November 2, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 11)

தஞ்சையிலிருந்து தமாம் வரை தொடர் 11
தமாம் பாலா

ஆகாஷவாணி, ஸெய்திகள் வாஷிப்பது..

1970ம் வருஷம்னு நினைக்கிறேன், மாதம் சரியா நினைவுலே இல்லை; நானும் அப்பாவும், ராத்திரி நேரத்து, பாதி இருட்டு பாதி தெருவிளக்கு வெளிச்சத்துலே தஞ்சை வடக்குவீதி மிட்டாய் கடை ஸ்டாப் பக்கத்துலே நடந்து போய்கிட்டு இருந்தோம். எதுக்காக போகிறோம்னு அவருக்கு மட்டும்தான் தெரியும். நம்ம எப்பவுமே மாட்டுக்கு பின்னாடி போற கன்னுகுட்டி தானே?

“அப்பா, நாம எங்கே போறோம்?’

“அதுவாடா கண்ணா? நமக்கு லாட்டரிலே கொஞ்சம் பணம் கிடைச்சிருக்கு; அதோட சேர்த்து காசு போட்டு, லைஸன்ஸ் வாங்க போறோம்”

லைஸன்ஸ் அப்படின்னதும், துப்பாக்கி அது இதுன்னு எங்க குடும்பத்தை பத்தி தப்புகணக்கு போட்டுட போறீங்க! கத்தி சண்டை என்ன, வாய் சண்டை கூட சரியா போடத்தெரியாத ‘அக்மார்க்’ தொடைநடுங்கி குடும்பமாக்கும்.. நாங்க!! :))) எங்களுக்கெல்லாம் சேர்த்து சண்டை போடறத்துக்குத்தான், எம்.ஜி.ஆர் இருந்தாரே அன்னைக்கு!

அப்புறம் எதுக்கு லைஸன்ஸ், ஒரே குழப்பமா இருக்கா? அது எங்க குடும்பத்துலே ஒரு புது மெம்பரை சேர்க்கறத்துக்கு. அந்த மெம்பர், பேசும், பாடும், அவ்வப்போது இரைச்சல் கூட போடும். ஆனா எல்லாம் இருந்த இடத்திலேயே தான். அதாலே, ஒரு அடிகூட நடக்க முடியாது.

குரல் மட்டும் குயில் போல இல்லே, பாக்குறத்துக்கும் கருப்பா, காக்கா மாதிரி தான் இருக்கும். கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே..! நீங்க ரொம்ப கெட்டிக்காரர் தான் போங்க :))

(ஐஸ், ஐஸ் நம்பாதீங்க.. பாலா இப்படித்தான் புகழ்ந்தே கவுத்துடுவான்!)

ரேடியோ பொட்டிதான் அது !!!!

இன்னைக்கு நூறு ரூபாய்க்கு சோப்பு பெட்டி மாதிரி சீரழியுது எஃப் எம் ரேடியோ. அந்த ரேடியோ அந்த காலத்துலே.. பெரிய லக்ஸூரி.. ஸ்டேடஸ் ஸிம்பல்!

எங்க பெரியம்மா வீட்டிலே, பெரிய ரேடியோவை பார்த்திருக்கேன். மரப்பெட்டியும் சோபா செட்டும் கலந்தது போல கம்பீரமா இருக்கும். காத்து போகறத்துக்கு உள்ள இடுக்குகள் வழியா பார்த்தாக்க, உள்ளே வால்வுகள் எல்லாம் பல்பு போல எரிஞ்சு கிட்டு இருக்கும். குரல் மட்டும்தான் சிம்ம கர்ஜனைனு இல்ல.. வால்யூம், ஸ்டேஷன் மாத்துற குமிழ்களிலெ கைய வைச்சு திருப்பும் போது, பளீர்னு ஷாக் அடிச்சு பயமுறுத்தும் அந்த ரேடியோ இயந்திரம்!

அப்பா வாங்கின ரேடியோ, சின்னது! ட்ரான்ஸிஸ்டர் வகையை சேர்ந்தது. ரொம்ப நாள் நான், ரேடியோவுக்கு இது சின்ன ஸிஸ்டர், அதாவது தங்கச்சின்னே நினைச்சுகிட்டிருந்தேன். அது ஒரு வகையிலே நிஜம்தான். கூட அக்கா தங்கச்சி, அண்ணன் தம்பி இல்லாத ‘ஓரி பிண்டங்களுக்கு, ரேடியோதான் உடன்பிறப்பு, அந்த காலத்துலே :((

புலி பசித்தாலும் புல்லை தின்னாதுங்கற மாதிரி, சும்மாவே இருந்தாலும் தப்பி தவறிகூட புத்தகம் படிக்கவே கூடாதுன்னு வைராக்கியமா இருந்தார் அப்பா. நானும் அம்மாவும், அதுக்கு நேர் எதிர். மளிகை சாமான் பொட்டலம் கட்டின பேப்பரை கூட விடாமல் பிரிச்சு/படிச்சு மேய்ஞ்சிடுவோம்.

எங்க மூணு பேரையும் ஒண்ணா இணைச்சு வாழ வெச்சது.. அந்த ரேடியோ பொட்டிதான்; அவ்வப்போது பிணக்குகளை உண்டாக்கி வெச்சதும் அதே ரேடியோதான்!

அப்பா பேச்சையும், அம்மா பேச்சையும் கேட்டோமோ இல்லையோ கண்டிப்பா ரேடியோ பேச்சை கேட்டோம்.

அப்பா வீட்டிலே இருந்தா, ரேடியோ நாட்டு நடப்பையும், அரசியலையும் மட்டுமே பேசும். மாலை 6:40க்கு.. மாநிலச்செய்திகள் வாசிப்பது.. செல்வராஜ் அப்படின்னு சூப்பர் வாய்சோட ஒருத்தர் படிப்பார். அவர் முகத்தை ஒரு ராஜா லெவல்லே கற்பனை பண்ணலாம்; ஒரிஜினல் முகம் தெரியாததாலே, அது இன்னும் அப்படியே மெய்ண்டெய்ன் ஆகுது!

ஏழே கால் மணிக்கு, ரேடியோ.. மாநில அரசுகிட்டே இருந்து, ஹைஜாக் ஆகி மத்திய அரசுக்கு போய்டும். “ஆகாஷ வாணி, ஸெய்திகள் வாஷிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி” அப்படின்னு மிரட்டுற மாதிரி ஒரு குரல் கேட்கும். இப்ப வர்ற ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டு மாதிரி, அது ஆம்பிள்ளை குரலா, பொம்பிள்ளை குரலான்னு ஒரே குழப்பமா இருக்கும். நியூஸிலும், ராஷ்ட்ரபதி, நதிநீர் தாவா, ப்ரேரணை, கொறடா எல்லாம் போட்டு தமிழ்தானா இதுன்னு பாதி புரிஞ்சும் புரியாமலும் இருக்கும். கூறினார் அப்படிங்கறதை மட்டும் கோரினார் அப்படின்னு ஸ்பஷ்டமா சொல்லிடுவாங்க.

இப்படியெல்லாம் அழும்பு பண்ற ரேடியோ.. அம்மா கை பட்டால் மட்டும், சமத்து பிள்ளையா மாறிடும். விவித் பாரதி, தேன் கிண்ணம், வண்ணச்சுடர், ஒலிச்சித்திரம், ஆப்கி பர்மாயிஷ், பினாகா கீத் மாலா அப்டின்னு பொழுது போக்கு பூங்காவாவே மாறிடும். (டிவி இல்லாத காலம் அது.. குறைஞ்ச பட்சம் எங்க வீட்டிலையாவது! )

ரேடியோ மோனோவா இருந்தாலும், ஸ்டீரியோ டைப்பா, ஆல் இண்டியா ரேடியோவிலே, அரைச்ச மாவையே திரும்ப திரும்ப அரைச்சுகிட்டு இருந்த காலம் 70-80கள்.

அதிக பட்சமா, நைட்டு 9மணிக்கு மேலே.. புது சினிமா ரிலீஸ் சம்பந்தமா.. “பா..ர..தி.. ராஜாவின்..சிகப்பு ரோஜாக்கள்”..ன்னு ஒரு சூப்பர் பெண் குரலும் “தாலாட்டு தே வானம்.. தள்ளாடு தே மேகம்” பாட்டோட ஆரம்பமும்.. “காலிக் ப்ரதர்ஸ் வழங்கும்.. கடல்மீன்கள்” திரைப்பட தொகுப்பு நிகழ்ச்சி. அதுலேயும் நடுவிலே.. நீங்கள் கேட்டு கொண்டிருப்பது.. எல்.ஆர்.ஸ்வாமி நேரம்-னு வழவழா கொழகொழா வந்துடும். நாங்க ஏழுமணிக்கே சாப்புட்டு, பத்து மணிக்குள்ளே குறட்டை விட்டு தூங்கிடுவோம், இதுக்கு பயந்தே!

அதே கால கட்டத்துலே, நமக்கு பத்து வருஷம் முன்னாடி இருந்தாங்க, நம்ம சிலோன் ரேடியோகாரங்க! என்ன கற்பனை வளம், என்ன தொழில்நுட்பம், ஜன ரஞ்சகம்...!!!

வீட்டுக்கு வீடு வானொலிப்பெட்டிக்கருகே ஆவலுடன் காத்திருக்கும், ரசிகப்பெருமக்களுக்கு.. என் அன்பு கலந்த வணக்கம்-என்று தேனாக குழைவார் இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தின் கே.எஸ்.ராஜா; அவர் சொன்னது அந்த காலகட்டத்தில், மிகையே இல்லாத உண்மை,சத்தியம்!

“ந என்ற எழுத்தில் மணி ஒலித்தது; நீங்கள் பாடவேண்டிய சொல் ந-குறில் அல்ல, நா-நெடில் என்று பாட்டுக்கு பாட்டோடு தமிழையும் கலந்து தருவார்.. பீ.ஹெச்.அப்துல் ஹமீத். (உதயா ஜிவெல்லர்ஸ் உபயம் என்று நினைவு)

ஆம், இல்லை, சொல்லக்கூடாது; எந்த சொல்லையும் மூன்று முறைக்கு மேல் சொல்லகூடாது என்று கலகலப்பான போட்டிகள்.. “கள்ளுகடை பக்கம் போகாதே.. காலைபிடிச்சு கெஞ்சுகிறேன்..” “ச்சின்ன மாமியே உன் ச்சின்ன மகளெங்கே” என்று தமிழ் பப்பிசையும் (பாப்!).. உண்டு!

அத்தானே அத்தானே எந்தனாசை அத்தானே.. என்ற சில்லைய்யூர் செல்வராசனின் .. மக்கள் வங்கி விளம்பர பாடல்.. (பெண் குரலில் கேள்வியொன்று கேட்கலாமா உனைத்தானே என்றதும், ஆண்குரலே கேள்வியை தானே கேட்டு பதிலையும் சொல்லிவிடும்).. ஆகா.. அன்றைய காலகட்டத்தின் பூலோக சொர்க்கம் அது! அப்படிப்பட்ட இலங்கையும் வானொலியும் இன்று, மொகஞ்சாதாரோ ஹரப்பா போல ஆகிவிடும் என்று யாரும் கற்பனை செய்து கூட பார்த்திருக்கவே மாட்டார்கள்... ஹூம்.. :(((((

அப்பா,அம்மா,நான் அதிகம் சண்டை போட்டதில்லை; அபூர்வமாக ரேடியோ ப்ரோக்ராம் கேட்பதில் அது வருவதுண்டு. நானும் அம்மாவும் பொழுது போக்கு கட்சி. அப்பாவுக்கு நியூஸ் ரொம்ப முக்கியம். அந்த வயதில் எனக்கு அவரது நியூஸ் ஆர்வம் ஆச்சரியமாக இருந்தது. நாம் விவசாயி இல்லை, வெயில் மழை பற்றி அறிய; வியாபாரியும் இல்லை லாப நஷ்டம் பார்க்க. எல்.ஐ.சி ஆபிஸில் ஒண்ணாம் தேதி டாண் என்று சம்பளம் வந்துடும்.. பின்னே எதுக்கு நியூஸ் கேட்கணும்.. சொல்லுங்க?

ரசனைகளில் இரு துருவங்களாக இருந்த அப்பாவும், நான் ப்ளஸ் அம்மா கூட்டணியும் சந்திக்கும் நேர் கோடும் இருந்தது! அது தான் கிரிக்கெட் நேர்முக வர்ணனை!

“பந்தை அனாவசியமாக அடித்தார்’ “பகூத் அச்சி கேந்த்/ஆப் ஸ்டம்ப் கி காஃபி பஹார்/சுந்தர் ஷாட்-சார் ரன்” “பாரத மத்து நியூஸிலேண்ட் சண்டகள நடுவே மும்பையிலெ.. மூருனே மத்து கொனை டெஸ்ட் வீக்ஷித் வருணனெ..” என்று கதம்பமாக இந்தியாவின் சகல பாஷையும் பேசும் ரேடியோ அப்போது!

கபில் தேவ் வந்த புதிதிலே, நாங்கள் குடும்பத்தோடு தஞ்சை சிவகங்கா பார்க்குலே சென்னை டெஸ்டு கமெண்டரி கேட்டு மகிழ்ந்தோம்; பேட்டிங்கும், பவுலிங்கும் பின்னிட்டார். 1978 இந்தியா வெஸ்ட் இண்டீஸ் மாட்ச்ன்னு நினைக்கிறேன். (பதிவர்கள்லே கிரிக்கெட் புள்ளி விவர புலிகள், பாஞ்சுடாதீங்க.. புள்ளி எதாவது கொஞ்சம் பிசகி முன்னே பின்னே இருந்தாக்க :)))

பார்க்குலே வர்ற்வங்க போறவங்களுக்கு சாக்லேட் கொடுத்து விழா எடுக்காத தோஷம்தான் போங்க! அப்போ எல்லாம், இந்தியா ஜெயிச்சா சிரிப்போம்/ தோத்தா அழுவோம், பைத்தியம் போல! அந்த வெறியிலே, கபில், கபில் என்றொருவர்.. கப்பென பிடிக்கும் பீல்டர் அவர்னு.. ரொம்ப பீல் பண்ணி கவி பாடிட்டேன். நண்பன் கலீல் கிட்டே காட்டினதும், அவன் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லிகிட்டே, கவிதை:கலீல், உதவி:பாலு அப்படின்னு திருத்திட்டான்.. அந்த எமகாதகன்!

காலம் மாறிகிட்டே வந்தது; எங்களுக்கு வயசான மாதிரி ரேடியோவுக்கும் வயசாகிட்டு வந்தது; மக்கர் பண்ண ஆரம்பிச்சது. அப்போ அப்போ, ஒரு தட்டு தட்டினாத்தான் பாடும். பேட்டரி உருகி உள்ளே ஊத்தி ஒட்டிக்கும். ரிப்பேர் ஆகி செலவும் வைக்கும், அடிக்கடி. பள்ளி நாட்களிலே உற்ற தோழனா இருந்த ரேடியோவையும், அப்பா அம்மாவையும் விட்டு பிரிஞ்சு காலேஜுக்கு வெளியூர் போனதை இன்னோரு தொடரிலே எழுதாமலா போயிடுவேன்? நீங்களும் படிக்காமலா போயிட போறீங்க.. நண்பர்களே? :)))

இன்னைக்கு.. 2008லே ரேடியோ ஒரு புராதன சின்னம். டீவியும், கம்ப்யூட்டரும்,எம்பி3யும், ஐபாடும் அதோட இடத்தை அடிச்சு பிடுங்கி, குத்தி கொதறி பங்கு போட்டிடுச்சுங்க.. ஆனா மனுசங்க மட்டும் மாறலே..

டாட்டா ஸ்கையிலே டீவிலே எந்த சேனல் பாக்குறதுன்னு இப்போ எங்க வீட்டுலே அடிதடி நடக்குது. எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாமே, இந்திய அரசியல் மாதிரி.. பையனுக்கு ஈஸ்பியென் ஸ்போர்ட்ஸ் சேனல், பொண்ணுக்கு போகோ சேனல், பொண்டாட்டிக்கு.. தங்கமான புருஷன், கோகுலத்தில் சீதை தொடர்கள்.. ஒரு சமயத்துலே எதைதான் பார்க்கிறது? டீவி ரிமோட்டே கன்ப்யூஸ் ஆகிடும்!

எல்லாருக்கும் எது பிடிக்கும்னு தெரிஞ்சுகிட்டீங்க இல்லே? இப்போ எனக்கு எது பிடிக்குதுன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? திரும்ப திரும்ப நாள் பூரா ஒரே நியூஸ் ஒப்பிக்கிற ஸன் நியூஸ், ஜெயா செய்திகள், பிபிசி,சிஎனென், என்.டி.டீவி.. இப்படி நியூஸ் மட்டுமே பாக்க பிடிக்குது எனக்கு இப்போ எல்லாம், எங்க அப்பா மாதிரி.. வயசாகுது இல்லையா? :)))

அமெரிக்காவின் சப் ப்ரெய்ம் பிரச்சினை, உளுந்தூர் பேட்டை அருகே சாலை விபத்து, பங்கு சந்தை பாதாளத்தை அடைந்தது, விலைவாசி உயர்வுன்னு எல்லா நியூஸும் பேட் நியூஸாவே இருந்தாலும், உலகத்துலே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டா நல்லதுதான் இல்லையா?

சரி, இப்போ நாம் இந்த ரேடியோ பற்றிய என் பழம் கணக்கு பதிவுடைய முடிவுரைக்கு வந்துட்டோம். ஹிஸ்டரி ரீபீட்ஸ் அப்படின்னு டைட்ஸ் போய் பெல்ஸ் வந்து திரும்ப டைட்ஸ் வந்தது மாதிரி, ரேடியோவும் இப்போ பழைய படி பேமஸ் ஆகிட்டு இருக்கு. விடாத விளம்பர வெயிலுக்கு நடுவே தூறல் போல பாடல்கள், காதலிக்கு டெ(க)டிகேட் பண்ணும் அலம்பல்கள் நடுவே நல்ல நிகழ்ச்சிகளும் அவ்வப்போது வருது.

சூரியன் எப்.எம். யாழ் சுதாகரன் வந்துருக்காரு. “இரவின் மடியில்.. உலகம் மயங்கும்.. மயங்கும்’னு பாடிக்கிட்டே பி.பி.ஸ்ரீனிவாஸை போட்டுட்டாரு.. அதனாலே. இப்போதைக்கு உங்ககிட்டே இருந்து.. உத்தரவு வாங்கிக்கிறேன்.. நான்!

தஞ்சையிலிருந்து தமாம் தொடரும்..

October 26, 2008

வளைகுடாவில் ஒரு தீபாவளியும், ஐம்பத்து ஒன்றாம் பதிவும்

வளைகுடாவில் ஒரு தீபாவளியும், ஐம்பத்து ஒன்றாம் பதிவும்
தமாம் பாலா

வருடத்துக்கு ஒருமுறை புத்தாடை கிடைக்கும் காலம் அது ; பார்த்து பார்த்து பட்டாசுகளை வாங்கிய வேளை அது. தீபாவளி வருகிறதென்றால், சுமார் ஒரு மாசம் முன்பு ஊரே களைகட்டி விடும். வழக்கமான அதே கடைவீதிகள், மனிதர்கள் ஆனால் புதிதான உற்சாகம். மீட்டர் பத்து ரூபாயிலிருந்து நூறு ரூபாய் வரை கூட துணிமணிகள் கிடைக்கும்; பட்டாசுகளும் பலபல விலையில். தீபாவளி போனஸை பொறுத்து, பர்ஸின் கனத்தை பொறுத்து அவர் அவர் வசதி, அந்தஸ்தை காட்டும் விதமாக வாங்குவார்கள்.

தஞ்சையிலே பள்ளி நாட்களில் நான் கொண்டாடியது தான் ஒரிஜினல் தீபாவளி. இப்போது வருவதெல்லாம், கம்ப்யூட்டர் கேம் போன்ற விர்ச்சுவல் தீபாவளிதான். மத்திய,மாநில அரசுகள் போடும் பட்ஜெட் போல அப்பா நிதி ஒதுக்கீடு செய்வார். நம் கண்ணீரின் சக்தி மற்றும் அம்மாவின் கூட்டணியில், துண்டு விழும் பட்ஜெட்டையும் தாண்டி பட்டாசுக்கு இடஒதுக்கீடு செய்யப்படும் :))

காலை நான்கு மணிக்கு எழுந்து எண்ணை தேய்த்து குளித்து, புது துணி உடுத்தி இருட்டிலே வெளியே வந்தால் நமக்கு முன்பே நாலுபேர் ரோட்டிலே வந்து வெடி வெடித்து அட்டகாசம் செய்து கொண்டிருப்பார்கள். இனிப்புகள்,மைசூர்பாக்கு,ஜாங்கிரி,முறுக்கு போல விதம்விதமாக சங்குசக்கரம்,புஸ்வாணம்,சாட்டை,பாம்பு மாத்திரை,எலெக்ட்ரிக் ஸ்டோன்,வெடி வகைகள் என்று தட்டிலே எடுத்துச்செல்லும் போதே கண் கொள்ளா காட்சியாக இருக்கும்!

