August 31, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 2)

(தமாம் பாலா)
2. கொங்கணேஸ்வரா ஸ்கூல் நினைவுகள்..

வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிறது என்றோ, வேறு ஒரு காரணத்துக்கோ இந்த பள்ளிக்கு மாற்றி விட்டார்கள் என்னை. மேலவீதியின் மத்தியிலே, சகாநாயக்கன் தெருவும் மேலவீதியும் சந்திக்கும் முனையிலே இருப்பது.. கொங்கணேஸ்வரர் கோயில். அந்த கோயிலின், வெளி பிரகாரத்திலே தான், எங்கள் பள்ளிக்கூடம். வேறு எங்கும் இது போல கோயில் பள்ளிக்கூடம் இருக்கின்றதா என்று தெரியவில்லை. பள்ளிக்கூடம், விளையாட்டுக்கு கிரவுண்டு எல்லாமே கோயில் பிரகாரம் தான்.

இந்த காலத்து பிள்ளைகள் போல ‘இடமாற்றத்தின் மன அழுத்தங்களோ’ ‘மூட் அவுட்டோ’ அன்று இருந்ததில்லை. கிட்டத்தட்ட, இடமாறிய ஆட்டுக்கொட்டில் ஆடு போல ‘டேக் இட் ஈஸி பாலிசி தான்’ மூன்றாம் வகுப்பு நினைவுகள் அதிகமாக இல்லை. நான்காம் வகுப்பில் ‘கந்தசாமி வாத்தியார்’ வந்து சேர்ந்தார். கறுப்பிலும் களையான முகம்; ஒளிரும் கண்களும், முன் தலைமுடி சுருளும், வசீகர புன்னகையுடன் பாடம் நடத்தும் அழகே, அழகு! அதே கந்தசாமி வாத்தியார், பல வருடங்களுக்கு பின், கல்யாணம் பண்ணி.. பிள்ளைகள் பெற்று.. கொஞ்சம் ‘டொக்கு’ மாதிரி ஆகிவிட்டார்; எல்லாம் காலமும், வாழ்க்கைக்கு தரும் விலையும் செய்யும் கோலம் போல!

ஐந்தாம் வகுப்பில், விநாயகராவ் வாத்தியார் வகுப்பு. அவருக்கும் கிட்டத்தட்ட ஓய்வு பெறும் வயது, அவரும் அவர் தம்பியும் கூட அந்த வயதிலும் பிரம்மச்சாரிகள் என்று ஞாபகம். “நல்ல மதிப்பெண் பெறும் மாணவனுக்கு, இந்த பேனாவை தருவேன்” என்று அடிக்கடி எடுத்து, காட்டுவார்.. வகுப்பில்.. அதே போல நான் மார்க்கு வாங்கிவிட்டேன்; ஆனால் அவரோ தருவதாகவே தெரியவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்து விட்டு.. “ஒரு நாள் போய், நீங்க சொன்ன மாதிரி, எனக்கு..பேனா குடுக்கறீங்களா சார்?” என்று வாய்விட்டே கேட்டு விட்டேன். அவர் பாவம், சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லியிருப்பார் போல..

நான் கேட்ட கேள்விக்கு.. “ராஜ்ஜியத்தில் பாதியையும், இளவரசியையும்.. கொடுங்கள் மன்னா” என்று நான் கேட்டது போல, ஒரு ‘அடிப்பட்ட பார்வை’ பார்த்தார்! கடைசி வரை பேனா தரவே இல்லை :( அப்போது, புரியவில்லை; வாத்தியாருக்கு கிடைப்பது இலவச சல்யூட்டும், வெற்று மரியாதை மட்டுமே, சில்லறை அல்ல என்று, எனக்கு!

பள்ளியிலே நாங்கள் பெரும்பாலானோர், கும்பலோடு கும்பலாக ‘எக்ஸ்ட்ரா நடிகர்கள்’ போல வந்து போவோம். சில பேர், இந்த கால ஹீரோயின்கள் போல, அம்மாவுடன் வருவார்கள். அதிலும் ராஜா என்று ஒரு பையன் இருந்தான்; ஸ்கூல் நடக்கும் போதே, அம்மாவும் அப்பாவும் அடிக்கடி அவனை பார்க்க வருவார்கள்; அவ்வப்பொது ஹார்லிக்ஸ் அது இது என அவர்கள் உபசாரமும் நடக்கும். ஒரு நாள், அந்த பையன் ராஜா, ஐயங்குளத்தில் விழுந்து இறந்து விட்டான் என்று தெரிந்தபோது, மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது; பாவம், மிகவும் போற்றி வளர்த்த பையன் :-(((

