October 26, 2021

காதில் விழும் கதைகள்

காதில் விழும் கதைகள்
தமாம் பாலா

பிரபஞ்சம் உங்களிடம் பேசி இருக்கிறதா? கதை சொல்லி இருக்கிறதா? என்னிடம் சொல்கிறது.

நான் எதிர்கொள்ளும் மனிதர்கள் ஏன் பூனை நாய் கூட தங்களது கதையை பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளனர். நாம் தான் 'சாரி நான் ரொம்ப பிசி' என்று அவர்களை வெட்டி விடுகிறோம்.

மலேசியா தமிழ் நண்பர் ஒருவர் எனக்கு சைகானில் பழக்கம், அவர் சொன்ன ஒரு கதை இது.

மலேசியாவுக்கு ஒரு செட்டியார் தமிழ்நாட்டில் இருந்து கோபித்துக் கொண்டு வந்து விட்டாராம், மனைவியை பிரிந்து. 35 வருடம் இந்தியாவுக்கே போகவில்லையாம். மலேசியாவில் உழைத்து வணிகம் செய்து வீடுவாசல் என்று நல்ல வசதியாம். நம்ம மலேசியா தம்பி செட்டியாருக்கு வயிற்றில் பிறக்காத செல்லப்பிள்ளை. நல்ல அன்னியோனியம் அவர்கள் இடையே. 

இது ரொம்பவும் பழைய கதை, பின்னாளில் செட்டியாருக்கு இனிப்பு நோய் காரணமாக ஒரு காலை வெட்டியதும், பின்னர் தமிழ்நாட்டில் இருந்து அவர் மனைவி வந்து அவருடன் மலேசியாவில் சேர்ந்து கொண்டதும் நடந்த கதை. செட்டியார் இப்போது இல்லை, அவர் காலமாகி பல வருடங்கள் ஆகி விட்டது.

இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்பார்கள். வாழ்க்கையில் நடக்கும் கதைகள் சினிமா போலவே சுவாரஸ்யமானவை என்பது என் எண்ணம், அனுமானம். உங்கள் கதை எப்படியோ அது எனக்குத் தெரியாது.

கதை தொடரும்
தமாம் பாலா 23.09.2021 வியட்நாம்

டனா தெரு

டனா தெரு
தமாம் பாலா

1978ம் ஆண்டு; அப்போது நான் ஏழாவதோ எட்டாவதோ படித்ததாக நினைவு. தஞ்சாவூரில் ராணி வாய்க்கால் சந்தில் எங்கள் வாசம். சியாமளா தேவி கோயிலை ஒட்டி கார் போக இயலாத சிமண்டு போட்ட சைக்கிள் ஸ்கூட்டர் மட்டும் போகக் கூடிய ஒற்றையடிப் பாதை அதுவும் ஒருவழிப் பாதையாக ஒன்று இருந்தது.

அந்த சந்தின் பெயர் சேவு அமிர்தலிங்கம் பிள்ளை தெரு. இப்போது இன்னும் இருந்தால் அதில் பிள்ளையை வெட்டி இருப்பார்கள். தெரு டனா வடிவில் இருக்கும். ஆரம்பத்தில் பள்ளி கரஸ்பாண்டண்ட் ராமதாஸ் அய்யாவின் உயர்ந்த திண்ணை வீடு. கொஞ்சம் தாண்டி டனா வின் முனையில் பாபு வீடு. அவனும் என் வகுப்புதான், சியமளா அக்கா, கீர்த்தி தம்பி, (வி)சாலாட்சி குட்டி தங்கை. எல்லோருமே ஒல்லி அவர்கள் அம்மா போல. அவர்கள் அப்பா எல்.ஐ.சியில் எங்கள் அப்பாவுக்கும் மேலான அதிகாரி.

அவர்கள் வீட்டுக்கு எதிரே என் தோழன் சுந்தர மோகன் வீடு. அவன் என்னை விட ஒரு வயது பெரியவன், நல்லவன் சிரித்த முகம். அவன் தம்பி பாண்டு. அவன் அப்பா கண்ணாடி போட்டு வழுக்கை தலையோடு இருப்பார். அவர்கள் வீட்டின் பின் தோட்டம் தென்னை மரத்துடன் எங்கள் வீடு வரை நீண்டு இருக்கும்.

டனாவின் முனை தாண்டி வரும் போது இரு வழி காலனி இருக்கும். உள்ளே இரண்டு மூன்று குடித்தனங்கள். ரயில்வே பிரேமா அக்காவும் அம்மாவும் ஒரு போர்ஷன். சிகரெட்டு சண்முகம் மாமா அவர் மனைவி, மகள் சாந்தி பானு சின்னக்குட்டி கவிதா. இன்னொரு போர்ஷனில் திருநெல்வேலி தெலுங்கு சமையல் தொழில் பெருங்குடும்பம். விச்சு, அக்காக்கள் ராஜி, அங்கச்சி, இன்னும் ஒர் அண்ணன், மனவளர்ச்சி குன்றிய அழகிய தம்பி கண்ணா.