வெடியின் திரியை பதமாக கிள்ளி, ஊதுபத்தியால் நெருப்பு முத்தம் கொடுக்க, அது மெதுவாக உட்செல்லும் காட்சியை காண்பதற்கே ஒரே த்ரில்லிங்க் ஆக இருக்கும். பயந்து பயந்து வைக்கும் வெடி, சமயத்தில் புஸ் என்று போவதும் உண்டு; சில நேரம் புஸ்வாணம் கூட வெடித்து பேஜாராவதும் உண்டு. எல்லாம் நம் நேரத்தை பொறுத்தே அமையும். பல இளவட்ட அண்ணன்கள் அக்கம் பக்கத்து அக்காக்களை அசத்த, வெடிகளை கையில் பிடித்து கொளுத்தி மேலே எறிவதும் உண்டு; அது அவர்கள் கையிலேயே சமயத்தில் வெடித்து அவர்களை பழிவாங்குவதும் உண்டு. :))))

இருக்கும் வெடிகளிலேயே ரொம்ப டேஞ்சரானது, ராக்கெட் தான். மண்ணில் புதைத்தோ, பாட்டிலில் நிற்க வைத்தோ, தீ வைக்கும் வரை சமர்த்தாக இருப்பது போல பாவ்லா செய்யும். கொஞ்ச நேரத்திலேயே, பின்பக்கம் நெருப்பு கக்கிக்கொண்டு, கிழக்கிலோ,மேற்கிலோ நேராகவோ, வளைந்து கொண்டோ.. வாழ்க்கை போகும் திசையை போல வகை தொகையில்லாமல் போய்விடும்! ஒருமுறை காமராஜர் காய்கறி மார்க்கெட் முழுவதும் இது போன்ற ராக்கெட்டால் எரிந்துவிட்டது என்று, பெரிசுகள் ஒவ்வொரு தீபாவளியும் பேசிக்கொள்வார்கள்.

முதல் ரவுண்டு வெடித்த பின், கையில் மினுமினுக்கும் வெடிமருந்தை, கழுவியும் கழுவாமலும் தின்பண்டங்களை ஒரு கை பார்ப்போம்; காலை மணி பத்துக்குள்ளே கைவசம் இருக்கும் வெடிகள் காகித குப்பையாய் வீதியெங்கும் நிறைந்திருக்கும்; சாயந்தரத்துக்கு மத்தாப்பூக்களும், மற்ற சைவ பட்டாசுகள் மட்டுமே மிஞ்சும். அதில் கார்த்திகைக்கும் கொஞ்சம் எடுத்து வைக்க வேண்டிய கட்டாயமும் உண்டு! காத்திருந்து அடைகாத்த தீபாவளி எதிர்பார்ப்புகள் ஒரு வழியாய் வடிந்து, ஒரு மந்தமான சகஜ நிலை திரும்பும். இதற்குள்ளே, புது சட்டையில் ஊதுபத்தி நெருப்பு துளிகள் போட்ட ஓட்டைகளும் பரிசாக கிடைத்து விடும்.

சாப்பிட்டு முடிக்கும் போது, குழம்பு,ரசம்,மோர்,பொரியல் கலந்து வரும் சுவை போல, வெடிக்காத பட்டாசுகளை உரித்து, மொத்த கலவையாய் கலந்து, அதை புஸ்ஸு கொளுத்தும் போது வரும் சுகமே தனி.

நாம்தான் பத்து/பனிரெண்டு வருஷ அஞ்ஞாத வாசத்தில் தீபாவளியை தொலைத்திருக்கிறோம் என்றால், பாவம் குழந்தைகள். அவர்களும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், ஜீலை ஆகஸ்டில் இந்தியா வரும்போது, மாமா/சித்தப்பா ஸ்டாக் வைத்திருக்கும் பட்டாசுகளை, ஒரு இரவு வெடித்து தீர்ப்பதே இப்போதைய நடைமுறை; அக்கம்பக்கத்து “கீழ்பாக்கம் கேஸோ” என்பது போன்ற பார்வைகளை அப்போது நாங்களும் சட்டை செய்வதில்லை! :)))

சின்ன வயதில், ஒரு புது துணிக்கு ஒருவருடம் காத்திருக்க வேண்டும்; இன்று நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் புது துணி வாங்கலாம். ஆனால் அன்று இருந்த சந்தோஷமும், உற்சாகமான எதிர்பார்ப்புகளும் இன்று இல்லவே இல்லை! மகாபாரத்து தங்க அணில் போல.. ஏன் என்று யோசித்து பார்க்கையில், இன்றைய வாழ்க்கையின் பொருளாதார குடுமி பிடி சண்டையில், ஓட்டத்தில்.. நின்று நிதானித்து எதையும் ரசிக்கவோ, அனுபவிக்கவோ மறந்து போய்விட்டது என்றே தோன்றுகிறது, நண்பர்களே!

கல்யாண வீட்டில் மொய் எழுதுவது போல 51வது பதிவாக இதை போட்டிருக்கிறேன். கொசுறாக தீபாவளி கவிதை ஒன்றும் உங்களுக்காக, இதோ. உங்கள் அனைவருக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!!!


வளைகுடாவில் ஒரு தீபாவளி

சூரியன் பகலில் பணி செய்து
சோர்ந்து மறைய,பின் இரவில்
சூழும் இருள் அக,புறங்களில்
நழுவும் மீனாய் மேக நடுவில்
தண்ணொளிச்சந்திரன் முயலும்
தன்னால் இயன்ற கடனொளியை
வழங்க,மெழுகாய் தேய்ந்துவிடும்
வராமல் போகும் அமாவாசையாய்
ஆண்டு முழுவதும் அகத்தில்
நீண்டு சேர்ந்த தீய இருளை
விளக்கு மட்டும் போக்காதென
வெடி வைத்துத் தகர்த்தோம்
மனிதன் வாழ்வில் பெரும்பாலும்
மகிழ்ச்சி பொங்கும் சில நிமிடம்
மறையும்,மீண்டும் வரும் அதை
இங்கு கொம்புவாணம் என்றோம்
ஏவுகணைகளை பறக்கவிட்டு
தாவும் அதன் அழகைக்கண்டு
துள்ளும் பிள்ளை மனம் உண்டு
அள்ளும் அழகு வாணவேடிக்கை
சங்குச் சக்கரம் சுழலக் கண்டு
எங்கள் வாழ்க்கைச் சக்கரம்
நினைவில் கொண்டோம்,இன்று
பனைவெளி பாலையில் இருந்து
சுத்தமாக குளித்து முடித்து பின்
புத்தம்புது உடையணிந்து, இங்கு
சத்தம் இல்லாமல் தீபாவளியை
மொத்தமாக கற்பனை செய்தோம்!

October 17, 2008

பழனிக்கு ஒரு பதிவு

பழனிக்கு ஒரு பதிவு
தமாம் பாலா

“ஐயா, நீங்கள் எந்த ஊரைச்சேர்ந்தவர்?”-பையன்.
“நான்.. எல்லா ஊர்களையும் சேர்ந்தவன்!”-பெரியவர்.
-அல்கெமிஸ்ட், பாலோ கொயிலோ


எந்த ஒரு மனிதனுக்கும், சொந்தமாக சொத்தோ, வீடு, வாசல் நிலம் புலமோ இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறைந்த பட்சமாக ஒரு பெயரும், ஊரும் இருக்கும். சில பேருக்கு, அந்த ஊரே, பெயராகவும் அமைந்து விடுவது உண்டு. பழனி, திருப்பதி, சிதம்பரம் என்று அது போன்ற பெயர் உள்ளவர்களை சந்திக்கும் போது, எனக்கு அவர்கள் தனிமனிதன் போல் இல்லாமல் அந்த ஊர் போலவே தோன்றுகிறார்கள்.

போன மாதம், வானவில்லாய் தோன்றி மறைந்த வருட விடுமுறையில், பழனி என்ற ஒரு மனிதரை சென்னையில் சந்தித்தேன் ; அன்றாட வாழ்வின் ஒரு அரை மணி நேர பயணத்தின் போது. வழக்கமான ஒரு சுவாரஸ்யம் குறைந்த சந்திப்பு என்றுதான், நானும் உங்களைப்போல நினைத்திருந்தேன்.

சென்னையின் இரண்டாம் வெயில் காலம் செப்டம்பரில்; போக்குவரத்து நெரிசல் என்று வழக்கமான ‘இட/கால நிரப்பல்’ பேச்சுகளில் தொடங்கினோம். அவர், திசை மாறி, ‘வோல்காவிலிருந்து கங்கை வரை’ படித்திருக்கிறீர்களா? என்றார். கேள்விப்பட்டிருக்கிறேன், வாசிக்க வாய்ப்பு கிட்டவில்லை இன்னும் என்றேன்.

பிறகு மெல்ல, தான் எழுத்துலக ஜாம்பவான் ஜெயகாந்தனின் தீவிர வாசகர் என்றும், அவரை நேரில் பார்த்து பழகும் பேறு பெற்றவன் என்றும் விளக்கினார். அந்த எழுத்துலக சிங்கத்தின் கதைகள், வாழ்க்கை அனுபவ புத்தகங்கள், மற்றும் பிரமிக்க வைத்த மேடைப்பேச்சுகள் என்று சொல்லிக்கொண்டே போனார். பேச்சு, சினிமா பழங்கால திரைக்கவிஞர் மாயவநாதன் என்று எல்லா திசைகளிலும் பயணித்ததில் அரை மணிநேரம், அரை நிமிடமாக சுருங்கி விட்டது; எனக்கோ ஒரு தமிழ் இலக்கிய பட்டறையில் கலந்து கொண்டது போன்ற ஒரு உணர்வும், நிறைவும் ஏற்பட்டு விட்டது.
ஒரு மாதம் ஆகியும், நினைவில் நிற்கும் இந்த சம்பவத்தை நண்பர்கள் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் சந்தோஷமே!

அது சரி.. யார் அந்த பழனி, நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே என்கின்றீர்களா? அவரை பார்க்க வேண்டுமென்றால், நீங்கள் சென்னை ராஜ தானிக்கு வரவேண்டும்; ஒரு ‘தானி’யில் பயணிக்க வேண்டும். தமிழ், அரசுக்கட்டிலிலும் ஆள்கிறது, ஆட்டோவும்.. ஓட்டுகிறது; ஆம்.. பழனி.. ஒரு ஆட்டோ ஓட்டுனர்!

அன்றாட வாழ்வின் லாப நஷ்டங்களை மீறி, ஒரு இலக்கிய வாசகனின் நிரந்தர மகிழ்ச்சியை அவரிடம் கண்டேன், அதை பாராட்டும் விதமாய் அவருக்கு இந்த பதிவு! :))))

October 11, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 10)



ஓமகுச்சி நரசிம்மன், உசிலை மணி ஆன கதை..

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்னு சொல்ல கேட்டிருக்கோம் இல்லையா? இது போல அனுபவம் உங்களுக்கும் பலமுறை ஏற்பட்டிருக்கும். ஓமகுச்சி நரசிம்மன், உசிலைமணி ஆன கதை தெரியுமா உங்களுக்கு? அதுதான் என் பள்ளி பருவத்துல நடந்தது!

நான் சின்ன வயசிலே குச்சி மாதிரி இருப்பேன்னு முன்பே எழுதியிருக்கேன். புல்தடுக்கி பயில்வானா நான் 8ம் கிளாஸ் வரைக்கும் இருந்ததுக்கு காரணம் யார் தெரியுமா? துவார பாலகர்கள்! துவாரபாலகர்னா.. கோயில்ல சன்னதிக்கு முன்னாலே பயங்கரமா ரெண்டு பேர் இருப்பாங்களே? அவங்க இல்ல.. :-)))) நம்ம தொண்டையிலே இருக்கிற துவாரபாலகர்கள்.. ஆங்கிலத்துலே டான்ஸில்ன்னு சொல்வாங்களே அவங்க!

திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு மறுபடி செவ்வாய்-னு ஒண்ணு விட்டு ஒரு நாள் வி.ஐ.பி டூர் ப்ரோக்ராம் மாதிரி ஜுரம்; தொண்டை வலி அப்படின்னு ஆறுமுதல் எட்டு வரை வாட்டி எடுத்துடுச்சு டான்ஸில் ப்ராப்ளம். சாப்பிடற சாப்பாடு ஜுரத்துக்கே சரியா போறதாலே, ஒடம்புலே ஒட்டவே இல்லே.. ஒடம்புதான்.. ரொம்ப ஒட்டி போயிடுச்சு.. :-((

மணி.. நல்ல பையன் தான், ஆனா ஒடம்பு தான் கொஞ்சம் வீக்கு.. எப்ப பாத்தாலும் ஜொரம்/அழுகாச்சின்னு பேராய்டுச்சு எனக்கு. பச்ச தண்ணீருக்கு 144, ஐஸ்க்ரீமுக்கு தடா, கூல் ட்ரிங்குக்கு பொடான்னு, கட்டுப்பாடுகள் நிறைஞ்ச வாழ்க்கை ஆயிடுச்சு!

அம்மா,அப்பாவுக்கு தான் ரொம்ப பொறுமை! டம்பளர் சுடுதண்ணியோட மாத்திரை கொடுத்தாலும், எதுவும் உள்ளே போகாது.. உல்டாதான்.. அமர்க்களம் தான். இப்போ நினைச்சு பார்த்தாலும், எனக்கே நான் பண்ணிய அமர்க்களமெல்லாம், ஓவரா.. கொஞ்சம் வெக்கமா கூட இருக்கு..

மாத்திரை கொடுத்து கொடுத்து, டாக்டரே ஓய்ஞ்சு போயிட்டார்; பேசாம ஆப்பரேஷன் பண்ணிடலாம், அதுதான் ஒரே தீர்வுன்னு சொல்லிட்டார். சரி எங்கே செய்யலாம் அப்படின்னு யோசிச்சப்போ, போபாலுக்கு வாங்க, நான் அரேஞ்ச் பண்றேன் அப்படின்னு, போபால் தாத்தா, புண்ணியம் கட்டிக்கிட்டார்.

பிறந்தது, போபாலிலே தாத்தா வீட்டிலேதான் என்றாலும், 14 வருஷம் கழிச்சு, மறுபடி போபால் போக முடிஞ்சது துவாரபாலகர்கள் உபயத்தாலேதான். தஞ்சாவூரிலேர்ந்து, சென்னை வந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸிலே போபால் போய் சேரவே 2/3 நாள் ஆகிவிட்டது. போபாலிலே, வீட்டுலே போய் சேர்ந்து, கட்டிலிலே படுத்த பின் கூட, ட்ரெயின் போல தடக் தடக்குன்னு ஆடுற மாதிரியே ஒரு ஃபீலீங்!

அது 1979ம் வருஷம், போபால் விஷ வாயு ஆக்சிடெண்ட் எல்லாம் நடக்கிறதுக்கு ரொம்ப வருஷம் முன்னாடி. தாத்தா வீடு இருந்த பிப்ளானி, ரொம்ப சுத்தமாவே இருந்தது. டாக்டரை பார்த்ததும், ப்ளட் டெஸ்ட்; ரத்தம் சோகை.. அயர்ன் டாப்லட் சாப்பிட்டு ஹீமோக்ளோபின் கவுண்ட் ஏத்தினாதான், ஆப்பரேஷன்னு சொல்லி ஒரு வாரம் ப்ரேக்.

அப்புறம் ஹாஸ்பிட்டல்லே, அட்மிட் பண்ணி, ஆப்பரேஷன் நாள் வந்துடுச்சு. அம்மா, அப்பாவுக்கெல்லாம் ஒரே கலக்கம். நமக்கு மட்டும் பயமே இல்லை; அதுவும் ஐஸ்க்ரீம் வேற சாப்பிடலாங்கிற எதிர்பார்ப்பு வேறே! அசட்டு தைரியம்தான் நம்ம கூடவே பிறந்த குணமாச்சே.. சிரிச்சுக்கிட்டே, ஸ்ட்ரெச்சரிலே உள்ளே போயாச்சு.
ஆப்பரேஷன் தியேட்டரிலே, கிங்கரர்கள் மாதிரி, டாக்டர்ஸ், வாணலிய கவுத்த மாதிரி லைட்ஸ்.. கொஞ்சமா பயம் எட்டி பார்த்தது. டாக்டர் என்னவோ பேச்சு கொடுத்திட்டே, கை நரம்புலே ஊசி குத்தி.. ஒண்ணு, ரெண்டு.. எண்ண.. சுகமான.. மயக்கமா, தூக்கமான்னு தெரியாத ஒரு உலகத்துக்குள்ளே நழுவறமாதிரி இருந்துச்சு.. கண்ணு தொறந்து பார்க்கும் போது, மறுபடியும் பெட்டுலே. நடுவிலே போன சில மணிநேரங்கள், ஜஸ்ட் ப்ளாங் தான்!

அன்ஸ்தீஷ்யாவோட மகிமை அப்போதான் புரிஞ்சுது. அளவு ரொம்ப கரெக்டா கொடுக்கணுமாமே! கம்மியானா, ஆப்பரேஷன் நடுவிலே முழிப்பு? ஜாஸ்தியானா, ஒரேடியா தூக்கம்?!? டாக்டருக்கு, நம்ம கோ-ஆப்பரேஷனிலே ஒரே சந்தோஷம். பக்கத்து பெட்டுலே ஒரு ஃபைனல் இயர் மெடிக்கல் ஸ்டூடண்ட், இதே டான்ஸில் ஆப்பரேஷனுக்கு வந்து, ரொம்பவே அழுது கலாட்டா பண்ணிட்டான்; ‘மதராஸி லட்கா, தேக்கோ.. கித்னா அச்சா ஹை.. என்று பாண்டே டாக்டர், புகழ்ந்து தள்ளி விட்டார். எல்லாம் இரு கோடுகள் தத்துவம் தானே!

ஆப்பரேஷனுக்கு பின்னால், நடக்கும் போது மயக்கம் வந்து, கொஞ்சம் கலாட்டா ஆகிவிட்டது. ரமேஷ் மாமா, குழந்தை போல தோளில் தூக்கி போட்டு படுக்கையில் போட்டு விட்டார். தமிழ் வாசனையே இல்லாத அந்த ஹாஸ்பிடலில், அப்போது.. தூரத்தில்.. ‘மீனா ஹல்லோ மீனா’ என்று ஜெயச்சந்திரன் குரலில் சன்னமாக பாட்டு கேட்டது. ஜாடையை பார்த்து, அப்பா இன்னொரு பெட்டிலிருந்து ட்ரான்சிஸ்டர் கொண்டு வந்தார். பாட்டு கேட்டதும், புது தெம்பே வந்து விட்டது. தமிழ்நாட்டிலிருந்து, கண்காணா தூரத்துக்கு எதிர்காலத்தில் போக வேண்டும்; தமிழை மட்டுமே துணை கொண்டு அங்கு வாழ வேண்டும் என்பதற்கு அச்சாரம் போட்டது போல அந்த சம்பவம் நடந்திருக்கிறது என்று இப்போது தோன்றுகிறது!

வீட்டுக்கு வந்த பின்னும் ராஜ உபசாரம் தான்; போபால் தாத்தா தன் கைப்பட ரஸ்கை பிசைந்து கட்லெட் செய்து கொடுத்தார். பின் தான் ரிடையர்மெண்ட் பிறகும் வேலை செய்த க்ளப்பிலிருந்து டென்னிஸ் பால் 3/4கும் கொடுத்தார். மறுபடியும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், தாலாட்டு, சென்னை.. பழையபடி தஞ்சாவூர்!

துவார பாலகர்களுக்கு, விடுதலை.. திக்கான பூஸ்ட், சாப்பாடு, கவனிப்பு! குரல்வளம்(?!) போய்விடுமோ என்று பயந்தபடி எதுவும் ஆகிவிடவில்லை. இப்போது, சாப்பாடும் கொஞ்சம் கொஞ்சமாக, உடம்பில் ஒட்ட ஆரம்பித்து விட்டது. ஒல்லி பையன் இவன் என்பது ஹிஸ்டரி ஆகிவிட்டது. ஓமக்குச்சி நரசிம்மன் மெல்ல மெல்ல உசிலை மணி ஆகிவிட்டான்!
9/10 படிக்கும் காலத்திலேயே, குமார் அண்ணாவுடன் நான் கும்பகோணத்தில் நடந்து போனால், அக்கம் பக்கம்.. குமாரோட போற பெரிய ஆள் யாரு அப்படின்னு கேட்கிற மாதிரி காலம் மாறிவிட்டது!

ஒற்றை நாடியா இருந்து, இரட்டை நாடியாய் ஆகி, இப்போது 1½ நாடியா இருக்கேன்னு நினைக்கிறேன். இந்த முறை விடுமுறைக்கு இந்தியா வந்த போது, ஆசான். சுப்பையா வாத்தியாரோட, கோவையிலே எடுத்துக்கிட்ட புகைப்படத்தை இந்த பதிவிலே போட்டிருக்கிறேன்; பார்த்து நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க நண்பர்களே! :-))))

தஞ்சையிலிருந்து தமாம் வரை தொடரும்..