தஞ்சாவூரில், குளங்களும், அகழிகளும் ஜாஸ்தி; தஞ்சாவூர்காரர்கள் நிறைய பேர் வாழ்க்கையிலே அவற்றின் கோர நிழலும், சோக பதிவுகளும் இருக்கும். எங்கள் வாழ்விலும் அது விளையாடி விட்டது;அது பற்றி, இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

கொங்கணேஸ்வரா பள்ளியில் ஜானகிராமன் என்று ஒரு தலைமை ஆசிரியர் இருந்தார். நரைத்த தலையும், தாடியுமாக சிரித்த முகத்துடன் ஓடி ஓடி வேலை செய்வார். ஐந்தாம் வகுப்புக்கு மேல் கொங்கணேஸ்வரா பள்ளியில் வகுப்புகள் இல்லாததால், ஆறாம் வகுப்புக்கு எங்கள் அனைவரையும் அணிவகுத்து நடத்திச்சென்று.. சகாநாயக்கன் தெருவில் இருக்கும் கல்யாணசுந்தரம் உயர்நிலைப்பள்ளியில் சேர்த்து விட்டார், அந்த புண்ணியவான்! :)))

பள்ளி பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்; வீட்டுக்கும் போய் வரலாமா? கொங்கணேஸ்வரா பள்ளிக்கு பக்கத்து தெருவில் நுழைந்து சுமார் ஒரு பர்லாங்க் நடந்தால், முருகன் ஆசிரமம் வரும், இடது புறம் திரும்பினால், காளி கோயில் முதலில், அதன் பிறகு மேல அலங்கம் ஆரம்பம்!

தெருவின் இடது புறமெல்லாம் வீடுகள்; வலது பக்கத்தில், உயர்ந்த.. கோட்டை மேடு மட்டுமே. எங்கள் குடியிருப்பு அந்த தெருவில், நான்காவது அல்லது ஐந்தாவது என நினைக்கிறேன். எங்கள் காம்பவுண்டுக்கு முதல் வீடாக, ஒரு பெரிய மாளிகை போன்ற வீடு இருந்தது. அதில் ஒரு போலீஸ் அல்லது சிஐடி ஆபீஸ் இருந்தது; பின்னர் தான் அந்த வீட்டில் டாக்டர் மாமா குடும்பத்தினர் வந்தனர். மாமா என்றால், சொந்தம் என்று அர்த்தம் இல்லை; அக்கம் பக்கம் அனைவருமே, மாமா/அத்தை தானே? :-))
எங்களுக்கு அடுத்த வீட்டில், எல்.வெங்கடேச ஐயங்கார் என்று ஒரு பாகவதர் இருந்தார்; பெண் போன்ற அழகான கூந்தலை முடித்து ஹார்மோனியம் வைத்து கர்நாடக சங்கீதம் பயிற்சி செய்த படி இருப்பார். மாமி, பெரிய குங்கும பொட்டு வைத்து (டேஞ்சர் சிக்னல்?!) சிரித்த முகமாக இருப்பார். அவர்கள் வீட்டில் அண்ணன்கள், ஒரு அக்கா என்று நினைக்கிறேன்; என் பெஸ்ட் ஃப்ரெண்டு முரளியும் அங்கே தான் இருந்தான், பின்னால் ஹைதராபாத்தில் அம்மா அப்பாவிடம் போய் விட்டான்!

இப்போது, எங்கள் வீட்டிற்கு வருவோம். அந்த காம்பவுண்ட் முன்பகுதி திறந்த வெளியாக, செடி கொடிகளுடன் இருக்கும். நுழைவாயிலில் மல்லிகை கொடி ஆர்ச். அந்த திறந்த வெளியிலே ஒரே ஒரு அவுட் ஹவுஸ் இருக்கும். அதிலே ஒரு அம்மாவும் மகளும் மாத்திரம் வசித்தனர். மகளை, நாங்கள் அத்தாச்சி என்போம்; தஞ்சை மத்திய நூலகத்தில் பெண்கள்/குழந்தைகள் பிரிவில் வேலை செய்ததால், எங்களை அடிக்கடி அங்கு அழைத்துச்செல்வார், புத்தகம் படிக்கும் வழக்கமும் வந்தது, அதனால். அத்தாச்சியின் அம்மாவுக்கு, அடிக்கடி வலிப்பு வந்து, பல்லு கிட்டி விடும்; எல்லோரும் போய் முதல் உதவி செய்வார்கள்!

