக் கல்வி தருவேன்
தின்ன தினம் அறுசுவை உணவு
தருவேன் இன்னும் பல செல்வம்

தருவேன் உனக்கும் பொன் நிகர்
பெண்ணை மணமுடித்திடுவேன்
சொல்லிய வண்ணம் செய்தாள்

கண்ணன் அன்றே சொன்னான்
அம்மா நான் அன்பைத் தருவேன்
உனக்கு வீடு தருவேன் வாகனம்

தருவேன் அவையில் பெருமை
தருவேன் மகிழ்ச்சியும் தருவேன்
மரியாதை தருவேன் கண்ணன்

சொல்லிய வண்ணம் செய்தான்
கண்ணன் சொல்லாதது என்ன?
இவை என் திருமணத்திற்கு முன்

என் திருமணத்திற்கு பின் நான்
உனக்கு  "முதியோர் இல்லத்தில்"
ஒரு இடம் வாங்கித் தருவேன் என

கண்ணன் சொல்லாமல் செய்தான்
நம்மால் சொல்வதை செய்வதற்கு 
இயன்றாலும் செய்ய முடிவதை

சொல்ல முடிவதில்லை எதையும்
செய்வதற்கு கூச்சமே இல்லை
சொல்வதற்குத் தான் கூச்சமும்

அப்பா பாட்டி இருக்கின்ற அந்த
அறை உனக்குத் தானே என்ற
அன்பு மகன் சொல் கேட்டதும்

வந்தது அறிவு கண்ணனுக்கு
அன்னையை மீட்டு வந்தான்
சொன்னது உண்மைக் கதை

February 23, 2019

திருக்குறள் கவிதைகள்

திருக்குறள் கவிதைகள்
தமாம் பாலா

1. அறத்துப்பால்

கடவுள் வாழ்த்து 1-10

அகரம் தமிழுக்கு முதல்
ஆண்டவன் உலகுக்கும்
இறையடி தொழாவிடின்
ஈடில்லா கல்வியும் பாழ்

உள்ள மலர் உறை இறை
ஊர் மெச்சும் நல்வாழ்வு
எதுவும் வேண்டா நிலை
ஏகாந்தம் துன்பமில்லை

ஐயமில்லா தெய்வ பக்தி
ஒழித்திடும் சின்ன புத்தி
ஓங்காரம் ஐம்புலனுக்கும்
ஔடதம் அமரர் ஆக்கும்

கடவுளுக்கும் நிகரில்லை
கற்கவும் இல்லை கவலை
கடலில் நீந்துவது கடினம்
கரை சேர பக்தி படகாகும்

காணாத கேளாத கட்செவி
காலடி தொழாத தலையே
காணும் பிறவி சமுத்திரம்
காட்சி முன் எம்மாத்திரம்

வான் சிறப்பு 11-20

அமுதமாம் மழைக் கொடை
ஆகாயத்தின் பரிசு புவிக்கு
இலை தழைக்கு மழை உரம்
ஈர மழை தணித்திடும் தாகம்

உலகம் கடல் சூழந்திருந்தும்
ஊர் மழை இன்றில் வாடும்
என்று மழை பொய்க்குமோ
ஏர் உழாமல் நிற்கும் அன்று

தவறிய பருவ மழை மோசம்
தலை விரித்தாடிடும் பஞ்சம்
ஓரிலை பசும் புல்லின் தலை
ஔவை பாடிய வான் மழை

கடல் கூட வற்றிப் போகலாம்
கன மழை வராமல் போனால்
வானம் பொழிய மறந்திடில்
வானவர் பூசையும் இல்லை

தான தர்மங்களும் இல்லை
தங்க மழை தராமல் போக
தண்ணீர் இல்லாத உலகும்
தரிசாய் காய்ந்தே வாடும்

நீத்தார் பெருமை 21-30

அறவழி சென்றார் ஆசை
துறந்தாரைப் புகழ் நூலே
பிறந்து மறைந்த மொத்த
சிறந்த மனிதம் எண்ணி