September 18, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 9)

தமாம் பாலா
k.h.s.s நினைவுகள், ஒன்பதும் பத்தும்..

பள்ளி படிப்பில் ஒன்பதாம் வகுப்புக்கு மேல், எல்லோருக்குமே ஒரு சீரியஸ்னஸ் வந்து விடுகிறது. அது வரை ஜாலியாக போகும் வாழ்க்கையில், என்ன செய்வது என்ன ஆவது என்பது பற்றிய எதிர்பார்ப்புகளும், ஒரு விதமான நிச்சயமற்ற தன்மையும், வாழ்க்கையில் முதல்முறையாக பயமும், பதட்டமும் எட்டிப்பார்க்கின்றன!

என்ன பாடம் படிக்க வேண்டும், எந்த துறைக்கு போக வேண்டும் என்பதும் ஓரளவு சுற்றுப்புறத்தை பொறுத்து அமைகின்றன. எனக்கும் இந்த பருவத்தில் இத்தகைய அனுபவங்கள் ஏற்பட்டன. நாங்கள் மேல அலங்கத்தில் இருந்த போது, கோபால் என்று ஒரு அண்ணா இருந்தார். கடுமையான வாழ்க்கை சூழல்களுக்கு நடுவே, படிக்க வேண்டும் என்ற வெறியுடன் முன்னேற துடித்தவர் அவர். படிப்புக்கு இடையில் பார்ட்டைம் புக் சர்குலேஷன் நடத்தி வந்தார்; அந்த வகையில் எங்களுக்கு பரிச்சயமானார். அப்போது, எங்கள் சுற்றத்தில் இஞ்சினியர்கள்/டாக்டர்கள் மிக குறைவு. கோபால் அண்ணா, திருச்சி ஆர்.ஈ.சி பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பிறகும், விடுமுறை நாட்களில் எங்களை சந்திக்க தவறவில்லை. பொறியியல் துறையில் நான் நுழைந்ததற்கு, அவரே முதல் காரணம். பின்னாளில் கோபால் அண்ணா எண்டிபிசி டெல்லியில் சேர்ந்து விட்டார் என்று கேள்வி. இன்று அவர் எதாவது ஒரு உயர்பதவியில் இருப்பார் என்று நம்புகிறேன்! எனக்கு அவர்தான், அப்துல் கலாம்!! :)))


என் அப்பாவின் கஸின், எஸ்.பி.சீனிவாசன் சித்தப்பா, காரைக்குடி/பொன்னமராவதியில் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். ஆங்கிலத்தில்,ஹிஸ்ட்ரியில் டபுள் எம்.ஏ அவர். ரேடியோவிலும் பேசுவார், பெரிய படிப்பாளி. அவரும், அவரது அப்பா-எங்கள் சின்ன தாத்தாவும், நானூறுக்கு மேல் மார்க் வாங்கணும் என்று மந்திரம் போல எனக்கு உருவேற்றியவர்கள்.. :)) சித்தப்பா, எனக்கு பாடபுத்தகங்களையும் கொடுத்து ஊக்கப்படுத்தி வந்தார்.

எனது பள்ளி சீனியர்களில் பலர் அப்போது பாலிடெக்னிக்கில் சேர்ந்து படித்து வேலைக்கு போனார்கள்; பதினெட்டு வயதிலேயே கைநிறைய சம்பளம் என்பது ஒரு அட்ராக்டிவ் ஆப்ஷனாக இருந்தது அப்போது!

சரி, படிப்பை விட்டு கொஞ்சம்.. வீட்டுக்கு போவோம். ராசாத்தி அம்மா வீட்டிலிருந்து, வீடு மாறி விட்டோம் இப்போது. லோகேஷன்? அய்யங்கடை தெரு பக்கத்திலே, காசு கடைதெரு. அங்கேதான், நகைகள் செய்யும் கடைகள் இருக்கும். துருத்தி போல நெருப்பு உருக்க, அமிலங்கள் சூழ, கடைகள் மினி லாபரெட்ரி போல இருக்கும்; பக்கத்து சாக்கடை மண்ணை கூட தங்க துகளுக்காக அலசி, ஆராயும் பாவப்பட்ட மக்களும் உண்டு! :((

காசு கடை தெரு இறுதியில், நாதன்ஸ் காபி! அவர்கள் ப்ரத்தியேக பார்முலா, காபி டேஸ்ட் அந்த ஏரியாவில் ரொம்ப பிரபலம். தெரு முனையிலிருந்து, குறுக்காக உள்ளே வந்தால், கொஞ்ச தூரத்தில் நாலு கால் மண்டபம்! அது என்ன நாலு கால் என்கிறீர்களா? மண்டபத்துக்கு குறைந்தது நாலு கால் தானே! நாலுகால் மண்டபத்துக்கு வலது புறம்.. குட்டியாக ஒரு அனுமார். எப்போதும் செந்தூரம் கலந்த வெண்ணையில் குளித்திருப்பார். ரொம்ப சக்திவாய்ந்த, அதே சமயம் ஃபிரண்ட்லியான சாமி! :)) நாமே நேரடியாக தொட்டு கும்பிடலாம்; எண்ணை தீபம் எரிந்து மை போல இருக்கும், தொட்டு நெற்றியில் வைத்துக்கொள்வோம். அதிக பட்ச வேண்டுதல் 25 பைசா, எல்லாமே மனம் போல நிறைவேறி விடும்!!

நாலுகால் மண்டபத்தில், திருவிழா காலங்களில் ஆர்கெஸ்ட்ரா/உபன்யாசம் என்று அமர்க்களப்படும், அவ்வப்போது. மண்டபத்துக்கு நேர் எதிரே.. படிகளில் ஏறினால் முதல் தளத்தில்.. வெங்கடேச பெருமாள் கோயில்! அந்த இடத்தின் முகவரியே அதுதான்; வி.பி.கோயில் ஸ்ட்ரீட் என்று சுருக்கி விட்டார்கள். கோயிலை தொட்டது போல், இடதுபுறம் விறகு கடை, வலது புறம் பெட்டி கடை.. வலது புறம் கூப்பிடு தூரத்தில் எல்.எஸ்.கடலை மிட்டாய் பாக்டரி, தாய் சேய் நலவிடுதி (எங்கள் கிரிக்கெட் கிரவுண்டு) டைப்பிங் இன்ஸ்டிடூயூட்.

கோயில் இடதுபுறம் விறகு கடையை தாண்டி உள்ளே வந்தால், ப வடிவத்தில் ஒரு உள்ளடங்கிய பகுதி.. பெயர்.. தெற்கு மட விளாகம். நந்தா/மகா வீட்டை தாண்டி, ப-வின் முடிவில் 3/2186, அது தான் எங்கள் குடியிருப்பு. தக்ஷ்னா மூர்த்தி பிள்ளை என்று எழுதியிருக்கிறது அல்லவா? அதுதான், வீட்டு ஓனர்களின் மெயின் வீடு! இடதுபுறத்தில், ஒரு ஆள்.. அதுவும் குறுக்காக நடந்து போவது போல சந்து இருக்கிறதல்லவா? அதுதான், எங்கள் வீடுகளுக்கு போகும் வழி!

நீங்கள் குண்டாக இருந்தால், சமயத்தில்.. சந்தின் குறுகலான பகுதியில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு அதிகம்! :)) அல்லது, நீங்கள் நடந்து வரும் போது.. பக்கத்து மாட்டு கொட்டகையிலிருந்து எருமை/பசு மாடுகள் உங்களுக்கு எதிராகவும் வந்துவிடக்கூடும்; அப்போது நீங்களோ அல்லது மாடுகளோ ‘ரிவர்ஸ்’ எடுத்தால் மட்டுமே, ட்ராஃபிக் கிளியர் ஆக முடியும்!! :)))))


இதை எல்லாம் தைரியமாக தாண்டி நீங்கள் வந்தால், சந்து எல் போல வளைய, எங்கள் குடியிருப்பின், தகர கதவும், கொஞ்சம் மூச்சு விடும் அளவுக்கு அகலமாக சிமெண்டு பாதையும் தெரியும். இப்போதும், நீங்கள் கவனக்குறைவாக இருக்க முடியாது! நானும் குமார் அண்ணாவும் விளையாடும் பலகை பேட் கிரிக்கெட்டின் பந்து உங்களை தாக்கி விடும் வாய்ப்புகள் அதிகம்! ஆகவே எச்சரிக்கை!! :)))

அந்த ப்ரைவேட் பாதையின் இடது பவுண்டரி மாட்டு கொட்டகை; வலது புறம் வரிசையாய்.. வீடுகள்.. மொத்தம் நான்கு. முதல் வீட்டில் கொஞ்ச நாள் இருந்தோம்; அதன் மத்திய அறையின் உயர்ந்த பகுதியின் ஓட்டைகளிலிருந்து.. கரப்பான் பூச்சிகளின் படை அவ்வப்போது தாக்குதல் நடத்தியதால், அங்கிருந்து மூன்றாவது வீட்டுக்கு மாறி விட்டோம்! இரண்டாம் வீட்டில் புதுமணத்தம்பதி பெருமாள் செட்டியார்(லெட்சுமி சீவல், வேலை) மல்லிகா ஆச்சி! செட்டியார், அமைதியே உருவான, காசில் கெட்டியான நல்லவர், மல்லிகா.. டென்ஷன் பார்ட்டி! ஆண்டவன் எப்போதுமே அப்படித்தான் காம்பினேஷன் போடுவார் போலும்!

நான்காம் வீட்டில் அவ்வப்போது மனிதர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்; பூர்ணிமா ஜெயராமின் (கொஞ்சம் டார்க்)ஸெராக்ஸ் காப்பியாக, மீனா அம்மா, குட்டி பெண் மீனா, அவர் கணவர் மெய்யப்பன் என்று நினைக்கிறேன்.. கொஞ்சம் படித்தவர்.. சோடாபுட்டி.. மெடிக்கல் டிஸ்ட்ரிப்யூஷனில் இருந்தார்; வித் ஆல்தட் என்று ஆரம்பித்து, அதிலேயே முடிப்பார்.. :)) அவருக்கு எங்க அப்பாவின் சாந்தத்தில் தனி மரியாதை! அவர்கள் மாறி போன பின் கொஞ்ச நாள்.. சித்ரகலா டீச்சர் (டைவர்ஸி என நினைவு!) பின் திருமேனி அங்கிள் என்று மாறி மாறி யார் யாரோ வந்து போனார்கள்!


இப்போது மெயின் வீட்டிற்கு வருவோம்.. தக்ஷ்னா மூர்த்தி பிள்ளை ஒருகாலத்தில் முறுக்கி.. இப்போது தொங்கி போன மீசையுடன், கிழ சிங்கம் போல இருந்தார்; அய்யங்கடைதெருவில், காமராசர் காய்கறி மார்க்கெட் அருகில், மளிகை கடை வைத்திருந்தார். அவர் மனைவி, வயசான அம்மாள், சிரித்த முகமாக 70 எமெம் குங்கும பொட்டுடன், வார்த்தைகளை நிறுத்தி, நிதானமாக அம்மாவுடன் பேசுவார்கள். அவர்கள் பிள்ளைகள், முகத்தில் அம்மை தழும்புகளுடன்.. ப்ருந்தா அக்கா, மைனர் போல மீசை/கண்களுடன் முருகன், தம்பி விடலை ராகவன்.. கடைசியாக.. லஷ்மி! முழு பெயர் சுப்புலஷ்மி என்று நினைக்கிறேன்; அவளுக்கும் என் வயதுதான். சேக்ரட் ஹார்ட் கான்வெண்டில் படித்தாள்; ரொம்ப செல்லம், அம்மா தட்டில் வைத்த சாப்பாட்டோடு ஊட்டி விட முயல, இங்கும் அங்கும் ஓடி தண்ணி காட்டுவாள். அப்படி குழந்தையாய் இருந்த லஷ்மி, பெற்றோர் இறந்து விட, பின்னாளில், யாரையோ கல்யாணம் பண்ணிக்கொண்டு.. எல்லாரையும் போல ஆகிவிட்டதாய் நினைவு!

எங்கள் வீடு சின்னதுதான், ஆனால் சந்தோஷமாக வாழ்ந்தோம்; அப்பாவின் உயர்ந்த பட்ச லக்ஸரியான கைதான் பேனுடன், ஈஸி சேரில், பொறி/கடலை கொறித்தலுடன் என் படிப்பும், இனிதாக தொடர்ந்தது!

படிப்பு இல்லாத நேரத்தில், அரண்மனை/பீட்டர்ஸ் க்ரவுண்டில் கொளுத்தும் வெயிலில், கவர்பால் கிரிக்கெட்டில் காலம் கழியும்; வருட விடுமுறையில், பெரியப்பா/பெரியம்மா குழந்தைகள் நிம்மி அக்கா, குமார் அண்ணா, ஜெயஸ்ரீ வர, டே அண் நைட், கேரம் போர்ட்/செஸ்/சீட்டு கட்டு ப்ள்ஸ் சாப்பாடு/நொறுக்குதீனி என்று “நிலவுகள் சேர்ந்து.. பூமியில் வாழ்ந்தது.. அது ஒரு பொற்காலம்’ தான்!

குடித்தன காரர்களிடையே அவ்வப்போது, சிறுசிறு சண்டைகளும் உண்டு; ஒரு நாள் ராகியும், (ஓனர் பையன்- ராகவன்) பெருமாளும், மொட்டை மாடியில் படுத்து கொண்டு, எதையோ பார்த்து பயந்து ஓடி வந்து விட்டார்கள்! எல்லாரும் அன்பாகவும் இருப்பார்கள், அவ்வப்போது அடித்துக்கொள்ளவும் செய்வார்கள்! :)))

பத்தாம் வகுப்பு ஒரு வழியாக முடிந்து விட்டது. ரிசல்ட் வரும் அன்று, நண்பர்கள் சண்முகராஜ், பாஸ்கர், மாதவன் ஏரியாவுக்கு போயிருந்தேன். வீட்டுக்கு வருவதற்குள், பெரிய களேபரம் நடந்து விட்டது!

முன்பு ஒரு பதிவில் எழுதியிருந்தேன் அல்லவா? விசித்திர குள்ளன், வாத்தியார்களின் அடி/உதை ஃபேவரிட் ‘ஜான் ப்ரிட்டோ’? அவனால் தான் களேபரம்..!

அவன் ரிசல்டை தப்பும் தவறுமாக பார்த்து விட்டு.. அம்மாவிடம்.. “பாலா அம்மா.. நான் பாசுங்க.. ஆனா பாலு ஃபெயிலு..!!!!” என்று ஒரே சமயத்தில் எப்படி.. இரண்டு தப்புகள்(?!) நடைபெற முடியும் என்பது போல புலம்பி இருக்கிறான்!

அம்மாவுக்கு ரிசல்ட் பற்றி கூட பயமோ கவலையோ இல்லை; அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்! பையன் அவசரப்பட்டு எதாவது தவறான முடிவு எடுத்து விடக்கூடாதே என்று மிகவும் பயந்து விட்டார்! நான் வீட்டுக்கு வந்து, பாஸாகி விட்டேன் என்று சொன்ன பின் தான்.. அவருக்கு.. நிம்மதி!! :)))))


பாஸான சந்தோஷத்துக்கு பிறகு, மார்க் பற்றிய கவலை.. 25 பைசா வேண்டுதலுக்கு செவி சாய்த்து.. நாலுகால் மண்டபத்து ஆஞ்சனேயர்.. 400+ மார்க் கொடுத்து.. அருளி விட்டார்!! :))

பாலிடெக்னிக் போறேன் அப்பா, என்று நான் குதிக்க.. அப்பா.. ப்ளஸ் 2 படி, டிகிரிக்கு போகலாம் என்று சொல்லி முடித்து விட்டார்!

மீண்டும் k.h.s.s..!! மாதவராவ் சாரிடம் இண்டர்வியு.. இங்க்லீஷ் மீடியம் ஃபர்ஸ்ட் க்ரூப்புக்கு 125 ரூ! அப்பா 100ரூ டொனேஷன் தருகிறேன் என்றார்; அப்படின்னா தமிழ் மீடியம்தான் என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார், மாதவராவ்! அப்பா 25ரூ பார்க்காமல், இங்க்லீஷ் மீடியத்திலேயே போட்டுவிட்டார்!

சரி..சரி.. உங்களை ரொம்ப போர் அடித்து விட்டேன் என்று நினைக்கிறேன்! ப்ளஸ் 2 நினைவுகளை அடுத்த பதிவில் பார்க்கலாமா? வாழ்க்கையின் நிதர்சனங்களை எனக்கு உணர்த்திய அந்த அனுபவங்கள், விரைவில்!

தஞ்சையிலிருந்து தமாம் வரை தொடரும்..

September 12, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 8)

தமாம் பாலா
8.ஆசிரியர்களில் ஆயிரம் வகை..

பேச்சையே தொழிலாக கொண்டவர்களில் இரண்டு வகை உண்டு. புரியாததை புரிய வைக்கும் விதமாக பேசும் ஆசிரியர்கள், ஒரு வகை; புரியாத வகையில் பேசும் அரசியல்வாதிகள், இன்னொரு வகை. சாமான்ய மனிதர்கள், இரண்டு வார்த்தை பேசினாலேயே களைப்படைந்து விடுகிறார்கள்; ஆசிரியர்களும்,அரசியல்வாதிகளும் நாள் முழுவதும் பேசினாலும் டையர்ட் ஆவதே இல்லை.

K.H.S. பள்ளியிலும், ஆசிரியர்கள், அவர்களில் அரசியல்வாதிகள், ஹீரோக்கள், வில்லன்கள், நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள் உண்டு. நான் படித்த காலத்தில் அவர்கள் மீது கொண்ட மரியாதை இன்னும் குறையவில்லை; அந்த வயதில் நான் அவதானித்த அவர்களது மேனரிசத்தை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


ஹெட்மாஸ்டர் மாதவராவ்:
குள்ளமாக இருப்பார்; மீசையில்லாமல், வெற்றிலை சிவப்பு வாயோடு. அரசியல்வாதி போல பேசுவார். ஒரு முறை, எங்கள் வகுப்புக்கு வந்திருந்தார்; என்னை பார்த்ததும் ‘அறிவு களை’ தெரிந்ததோ, என்னவோ.. பரிட்சையில் அதிக மார்க்கு வாங்க வேண்டும் என்றால் எட்டு! ‘எட்டு என்றால் என்ன?’ என்று கேட்டார். நான் என்ன சொல்வது என்று தெரியாமல், ‘எட்டு என்றால் ஒரு நம்பர்’ என்றேன். :))) ‘அறிவு களை’ மறைந்து விட்டதால், தலைமை ஆசிரியரும் எதுவும் விவரம் சொல்லாமலேயே வகுப்பை விட்டு போய்விட்டார்!

தமிழ் ஆசிரியர் ராஜப்பா:
ஆக, மீசை, சுருள் முடி, பேண்ட் சட்டை என்று பிற தமிழ் ஆசிரியர்களிடமிருந்து வித்தியாசமாக இருப்பார். தமிழ் இலக்கணத்தில், அவன், இவன், உவன் என்பார்; அதிகம் நான் ‘உவன்’ பற்றி கேள்விப்பட்டதில்லை, எனவே ராஜப்பா சாரும், உவனும் சேர்ந்தே நினைவில் இருக்கிறார்கள்.

ஒன்பதாவது வகுப்பு ஆசிரியர் ஈ.டி.எஸ்:
குண்டாக, எம்ஜிஆர் முன் கிராப் சுழியுடன் பார்பதற்கு சினிமாவில் வரும் தாதா போல இருப்பார்; ஆனால் மிகவும் மென்மையான சுபாவம்; ஆத்மார்த்தமான, ஈடுபாடுடன் கூடிய பாடம் நடத்துதலால், எனக்கு ஆங்கிலத்தில் பள்ளி முதல் இடத்தில் மெரிட்கார்ட் கிடைக்க உதவியவர்.