இப்போது, உள் வாயிலை தாண்டி போனால், இடது புறத்தில் மூன்று வீடுகள்.. வலது புறத்தில் ‘ட வடிவில்’ இன்னொரு வீடு.. ட வடிவத்துக்குள், பெரிய சிமெண்டு தளம்! அந்த காம்பவுண்டுக்குள்ளேயே இரண்டு முறை வீடு மாறிவிட்டோம். மாலை வேளையிலே நானும் நண்பன் உமா சங்கரும், மல்லிகை காம்பவுண்டின், துணி துவைக்கும் கல்லின் மேல் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருப்போம்; சாக்லேட் பேப்பர் எல்லாம் சேகரித்து, கடையில் கொடுத்தால், பேனா கொடுப்பார்கள் என்று கதை விட்டுக்கொண்டிருப்பான், நானும் ஆவென்று வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருப்பேன்..

மாலை நேரத்தில், வீதியே களை கட்டிவிடும். கிரிக்கெட்டு, பம்பரம், கோலிகுண்டு, கிட்டிபுள் என்று சீசனுக்கு சீசன் பயல்கள் தெருப்புழுதியிலேயே திரிவார்கள். எப்போதாவது அப்பா கூட கிரிக்கெட்டில் கலந்து கொண்டு பவுல் செய்வார். எங்கள் காம்பவுண்டுக்குள் ராமமூர்த்தி மாமாவும், புனிதா அக்காவும் புதிதாக கல்யாணம் ஆகி குடிவந்தனர். அக்காவுக்கு கொஞ்சம் கிராமத்து களையோடு, மஞ்சள் பூசிய முகம். ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு போன போது.. முட்டையை உடைத்து வாயில் ஊற்றி விட்டார்! அதுவும் நன்றாகத்தான் இருந்தது. அக்கம் பக்கம் இருந்தவர்களுடன் அம்மா,அப்பாவுக்கு நல்ல நட்பும், பழக்கமும் இருந்தது. இன்றைய சென்னை ஃப்ளாட்டுகளில், பக்கதில் இருப்பவர் யார் என்றே தெரியாத தீவு வாழ்க்கை, அன்று இல்லை அங்கே. மாலை,இரவு வந்து விட்டால், இரவு நிலவு ஒளியில் பெரியவர்கள் செஸ் விளையாடுவார்கள்; வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம்.

பள்ளியில் இருந்து வரும்போது, அணில், முயல் என்று சிறுவர் பத்திரிக்கைகள் வாங்கி மகிழ்வோம். ரத்தம் குடிக்கும் மனிதர்கள் என்று ஒரு திகில் கதை கூட முயலில் படித்த ஞாபகம். முத்துகாமிக்ஸ், இரும்புக்கை மாயாவியும் அதில் சேர்த்தி.

பக்கத்து வீட்டு, அண்ணனோடு, சிவகங்கை பூங்கா சென்று, பெரிய மனிதன் போல திறந்திருக்கும் எலெக்ட்ரிக் கம்பத்தையெல்லாம் பார்த்து கமெண்ட் அடித்து, கவனக்குறைவாய் ஊஞ்சலில் அடிபட்டு, ராசா மிராஸ்தார் மருத்துவமனை தாமஸ் ஹாலில், க்ளோரஃபார்ம் வாசத்தில், கன்னத்தில் தையல் போட்டுக்கொண்ட அனுபவமும் கிடைத்தது எனக்கு நாலாம் வகுப்பில்; முகம் கொஞ்ச நாளுக்கு அனுமார் போல தமாஷாக ஆகிவிட்டது அப்போது!