இம்மை மறுமை அறிந்து
தம்மை வென்றோர் பலர்
அடங்காத புலன்களுக்கு
அங்குசமாய் ஆனவரே

இந்திரியம் வென்றதால்
இந்திரனுக்கு நிகரானார்
அரிய செயலால் பெரிய
பெயரினைப் பெற்றாரே

உடலின் நுகர்ச்சிகளையே
அடக்கி அகிலம் ஆண்டு
நிறைமொழியாளர் நல்ல
மறைமொழி சொன்னாரே

கண நேர சினம் காட்டும்
குணக்குன்றான அடியார்
அந்தணர் அறவோர் நல்
அன்பே சிவமாகியவரே

அறன் வலியுறுத்தல் 31-40

அறம் தரும் சிறப்பையும்
நிரந்தர நன்மைகளையும்
அறமே ஆக்கமும் அதை
மறப்பதே கேட்டின் விதை

செயலில் அறம் வேண்டும்
இயலாத தருணங்களிலும்
அறமெனில் அகத்தூய்மை
பிற அனைத்தும் வெறுமை

ஆசை சின ஔவியம் கடிதல்
அகற்றிட நிறையும் நல்லறம்
அன்றே செய்வதே அறமும்
அதற்கு என்றுமே முகூர்த்தம்

அறத்தின் பயனை பல்லக்கின்
அகத்தும் புறத்தும் காணலாம்
ஒரு நாளும் தவறிடாத அறம்
மறுபிறவி அழிக்கும் வரமாம்

அறமே இன்பமும் நற்புகழும்
அதுவன்றி யாவும் துன்பமே
அன்றாடம் வேண்டும் அறம்
மன்றாட விலகிடும் பழியும்

இல்வாழ்க்கை 41-50

பெற்றோர் பிள்ளை சுற்றம்
பெருவாழ்வுக்கு இல்லறம்
மறையோரும் வறியொரும்
மறைந்தோரும் மகிழ்ந்திட

முன்னோர் இறை விருந்து
தன் உறவின் துணை வீடு
பழியிலா பொருளீட்டல்
பகிர்ந்துண்ணலை நாடு

அன்பும் அறனும் ஆகும்
பண்போடு பயன் மிக்கதாக
அறநெறி இல்வாழ்வானும்
பிறநெறி செல்வதும் வீணே

அறவழி வாழ்பவர் அவர்
அனைவருக்கும் சிறந்தவர்
தன்வழி அறவழி கொள்ள
தவச்சீலருக்கும் மேலாவார்

இல்வாழ்க்கையே நல்லறம்
இல்லை அதில் பழிபாவம்
வளமாய் வாழ் இல்லத்தார்
உளமாரத் தொழும் தேவர்

வாழ்க்கைத் துணைநலம் 51-60

கொண்டவன் கொண்டதைக்
கொண்டு வாழ்வதே துணை
இல்லாள் நல்லாள் இன்றேல்
இருப்பதனால் பயனுண்டோ

மாண்புடைய மனைவி வரம்
ஆண் தின்னும் பெண் சாபம்
பெண்ணின் திண்மை அவள்
பேணும் கற்புநெறியில் காண்

தெய்வம் கணவனே என்பவள்
பெய் என்றால் மழை பெய்யும்
தன்னை கூட தன்னவனையும்
தகுதியுடன் காப்பவளே பெண்

எந்த சிறையும் இல்லை கற்பாம்
சொந்த சிறை தவிர அவளுக்கு
வாழுலகில் பதியை மதிப்பவள்
மேலுலகில் பாதமும் பதிப்பாள்

புகழ் காக்க துணைவி இல்லாது
இகழ் பகை முன் ஏற்றமும் ஏது
ஆணுக்குப் பெண் அலங்காரம்
அவர் தம் மக்களே அணிகலன்

மக்கட்பேறு 61-70

பெற்றதில் பெரிதான பேறு
பெற்றெடுத்த மக்கட்பேறு
தீதிலா பிள்ளைச் செல்வம்
தீண்டாது பிறவி வினையே

பிள்ளைகள் செல்வம் தான்
உள்ளபடி நல்ல வளர்ப்பில்
அவரது கை பட்ட கூழும்
அமுதமாம் பெற்றோர்க்கு