மாத்ஸ் கே.பி.ஸார்:
உயரமான, அதற்கு ஏற்ற எடையோடு, திக்கான கண்ணாடி அணிந்திருப்பார். க்ளாஸில், இதுதான்.. D என்பார், பசங்களும், கூடவே.. இதுதாண்டீ என்பார்கள்;தமாஷாக இருக்கும். பாடம் நடத்தும் வேகத்தை விட மாலையில் பள்ளி க்ரவுண்டில் கிரிக்கெட் ஆடும் வேகம் அதிகம். :)))

ஸைன்ஸ் கோவிந்தராகவன் சார்:
சிவப்பு நிறம், நோ மீசை/மழமழ ஷேவ் செய்த முகம், பூனைக்கண், சுருட்டை முடி. ஜனநாயக வாதி.. எப்படி என்று கேட்கின்றீர்களா? ஃபார் தி பீப்பிள், பை தி பீப்பிள் என்கிற மாதிரி; யாரையும் கை நீட்டி அடிக்கவே மாட்டார். உடனே அவசரப்பட்டு, ரொம்ப நல்லவர் என்று நினைத்து விட வேண்டாம்! யாராவது தப்பு செய்து விட்டால், அவ்வளவு தான்!! “போடு தம்பி அங்கே..” என்பார். உடனே, பையன்கள், வேட்டைநாயின் வெறியில், கை நீட்டிய திசையில் உள்ள பையனை ஹோல்சேல்ஸில் குட்டுகள் போட்டு தள்ளிவிடுவார்கள்;அவ்வப்போது பழைய பாக்கிகள் செட்டில் ஆகிவிடும்! ஹ்யூமன் ரைட்ஸ்/ஸ்டூடண்ட் ரைட்ஸ் பற்றி எங்களுக்கு தெரியாத காலம் அது :-(( இப்போது என் பெண்ணை மிரட்ட (?!) முயற்சித்தால் கூட, பதிலுக்கு அவள்.. சைல்டு ப்ரொடக்ஷன் ஃபோர்ஸ் நம்பர் என்ன, என என்னை பதிலுக்கு மிரட்டுகிறாள்! :-))))

விஜயகுமார் சார்:
ஹிஸ்ட்ரி சார்; 80களில் கலக்கிய ‘மைக் மோகனின்’ ஜாடையில் கொஞ்சம் பூசினால் போன்ற வடிவம். பொதுவாக ரொம்ப நல்ல சார்; அபூர்வமாக, வாட்சை கழட்டுகிறார் என்றால், யாருக்கோ ‘பூசை’ போடப்போகிறார் என்று அர்த்தம்!

எல்.எம்.ஸ் சார்:
இவரும் ஹிஸ்ட்ரி/ஜாகரஃபி சார் தான்; இந்தி படம் பார்த்திருப்பீர்களே, அந்த காலத்தில், குண்டாக.
கட்டை குட்டையாக, உருண்டையான வழுக்கை தலையுடன்,ப்ரஷ் மீசையுடன் ‘ப்ரேம் நாத்’ என்று மிரட்டலாக! அவரை பார்த்தால், எல்.மரியசூசை சாமிராசு என்ற எல்.எம்.எஸ் ஐ பார்க்க வேண்டாம், அவ்வளவு உருவ ஒற்றுமை. ஆளுக்கேற்ற பயங்கர குரல். இவரை பற்றியே ஒரு முழு பதிவு போடலாம், அவ்வளவு விஷயம் உண்டு! சாக் பீஸை நெற்றி வியர்வையிலோ, தண்ணியிலோ முக்கி, ப்ளாக் போர்டில் எழுதி விடுவார்; போர்டில், எழுத்துக்கள் ஞாயிற்று கிழமை பள்ளி பிள்ளைகள் போல மெல்ல எழும்; பிறகு காய்ந்து விட்டதும், பளிச்சென்று தெரியும். மானிட்டர் அழிக்கும் போது, லேசில் அழியாமல், ஆண்டு விடுமுறை பசங்கள் போல ஆட்டம் காட்டும். எங்கள் வகுப்பின் குறும்பு பையன், ஜான் ப்ரிட்டோ க்ளாஸ் நடக்கும் போது, தொந்தரவு பண்ணி விட்டான்; அடி நிமித்தி விட்டார், நாங்கள் பயந்தே போய்விட்டோம்!

(ப்ரிட்டோ பற்றி, இன்னொரு பதிவிலும் எழுதுவேன் :-)))

நான் எழுதுவதை வைத்து, எங்கள் பள்ளியின் ஆசிரியர்கள் எல்லாம் ராட்சஸர்கள்/ பயங்கரமானவர்கள் என்று, முடிவு செய்து விடவேண்டாம் நண்பர்களே, உண்மையில் அவர்கள் எங்கள் முன்னேற்றத்தில், மிகுந்த அக்கறை செலுத்தியவர்கள். பத்தாம்/பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் கிடைக்க, ஸ்பெஷல் க்ளாஸ் அது இது என்று எங்களை பெண்டு நிமித்தி விடுவார்கள்; இஞ்சினியரிங்/மெடிக்கல் காலேஜ் சீட்டுக்கு அந்த காலத்திலேயே க்யாரண்டியான பள்ளியாக்கும்.. K.H.S.S!!

ஹனீஃப் சார் பற்றி சொல்ல மறந்து விட்டேனே! இங்க்லீஷில் அத்தாரிட்டி அவர்; அவ்வளவு ஸ்மார்ட், ஆக்ஸ்ஃபோர்ட் இங்க்லீஷ் நுனிநாக்கில் விளையாடும்; அவரைப் பார்த்து ஆங்கிலத்தில் எங்களுக்கு மோகமே வந்துவிட்ட்து. என்னை ‘நெவர் பி செகண்ட் டு எனி ஒன்’ என்று எழுதி ஆட்டோக்ராப் போட்டு கொடுத்தார்; அவர் சொல்லை தட்டாமல், ஃபர்ஸ்ட் வரமுடியாத இடங்களில், தேர்ட் ஆகி விட்டேன், வாத்தியார் சொல்லை தட்டக்கூடாது, அல்லவா? :-)))

எங்கள் +2 காலத்தில் ‘கல்யாணராமன்’ சார் வந்து சேர்ந்தார்; அந்த கால காதல் இளவரசன் கமல் போல ஸ்டெப் கட்டிங்/தொங்கு மீசை.. கான்வெண்டிலிருந்து வந்த மாணவிகள், பார்க்கும் போதெல்லாம் குட்மார்னிங் சொல்லி, வழிய.. ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேலே குட்மார்னிங் சொல்லக்கூடாது என்று 144 போட்டுவிட்டார், அந்த இளம் வயது ஹீரோ!

சத்திய மூர்த்தி, என்றும் ஒரு வாத்தியார் இருந்தார்; வழக்கமாக ரொம்ப சாது, ரொம்ப நல்லவர். கோபம் வந்து விட்டால், நான் என்ன சிண்டு வெச்சிருக்கேனே? காதுலே பூ வெச்சிகிட்டிருக்கேனா? இந்த வடபாதி மங்கலம் வேலை எல்லாம் வேண்டாம் என்று கத்திவிடுவார்!

இது எல்லாம் 1982 நிலவரங்கள்; அப்போதே பெரும்பாலான வாத்தியார்கள் 40+.. இப்போது மெஜாரிட்டி ரிடையர் ஆகி இருப்பார்கள், என்று நினைக்கிறேன். இன்றைய ஆசிரியர்கள், பிரம்பு இல்லாமல் கனிவை மட்டுமே பயன்படுத்தும் நம் வலைபதிவாசிரியர் சுப்பையா வாத்தியார் போல இருப்பார்கள் என்று நம்புகிறேன். பழைய கணக்காய் நான் இன்று எழுதியதை பொறுமையுடன் படித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! :-)))

தஞ்சையிலிருந்து தமாம் தொடரும்...

September 10, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 7)

தமாம் பாலா
7. கே.ஹெச்.எஸ் நினைவுகள்-முதல் ரவுண்டு..

அந்த காலத்து நீதி மன்றம் போல, ஒரு கவர்மெண்ட் பில்டிங் போல இருக்கும் எங்கள் பள்ளிக்கூடம்! படிகள் ஏறி, முதல் வராந்தாவை தாண்டி உள்ளே நுழைந்தால்.. ஒரு பெரிய உயரமான மத்திய மண்டபம்.. டிரஸ் மற்றும் ஷீட்டிங்கால் ஆனது! அதன் பெயர் செண்ட்ரல் ஹால். தினமும் காலை ப்ரேயர் நடப்பது, மற்றும் முக்கியமான மீட்டிங் நடைபெறும் இடம்; செண்ட்ரல் ஹாலை சுற்றி, வகுப்பு அறைகள், தரைத்தளத்தில்.

வலதுபுறம் முதல் அறை ஹெட்மாஸ்டர் அறை. இடதுபுறம் முதல் அறை ஸ்கூல் ஆபிஸ், இரண்டாவது அறை.. ஸ்டாஃப் ரூம். கீழே உள்ளது போலவே, முதல் மாடியிலும், சுற்றிலும் வகுப்பு அறைகள். வகுப்புஅறைகளை சுற்றி, வெளிப்பகுதியில் வராந்தாவும் உண்டு; மாடி வகுப்புஅறைகளுக்கு உட்பகுதியில், செண்ட்ரல் ஹாலின் உள்கூடாக, மரத்தாலான பால்கனி உண்டு; ஹாலின் முழு உள் சுற்றளவுக்கு. ஸ்கூல் நுழைவு வாயிலுக்கு நேர் மேலே பெல் அடிக்கும் இடம். இதுதான் மெயின் ஸ்கூல்.

இது தவிர இந்த பள்ளி வளாகத்திலேயே, சுற்றிலும் லைப்ரரி, அடிஷனல் வகுப்புகள், பின்புறம் எலும்புக்கூடு இருக்கும் பயாலஜி லேப், பாத்ரூம்கள்,பிஸிக்ஸ் லாப், கெமிஸ்ட்ரி லாப், இடம் வலமாக ஸ்கூலை சுற்றி வர, அவ்வப்போது லாரல் ஹார்டி 16எமெம் படம் போடும், சின்ன தியேட்டர்!


கொங்கணேஸ்வராவில் இருந்து ஜானகிராமன் சார் எங்களை அழைத்து வரிசையில் உட்கார வைத்ததும் செண்ட்ரல் ஹால்தான். ஐந்து வரை தமிழ் மீடியத்தில் படித்து, ஆறவது கே.ஹெச்.எஸ்ஸில் இங்க்லீஷ் மீடியம் வகுப்பில் போட்டுவிட்டனர். வகுப்பில் டீச்சர்கள் என்ன பேசுகின்றார்கள், என்று தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. ரத்னா பாய் டீச்சர்தான், க்ளாஸ் டீச்சர். கண்ணுங்களா, நல்லா படிக்கணும் என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் கனிவாக மிரட்டுவார். தம்பி இறந்த சோகத்திலிருந்து மீள்வதற்கு, நானும் அம்மா அப்பாவும் கொஞ்ச நாள் லீவு போட்டு விட்டு மாயவரத்தில் பெரியம்மா வீட்டுக்கு சென்று விட்டோம்; பெரியப்பாவும், பெரியம்மாவும், என் அப்பா/அம்மாவுடன் உடன்பிறந்தவர்கள். இந்த டபுள் பாண்ட், மற்றும் பெரியம்மா பிள்ளைகள் நிம்மி, குமார்,(எனக்கு வயதில் மூத்தவர்கள்) ஜெயஸ்ரீ(சின்னவள்) அன்பாலும் நாங்கள் தேறி வந்தோம். அவர்கள் ஒருநாளும் என்னை ‘கஸின்’ என்றே சொன்னதில்லை; தம்பி/அண்ணா என்றே எப்பொழுதும் குறிப்பிடுவார்கள் என்னை!

பழக்க தோஷத்தால், அம்மா அவ்வப்போது.. மணி,ராதா என்று விளிக்கும் போது, அது மிஸ்-அப்ராப்ரியேஷனாகவும், அதே சமயம் மனதை வருத்துவதாகவும் இருக்கும்.

பசங்கள் நாங்கள், அப்போதெல்லாம் துண்டு பிலிமை லென்ஸ் வைத்து, சூரிய ஒளியை கண்ணாடியில் ரிஃப்ளெக்ட் செய்து, வீடு முழுக்க படுதா போட்டு விடுவோம்; லென்ஸ் போதாமல், குண்டு பல்பை காவிரி மணலில் உடைத்து, நீர் நிரப்பி, சினிமா காட்டும் போது, அதில் மணலையும் தூவுவோம்.

அம்மாவை சோகத்திலிருந்து மீட்டு வெளிக்கொண்டு வரும் பார்ட் டைம் ஜாபும் எனக்கு இருந்தது. மாயவரத்திலிருந்து தஞ்சை திரும்பியதும், மேல அலங்கம்/மல்லிகை கொடி வீடே வேண்டாம் என்று வீடு மாறி விட்டோம். இந்த முறை, மீண்டும் ராணி வாய்க்கால் தெரு ஏரியாவுக்கு. முன்பு சொன்ன, மஞ்சள் காமாலை கரஸ்பாண்டண்ட் வீடு தாண்டி, ரவா தோசை வீடு(?!) சுந்தர மோகன் வீடு எல்லாம் தாண்டி, ஒரு டெட் எண்ட் இல்.. சேவு அமிர்தலிங்கம் பிள்ளை சந்து!

ராசாத்தி அம்மாள் வீட்டுக்குத்தான் நாங்கள் குடி போனோம். அவர்கள் கணவர் தங்கவேல் மூப்பனார். 60 வயதுக்கு மேல் இருக்கும்; எங்கேயோ ட்ரைவராக இருந்தார்; நேரம் கிடைக்கும் போதெல்லாம், வீட்டிலேயே கான்கிரீட் செங்கல் செய்வதுமாய் பிசியாக இருப்பார். ராசாத்தி அம்மாள், அவரது உயிரோடு இருக்கும் (இரண்டாவது) மனைவி; ஒரு மகன்/மகள். அதை தவிர குடவாசலில் ஒரு மலேஷிய மனைவியும் உண்டு; அந்த அம்மாவுக்கும் மூன்று அழகான சைனீஸ் முகஜாடையில் பெண் குழந்தைகள். சின்ன வயதில், மலேஷிய பெண்ணை இந்தியா அழைத்து வந்து, யாரும் கல்யாணம் செய்ய ரெடி இல்லாததால், தானே கல்யாணம் செய்து கொண்டாராம்.

பக்கத்து காலனியில், சாந்தி அம்மா, சதா சிகிரெட் பிடிக்கும் அவர் கணவர் சண்முகம் மாமா,(அவருக்கு ஆண்டி ஸ்மோக்கிங் அட்வைஸர், அடியேன் :)) திருநெல்வேலி தெலுங்கு குடும்பத்தினர், அவர்கள் பிள்ளைகள்...ராஜி, அங்கச்சி, விச்சு, சௌந்தர், பூரணி மற்றும் மெண்டலி ரிடார்டெட் கண்ணா ஆகியோர் உண்டு. ரயில்வேயில் வேலை செய்து மறைந்த ஒருவரின் மனைவியும், அவர் மகள் ப்ரேமா அக்காவும் கூட அங்கே இருந்தனர்; அக்காவுக்கு கலெக்டர் ஆபிஸ் எதிரில் டாக்குமெண்ட் டைப் செய்யும் வேலை. இருந்த போதும் சிரிப்பு மாறாத முகமாய், அம்மாவிடம் வேலையின் களைப்பால் விலாவே வலிக்குது என்று சொல்லிக் கொண்டிருப்பார். அம்மாவும், அப்பாவும் நானும், மெல்ல இந்த புதிய உலகத்தில் எங்கள் பழைய சோகத்தை மறக்க ஆரம்பித்தோம்.

இதற்கு இடையில், ஒரு பக்கத்து வீட்டு அமெச்சூர் ஜோசிய பெண்மணி, மணியும் அப்பாவும் ஒரு வருஷம் பிரிந்து இருந்தால் நல்லது, என ஒரு புது குண்டை தூக்கி போட்டுவிட்டாள். அதுவும் கணக்கில் ஒரு பத்து வருடத்தை மிக்ஸ் அப் செய்து விட்டு!

ஏழாங்க்ளாஸிலோ, இங்க்லீஷ் மீடியம் தொடர்ந்து தொல்லை தந்து வந்தது. வெள்ளை விஸ்வலிங்கம் சார்.. “ராஜராஜ ச்சோளா வாஸ் எ க்ரேட் கிங்.. என்று ஆரம்பித்து நடத்தும் ஹிஸ்ட்ரி க்ளாஸும், பிடிபடவே இல்லை; எல்லாம் நன்மைக்கே என்று, மாயவரத்திலிருந்து ஆடுதுறைக்கு மாற்றல் ஆகி விட்ட, பெரியம்மா வீட்டிற்கு போய்விட்டேன், எட்டாம் க்ளாஸ் படிக்க.


மீண்டும், தமிழ் மீடியம், இந்த முறை படிப்பு கொஞ்சம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. பள்ளி ஆசிரியர்கள், என்னையும் அண்ணா குமாரையும் ஆள்மாறாட்டம் செய்து குழம்பும் தமாஷும் அவ்வப்போது உண்டு. அப்பா வழிப்பாட்டியின், நித்திய விருந்துபசாரமும், வீட்டு தோட்டத்தில் எங்கள் கத்திரிக்காய்/ வெண்டைக்காய் விவசாயமும் ஜரூராக நடந்தன; ஆடுதுறை குமரகுரு பள்ளியில் எட்டாம் வகுப்பு, இயற்கையான சூழலில், புறாக்கள் முணங்கும் பரிட்சை ஹாலோடு, இனிதாக நிறைவேறியது; அப்பா, ஜெயராம் வாத்தியாரை பிடித்து, மீண்டும் தஞ்சை கே.ஹெச்.எஸ்ஸில் இடம் கிடைத்து விட்டது!

ஆடுதுறை நண்பர்கள், கணேசனும், வரதராஜனும்.. “நீ.. போய் விட்டாய், ஒரு பெண்பிள்ளை எங்களை முந்திவிட்டது” என்று கொஞ்சநாளுக்கு குறைபட்டு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்கள். ஸோ.. பேக் டு கே.ஹெச்.எஸ், பார் நைந்த், பட் சேஃப்லி இன் தமிழ் மீடியம், திஸ் டைம் :))

ஒன்பது முதல் பனிரெண்டு வரையான, பள்ளி அனுபவங்களை, சந்தித்த விதம் விதமான ஆசிரியர்களை பற்றி, அடுத்த பதிவுகளில் எழுதுகிறேன், நண்பர்களே :))))

தஞ்சையிலிருந்து தமாம் தொடரும்...





September 9, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 6)

தமாம் பாலா
6. வெங்காயம் போட்ட வெண்டைக்காய் கறி

தஞ்சாவூரில்..மேல,கீழ,தெற்கு,வடக்கு வீதிகள் ஓரளவு அகலமானவை; பஸ் போகும் அளவுக்கு. இந்த நாலு வீதிகளின் சதுரத்துக்குள்ளே உள்ள மற்ற தெருக்கள் குறுகலானவை தான். மேல வீதியின் நடுவிலிருந்து சதுரத்தின் உள் நோக்கி செல்வது சகாநாயக்கன் வீதி. அதில் ஒரு பர்லாங் தூரத்தில் இருப்பது கே.ஹெச்.எஸ் எனும் கல்யாணசுந்தரம் மேனிலைப்பள்ளியின் பெண்கள் பிரிவு. அந்த இடத்திலிருந்து குறுக்காக செல்லும் தெருவில் எதிரெதிராக, கல்யாணசுந்தரம் நடுநிலைப்பள்ளியும், மெயின் ஸ்கூலும். மெயின் ஸ்கூலில், ஆண்கள் மேனிலைப்பள்ளியும், இங்க்லீஷ் மீடியம் கோ-எஜுகேஷன் க்ளாஸ்களும். அது ஒரு பிரம்மாண்டமான கட்டிடம், ப்ரிடிஷ் கால கட்டிடம் போல இருக்கும்; மேலும் விவரங்களை பள்ளிக்கான ஒரு தனிப்பதிவில் காண்போம்.

இந்த இரண்டு பள்ளிகளுக்கு இடையில் போகும் தெரு, முடியும் இடத்தில் ஒரு பெரிய கேட். அந்த கேட்டுக்கு அந்தப்புறத்தில், கடல் போன்ற.. பெரி..ய்ய்..ய விளையாட்டு மைதானம். அந்த சிறிய தெருக்களுக்கு நடுவில் அவ்வளவு பெரிய பள்ளியும், மைதானமும் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று!

அந்த மைதானத்தின் உட்புற மதிலை ஒட்டியும் சில வகுப்புகள் உண்டு; வலது கோடியில் ஒரு பழைய கட்டிடம், ஆர்ச் எல்லாம் வைத்து கட்டியிருக்கும்; அதுதான், பிடி ரூம், பேட்,பால் எல்லாம் வைத்திருந்து, அட்டெண்டர் கேட்பவருக்கு மட்டும் தருவார். அன்று, 1975 டிசம்பர் 20, சனிக்கிழமை.. பள்ளியில் அன்று விடுமுறையாக இருந்தாலும், திங்கள் கிழமை டைம் டேபிள் வைத்திருந்தனர். மாலை வேளை, ப்ளே ஃபார் ஆல், என்ற கட்டாய உடற்பயிற்சி வகுப்பில் இருந்தோம்; எல்லா பாடத்திலும் நல்ல மதிப்பெண் எடுத்தாலும், பிடியில் மட்டும் ஜஸ்ட் பாஸ் செய்யும் நான் உள்பட.

எல்லா நாளும், விடியும் போது நன்றாகத்தான் விடிகிறது; ஆனால் முடியும் போதுதான் சிலசமயம் இடியும்,மின்னலும்,புயல் மழையுமாக. அன்றும் அப்படித்தான் போலிருக்கிறது!

