November 23, 2019

குரல்

குரல்
தமாம் பாலா

இனிய குரல் சிலருக்கு
இளமையான குரலுக்கு
சொந்தக்காரரும் உண்டு
சொல்வதை நல்லதாய்

அன்பாய் பண்பாய் அவர்
உன்னிடம் சொன்னால்
நரகத்துக்குக் கூட நீயும்
நகைத்தவாறு செல்வாய்

அன்பின் குரல் கொடுத்திட
அதிகாரத்தின் குரலுடனே
அகம்பாவத்தின் குரலும்
ஆணவத்தின் குரல்களும்

அடக்கி ஆள முயல்கின்றன
அது கொஞ்சகாலம் தானே
எங்கெல்லாம் நேர்மையின்
குரல் நசுக்கப்படுகிறதோ

அங்கே அமைதியாய் இராது
சங்கே முழங்கு சமுதாயமே
கொஞ்சமாய் குரல் கொடு
அஞ்சாதே எது நிரந்தரம்?

ஆண்கள் அழுவதில்லை

ஆண்கள் அழுவதில்லை
தமாம் பாலா

சாண் பிள்ளையானாலும்
ஆண் பிள்ளை என்றார்
உண்மையோ பொய்யோ

முட்டி மோதி முன்னுக்கு
வருவதை பிறக்கும் முன்
கற்றவன் இவன் கர்மவீரன்

படித்து முடித்து முடிக்காமல்
துடிப்பாக தொழில் செய்தும்
மடிப்பு கலைந்த உடையுடன்

இரவுபகலாய் உழைத்து தன்
உறவுகளை உயர்த்துவான்
மறந்தும் தன் துன்பங்களை

எண்ணி ஆண் அழுவதில்லை
கண்ணீரும் வியர்வையும் கூட
தண்ணீரில் கலந்த மீன் போல

எத்தனை அடித்தாலும் தாங்கும்
வித்தகன் இவனே தாங்குவான்
சத்தமில்லாத அவமானங்களை

உவர் நீர் குடித்து வளர்ந்து
இனிப்பு நீர் தரும் தென்னை
ஆண்களில் தான் எத்தனை

ஆண்களுக்கு அங்கீகாரம்
அது தேவையில்லை துளி
அன்பும் பாசமும் போதுமே

November 12, 2019

பீடம்

பீடம்
தமாம் பாலா

கால புருஷ தத்துவத்தில்
சில கிரகங்கள் சுபர்கள்
பல கிரகங்கள் அசுபர்கள்

அல்லது பாபர்கள் என்பர்
நல்லாட்சி தந்த அரசர்கள்
வெல்ல முடியாத வீரர்கள்

கோயில் கொண்ட நாட்டில்
துயிலும் தெய்வங்களும்
மயில் வாகனம் கொண்ட

ஆறுமுகனும் உண்டு தன்
திருமுகம் காட்டாத லிங்க
திருமேனியும் அதன் பின்

உருவம் துறந்த அருவமாய்
துருவம் வடக்கு தெற்காய்
ஒரு இறைமார்க்கம் உண்டு

திரை போட்டு பீடம் வைத்து
கூரை கட்டி சுவரும் எழுப்பி
ஊரைக் கூட்டி வழிபட்டார்

தழை தின்பவரை அழித்து
ஆடு தின்பவர் சில நாளும்
மாடு தின்பவர் பல நாளும்

மாறிமாறி ஆண்டார் பீடம்
ஏறிய சிலைகளை அவரது
கூரிய உளியால் சிதைத்து

சுபர் வீட்டினை அசுபர் பாபர்
அபகரித்து அன்று கட்டினார்
கோபுரம் என்று சொன்னார்

கண்முன்னே இடித்திட்டவர்
கண்ணியவானே என்றார்
கட்டிக் கொள்ளவும் தந்தார்

அனுமதி ஆலயத்துக்காக
மனுதர்மம் பேசும் நாட்டில்
புனுகு பூசியது அயோத்தி