எங்கள் வீடு ஒரு தனி வீடு, சிறு திண்ணை, ஒரே அறை அதில் தடுத்து சமையல், குளியலறை சுந்தர மோகன் வீட்டு காம்பவுண்டு ஒட்டி இருந்தது. 

எங்களைத் தாண்டி இருபதுக்கு முப்பது திறந்தவெளி அடுத்து வீட்டு ஓனர் ராசாத்தி அம்மாள் தங்கவேல் மூப்பனார் வீடு. வெளியில் உள்ள முருங்கமரம், அதில் உள்ள எல்லா முருங்கை காய்களிலும் அம்பு தைத்து இருக்கும், விளக்குமாறு அம்பு எல்லாம் என் கை வண்ணம்.

எங்கள் வீட்டுக்கு முன் ஒரு ஒதிய மரம் அது நான் உங்களுக்கு சொல்ல விட்டுப் போய் விட்டது. ஒரு நாள் அங்கு நான் பார்த்த காட்சி தான் இந்த கதை.

எங்கிருந்தோ ஒரு அணில் வந்தது. நேராக ஓடி ஒதிய மரம் ஏறி பக்கத்து காம்பவுண்டு சுவர் அளவில் மரத்தில் நின்று, சுவற்றில் தாவியது. ஒரு முறை அல்ல பலமுறை. கூர்ந்து பார்த்த போது அணில் தனியாக இல்லை, கூட அதன் குட்டி அணிலும் இருந்தது. அதற்கு பயிற்சி வகுப்பு தான் அன்று நடந்தது. மரத்தின் மீது ஏறும் வரை அணில் குஞ்சு கற்று விட்டது.

அங்கிருந்து சுவருக்கு தாவுவது தான் அணில்குஞ்சின் பயம் போலும். பல முறை பொறுமையாய் முயன்ற தாய் அணில் இறுதியில் வென்றது குட்டி அணில் சுவருக்குத் தாவிய அந்த வெற்றி நிகழ்வுக்கு பதக்கம் தரவோ அல்லது அதை நேரடி ஒளிபரப்பு செய்யவோ அப்போது தனியார் தொலைக்காட்சி எதுவும் இல்லை.

அமெரிக்காவில் எனது கல்லூரி நண்பர்கள் வீட்டுத் தோட்டத்துக்கு அணில்கள் வந்து தினம் விருந்து சாப்பிடுவதாக அறிந்து கொண்ட இந்த நாளில், என் (மனப்)பையிலிருந்து பூனைக்குட்டி, மன்னிக்கவும் குட்டி அணில் வெளியில் வந்து விட்டது அதுவும் நாற்பது ஆண்டுகள் கழித்து!

October 24, 2021

தன் ஜியா வூ

தன் ஜியா வூ
தமாம் பாலா 20.10.2021

2010ம் ஆண்டு அது. பதினைந்தாண்டு ஸமில் ஸ்டீல் சௌதியில் பணிபுரிந்தபின் நான் ஸமில் வியட்நாமில் இணைந்தது அப்போது தான். 

ஸமில் தொழிற்கூடம் 1994ல் வியட்நாம் ஹனோய் நகரில் வந்தது, அவர்கள் இந்திய புனேயில் கால் பதித்த பல வருடங்களுக்கு முன்பே. நான் நோய்பாய் ஸமில் தொழிற்சாலையில் பொறியியல் திட்ட மேலாளராக பதவி உயர்வு பெற்று வந்தேன்.

எங்கள் அலுவலகத்தில் இருந்த ஒரு வரைபடம் பற்றியே இந்த கட்டுரை. அது ஒரு உலக வரைபடம். அதில் வியட்நாமும், மற்ற தென்கிழக்காசிய நாடுகளும் ஏன் இந்தியா கூட இடம் பெற்று இருந்தன.

வரைபடத்தில் எல்லா ஊர்களையும் வியட்நாமிய மொழியில் குறிப்பிட்டு இருந்தனர். இருநூறு ஆண்டு முன்பு வியட்நாம் மொழி எழுத சீன எழுத்துகள் பயனில் இருந்தனவாம். பிரஞ்சு காரர் வந்த பின், எழுத்து மொழி ஆங்கில எழுத்துகள், ஆனால் சற்று மாறுதலுடன், ஒலிக்குறிப்பான்களாக (phonetics) கமா, நெற்றித்திலகம், நெற்றி பிறை சந்திரன் போன்ற சிறுகுறிகள் இணைந்ததே வியட்நாம் எழுத்துகள்!