பைத்தியக்காரர்கள் போல தெருத்தெருவாக, சிகரெட் அட்டைகள் பொறுக்கி, காலி பெட்டிகளை கடையில் 10-20 பைசாவுக்கு வாங்கி வருவோம். சிசர்ஸ்,வில்ஸ்,சார்மினார்,பாஸிங் ஷோ என்று பல ப்ராண்டுகள். வீடு முழுவதும் பாம்பு போல வளைந்து வளைந்து பெட்டிகளை நிறுத்தி விட்டு.. முதல் பெட்டியை தள்ளி விட்டால்.. “அபூர்வசகோதரகள் குள்ள கமல் செய்யும் செயின் ரியாக்ஷன் போல’ அழகாக பெட்டிகள், விழும்; திரும்ப அடுக்கி, திரும்ப தள்ளிவிட்டு.. நாளெல்லாம் ஒரே பிசியாக இருக்கும்! :-))

காளிகோயில் பக்கத்து பிள்ளையார் கோயிலில், ‘பிள்ளையார் பிள்ளையார்.. பெருமை வாய்ந்த பிள்ளையார்” என்று பாடி, பொறிகடலை வாங்குவோம். முருகன் ஆசிரமத்துக்கு வருகை தரும் வாரியார், மதுரை சோமுவை வேடிக்கை பார்த்து வருவோம்; “மருதமலை மாமணியே, பாடுறீங்களா, ஐயா?.. சாயந்தரம் பாடுவேன் தம்பி, எல்லாரும் வரும்போது, அப்போ வந்து பாருங்க”

அன்பான அப்பா, அறிவான அம்மா, அழகான தம்பி என்று வாழ்க்கை, ஒரு தெளிந்த நீரோடை போல, இனிதாக, இன்பமாக, இசைவாக சென்று கொண்டிருந்தது.. கடலில் மிதக்கும் கப்பல் போல, காற்றில் மிதக்கும் பறவை போல வாழ்க்கை முழுவதுமே, சந்தோஷமாக போய்விடுகிறதா, என்ன? அவ்வப்போது, புயலும் வீசும் அல்லவா? எங்கள் வாழ்விலும் அப்படி ஒரு புயல் வீசியது.. அதைப்பற்றி, விரைவில் எழுதுகிறேன், நண்பர்களே!


-தஞ்சையிலிருந்து தமாம் வரை தொடரும்..

7 comments:

SP.VR. SUBBIAH said...

////தஞ்சாவூரில், குளங்களும், அகழிகளும் ஜாஸ்தி; தஞ்சாவூர்காரர்கள் நிறைய பேர் வாழ்க்கையிலே அவற்றின் கோர நிழலும், சோக பதிவுகளும் இருக்கும். எங்கள் வாழ்விலும் அது விளையாடி விட்டது;அது பற்றி, இன்னொரு பதிவில் சொல்கிறேன்.///

ஓஹோ, இதுதான் கொக்கி போட்டு எழுதுவதா?

SP.VR. SUBBIAH said...

அட்டா, நான்தான் முதல் வருகையா?
நல்லது சாமி!

Thanjavurkaran said...

அப்படியே எனது பள்ளி நினைவுகள் வருகிறது. நானும் கல்யாணசுந்தரம் ஸ்கூலில்தான் படித்தேன். கரந்தை தமிழ் சங்கம் பிறகு கல்யாணசுந்தரம் ஸ்கூல்.
தொடர்ந்து எழுதவும்.

Dammam Bala (தமாம் பாலா) said...

வாத்தியாரைய்யா, இப்போதான் பதிவு போட்டேன். நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம். உங்கள் முதல் வருகை, உங்களுக்கு என் வலைபதிவில் இன்று முதல் மரியாதை! :)))

எனக்கு கொக்கி எல்லாம் தெரியாது.. நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க.. தஞ்சாவூரான்!

என்னோட +2விலே கூட கரந்தை தமிழ்சங்கத்திலிருந்து 2 நண்பர்கள் படிச்சாங்க. தமிழ் கல்விக்கு கரந்தை தமிழ்சங்கம் மிகவும் பெயர் பெற்றது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

சமீபத்தில்தான் துளசி மேடத்தின் "சட்டாம்பிள்ளை" பள்ளி நினைவுகளைப் பலருக்கும் கிளப்பியது. இப்போது தாங்கள். சம்பவங்களும் விவரித்திருக்கும் பாங்கும் வெகு சுவாரஸ்யம். வாத்தியார் ஐயா சொன்ன கொக்கியை இந்தப் பதிவிலே மட்டுமா போட்டுள்ளீர்கள்? தமாம் வரை என நீளச் சங்கலியே அல்லவா இருக்கிறது உங்கள் நினைவுகளோடு எங்களை இட்டுச் செல்ல:))?

Unknown said...

முதல் முட்டை குடித்த அனுபவத்திலிருந்து அக்கம்பக்கத்து வீட்டினரின் பெயர்கள் கூட ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்கள்.
அபாரம்.