“மணி, உன்னை எங்கே எல்லாம் தேடறது? உன் தம்பி, ராதாவை.. மாடு துரத்தி.. அகழிலே விழுந்து.. மயக்கமா இருக்கானாம்” சுந்தர், என்னை விட ஒருவயது பெரியவன் கொங்கணேஸ்வரா மீரா டீச்சர் பையன்.. ஓடி வந்து சொன்னான். பகீரென்றது; நானும் உடனேயே, வீட்டுக்கு ஓடினேன்.. மல்லிகை காம்பவுண்டுக்குள், ஒரே கும்பல்; இதுவரை பார்த்திருக்காத மனிதர்களின் நடமாட்டம்!

என்னை காம்பவுண்டுக்கு உள்ளேயே விடவில்லை; பக்கத்தில் இருந்த பாகவதர் வீட்டு திண்ணையில் உட்கார வைத்து விட்டனர்; மாமி, வந்து.. “இங்கேயே ஒக்காந்து கோடா கண்ணா, அப்புறம் வந்து உன்னை கூப்பிடுவா” என்றார்; அவர் முகம் கூட அழுதாற்போல இருந்தது. வெளியே பார்த்த போது, அப்பா.. சர்ரென்று.. சைக்கிளில், பெடலில் கால் வைத்து வந்து இறங்கினார்; அவர் கண்கள் இரண்டும் கோவை பழம் போன்ற, இரத்த சிவப்பில் இருந்தன.

காம்பவுண்டுக்குள் சென்றேன்; வீட்டில் உள்ளே.. ராதா.. படுத்திருந்தான்; இல்லை படுக்க வைக்கப்பட்டிருந்தான். எல்லாமே முடிந்து போயிருந்தது! அதை புரிந்து கொள்வதற்கு பதினோரு வயது விவரம் போதுமே.. நாங்கள் எதற்காக பயந்து கொண்டிருந்தோமோ, அது நடந்தே விட்டது!!
அவ்வளவு நாட்களாக, அத்தனை சமத்தாக இருந்த பையன், அன்று மட்டும்.. அத்தாச்சி வீட்டு நாற்காலியின் பின் மறைந்து ஆட்டம் காட்டி விட்டு.. தெருக்கோடியில் இருந்த அகழி வரையில் போய் விட்டானாம்; கூட கோவிந்தராஜன் ட்ராயிங் மாஸ்டரின் கிறுக்கு பையன் வேறு! அவர்கள் பந்து விளையாடினார்களோ, என்ன இழவோ.. ஒன்றும் தெளிவாக தெரியவில்லை. பார்த்த ஒரே சாட்சியான அந்த பையனுக்கும் தெளிவாக சொல்ல தெரியவில்லை;அவன் சாட்சியோ, குற்றவாளியோ.. அது முக்கியமில்லை, இப்போது.. முக்கியமானது, எங்கள் அன்பு ராதா, அகழியின் ஆரம்ப பகுதியில், ஜஸ்ட் கால்கள் முங்கும்.. அளவு நீரில், மூழ்கி உயிரை விட்டு விட்டான்!! :-((((((

மிகவும், பிரகாசமாக வந்திருக்க வேண்டிய ஒரு மொட்டு, மொட்டாகவே, கருகி..மறைந்துவிட்டது! பார்த்து பார்த்து பொத்தி பொத்தி வளர்த்த அம்மாவுக்கு, தீரா பழியாய், ஒரு பத்து நிமிட நேரத்துக்குள் எல்லாமே நடந்து முடிந்து விட்டது! அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோருக்கும் ராதா செல்ல பிள்ளை; அவனது மூன்றாம் வகுப்பு வாத்தியார் கூட ரொம்ப அழுதாராம்..

அம்மாவை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை. எங்கள் பெரியம்மா, டாக்டர் மாமாவிடம், ‘ஏதாவது பண்ணி, காப்பாத்திட முடியாதா,மாமா’ என்று கேட்டார்; அவரும் இயலாமையுடன் தலையை இல்லையென்று, ஆட்டினார். எங்கள் வாழ்வின் சந்தோஷம் நிரந்தரமாய், தொலைந்து போனது போலிருந்தது; இனி எந்த ஒரு சந்தோஷமும் எங்களுக்கு பெரிதாக இருக்கமுடியாது என்பது போன்ற ஒரு நிலையற்ற தன்மையும், அவநம்பிக்கையும் முதல்முறையாக என் மனதில் வந்தன.

போலீஸுக்கெல்லாம் போகவேண்டாம்; அறுத்து விடுவார்கள்; சக்கரை போட்டால் சீக்கிரம் எரிந்து விடும் என யார் யாரோ ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்தார்கள்; நல்லது கெட்டது எல்லாத்துக்கும் நமக்கு ஆலோசனை தேவைப்படுகிறதே :-(((((

அப்பாவின், துக்கம்.. ஆண்களுக்கே உரித்தானதாக.. அடக்கி வைத்ததாய், அவரையே உருக்குவதாக அமைந்து விட்டது; அதன் பிறகு, சைக்கிள் விடக்கூட அவருக்கு, தைரியம் குறைந்து விட்டது; அதன் பிறகு, அவர் மறையும் வரை நடைதான்!

தஞ்சையிலிருந்து தமாம் வரை தொடரும்..

பின்குறிப்பு:
அன்பு நண்பர்களே, இன்றைய பதிவு, ஒரு சந்தோஷ அனுபவமாக இல்லாமல், உங்கள் ஜாலி மூடை கெடுத்திருந்தால், மன்னிக்க வேண்டுகிறேன். இது 33 மூன்று ஆண்டுகள் முன்பு என் பத்து வயதில் எங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சோக நினைவு! இன்று நினைத்து பார்க்கும் போது, அந்த துரதிஷ்ட சம்பவமும், அந்த சமயத்தில் வெளியில் இருந்து வாங்கி வந்த சாப்பாட்டில் இருந்த ‘வெங்காயம் போட்ட வெண்டைக்காய் கறியும்’ நினைவுக்கு வருகின்றன; அதற்கு முன் எங்கள் வீட்டிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்ததுமில்லை; வெண்டைக்காய் கறியிலும், வெங்காயம் போட்டதாகவும் நினைவுமில்லை. அன்பாய், ஆசையாய் இருந்த உறவுகள் மறைந்து போனாலும், இருப்பவருக்கு அடுத்த வேளை சாப்பாடு தானே வாழ்க்கையின் கொடூரமான யதார்த்தம்?!! :-((((((

September 8, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 5)

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 5)
தமாம் பாலா

5. ராதாகிருஷ்ணனும், நானும்..


நீரும், நெருப்பும் பார்த்திருக்கின்றீர்களா? அதில், இரண்டு எம்.ஜி.ஆர்கள் வருவார்கள்; ஒருவர் கருப்பு, ஒருவர் சிவப்பு என்று. அதே போல, ஒரே வயிற்றில் பிறந்தும் வெவ்வேறு தோற்றம், குணாதிசயம் எனக்கும் அவனுக்கும்!

நான், பாலசுப்ரமணியன்.. கொஞ்சம் (அம்)மாநிறம், நீண்ட முகம், லாரி போகும் அளவு அகலமான நெத்தி, ஜாடிக்காதுகள், நோஞ்சான், தொடைநடுங்கி, தொட்டால் சிணுங்கி, பயந்தாங்குளி என்று சகல அடைமொழிகளுக்கும் சொந்தக்காரன். ஒல்லியாக, எலும்புக்கூடு போல இருப்பேன். ப்ரைமரி காம்ப்ளக்ஸ் வந்து மாதக்கணக்கில் விஜயலஷ்மி டாக்டரிடம் ஊசி போட்டுக்கொண்டு, சாக்லேட்/வாழைப்பழம் வாங்கியவன், நான்! ஊசி போட்டால் அழுவதில்லை என்பதே என் அதிகபட்ச தைரியம்! :)))

எனக்கு இரண்டு வயது இளையவன், என் தம்பி ராதாகிருஷ்ணன். பெயருக்கேற்ற அழகன்; குறும்புக்காரன். அ(ப்ப)ப்பா என சொல்லும் நிறம்;சிரித்த முகமாய், வசீகரமாய் இருப்பான். யார் வந்தாலும், போய் பேசுவான், கலகலப்பாய் விஷமங்கள் செய்வான். அவன் செய்யும் குறும்புகளில், ஸாம்பிளுக்கு ஒன்று.. தீப்பெட்டியை திறந்து, ஒரே ஒரு குச்சியை எடுத்து பற்ற வைத்து, அதை தீப்பெட்டிக்குள் வைத்து மூடிவிட்டு, அது எரிவதை பார்த்து ரசிப்பான். சின்ன சின்னதாய் சண்டைகள் போட்டிருக்கிறோம், நாங்கள்.

பெண்பிள்ளை இல்லையென்று, தம்பிக்கு பெண்குழந்தை போல அலங்காரம் செய்து, ஃப்ராக் எல்லாம் போடு, அவனோடு ஒரு ப்ளாக் அண்ட் வொய்ட் படம் எடுத்தார்கள், என்னுடன் சேர்த்து. ஊர் மாறி போனதால், எங்கே இருக்கிறது என்று தேடவேண்டும்;கிடைத்தால், பதிவில் இணைக்கிறேன்.

நான் ஐந்தாவது படிக்கும் போது, கொங்கணேஸ்வராவில்.. கொடைக்கானல் சுற்றுலா அழைத்துச்சென்றார்கள்; எங்கள் குடும்ப நண்பரும், பள்ளி ஆசிரியையான மீரா டீச்சர் வந்ததால், நம்பி அனுப்பி வைத்தார்கள். டூர் முடிந்து, வீடு திரும்பும் போது முருகன் ஆசிரமம்/காளி கோயில் எதிரே, ராதா வந்தான்.. ஆசையாக என் கையில் இருந்த மஞ்சள் பையை வாங்கிக்கொண்டான். தம்பியுடையான் படைக்கஞ்சான், என்ற தமிழ் பழமொழி அன்று எனக்கு தெரிந்திருக்கவில்லை; இருந்தாலும் ஒரு வித சந்தோஷம் தோன்றியது!


1974ல், அம்மாவின் தங்கை ரமணி சித்திக்கும், நாராயணன் சித்தப்பாவுக்கும் கும்பகோணத்தில் திருமணம் நடந்தது; அம்மா வழி தாத்தாவுக்கு, அஞ்சு பெண்கள் என்பதால் மத்திய பிரதேசம் போபாலிருந்து, அவ்வப்போது தமிழகம் வந்து பெண்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது, அவருக்கும் எங்களுக்கும் நல்ல பொழுது போக்கு! :))))

அதன்பிறகு, நாராயணன் சித்தப்பா ஒருமுறை தஞ்சாவூரில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். நானும் ராதாவும் வீட்டில் பொழுது போகாமல், அட்டை பெட்டிகளை நறுக்கி, க்ரிகெட் க்ரவுண்டு, ப்ளேயர்ஸ், மற்றும் எல்.ஐ.சி கட்டிடம் எரிவது போல உள்ளே ஊதுபத்தி செட் செய்திருந்தோம் (அப்போதைய செய்தி :-)) அதுதானே எங்களுக்கு, அந்த காலத்தில் டீவி/வீடியோ கேம்/ கம்ப்யூட்டர் எல்லாம்!


சித்தப்பா, கண்ணாடியில் செய்த ஒரு தாஜ்மகால் பொம்மை கொண்டு வந்திருந்தார்; ஒரு டோம் ஷேப்பில், ஜிகினா நீர் நிரம்பிய, மின் விளக்குடன் கூடிய அழகான ஷோ பீஸ் அது. ராதா அது நன்றாக இருக்கிறது என்று சொன்னவுடன், அதை அவனுக்கே கொடுத்துவிட்டார், சித்தப்பா!

அப்போதெல்லாம், உறவினர் யார் வந்தாலும் அவர்களிடம் மிகவும் ஆசையாக இருப்போம்; அவர்களுடன் சிவகங்கை பார்க், பெரிய கோயில், அரண்மனை, கலைக்கூடம்/சரஸ்வதி மகால் லைப்ரரி, திமிங்கல எலும்புக்க்கூடு, புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் என்று சுற்றுவோம். தாத்தா வரும் போது, காதலிக்க நேரமில்லை, உலகம் சுற்றும் வாலிபன் என்று.. பார்த்த படங்களையே திரும்ப திரும்ப பார்ப்பதும் உண்டு; படமா முக்கியம், மனதுக்கு பிடித்த மனிதர்களுடன் சேர்ந்து பொழுதை கழிப்பதுதானே முக்கியம்? :)))

அப்பா,அம்மா தீபாவளிக்கு எனக்கும் தம்பிக்கும் ஒரே டிசைனில் டெர்லின் சட்டை எடுத்து கொடுப்பார்கள். பட்டாசு வெடிக்கும் ஜோரில் அதில் பொத்தல்கள் விழுந்துவிடும்! வீட்டில் வாங்கிய வெடிகள் போதாதென்று, தெருவில் வெடிக்காத அணுகுண்டுகள், வெடிகளை பிரித்து உடைத்து போட்டு, ‘புஸ்’ கொளுத்துவோம்.

ராதாவுக்கு ஒரே திருஷ்டியாக இருந்த வளைந்த காலையும், அம்மா நல்ல டாக்டரை பார்த்து அறுவை சிகிச்சை செய்து சரி செய்து விட்டார்கள்; நாமிருவர் நமக்கிருவர் என்று திட்டமிட்ட குடும்பமாய் சந்தோஷமாய் வாழ்ந்த காலம் அது!

அம்மாவின் தம்பி, சுந்தர் மாமா விடுமுறைக்கு வந்து போவார். அண்ணாமலை யுனிவர்ஸிடியில் படித்த போது, போலிஸ் தடியடியில் கிடைத்த தழும்பை காட்டினார்; என்னை சிவகங்கா பார்க்கிற்கு அழைத்து சென்று.. அங்கு இருந்த பாரில்(டாஸ் மாஸ் அல்ல!) எக்ஸர்சைஸ் செய்வார். அவரது தோள்கள் புடைத்து, பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.

எம்.டெக் படிப்பதற்காக கான்பூர் ஐ.ஐ.டி சென்றார். அங்கு ஏதோ ஒரு காரணத்துக்காக, அவர் தற்கொலை செய்து கொண்ட்தாக, ஒரு நாள் தந்தி வந்தது!!!!!! :-((( அம்மா பாவம், சுந்தர்,சுந்தர் என்று இரண்டு, மூன்று நாட்களுக்கு அழுது கொண்டே இருந்தாள். என்ன காரணம் என்று கேட்க தெரியவில்லை அன்றும்/இன்றும்!


அந்த காலத்தில் தொலைபேசி வசதி அதிகம் இல்லை; மெஜாரிட்டி தந்திதான் (டெலகிராம்) முக்கால்வாசி தந்திகள், உற்றார்/உறவினர் மறைந்த துயர செய்தியை தாங்கிதான் வரும். தந்தியை பிரிக்கும் முன்பே, அடிவயிறு கலங்கி, வீட்டில் உள்ள பெண்கள்.. அழத்தயாராகிவிடுவார்கள்!

தோளுக்கு மிஞ்சிய மகன், படித்து முடித்து விடுவான்.. குடும்ப பாரத்தை கூட சுமந்து எளிதாக்கி விடுவான் என்று நினைத்திருந்த போபால் தாத்தா மிகவும் இடிந்து போய்விட்டார் என்று சொன்னார்கள்.

மகிழ்ச்சியாக போய்கொண்டிருக்கின்ற வாழ்க்கை, நெருங்கிய உறவினர் மரணத்தில் தடம்மாறி விடுகிறது; அதன் பிறகு கொஞ்ச காலம் வெளிப்படையான சோகம் கவ்விக்கொள்கிறது. காலப்போக்கில், அது முகத்திலிருந்து மறைந்து விட்டாலும், மனதின் ஆழத்தில் பதுங்கி கொள்கிறது; யாரும் உடன் இல்லாத தனிமையில் பழைய சோகங்கள், மனிதர் மனக்கூண்டிலிருந்து வெளிப்பட்டு, அவனை கடித்து குதறியும் விடுகின்றன!


எனக்கும் அப்போது கிட்ட்தட்ட பத்து வயது என்பதால், கொஞ்சம் புரிந்தும், புரியாமலும் இருந்தது.
அந்த சமயத்து நினைவுகளை இன்னும் அசை போடும் போது கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகளின் எச்சங்கள் மட்டும் இருக்கின்றன.

எங்கள் காம்பவுண்டுக்குள், பக்கத்து வீட்டுக்கு, ஒரு மனநோயாளி ஒருத்தரை கூட்டி வந்திருந்தனர்.(தஞ்சையில் ட்ரீட்மெண்டுக்கு என நினைக்கிறேன்) அவருக்கு, ஈ.எஸ்.பி இருந்த்து என்று நினைக்கிறேன். திடீரென, அந்த துணி தெக்கிற அம்மாவ.. கவனமாக இருக்க சொல்லுங்க.. அவங்க பையன், கிணத்துலே விழுந்து சாகப்போறான்’ அப்படின்னு கத்தினார். எங்களுக்கெல்லாம் ரொம்பவும் பயமாகி போய்விட்டது!

இன்னொரு நாள், ராதா.. நடு இரவில் கதவை திறந்து கொண்டு, நிலா வெளிச்சத்தில் தூக்கத்திலேயே எழுந்து போய்விட்டான். நாங்கள் எழுந்து அவனை தேடிப்போனபோது, மாமா கூப்பிட்டது போல இருந்தது, என சொன்னதாக ஞாபகம்!

எனக்கும் ஒரு நாள், அவன் நீர் சூழ்ந்த இடத்தில் இருந்தது போல, கனவு வந்தது. பார்த்துடா, ராதா.. பத்திரம், என்றேன். “அதெல்லாம் பயமே இல்லே.. நான் நீஞ்சி வந்துடுவேன்” என்றான் சவடாலாய் ராதா. எங்கள் இருவருக்குமே, நீச்சல் தெரியாது; அதை கற்றுக்கொள்ள வாய்ப்பும் கிட்டவில்லை!

எங்கள் காம்பவுண்டில் மனிதர்கள், குடிவந்த வண்ணமும், போன வண்ணமுமாய் இருப்பார்கள்; இந்த முறை, எங்கள் கே.ஹெ.ஸ் ஸ்கூலின் ட்ராயிங் வாத்தியார் கோவிந்த ராஜன் எங்கள் காம்பவுண்டுக்கே குடிமாறி வந்துவிட்டார். எனக்கு ஆறாம் வகுப்பில் ட்ராயிங் க்ளாஸில் பார்த்ததால் எனக்கு அவரை நன்றாக தெரியும். அவர் பாவம் ரொம்ப நல்லவர்; மனைவி ஒரு டைப் என்று நினைக்கிறேன். அவர் மகன், அவன் தான் கொஞ்சம் பைத்தியம்/கிறுக்கு மாதிரி!

கமல், தசாவதாரத்தில் ‘கெயாஸ் தியரி’ பற்றி சொல்லுவார்; பட்டாம் பூச்சியின் படபடப்பு, உலகத்தை சுற்றி புயலாக வருமென்று. அது போன்ற நிகழ்வு, எங்கள் வாழ்விலும் நடந்த்து; ஏன் நாங்கள் நாகையிலிருந்து.. தஞ்சை வந்தோம், ஆனந்தி அம்மா வீட்டின் பாம்புகளுக்கு தப்பித்து, மேல அலங்கம் மல்லிகை கொடி காம்பவுண்டுக்கு; ட்ராயிங் மாஸ்டர் குடும்பமும் ஏன் அங்கே வந்து சேர்ந்தது என்றெல்லாம் எண்ணி எண்ணி வேதனை படவைக்க, விதி 1975 டிசம்பர் மாதத்திற்காக காத்திருந்தது! :((((

தஞ்சையிலிருந்து தமாம் தொடரும்..

September 6, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 4)

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 4)
தமாம் பாலா

4. மணி அம்மா, யாரு தெரியுமா?

நீங்க தஞ்சாவூரா? நீங்க 70கள், 80களில் அங்கே வசிச்சவரா? உங்க அப்பாவுக்கு ஒரு சில கேள்விகள்.. நீங்களே அவர் சார்பா ஆன்ஸர் செய்யலாம்.

1. இவ்வளவு நாளா, தொசாம் புசாம்னு ட்ரெஸ் செய்த உங்க மனைவி/மகள், இப்போ கொஞ்ச நாளா, சிக்குன்னு, கச்சிதமா அந்த காலத்து சினிமா நடிகைகள் போல ஜாக்கெட் போடறாங்களா?
2. சாயந்தரம் நீங்க ஆபீஸ் விட்டு வீட்டுக்குள்ளே நுழையும் போது, வீடு முழுக்க வயர் கூடை பின்னும் ஒயர்கள் இறைஞ்சு கிடக்க, தாண்டி.. சர்க்கஸ் பண்ணி உள்ளே போகும் அனுபவம் உண்டா?
3. உங்க வீட்டு பெண்கள், மாச சாமான் லிஸ்டிலே, புதுசா.. வெங்கடாஜலபதி போடணும், துளசி மடம் போடணும், அதுக்கு ப்ளாஸ்டிக் மணி போடணும்னு 5ரூபா 10ரூபான்னு கேட்டு நச்சரிக்கிறாங்களா?