மகவைத் தழுவிட மகிழ்ச்சி
மழலை கேட்கவே இனிமை
குழலை யாழை ரசிப்பவரும்
குழந்தை குரல் கேளாதவரே

அவையில் மகனின் சிறப்பு
அப்பாவின் கடும் உழைப்பு
அறிவில் சிறந்த பிள்ளையே
அது நாட்டுக்கும் நன்மையே

ஈன்ற தாய்க்கு இன்பம் கோடி
சான்றோன் அவன் என்றபடி
தவம் செய்தானோ தகப்பன்
இவண் பேசும் மகன் செயல்

அன்புடைமை 71-80

அன்புக்கேது தாழ் வரையறை
அழுகை கண்ணீர் உள்ள வரை
அன்பிலார்க்கு எதுவும் தனது
அன்புடையார் என்பும் பொது

உடம்பும் உயிரும் சேர்ந்ததாய்
அன்பே பிறவியின் பயனதாய்
அண்மை விரும்பும் அன்பால்
நன்மை தரும் நட்பே பலனாம்

அன்பர் கொண்ட  நல்வாழ்வும்
அவரது இன்பத்தின் சிறப்பாம்
அறத்துக்கு மட்டுமல்ல துணை
அன்பு வீரத்துக்கும் நல்லிணை

வெயில் காயும் எலும்பிலா புழு
அறம் காயும் அன்பில்லா உயிர்
பாசம் இல்லாத குடும்ப வாழ்வு
பாலையில் பட்ட மரத்தின் தளிர்

அன்பெனும் உள்ளுறுப்பின்றி
அழகான வெளியுறுப்பும் வீண்
அன்பே உயிர் அன்பு அகன்ற
உடல் எலும்புக்கு மேல் தோல்

விருந்தோம்பல் 81-90

இருந்தோம் காத்து இல்லத்தில்
விருந்தோம்பல் வேண்டியதால்
அவரை விட்டு தாம் உண்ணும்
அமுதமே ஆயினும் தவறாகும்

வரும் விருந்து நோக்கும் வாழ்வு
வருத்தமில்லாத இன்பம் உயர்வு
முகம் மலர்ந்து உபசரிக்க அகம்
திருமகளின் இருப்பிடம் ஆகும்

விருந்தின்பின் மிஞ்சியது தின்ன
வித்தில்லாமல் விளையும் பொன்
செல்விருந்து செல்ல வருவிருந்து
கொள்வது தருமே தெய்வ விருது

விருந்தே வேள்வி விருந்தளவே
அருந்தவப் பயன் நல்விளைவே
விருந்தினைப் போற்றாத போது
வருந்துவர் தம் செல்வம் இழந்து

இருந்தும் விருந்தோம்பா மடமை
பொருளிருந்தும் இல்லா வறுமை
முகர்ந்தால் வாடும் அனிச்ச மலர்
முகராமல் வாடுபவர் விருந்தினர்

இனியவைகூறல் 91-100

வஞ்சமின்றி வாஞ்சை நிறைந்து
வாய்மை மிகுந்த சொல் இனிது
முகம் மலர்ந்த இனிய சொல்லது
முழுமன ஈகைக்கும் மேலானது

முகம் விரும்பி அகம் அரும்பிட
முத்தான அறச்சொல் விளம்பிட
அத்தனை இன்பம் விளையுமே
சொத்தனைத்தும் வந்து சேருமே

பணிவும் பகரும் சொல் கனிவும்
அணியேது நமக்கு வேறெதுவும்
ஒன்றே நன்றே இன்றே சொல்ல
ஓடும் பழி பாவம் என்றே சொல்

நன்றிமிகு நற்சொல்லே வழங்கிடு
நன்மையே விளையும் அறிந்திடு
சிறுமை நீக்கிய இன்சொல் தரும்
இம்மைக்கும் மறுமைக்கும் வரம்

இன்சொல் தரும் இனிமை கொள்
வன்சொல் வழங்கலாமோ சொல்
கனியிருக்க காய் எதற்கு நமக்கும்
இனியேனும் வருமோ நற்பழக்கம்