தமிழில் டகரமும் பகரமும் ஆங்கில d,t,b,p போன்று கிடையாது. இது பல நேரங்களில் பலுக்கல் குழப்பம் தரக்கூடியது. அதுவும் இந்தி மொழியில் ka, kha என்று பல்வேறு உள்-உச்சரிப்பு அதிகப்படிகள். அது போல வியட்நாமிய மொழியில் அ என்பதே நாலு ரகம் அல்லது நாலு ராகம். நாம் பேசினால் பாவம் அவர்களுக்கு புரியாது. ஒரே சொல்லுக்கு நான்கு வெவ்வேறு பொருள், வெவ்வேறு பலுவலில். 

கா என்றால் - கோழி, மீன், ரயில் நிலையம் மற்றும் காஸ் சிலிண்டர். என்ன தலை சுற்றுகிறதா?? சொல் இறுதி அவருக்கு முக்கியம் இல்லை, அது இல்லாமலே சொல் புரியும்.

இப்போது வரை படத்துக்கு வருவோம். இந்தியாவில் ஒரு ஊருக்கு "தன் ஜியா வூ" என்று மூன்று பதங்களில் குறிப்பிட்டு இருந்தது. வியட்நாமியர் பெயர் கூட அது போல மூன்று பெயர்களால் ஆனது, பால-சுப்பிர-மணியன் போல.

அவர்கள் குறிப்பிட்ட ஊர் அது என் சொந்த ஊர் 2010ல் ஹனோய் நகரம் 1000 ஆண்டு கொண்டாடிய போது உடன் இணைந்து மகிழ்ந்த நமது தஞ்சாவூர்!

இந்த பெயர் பார்த்ததும் எனக்கு இப்போது தமிழில் வரும் கலைச்சொற்கள் பற்றி ஏனோ ஒரு சிந்தனை வந்தது. கலைச்சொல் மூலச்சொல்லுக்கு கிட்டத்தட்ட அருகாமையில் உச்சரிப்பு வருவது வழக்கில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள ஒரு நிகழ்வு, பாரம்பரியம்.

நாம் இங்க்லீஷ் அதை ஆங்கிலம் என்கிறோம். வியட்நாமியர் அதை அங் என்கின்றனர். நாம் இண்டியன் என்றால் அவர் நம்மை அண்டோ என்கின்றனர்.

அது போல நாம் ஒரு கலைச்சொல் செய்தால், என் கற்பனையில் வாட்ஸ் அப், வாசப்பூ ஆகலாம், யூடியூப் யூதுடிப்பு ஆகலாம். தமிழறிஞர் மன்னிக்க, இப்போது கூகுள் புண்ணியத்தால் பொறிஞர் மற்றும் மருத்துவரும் ஆவார் தமிழறிஞராய். நன்றி மீண்டும் பேசுவோம்.

Er.தமாம் பாலா (எ) பாலசுப்ரமணியன்
220821 வியட்நாம் அ.த.ம 1.0

October 18, 2021

அதுவும் நானும்

அதுவும் நானும்
தமாம் பாலா

இந்த மதத்தில் 
வந்து பிறந்தாய் ஆகமம்
அல்லது கிராமத்து தேவதை 
தருகிறோம் 
பெற்றுக்கொள் என்றார்

அந்த மதத்தில் 
அஞ்சு முறை வெள்ளி 
அல்லது 
ஞாயிறு காலை ஆங்கில
முறைப்படி என்றார்

உருவ அருவ
சிங்க வானர வராகம்
எல்லாம் ஒரு சுழற்சியில் 
கண்டு 
இன்று கறுப்பணிந்து 
கண்ணாடியில்
பார்த்து பகுத்தறிந்தேன்
அதை




 

October 17, 2021

சக்திப்புள்ளி

சக்திப்புள்ளி
தமாம் பாலா

தெருக்கூத்து வைத்தார்
பார்த்தோம்
நாடகம் போட்டார்
கை தட்டினோம்

சினிமா காட்டினார்
விசிலடித்தோம்
பற்றாக்குறைக்கு 
பால் வார்த்தோம்.

வானொலியில் பேசினார்
விடிய விடிய 
கேட்டோம்

தொலைக்காட்சி பார்த்து
தொலைந்து போனோம்
காட்சிக்காக
கண்ணீருக்கு
காசுகொடுத்தோம்.

கண்டதை அருந்தி
கண் அவிந்து போகாதேயென
அதையும் தரமாக தந்தார் 
பெற்று மகிழ்ந்தோம்

இணையத்தில்,
புலனத்தில்
யார் எழுதியதென்று
தெரியாமல்
முன்னேற்றி மூழ்கினோம்.

இன்று 
திடீரென வந்துனின்று
உன்னை வளர்த்து
உயர்த்திப் பிடித்த
அன்னை தந்தை பற்றி
பெருமை கொள்ள
சொந்தமாய் எழுது
சக்திப் புள்ளி செய் 
அதை
சபையில் பேசு என்றால்
எங்கே செல்வோம் நாம்
என்ன செய்வோம்?