மேலே சொன்ன கேள்வியிலே எதாவது ரெண்டாவது ‘யெஸ்’ அப்படின்னா.. கைய குடுங்க. நீங்களும் எங்க ஏரியாதான்! இதுக்கெல்லாம் காரணம், ஒருத்தர், அவங்க பேரு.. மணி அம்மா! மணி அம்மா யாருன்னு தெரியணும்னா, முதலில்.. மணி யாருன்னு தெரியணும் இல்லையா? நான்தான்,மணி!! :))
அதனாலே எல்லோரும் அவங்களை கூப்பிடுறது, மணி அம்மான்னு!!

24 மணி நேரம் கூட பத்தாதுன்னு, வீடு,சமையல்,தையல்,கைவேலை அது இதுன்னு ரொம்ப பிசியா இருப்பாங்க. அவங்களுக்கு 17 வயசிலேயே நான் பொறந்துட்டேனாம்; அதனாலே என் பள்ளி வயசிலே அவங்கதான் இளமையான அம்மா! மூணாவது/நாலாவதா பொறந்ததுகள், அக்கா மாதிரி இருக்கிற, என் அம்மாவோட நான் வெளியிலே போகும்போது.. கொஞ்சம் பொறாமையா பார்க்கும் :))

தனியா அம்மா யார் வீட்டுக்காவது போனால், குழந்தை ஸ்கூல் விட்டு வந்துவிடுவான், போகணும் என்றால், “எல்கேஜியா, யூகேஜியா” என்பார்கள். “இல்லை டென்த்” என்றால் ஆச்சரியப்படுவார்கள்.
அம்மாவை பற்றி நினைக்கும் போது, அவரது கடின உழைப்பும், விடாமுயற்சியும், வாழ்க்கையில் அனுபவித்த கஷ்ட நஷ்டங்களும், எதிர்நீச்சலும் நினைவுக்கு வருகின்றன!

அம்மா, பிறந்த நாள்.. யாரும் எளிதில் மறக்க முடியாத ஒரு நாள்! காலையில் அம்மா, பிறந்திட மாலையில், ஒரு மாபெரும் மனிதரை, ஒரு மகாத்மாவை.. போட்டு தள்ளி விட்டார்கள்! நீங்க கெஸ் பண்ணியது கரெக்ட் தான். அந்த நாள் ஜனவரி 30, 1948; மகாத்மா காந்தி மறைந்த தினம்!

இளம்வயதிலேயே, அம்மாவின் அம்மா காலமாகி விட்டது, பின்னர் 8ம் வகுப்போடு பள்ளி படிப்பை நிறுத்தி விட்டது, பதினாறு வயசிலேயே கல்யாணமும் ஆகிவிட்டது; கிட்டதட்ட ஒரு சைல்ட் மேரேஜ்தான்!

அப்பா இரண்டாம் கல்யாணம் செய்த சின்னமாவின், சகோதரருக்கே வாழ்க்கைப்பட்டு, வசதிகள் குறைவோ, அதிகமோ.. நிறைவான, நிம்மதியான ஒரு வாழ்க்கை. 65ல் நான் பிறந்தேன்; 67ல் தம்பி பிறந்தான்.

அவன் பிறக்கும் போது, அம்மாவின் வாழ்வில் விதி மீண்டும் சதி செய்து விட்டது! குழந்தை வயிற்றில் இருந்த போது, டாக்டர் கொடுத்த தவறான மருந்தால், குழந்தைக்கு.. வயிற்றிலேயே.. கால் வளைந்து விட்டது! :-((( அம்மாவுக்கும், அப்போது வயது/விவரம் தெரியவில்லை, அப்போது ஏது ஸ்கேனும் வேறு வசதிகளும்?!!



அம்மா பள்ளி படிப்பில், கல்லூரி படிப்பில் சேர கொடுத்து வைக்கவில்லையே தவிர, வாழ்க்கை படிப்பை நிறுத்தவே இல்லை. தமிழில் வார சஞ்சிகைகளிலிருந்து, பொன்னியின் செல்வன், பிலோ இருதயநாத்தின் காட்டு அனுபவங்கள், அது இது என்று எதையாவது படித்துக்கொண்டே இருப்பார்கள். ஓய்வு ஒழிச்சல் இல்லாத தையல் வேலைகளால், அப்பாவுக்கும் ஒரு இன்விஸிபிள் சப்போர்ட்!

சின்ன வயதில், அம்மா என்றால் கொஞ்சம் டெரர்தான்! அச்சு பிச்சு என்று எதையாவது பேசி, செய்து அவ்வப்போது அடி வாங்கி இருக்கிறேன். இப்போது வயது ஆகிவிட்ட பின்னும் என்னிடம் பெரிய மாற்றம் எதுவுமில்லை; கண்டிக்கிற ஆள்தான் மாறிவிட்டது.. கை பிடித்தவளாக! :-)))

பள்ளி நாட்களில், அம்மாவுக்கு ஹாபி பர்சேஸ் அஸிஸ்டண்ட், நான்தான்! பொடிநடையாக போய், மல்லிகா ஃபேன்ஸியில் ஸ்பேட் நூல்கண்டு, ஊசி, மணி, நரம்பு (ஒயர்) வாங்கி வந்தால் 10 பைசாவிலிருந்து 25 பைசா வரை கமிஷன் கிடைக்கும்; அந்த காலத்தில் பெரிய தொகை அது! :)))

அம்மாவின் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும்.. தம்பியின் கால்வளைந்ததை சரிசெய்ய ஆப்பரேஷனுக்கு, நாகப்பட்டினத்திலிருந்து தஞ்சைக்கு அலைந்ததில் நான் அறிந்திருக்கிறேன். அதனாலேயே நாங்கள் 1970 வாக்கில் தஞ்சைக்கு இடம் பெயர்ந்தோம். 80களின் இறுதியில் அப்பாவுக்கு உடல்நலம் கெட்ட போதும், அம்மாவின் எண்ட்யூரன்ஸை பார்த்து, வருத்த்த்தோடு வியந்திருக்கிறேன்.

25 ஆண்டுகளுக்கு முன், 75ரூபாய் கொடுத்து அம்மா, ஒரு கம்பெனியின் ஷேரில் இன்வெஸ்ட் செய்தார்கள். அந்த ஷேர்தான், இப்போது அவர்களுக்கு டிவிடெண்ட் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அது என்ன கம்பெனி, என்று இந்த பதிவின் இறுதியில் சொல்கின்றேன்!

அம்மாவின் பொறுமை, யாரும் தவறாக புரிந்து கொண்டு, வம்புக்கு வந்தாலும் பதிலுக்கு சண்டை போடாமல் இருக்கும் குணம் கொஞ்சம் கர்வம் போலவும், கோழைத்தனம் போல தோன்றினாலும், காலப்போக்கில் அவர் நல்ல குணத்தை புரிந்து கொண்டு நண்பர்கள் ஆகிவிடுவர்.

அம்மாவின் வாசிப்பு, எனக்கு சின்னவயதிலேயே படிக்கும் வழக்கத்தை தந்தது. அவரது எப்பொழுதும் கண்ணியமாக உடை உடுத்தும் பாங்கு, அனைவரையும் கவர்ந்த ஒன்று. வெயில் காலத்தில் இராத்திரி பகலாய் உழைக்கும் அம்மா, குளிர்காலத்தில், ஆஸ்துமா வந்து துவண்டுவிடுவார்; இரவெல்லாம், மூச்சு திணறலும், டெஸ்க் மேல் சாய்ந்து கொண்டும் போகும்..

அம்மா படிக்காத்தெல்லாம், நான் படிக்க வேண்டும் என கனவு கண்டார்; அது ஓரளவு நிறைவேறியும் விட்டது என்றே சொல்ல வேண்டும். அதிலும், நான் பள்ளி இறுதி முடித்ததும், கல்லூரி படிப்பு விஷயத்தில், அப்பாவே சற்று மிரண்டு விட்ட போதிலும், அம்மா.. மன உறுதியுடன் போராடி, எனக்காக வாதாடி, என் தாய் வழித்தாத்தாவிடம் (அவர் பற்றி கூட ஒரு பதிவு போட்டிருக்கிறேன்) உதவி பெற்று நான் மேலே படிக்க வழி செய்தார்; அந்த படிப்பை நான் முடிக்கும் முன் வந்த சோதனைகளை தனி ஒரு மனுஷியாக முறியடித்தார்.


17 வருடம் அம்மாவுடன் வாசம், கல்லூரி படிப்புக்காக வந்த பின் 7 வருடம் பிரிவு, பின் 7 வருடம் சேர்ந்து இருந்தபின், இப்போது 13 வருடத்துக்கு மேல் சவுதியில் வசிப்பதால், அம்மாவுடன் வருடத்துக்கு ஒரு முறைதான் சந்திப்பு. அம்மாவும், 60 வயதை அடைந்து.. மகனுக்கான கடமைகளை முடித்த் திருப்தியில் சென்னையில் வசிக்கிறார்; நாங்கள் எல்லோரும் வேலை,வேலை என்று அலையும் இந்த காலத்தில், அம்மாவுக்கு துணை.. புத்தகங்களும், அவரது மருந்துகளும் தான்!


பதிவை முடிக்கும் முன், நான் வாக்குறுதி கொடுத்தபடி, அம்மா.. 25 வருடம் முன்பு. ரூ 75 கொடுத்து இன்வெஸ்ட் செய்த ஷேர்.. அடியேன் தான்!! :-))) அவர் வாங்கி கொடுத்தது, எனது காலேஜ் அப்ளிகேஷன் ஃபார்ம்!

தஞ்சையிலிருந்து தமாம் தொடரும்...

September 4, 2008

துளசி மேடத்துக்காக ஒரு பதிவு..


ஹாய்.. நான்தான் டைனோ.. என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா? :)))


துளசி மேடத்துக்காக ஒரு பதிவு..
(தமாம் பாலா)

உயிர்களிடத்தில் அன்பு செலுத்தல் வேண்டும் என்பதை ப்ராக்டிகலாக, துளசி மேடம் போடும் 'கோபாலகிருஷ்ண பூனையார்' பற்றிய பதிவுகளில் காணலாம். நமக்கும் பிராணிகளுக்கும், ஏழாம் பொருத்தம்; பார்த்தாலேயே பயந்துவிடும் ஜாதகம்.. :-)) என்னைப்பார்த்து.. பிராணிகள், அல்ல.. பிராணிகளை பார்த்து.. அடியேன்!

விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருக்கும், குழந்தைகள்.. புதிதாக டைனோ என்று நாய்க்குட்டியை பிடித்திருக்கிறோம் என்றதும், என் விடுமுறையையே 'கேன்சல்' பண்ணிவிடுவது உத்தமம் என்றுதான் முதலில் தோன்றியது.. எதுக்கும் போய் பார்க்கலாம் என்று துணிவை(?!) திரட்டிக்கொண்டு வந்து விட்டேன்.

இன்று காலை, சென்னைக்கு வந்த பிறகு, வீட்டில்.. விசேஷ வரவேற்பு, மனைவி/குழந்தைகளிடம் இருந்து அல்ல.. டைனோவிடமிருந்து! அவள் ஒரு ரெண்டுமாத குட்டியாமே? குழந்தை போல.. அப்படி ஒரு அழகு, அன்பு ரொம்ப நாள் பழகியது போல் ஒட்டிக்கொண்டு விட்டாள்! வேத்துமுகம் குழந்தைகளுக்கு கிடையாது என்பார்கள்; சுலபமாக எல்லோரிடமும் ஒட்டிக்கொண்டு விடும்; அந்த விஷயத்தில், டைனோவும்.. தான் ஒரு குழந்தைதான் என்று நிரூபித்து விட்டது!

உங்களுக்காக, குறிப்பாக துளசி மேடத்துக்காக.. டைனோவின் புகைப்படம் மேலே!






September 1, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 3)

தமாம் பாலா
3. கொஞ்சம்.. அப்பா புராணம்!
டில்லிக்கு ராஜா, தல்லிக்கு பிட்ட.. என்பார்கள் தெலுங்கில். தகப்பன் என்பவர் வீட்டுக்கு வெளியே என்ன வேலை பார்த்தாலும், வீட்டில் அவர் தான் ராஜா. பிள்ளைகளுக்கு அவர்தான் ரோல் மாடல்.

இப்போ, எங்க அப்பாவை பற்றி கொஞ்சம் பார்போமா? ரோஸ் கலர், என்றால் அப்படி ஒரு ரோஸ் கலர். எம்.ஜி.ஆர் மாதிரி. நல்ல ஒரு கமலா ஆரஞ்சு பழத்தின் தோலில் உள்ள செல்ஃப் டிசைன் புள்ளிகள் போல சருமம், பெண்களும் பொறமைப்படக்கூடிய அழகிய பெரிய கண்கள்/புருவம், பெரிய கோயில் சிற்பம் போன்ற மூக்கு, தாடி/மீசை இல்லாமல் மழமழவென்று ஷேவ் செய்த முகம். ரொம்பவும் தான் நிதானஸ்தர்; பொறுமை, பொறுமை அப்படி ஒரு பொறுமை.. முகத்தில் நிரந்தரமாக தேங்கிய ஒரு புன்சிரிப்பு!

காலையில் சீக்கிரம் எழும் வழக்கம் உண்டா உங்களுக்கு? அப்போது அவசியம் அவரை நீங்கள் பார்த்திருக்க கூடும். காலை ஆறு மணிக்கு, வேஷ்டியை டப்பா கட்டு கட்டிக்கொண்டு, நாலுகால் மண்டபம், காசுகடைத்தெரு, தாஸ்ராவ் கடை மற்றும் போஸ்ட் ஆபிஸ் தாண்டி காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு செல்வார். கடைகளையெல்லாம் சுற்றி, காய்கறிகளை நோட்டம் விட்டு, வழக்கமான கடையில் வந்து, நல்ல தரமான கத்திரிக்காயை, காசு பார்க்காமல் வாங்குவார். காய்கறிகாரியிடம், பூக்காரியிடம் பேரம் பேசக்கூடாது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார்.


பத்து மணிக்கு எல்.ஐ.சி ஆபீஸ்; மதியானம் வீட்டுக்கு வருவது இல்லை; மாலை டாண் என்று ஐந்து மணிக்கு கிளம்பி, வீட்டுக்கு வந்து விடுவார். வெறுங்கையோடு அல்ல, விதவிதமாக தீனிகளோடு! வெள்ளரி பிஞ்சு, மாம்பழம், வாழைப்பழம், கொய்யா பழம் என்று சீசனுக்கு ஏற்றமாதிரி. சம்பள நாட்களில், பாம்பே ஸ்வீட்ஸ் ஸ்பெஷல் ட்ரை குலோப்ஜானும் உண்டு. நீறு பூத்த சர்க்கரை நெருப்பாக, வாயில் கரையும் அது!


மாலை முடிந்தும் பை எடுத்துக்கொண்டு, இரவு உலா மார்க்கெட்டுக்கு.. இந்த முறை புண்ணிய மூர்த்தி கடை, உப்பு, புளி சாமான் என்று தீரதீர பார்த்து பார்த்து வாங்குவார். அதிகம் நண்பர்கள் கிடையாது, தத்துவ விசாரங்கள் கிடையாது, புத்தகங்கள் படித்து பார்த்ததாகவும் எனக்கு நினைவும் இல்லை. வீடு, ஆபிஸ், வீடு, வீட்டின் தேவைகள், பண்டிகைகள், ஆபிஸ் அட்வான்ஸ், கடன், வட்டி என்று ஒரு தீர்க்கமான வட்டம், திருப்தியான வாழ்க்கை!


கையில் பணம் இருக்கிறதோ, இல்லையோ.. சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை; கஞ்சத்தனம் கொஞ்சமுமில்லை. அவ்வப்போது, எம்.ஜி.ஆர் படம் பார்ப்பார், எங்களையும் அழைத்துக்கொண்டு போவார். சிவாஜி படம், ஊஹூம்; நோ! வாழ்க்கையிலேயே நிறைய பிரச்சனை, அழுது வடியிறோம், அதுலே காசு குடுத்து வேறே அழணுமா? என்பார். கலைஞர் மீட்டிங்கில், திலகர் திடலில் கண்டிப்பாக அவரை பார்க்கலாம்.


தீபாவளிக்கு துணி வாங்க போவதே, ஒரு பெரிய ரிச்சுவல் போல இருக்கும். ரொம்ப தூரம் நடந்து, கீழ வாசல் போவோம். துணியெல்லாம் பார்ப்போம், வழக்கமான கடையிலேதான். எல்லாம் தேர்ந்தெடுத்து பில் போடப்போகும் போதுதான், ரகளை ஆரம்பமாகும். கடைக்காரர் ஒரு விலை சொல்வார்; அப்பாவும் சிரித்துக்கொண்டே, நாம் கேட்கவும் பயப்படக்கூடிய ஒரு குறைந்த விலை கேட்பார். பேரம் முடியாது, அப்பா கூலாக, சிரிப்பு மாறாத முகத்துடன் எங்களை அழைத்துக்கொண்டு கடையை விட்டு வருவார். கடைக்காரர், பின்னாலேயே வந்து, அப்பா கேட்ட விலைக்கே எடுத்துக்கொள்ள சொல்வார்; இது ஒவ்வொரு வருஷமும் நாங்கள் பார்க்கும்.. அதே நாடகம்! :))


தப்பித்தவறி, என்றாவது ஒரு நாள் நம்மை கடைக்கு அனுப்பினால், ஒரு நாற்பது பக்க நோட்புக் அளவுக்கு.. இன்ஸ்ட்ரக்ஷன் கொடுப்பார். “நீ.. இப்போ கடைக்கு போற..” “போய், கடைக்காரன் கிட்டே.. என்ன கேட்பே? சொல்லு!” கடைக்கு போவதை விட ஸ்பூன் ஃபீடிங் பேஜாராக்கி விடும் என்னை. அப்போது, அவரிடம் முறைத்துக்கொண்டே போய், மார்க்கெட்டில் பணத்தை தொலைத்து முகத்தில் கரி பூசிக்கொண்டதும் உண்டு; அதையும் பெருந்தன்மையோடு மன்னித்து விட்டு விட்டார், அடி உதை இல்லாமல்!!

குழந்தைகள் அவரிடம் ஆசையாக வந்துவிடும்; க்ரீன் பெல்ட் கதை, சின்னவயதில்.. அணாக்கணக்கில் செலவு செய்து ஓலைபட்டாசு வாங்கியது, தின்பண்டம் வாங்கியது, புதுக்கோட்டை பக்கத்து காடுகளுக்கு போனது, (நரி, ஒன் பாத்ரூம் போய்விட்டு.. பரபரவென மண்ணை தூற்றுமாம்..) உப்புமாவுக்கு பூவரச இலை பறிக்க கிணற்று கைப்பிடி சுவரில் ஏறி, கீழே விழுந்து கையை உடைத்து கொண்டது, மிலிட்டரி ட்ரைனிங் எடுத்துக்கொண்டது, என பல விஷயங்களை கதை போல சொல்வார், அப்பா!


எங்கே போனாலும், அவரது களங்கமில்லா முகத்தை பார்த்து, மரியாதை தருவார்கள்; ஒரு நாள், சைக்கிள்காரன் ஒருத்தன் கூட அவர் மீது மோதிவிட்டு, “சார்.. நீங்க பெரிய (?!) ஆபிஸரா, இருக்கலாம், அதுக்காக என் வண்டியிலே வந்து விழணுமா?!?” என்று அவரை பாராட்டி விட்டு சென்றானாம்.. :-)


நண்பர்கள், வீட்டுக்கு வந்தாலும், ரொம்ப நேரம் ஆகி விட்டால்.. ரொம்ப நாசுக்காக, நீங்களும் படிக்கணும்/ அவனும் படிக்கணும் இல்லையா, என்று கன்க்ளூட் செய்வார். படித்தது எஸ்.எல்.சி தான் என்றாலும் (அதுவே அவர் அப்பா போனதால் தடைபட்டு, முப்பதுக்கும் மேல்தான் முடித்தார்) அழகான ஆங்கிலத்தில்.. “எவரிதிங் இன் எ ப்ளேஸ்- எ ப்ளேஸ் ஃபார் எவ்வரிதிங், ச்சாரிடி பிகின்ஸ் அட் ஹோம், ஹானஸ்டி இஸ் த பெஸ்ட் பாலிசி’ அது இதுவென்று, சமயத்துக்கு தகுந்த மாதிரி,பொன்மொழிகளை எடுத்து விடுவார்!


மாலையில் அவர் வருவதற்கு, பத்து நிமிடம் அதிகமாக ஆகிவிட்டாலும், பயந்து போய் விடுவோம் நாங்கள்; ஆக்ஸிடெண்ட் ஏதும் ஆகிவிட்டதோ, என்னவோ ஏதோ என்று. அப்பா புண்ணியத்தில், பதினாறு/பதினேழு வயதுவரை வெளியுலகமே தெரிந்ததில்லை; ஒரு பேங்க் ஃபார்ம் ஃபில் அப் செய்ய கூட தெரியாது எனக்கு. படிப்பதும்,புசிப்பதும் மட்டுமே வேலை. இப்போது யோசித்து பார்க்கும்போது தான், அவரது அலுவலக முத்திரை (எம்பளம்) போல, கைகளில் வைத்து காத்திருக்கிறார் என்று புரிகின்றது.


நடக்கப்போகும் விஷயம் எல்லாவற்றையும் ஒரு ‘குண்ஸாகவே’ யூகித்து சொல்லி விடுவார். புதிதாக ஒருத்தனை பார்த்தாலும், “அவன் பார்வை சரியில்லே, நம்பகூடாது” என்பார். சும்மா அபாண்டமா ஒருத்தர் மேலே, ஆதாரம் இல்லாமே, பழி சொல்லாதீங்க என்று, சண்டை பிடிப்போம்; கடைசியில், அவர் சொன்னது போலவே, ஹீரோ.. வில்லன் ஆகி சாயம் வெளுத்து விடுவான், நாங்கள் வழக்கம் போலவே ஆச்சரியப்படுவோம். வெய்யில் கொளுத்தும் வெளியில்.. சாய்ங்காலம் மழை வரும், குடை எடுத்துகொண்டு போ என்பார்; காதில் போட்டுகொள்ளாமல் போய்விட்டு, நனைந்து கொண்டு வீடு திரும்புவோம்!


பள்ளி நாட்கள் முடிந்த பின், கல்லூரிக்கு கோவை சென்றுவிட்டதால், அப்பாவை லீவுக்கு லீவுதான் பார்க்க முடிந்தது; அவரைப்பற்றிய கணிப்பும், மரியாதையும் உயர்ந்தது. அவருக்கும் மகன் படிக்கிறான் என்று அலுவலகத்திலும், சமுதாயத்திலும் ஒரு புதிய கௌரவம், அந்தஸ்து கிடைத்தது. இப்படிப்பட்ட அப்பா, காலமெல்லாம் கூடவே இருந்து வழிகாட்டுவார் என்று தானே நினைக்க தோன்றும்? நானும் கூட.. அப்படித்தான் நினைத்தேன்; ஆனால் விதி வேறு விதமாக இருந்தது! :-(((


இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதெல்லாம், அப்பா பற்றி.. என் மனதில் எஞ்சியுள்ள.. இருபது ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்வுகளின் நினைவுகள் மட்டுமே!
உங்கள் யாரிடமாவது, டைம் மிஷின் இருந்தால், சொல்லுங்கள்.. நானும் நீங்களும் அதில் ஏறி 1980களுக்கு போகலாம்... தூரத்தில் அப்பா.. மாலையில் மணிக்கூண்டு, சிங்க ஆர்ச்/பஸ் ஸ்டாண்டு தாண்டி.. ஆபிஸ் ஆஸ்தான சப்ளையர் நாகராஜன் போட்ட ‘அடை அவியலை, சுடச்சுட’ கையில் எடுத்துக் கொண்டு வருவது தெரிகிறதல்லவா..? அதில் உங்களுக்கும் கொஞ்சம் கொடுக்க சொல்லி ரெக்கமண்ட் செய்கிறேன்; ஆனால் அவர் கையில் இருக்கும் ‘துப்பறியும் சாம்பு’ புக்கை நீங்கள் கேட்டால்.. ரொம்ப சாரி.. அதை என்னாலே தரமுடியாது.. ஏன்னா.. ஆபிஸ் லைப்ரரி புக்கை சர்க்குலேஷனுக்கு விட்றது.. எங்க அப்பாவுக்கு பிடிக்காத விஷயம் !!!!


-தஞ்சையிலிருந்து தமாம் வரை தொடரும்..

August 31, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 2)

(தமாம் பாலா)
2. கொங்கணேஸ்வரா ஸ்கூல் நினைவுகள்..

வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிறது என்றோ, வேறு ஒரு காரணத்துக்கோ இந்த பள்ளிக்கு மாற்றி விட்டார்கள் என்னை. மேலவீதியின் மத்தியிலே, சகாநாயக்கன் தெருவும் மேலவீதியும் சந்திக்கும் முனையிலே இருப்பது.. கொங்கணேஸ்வரர் கோயில். அந்த கோயிலின், வெளி பிரகாரத்திலே தான், எங்கள் பள்ளிக்கூடம். வேறு எங்கும் இது போல கோயில் பள்ளிக்கூடம் இருக்கின்றதா என்று தெரியவில்லை. பள்ளிக்கூடம், விளையாட்டுக்கு கிரவுண்டு எல்லாமே கோயில் பிரகாரம் தான்.

இந்த காலத்து பிள்ளைகள் போல ‘இடமாற்றத்தின் மன அழுத்தங்களோ’ ‘மூட் அவுட்டோ’ அன்று இருந்ததில்லை. கிட்டத்தட்ட, இடமாறிய ஆட்டுக்கொட்டில் ஆடு போல ‘டேக் இட் ஈஸி பாலிசி தான்’ மூன்றாம் வகுப்பு நினைவுகள் அதிகமாக இல்லை. நான்காம் வகுப்பில் ‘கந்தசாமி வாத்தியார்’ வந்து சேர்ந்தார். கறுப்பிலும் களையான முகம்; ஒளிரும் கண்களும், முன் தலைமுடி சுருளும், வசீகர புன்னகையுடன் பாடம் நடத்தும் அழகே, அழகு! அதே கந்தசாமி வாத்தியார், பல வருடங்களுக்கு பின், கல்யாணம் பண்ணி.. பிள்ளைகள் பெற்று.. கொஞ்சம் ‘டொக்கு’ மாதிரி ஆகிவிட்டார்; எல்லாம் காலமும், வாழ்க்கைக்கு தரும் விலையும் செய்யும் கோலம் போல!

ஐந்தாம் வகுப்பில், விநாயகராவ் வாத்தியார் வகுப்பு. அவருக்கும் கிட்டத்தட்ட ஓய்வு பெறும் வயது, அவரும் அவர் தம்பியும் கூட அந்த வயதிலும் பிரம்மச்சாரிகள் என்று ஞாபகம். “நல்ல மதிப்பெண் பெறும் மாணவனுக்கு, இந்த பேனாவை தருவேன்” என்று அடிக்கடி எடுத்து, காட்டுவார்.. வகுப்பில்.. அதே போல நான் மார்க்கு வாங்கிவிட்டேன்; ஆனால் அவரோ தருவதாகவே தெரியவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்து விட்டு.. “ஒரு நாள் போய், நீங்க சொன்ன மாதிரி, எனக்கு..பேனா குடுக்கறீங்களா சார்?” என்று வாய்விட்டே கேட்டு விட்டேன். அவர் பாவம், சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லியிருப்பார் போல..

நான் கேட்ட கேள்விக்கு.. “ராஜ்ஜியத்தில் பாதியையும், இளவரசியையும்.. கொடுங்கள் மன்னா” என்று நான் கேட்டது போல, ஒரு ‘அடிப்பட்ட பார்வை’ பார்த்தார்! கடைசி வரை பேனா தரவே இல்லை :( அப்போது, புரியவில்லை; வாத்தியாருக்கு கிடைப்பது இலவச சல்யூட்டும், வெற்று மரியாதை மட்டுமே, சில்லறை அல்ல என்று, எனக்கு!

பள்ளியிலே நாங்கள் பெரும்பாலானோர், கும்பலோடு கும்பலாக ‘எக்ஸ்ட்ரா நடிகர்கள்’ போல வந்து போவோம். சில பேர், இந்த கால ஹீரோயின்கள் போல, அம்மாவுடன் வருவார்கள். அதிலும் ராஜா என்று ஒரு பையன் இருந்தான்; ஸ்கூல் நடக்கும் போதே, அம்மாவும் அப்பாவும் அடிக்கடி அவனை பார்க்க வருவார்கள்; அவ்வப்பொது ஹார்லிக்ஸ் அது இது என அவர்கள் உபசாரமும் நடக்கும். ஒரு நாள், அந்த பையன் ராஜா, ஐயங்குளத்தில் விழுந்து இறந்து விட்டான் என்று தெரிந்தபோது, மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது; பாவம், மிகவும் போற்றி வளர்த்த பையன் :-(((

தஞ்சாவூரில், குளங்களும், அகழிகளும் ஜாஸ்தி; தஞ்சாவூர்காரர்கள் நிறைய பேர் வாழ்க்கையிலே அவற்றின் கோர நிழலும், சோக பதிவுகளும் இருக்கும். எங்கள் வாழ்விலும் அது விளையாடி விட்டது;அது பற்றி, இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

கொங்கணேஸ்வரா பள்ளியில் ஜானகிராமன் என்று ஒரு தலைமை ஆசிரியர் இருந்தார். நரைத்த தலையும், தாடியுமாக சிரித்த முகத்துடன் ஓடி ஓடி வேலை செய்வார். ஐந்தாம் வகுப்புக்கு மேல் கொங்கணேஸ்வரா பள்ளியில் வகுப்புகள் இல்லாததால், ஆறாம் வகுப்புக்கு எங்கள் அனைவரையும் அணிவகுத்து நடத்திச்சென்று.. சகாநாயக்கன் தெருவில் இருக்கும் கல்யாணசுந்தரம் உயர்நிலைப்பள்ளியில் சேர்த்து விட்டார், அந்த புண்ணியவான்! :)))

பள்ளி பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்; வீட்டுக்கும் போய் வரலாமா? கொங்கணேஸ்வரா பள்ளிக்கு பக்கத்து தெருவில் நுழைந்து சுமார் ஒரு பர்லாங்க் நடந்தால், முருகன் ஆசிரமம் வரும், இடது புறம் திரும்பினால், காளி கோயில் முதலில், அதன் பிறகு மேல அலங்கம் ஆரம்பம்!

தெருவின் இடது புறமெல்லாம் வீடுகள்; வலது பக்கத்தில், உயர்ந்த.. கோட்டை மேடு மட்டுமே. எங்கள் குடியிருப்பு அந்த தெருவில், நான்காவது அல்லது ஐந்தாவது என நினைக்கிறேன். எங்கள் காம்பவுண்டுக்கு முதல் வீடாக, ஒரு பெரிய மாளிகை போன்ற வீடு இருந்தது. அதில் ஒரு போலீஸ் அல்லது சிஐடி ஆபீஸ் இருந்தது; பின்னர் தான் அந்த வீட்டில் டாக்டர் மாமா குடும்பத்தினர் வந்தனர். மாமா என்றால், சொந்தம் என்று அர்த்தம் இல்லை; அக்கம் பக்கம் அனைவருமே, மாமா/அத்தை தானே? :-))
எங்களுக்கு அடுத்த வீட்டில், எல்.வெங்கடேச ஐயங்கார் என்று ஒரு பாகவதர் இருந்தார்; பெண் போன்ற அழகான கூந்தலை முடித்து ஹார்மோனியம் வைத்து கர்நாடக சங்கீதம் பயிற்சி செய்த படி இருப்பார். மாமி, பெரிய குங்கும பொட்டு வைத்து (டேஞ்சர் சிக்னல்?!) சிரித்த முகமாக இருப்பார். அவர்கள் வீட்டில் அண்ணன்கள், ஒரு அக்கா என்று நினைக்கிறேன்; என் பெஸ்ட் ஃப்ரெண்டு முரளியும் அங்கே தான் இருந்தான், பின்னால் ஹைதராபாத்தில் அம்மா அப்பாவிடம் போய் விட்டான்!

இப்போது, எங்கள் வீட்டிற்கு வருவோம். அந்த காம்பவுண்ட் முன்பகுதி திறந்த வெளியாக, செடி கொடிகளுடன் இருக்கும். நுழைவாயிலில் மல்லிகை கொடி ஆர்ச். அந்த திறந்த வெளியிலே ஒரே ஒரு அவுட் ஹவுஸ் இருக்கும். அதிலே ஒரு அம்மாவும் மகளும் மாத்திரம் வசித்தனர். மகளை, நாங்கள் அத்தாச்சி என்போம்; தஞ்சை மத்திய நூலகத்தில் பெண்கள்/குழந்தைகள் பிரிவில் வேலை செய்ததால், எங்களை அடிக்கடி அங்கு அழைத்துச்செல்வார், புத்தகம் படிக்கும் வழக்கமும் வந்தது, அதனால். அத்தாச்சியின் அம்மாவுக்கு, அடிக்கடி வலிப்பு வந்து, பல்லு கிட்டி விடும்; எல்லோரும் போய் முதல் உதவி செய்வார்கள்!

இப்போது, உள் வாயிலை தாண்டி போனால், இடது புறத்தில் மூன்று வீடுகள்.. வலது புறத்தில் ‘ட வடிவில்’ இன்னொரு வீடு.. ட வடிவத்துக்குள், பெரிய சிமெண்டு தளம்! அந்த காம்பவுண்டுக்குள்ளேயே இரண்டு முறை வீடு மாறிவிட்டோம். மாலை வேளையிலே நானும் நண்பன் உமா சங்கரும், மல்லிகை காம்பவுண்டின், துணி துவைக்கும் கல்லின் மேல் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருப்போம்; சாக்லேட் பேப்பர் எல்லாம் சேகரித்து, கடையில் கொடுத்தால், பேனா கொடுப்பார்கள் என்று கதை விட்டுக்கொண்டிருப்பான், நானும் ஆவென்று வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருப்பேன்..

மாலை நேரத்தில், வீதியே களை கட்டிவிடும். கிரிக்கெட்டு, பம்பரம், கோலிகுண்டு, கிட்டிபுள் என்று சீசனுக்கு சீசன் பயல்கள் தெருப்புழுதியிலேயே திரிவார்கள். எப்போதாவது அப்பா கூட கிரிக்கெட்டில் கலந்து கொண்டு பவுல் செய்வார். எங்கள் காம்பவுண்டுக்குள் ராமமூர்த்தி மாமாவும், புனிதா அக்காவும் புதிதாக கல்யாணம் ஆகி குடிவந்தனர். அக்காவுக்கு கொஞ்சம் கிராமத்து களையோடு, மஞ்சள் பூசிய முகம். ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு போன போது.. முட்டையை உடைத்து வாயில் ஊற்றி விட்டார்! அதுவும் நன்றாகத்தான் இருந்தது. அக்கம் பக்கம் இருந்தவர்களுடன் அம்மா,அப்பாவுக்கு நல்ல நட்பும், பழக்கமும் இருந்தது. இன்றைய சென்னை ஃப்ளாட்டுகளில், பக்கதில் இருப்பவர் யார் என்றே தெரியாத தீவு வாழ்க்கை, அன்று இல்லை அங்கே. மாலை,இரவு வந்து விட்டால், இரவு நிலவு ஒளியில் பெரியவர்கள் செஸ் விளையாடுவார்கள்; வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம்.

பள்ளியில் இருந்து வரும்போது, அணில், முயல் என்று சிறுவர் பத்திரிக்கைகள் வாங்கி மகிழ்வோம். ரத்தம் குடிக்கும் மனிதர்கள் என்று ஒரு திகில் கதை கூட முயலில் படித்த ஞாபகம். முத்துகாமிக்ஸ், இரும்புக்கை மாயாவியும் அதில் சேர்த்தி.

பக்கத்து வீட்டு, அண்ணனோடு, சிவகங்கை பூங்கா சென்று, பெரிய மனிதன் போல திறந்திருக்கும் எலெக்ட்ரிக் கம்பத்தையெல்லாம் பார்த்து கமெண்ட் அடித்து, கவனக்குறைவாய் ஊஞ்சலில் அடிபட்டு, ராசா மிராஸ்தார் மருத்துவமனை தாமஸ் ஹாலில், க்ளோரஃபார்ம் வாசத்தில், கன்னத்தில் தையல் போட்டுக்கொண்ட அனுபவமும் கிடைத்தது எனக்கு நாலாம் வகுப்பில்; முகம் கொஞ்ச நாளுக்கு அனுமார் போல தமாஷாக ஆகிவிட்டது அப்போது!

பைத்தியக்காரர்கள் போல தெருத்தெருவாக, சிகரெட் அட்டைகள் பொறுக்கி, காலி பெட்டிகளை கடையில் 10-20 பைசாவுக்கு வாங்கி வருவோம். சிசர்ஸ்,வில்ஸ்,சார்மினார்,பாஸிங் ஷோ என்று பல ப்ராண்டுகள். வீடு முழுவதும் பாம்பு போல வளைந்து வளைந்து பெட்டிகளை நிறுத்தி விட்டு.. முதல் பெட்டியை தள்ளி விட்டால்.. “அபூர்வசகோதரகள் குள்ள கமல் செய்யும் செயின் ரியாக்ஷன் போல’ அழகாக பெட்டிகள், விழும்; திரும்ப அடுக்கி, திரும்ப தள்ளிவிட்டு.. நாளெல்லாம் ஒரே பிசியாக இருக்கும்! :-))

காளிகோயில் பக்கத்து பிள்ளையார் கோயிலில், ‘பிள்ளையார் பிள்ளையார்.. பெருமை வாய்ந்த பிள்ளையார்” என்று பாடி, பொறிகடலை வாங்குவோம். முருகன் ஆசிரமத்துக்கு வருகை தரும் வாரியார், மதுரை சோமுவை வேடிக்கை பார்த்து வருவோம்; “மருதமலை மாமணியே, பாடுறீங்களா, ஐயா?.. சாயந்தரம் பாடுவேன் தம்பி, எல்லாரும் வரும்போது, அப்போ வந்து பாருங்க”

அன்பான அப்பா, அறிவான அம்மா, அழகான தம்பி என்று வாழ்க்கை, ஒரு தெளிந்த நீரோடை போல, இனிதாக, இன்பமாக, இசைவாக சென்று கொண்டிருந்தது.. கடலில் மிதக்கும் கப்பல் போல, காற்றில் மிதக்கும் பறவை போல வாழ்க்கை முழுவதுமே, சந்தோஷமாக போய்விடுகிறதா, என்ன? அவ்வப்போது, புயலும் வீசும் அல்லவா? எங்கள் வாழ்விலும் அப்படி ஒரு புயல் வீசியது.. அதைப்பற்றி, விரைவில் எழுதுகிறேன், நண்பர்களே!


-தஞ்சையிலிருந்து தமாம் வரை தொடரும்..

August 30, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 1)

தஞ்சையிலிருந்து தமாம் வரை...
(தமாம் பாலா)

1. ராணி வாய்க்கால் ஸ்கூல் நினைவுகள்..
சேரனின் ஆட்டோகிராப் படமும், ஞாபகம் வருதே பாடலும் நமக்கு பழைய நினைவுகளை மீட்டுத்தருபவை. சமீபத்தில் வந்த, தங்கர் பச்சனின் பள்ளிக்கூடம் திரைப்படமும் அதே வகை தான்.

வலைபதிவாளர்களில், எனக்குத் தெரிந்த வரையில் துளசி டீச்சரும், ராமலக்ஷ்மியும் தங்களது பள்ளி நாட்களை மிக அழகாக நினைவு கூர்ந்து எழுதியிருக்கின்றனர்.

நேற்று காலை என்ன சாப்பிட்டோம், போனவாரம் எங்கு போனோம் என்பதெல்லாம் மறந்து விடுகிறது இந்த நாற்பதுகளின் தொடக்கத்தில்; ஆனால், பள்ளிக்கூட கால நினைவுகள் மட்டும் பல்லில் சிக்கிய உணவு துகள் போல, உறுத்திக்கொண்டே இருக்கிறது.. மனதில் பசுமையாக!

எனது பள்ளி நாட்களில், ரொம்ப சுவாரசியமாக எதுவும் நடந்துவிடவில்லை. இருந்தாலும் இப்போது நினைத்து பார்க்கையில், விரல் விட்டு எண்ணும் சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன..

அது 1970ம் வருடம். இப்போது போல பெற்றோர்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்க, முட்டி மோதி.. விண்ணப்ப படிவத்துக்கே தேவுடு காக்க வேண்டிய நிலை இருக்கவில்லை.

அப்பா அலுவலகம் போய்விட, பக்கத்து வீட்டு தாத்தா ஒருத்தர் ஸ்கூலில் சேர்த்து விட்ட நினைவு. எல்கேஜி/ யூகேஜி எல்லாம் இல்லை.. நேரடியாக முதல் வகுப்புதான். சேர்ந்த பள்ளிதான், ராணிவாய்க்கால் பள்ளிகூடம். பெயரே ஒரு ராஜா காலத்தை நினைவுபடுத்துகிறது அல்லவா? உண்மையில் அங்கு ராணியும் இல்லை, வாய்க்காலும் இல்லை; அங்கு பக்கத்தில் இருந்ததெல்லாம், பெரிய.. வாய்க்கால் போன்ற சாக்கடைதான்! :)) நம் தஞ்சாவூர்தான், சந்துகளுக்கும், சாக்கடைகளுக்கும் உலகப்பிரசித்தி பெற்றதாயிற்றே!

பள்ளிக்கூடத்திலே, சகுந்தலா டீச்சர் க்ளாஸ். அவர் புதிதாக ஆசிரியர் பணியில் சேர்ந்தவர் போல; அன்பும், ஆர்வமும் குறையாமல் இருந்தார். பாடமும் நடக்கும், அரட்டையும் நடக்கும். நானும் ராஜாவின் பார்வை என்று பாடிக்காட்டுவதும், ரவா உப்புமா எப்படி செய்வது என்று செய்வது என்று சொல்வதும் (வாணலியிலே சொய்ங்னு... தண்ணிய ஊத்தணும்!), ஒரே ரவுசு பாண்டி தான் போங்கள். (ரவா உப்புமா செய்வது எப்படி என்று, இப்போது, மறந்து விட்டது!) சகுந்தலா டீச்சரும் என் நச்சரிப்பு தாங்காமல், ஒரு நாள் வீட்டிற்கு வந்து, அம்மா கையால் ரவா உப்புமா சாப்பிட்டு போனது, தனி கதை!

அது ஒரு அமைதியான, பொருளாதார ரீதியாக எதிர்பார்ப்புக்களோ, தேடுதல்களோ இல்லாத ஒரு காலம்; வீடு, பள்ளி, வீடு.. நடுநடுவே சைக்கிள் ரிக்.ஷா, சினிமா, மிஞ்சிபோனால் சரவண பவன் ஹோட்டல், அதுவே பெரிய ஆடம்பரம்!

அம்மாவின் தயாரிப்பாக, அர்த்தம் புரியாமலேயே, நிறைய திருக்குறள்களை மனப்பாடம் செய்து பள்ளியில் ஒப்பிப்பதும் உண்டு. கற்பூரம் போல கண்டதையெல்லாம் கப்பென்று பற்றிக்கொள்ளும் மனதும், வயதும் அன்று! (இப்போது, அது பச்சை வாழை மட்டை ஆகிவிட்டது.. ஹி.ஹி..)

ஒண்ணாம் வகுப்பில் இருந்த உற்சாகம் எல்லாம், ரெண்டாம் வகுப்பில் சுத்தமாக வடிந்து விட்டது. இந்த முறை வந்த டீச்சர், ஒரு வயதான மராட்டி பாய் என்று நினைவு! வாழ்ந்து முடித்த அலுப்பும், சலிப்பும் முகத்தில் நிரந்தரமாக ஒட்டியிருக்கும்; அவரது வீடுதான், பள்ளியின் எக்ஸ்டென்ஷன்.. அவ்வப்போது சமையலை பார்க்க எழுந்து போய்விடுவார். க்ளாஸும் அவரைப்போலவே, அழுது வடியும். அவரது கணவர், பள்ளியின் கரஸ்பாண்டட் என்றும் நினைவு. பார்ட் டைம் ஆக, மஞ்சள் காமாலைக்கும் மந்திரிப்பார்; இலை/பேப்பர் போட்டு மூடிய மந்திரித்த தண்ணீர் டம்பளருடன், நிறைய பேர் அந்த ஏரியாவில் நடமாடுவதை பார்க்கலாம் :))

இப்போது, விடு மாறி வெகு தொலைவுக்கு போய் விட்டோம். பள்ளி இருந்தது வடக்கு வீதியின் நடுவில்; நாங்கள் வீடு மாறியது, மேல வீதி தாண்டி, முருகன் ஆசிரமம், காளி கோயில் அருகே.. மேல அலங்கத்தில்.. கோட்டைமேடு பார்த்த வீதியில். எப்படியும் ஒரு கிலோமீட்டருக்கு மேல் இருக்கும். தனியாக, நடந்து வந்து திரும்பி போக வேண்டும். (இப்போது குட்டிகள் என்னவென்றால், அடுத்த தெரு பள்ளிக்கே.. ஆட்டோ/ வண்டி என அட்டகாசம் பண்ணுதுகள்.. :-))

பள்ளி முடிந்ததும், வகுப்புத்தோழிகளுடன் புறப்பாடு. தமிழ் மணியும், சுபாஷினியும் கூட வருவார்கள். சிரிப்பும் கும்மாளமுமாக, அவர்களை தத்தம் வீடுகளில் சேர்த்து விட்டு.. சமத்தாக என் வீட்டிற்கு திரும்பி விடுவேன். இப்படியாக.. ராணி வாய்க்கால் பள்ளியின் தொடர்பு ரெண்டாம் வகுப்போடு முடிந்து விட்டது; மூன்றிலிருந்து.. கொங்கணேஸ்வரர் கோயில் பள்ளி.. (வரும் பதிவுகளில் பார்க்கலாம், விட்டுருவோமா உங்களை அவ்வளவு சுலபமாக?!)

பின்னாளில், தமிழ்மணியையும் சுபாஷினியையும், ஆறாம் வகுப்பில் சேரும் போது கே.ஹெச்.ஸ் பள்ளியில் சேரும்போது தொலைவிலிருந்து பார்க்க நேரிட்டது; இப்போது, சிறு வயதின் குழந்தைத்தனம் மறைந்து, புதிதாக வெட்கம்(?!) தோன்றி விட்டதால், அவர்களிடம் என்றுமே பேசும் வாய்ப்பு கிட்டவில்லை!!

இன்று ஏறத்தாழ 36/37 ஆண்டுகள் கழித்து இந்த பதிவை எழுதும்போது.. எனக்கே பத்தாவது படிக்கும் மகனும் எட்டாவது படிக்கும் மகளும் இருக்கிறார்கள். இந்நேரம் தமிழ்மணியும், சுபாஷினியும் எங்கே எப்படி இருக்கிறார்கள், தஞ்சையிலா, சென்னை, மும்பையிலே அல்லது வெளிநாட்டிலா? தெரியவில்லை... அவர்களுக்கு திருமணமாகி மகன் இருந்தால் கல்லூரி படிப்பை முடித்தும், மகள் இருந்தால், பேரன் பேத்தி கூட எடுத்திருக்கலாம், யார் கண்டது?? :-))))

-தஞ்சையிலிருந்து தமாம் வரை தொடரும்..

August 21, 2008

யாருங்க, அது பாலோ கொயில்ஹொ?


பாலோ கொயில்ஹோ-ஒரு அறிமுகம்
(நன்றி: ஆனந்த விகடன்)



நழுவும் நதி!
(கார்த்திகேயன்)



கேரளக் காயல் நதிப் பயணத்தின் பரவசத்தை ஏற்படுத்துபவை பாலோ கொயில்ஹோவின் எழுத்து. பிரேசிலிய எழுத்தாளரான இவர், வலிக்காத வார்த்தைகளால் வாழ்க்கையின் நழுவிய பக்கங்களை வாசிக்கக் கொடுக்கிறார். 'தி பில்கிரிமேஜ்', 'தி அல்கெமிஸ்ட்' என இவரின் பெஸ்ட் செல்லர் புத்தக வரிசையில் லேட்டஸ்ட்... 'லைக் தி ஃப்ளோயிங் ரிவர்'. நழுவும் நதியிலிருந்து சில துளிகள்...

பேராசிரியர் பாடத்தைத் துவக்கும் முன் ஓர் இருபது டாலர் நோட்டினை மாணவர்களிடம் காட்டினார். ''யாருக்கு இந்த நோட்டு வேண்டும்?'' அனைவரின் கைகளும் உயர்ந்தன. அந்த நோட்டை சிறு பந்தாகக் கசக்கிச் சுருட்டியவர், ''இப்போது யாருக்கு வேண்டும்?'' என்றார். மீண்டும் எல்லா கைகளும் உயர்ந்தன. ''இப்போதும் வேண்டுமா பாருங்கள்!'' என்றவர் அந்த நோட்டை பிளாக்போர்டில் தேய்த்து, தரையில் புரட்டி அழுக்காக்கினார். அப்போதும் எல்லாரும் ஹேண்ட்ஸ் அப்! ''இதை எப்போதும் மறக்காதீர்கள். இந்த இருபது டாலர் நோட்டினை நான் என்ன பாடுபடுத்தினாலும் அதன் மதிப்பு 'இருபது டாலர்' என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். இதுதான் வாழ்க்கை. நாம் எத்தனை அவமதிப்புகள், விரக்திகள், வேதனைகள், சோகங்கள், சதிகளை எதிர்கொண்டாலும் நமக்கான மதிப்பு குறையாது. நாம் எப்போதும் நாம்தான்!''
அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற ஷிமொன் பெரெஸ் சொன்ன குட்டிக் கதை இது. ஒரு குரு தன் சிஷ்யர்களிடம், ''ஒரு நாளின் இருள் விலகி வெளிச்சம் பரவும் அந்தக் கணத்தை மிகச் சரியாக நாம் எப்படிக் கண்டுபிடிப்பது?'' என்று கேட்டார்.

'இது நாய், இது ஆடு என்று தெளிவாகக் கூறுமளவுக்கு வெளிச்சம் பரவும்போது!', 'ஆலமரத்துக்கும் அரசமரத்துக்குமான வித்தியாசம் தெரியும் சமயம்!' என்பன போன்ற இன்னும் பல விளக்கங்கள். 'இவை எதுவுமே இல்லை!' என்ற குருவிடம் சரியான பதிலைக் கேட்டனர் மாணவர்கள். ''நமக்கு அறிமுகமே இல்லாதவர் நம்மைத் தேடி வந்தாலும், நம் சகோதரர் என நினைத்து வரவேற்று உபசரிக்கும் அளவிலான இருள் விலகி ஒளி பரவும் கணம்!'' என்றார் குரு. எனவேதான், அவர் குரு!

'மனிதனிடம் உள்ள விசித்திரமான குணம் என்ன?' என்று என் நண்பன் ஜேமி கொஹென்னிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில்... ''மனிதனின் முரண்பாடுகள். 'பெரியவனாக வேண்டும்' என்று நமக்கு அத்தனை அவசரம். வளர்ந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது 'அவசரமாகக்' கடந்து வந்த குழந்தைப் பருவத்துக்காக ஏங்குவோம். பணம் சம்பாதிப்பதற்காக உடலை வருத்தி வீணாக்குவோம். அதைச் சீராக்குவதற்காகச் சம்பாதித்த பணத்தைச் செலவழிப்போம். எதிர்காலத்தை நினைத்து மிகவும் கவலைப்பட்டு, நிகழ்காலத்தையும் ரசித்து ருசிக்கத் தவறிவிடுவோம். 'எனக்கு இறப்பே இல்லை' என்பது போல ஆர்ப்பாட்டமாக வாழ்வோம். 'இந்தப் பூமியில் வாழவே இல்லை' என்பது போன்ற கவலையுடன் இறப்போம்!''

1981-ன் ஒரு பனிப் பொழுதில், என் மனைவியுடன் பிரேக் நகர வீதிகளில் நடந்துகொண்டு இருந்தேன். பிரேக் நகரக் கட்டடங்களை ஓவியங்களாக வரைந்து விற்பனைக்கு வைத்திருந்தான் ஓர் இளைஞன். பொதுவாக, பயணங்களின்போது சுமைகள் எனக்குப் பிடிக்காது என்றாலும் ஏனோ அவனிடம் ஒரு படத்தை வாங்க வேண்டுமெனத் தோன்றியது. படத்துக்குக் காசு கொடுக்கும்போதுதான் கவனித்தேன், அந்த மைனஸ் 5 டிகிரி குளிரிலும் அவன் கைகளில் கிளவுஸ் இல்லை. 'கிளவுஸ் அணிந்தால் பென்சில் பிடித்து படங்களைச் சரியாக வரைய முடிவதில்லை!' என்றவனை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவனுக்கும் என்னைப் பிடித்திருக்கும் போல, 'பிரேக் நகரம் எப்படியெல்லாம் தன்னை வரையத் தூண்டுகிறது, இந்த சீஸனில்தான் நகரின் உச்சகட்ட அழகு மிளிரும்!' என்று ஏதேதோ பேசத் துவங்கி விட்டான். 'உங்களுக்கு இது எனது பரிசு. காசு எதுவும் வேண்டாம்!' என்று பிடிவாதமாக எனது மனைவியை வரையத் துவங்கினான். அவன் படம் வரைந்து முடிக்கக் காத்திருந்தபோதுதான் விநோதமான அந்த விஷயம் எனக்கு உறைத்தது. அத்தனை நேரம் நாங்கள் உரையாடிக்கொண்டு இருந்தாலும் இருவருக்கும் மற்றவர் மொழி தெரியாது. சிரிப்பு, மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, முகபாவனைகளாலேயே இத்தனை நேரமும் மனம்விட்டுப் 'பேசிக்'கொண்டு இருந்தோம் என்பது. பிறருடன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள வார்த்தைகள் அற்ற உலகத்தில் நுழைந்தாலே போதும். அந்த உலகத்தில் எல்லாமே தெளிவு!

மொராக்கோ நாட்டில் இருந்து வந்த நண்பர் வித்தியாசமான 'ஆதாம்-ஏவாள்' கதை சொன்னார். அவர்கள் நாட்டில் உள்ள சில குறிப்பிட்ட பாலைவனப் பழங்குடியினர்களின் நம்பிக்கையாம் அது. ஈடன் தோட்டத்தில் ஏவாள் நடந்துகொண்டு இருந்தபோது குறுக்கிட்ட சாத்தான், ''இந்த ஆப்பிளைச் சாப்பிடு!'' என்றது. கடவுளின் கட்டளை காரணமாக மறுத்த ஏவாளிடம், ''இதைச் சாப்பிட்டால் நீ இன்னும் அழகாவாய்! ஆதாமுக்கு உன்னை இன்னும் பிடிக்கும்!'' என்று ஆசைகாட்டியது சாத்தான். ''அதற்கு அவசியம் இல்லை. வேறு பெண்களே இல்லாததால், ஆதாமுக்கு என்னைப் பிடிக்கவே செய்யும்'', ''ஹா ஹா ஹா! நீதான் அப்படி நினைத்துக்கொண்டு இருக்கிறாய். ஆதாம் இன்னொருத்தியை ஒளித்துவைத்திருக்கிறான்'' என்ற சாத்தான், ஏவாளை அழைத்துக்கொண்டு மலையுச்சிக் கிணற்றுக்குச் சென்றது. ''இந்தக் குகைக்குள்தான் அவள் இருக்கிறாள்!'' என சாத்தான் கிணற்றைக் காட்ட, உள்ளே எட்டிப் பார்த்தாள் ஏவாள். தண்ணீரில் 'அழகிய பெண்ணின்' முகத்தைப் பார்த்த ஏவாள், பதற்ற பயத்தில் உடனே ஆப்பிளைக் கடித்துச் சாப்பிடுகிறாள். தண்ணீரில் தன் பிம்பத்தை உணர்ந்து பதறாதவர்களுக்கு, 'இழந்த சொர்க்கம்' நிச்சயம் என்று இப்போதும் அந்தப் பழங்குடியினர் நம்புகிறார்கள்!

சிட்னி துறைமுக அழகை நான் ரசித்துக்கொண்டு இருந்தபோது என்னிடம் வந்த ஆஸ்திரேலியர் ஒருவர், ''இந்த பேப்பரில் இருக்கும் விளம்பரத்தைப் படிக்க முடியுமா? மிகவும் சிறிய எழுத்துக்களாக இருக்கின்றன!'' என்று கேட்டார். நான் வீட்டிலிருந்து கண்ணாடி எடுத்து வராததால், என்னாலும் படிக்க முடியவில்லை. நான் அவரிடம் மன்னிப்பு கேட்டதற்கு, ''ஓ! அது பரவாயில்லை. கடவுளுக்கும் கண்களில் இதே குறைபாடு உண்டு. ஆனால், அது வயதாவதால் இல்லை. யாராவது ஏதேனும் தவறு செய்தால், அதைக் கவனிக்காமல் இருக்க கடவுளே விரும்பி ஏற்றுக்கொண்ட குறைபாடு. தவறிழைத்தவர்களுக்குத் தன்னால் பெரிய தண்டனை எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கிறார் கடவுள்.'' ''அப்போது நல்லது செய்பவர்களையும் கடவுள் கவனிக்காமல் கடக்க வாய்ப்பிருக்கிறதே?'' என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன். சின்னச் சிரிப்புடன் நடக்கத் துவங்கிய அந்த ஆஸ்திரேலியர் திரும்பினார், ''ஆனால், கடவுள் ஒருபோதும் தன் கண்ணாடியை வீட்டில் மறந்துவைப்பதில்லை!''

பயணங்களால் நான் கற்றுக்கொண்டது நிறைய. ஒரு பயணத்தைச் சுவாரஸ்யமாக்க எனது டிப்ஸ்...

முடிந்தவரை தனியாக பயணித்துப் பழகுங்கள். திருமணமாகியிருந்தால் மனைவி, குழந்தைகளுடன் மட்டுமே! பழகிய பெருங் கும்பலுடனே வெளியூரிலும் பயணித்தால், அதே மொழி, அதே சிரிப்பு, அதே கோபம், அதே சூழல் என எந்த வித்தியாசமும் இல்லாத பயணமாக இருக்கும். உங்கள் சொந்த மொழியிலேயே பேசி, உங்கள் நண்பனே உங்களுக்கு வழிகாட்டி, சொந்த ஊர் கதைகளையே அங்கும் பேசுவதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடக் கூடும்! அந்த ஊரின் மொழியில் உங்களுக்கு ஒரு வார்த்தைகூடத் தெரியாவிட்டால்தான் பயணம் ருசிக்கும். மொழி தெரியவில்லையே என்ற எந்தப் பயமும் வேண்டாம். ஒரு வார்த்தைகூடத் தெரியாத ஊரில் எனக்கு 'கேர்ள் ஃப்ரெண்ட்'கள்கூடக் கிடைத்திருக்கிறார்கள். நிச்சயம் உங்களைப்பற்றி அறியாதவர்கள் உங்களைக் கைவிட மாட்டார்கள்!

எந்த ஒரு நகரத்தையும் இரண்டொரு நாளில் கண்டு களித்திட முடியாது. ஒரு நகரமும் பெண்ணைப் போலத்தான். அணு அணுவாக அனுபவித்தால்தான் சுகம்!

August 10, 2008

'தல'விதி

'தல'விதி
(தமாம் பாலா)

கருமம் புடிச்ச அந்த களுதைங்க
காம வெறி புடிச்ச களுசடைங்க
மனோகரு நம்பியாரு அசோகனு
மறுபடியும் மறுபடியும் பொண்ண



மறிச்சு கற்ப அழிச்சுட துடிச்சாங்க
மறக்காம பேசி துடிக்க வச்சாங்க
காரியம் முடியுரத்துக்கு மின்னால
கதவ ஒடச்சு நொழஞ்ச வாத்யாரு


பொரட்டி எடுத்தாரு பேமனிகள
பொத்தி அணச்சாரு குட்டியத்தா..
கற்பூரம் ஏத்தி கும்பிட்டே நானு
கையிலே பச்ச குத்தி கிட்டேன்


அப்புறமா தா தெரிஞ்சுது அவனுகள
அவகிட்ட அனுப்சு வெச்சது அவரு
அடிக்கு அஞ்சு ரூபா ஒதையும் ஒரு
நடிப்புன்னு அப்பதான் நல்லா புரிஞ்சது


திரையில நாயகரெல்லாம் வாள்கையில
தினுசா திரிய, சினிமா ரவுடி மாலபோட்டு
சபரி மல ஏறுறான் சாமிய கும்புடுறா
சட்டுனு ஒரு விசயம் பொறி தட்டுது


அடிக்கிறது மட்டு தலைவன் தகுதி
அடி வாங்குறது தொண்ட தலவிதி
அடி வாங்குறவ திருப்பியடிக்க சொல்ல
அப்போ மாறுது நாட்டோட தலவிதி!!!

August 6, 2008

மடக்கு

மடக்கு
(கார்த்தி)

கவிதையே
எங்கே சென்றாய்
என்னைக் கண்டு பயம ஏன்


நான் என்ன செய்தேன்
ஏன் என்னைச் சேராமல் நிற்கிறாய்
நானும் எழுதுகிறேன்
கவிதையென்று

மடக்கி மடக்கி
உரைநடையை
என்ன செய்ய

நானறிந்த தமிழ் அப்படி
கவிக்கோ தயவிருந்தால்
வென்றிடலாம் கவிதையுலகை
தயவொன்று கிடைத்திடுமா

நான் படித்த
வைரமுத்து தமிழ்
கொண்டு அறிந்தேன்
இப்படித்தான்

மடக்கி மடக்கி
எழுதினால்
கவிதையென்று

எங்களூரில் இனிப்பொன்று
உண்டு மடக்கு என்று
நாடா போன்று மாவை
மடக்கி மடக்கி பொறித்து
இனிப்பேற்றி வைப்பார்கள்

அதைப் பார்த்து உண்டு
மகிழ்ந்ததனால்
எழுதினாரோ
கவிதையை
மடக்கி மடக்கி

நானும் உண்டதனால்
எழுதிப்பார்க்கிறேன்
மடக்கி மடக்கி
வந்து விடாதா
கவிதையும் என்று

மடக்கி மடக்கி
முயல்வதைப் பார்த்து
மடங்காமல்
தறிகெட்டு ஓடுகிறது
கவிதை
எனைக்கண்டு!

சோகத்துடன்
வைரமுத்துவுக்கு பக்கத்து ஊர்க்காரன்