October 24, 2021

தன் ஜியா வூ

தன் ஜியா வூ
தமாம் பாலா 20.10.2021

2010ம் ஆண்டு அது. பதினைந்தாண்டு ஸமில் ஸ்டீல் சௌதியில் பணிபுரிந்தபின் நான் ஸமில் வியட்நாமில் இணைந்தது அப்போது தான். 

ஸமில் தொழிற்கூடம் 1994ல் வியட்நாம் ஹனோய் நகரில் வந்தது, அவர்கள் இந்திய புனேயில் கால் பதித்த பல வருடங்களுக்கு முன்பே. நான் நோய்பாய் ஸமில் தொழிற்சாலையில் பொறியியல் திட்ட மேலாளராக பதவி உயர்வு பெற்று வந்தேன்.

எங்கள் அலுவலகத்தில் இருந்த ஒரு வரைபடம் பற்றியே இந்த கட்டுரை. அது ஒரு உலக வரைபடம். அதில் வியட்நாமும், மற்ற தென்கிழக்காசிய நாடுகளும் ஏன் இந்தியா கூட இடம் பெற்று இருந்தன.

வரைபடத்தில் எல்லா ஊர்களையும் வியட்நாமிய மொழியில் குறிப்பிட்டு இருந்தனர். இருநூறு ஆண்டு முன்பு வியட்நாம் மொழி எழுத சீன எழுத்துகள் பயனில் இருந்தனவாம். பிரஞ்சு காரர் வந்த பின், எழுத்து மொழி ஆங்கில எழுத்துகள், ஆனால் சற்று மாறுதலுடன், ஒலிக்குறிப்பான்களாக (phonetics) கமா, நெற்றித்திலகம், நெற்றி பிறை சந்திரன் போன்ற சிறுகுறிகள் இணைந்ததே வியட்நாம் எழுத்துகள்!

தமிழில் டகரமும் பகரமும் ஆங்கில d,t,b,p போன்று கிடையாது. இது பல நேரங்களில் பலுக்கல் குழப்பம் தரக்கூடியது. அதுவும் இந்தி மொழியில் ka, kha என்று பல்வேறு உள்-உச்சரிப்பு அதிகப்படிகள். அது போல வியட்நாமிய மொழியில் அ என்பதே நாலு ரகம் அல்லது நாலு ராகம். நாம் பேசினால் பாவம் அவர்களுக்கு புரியாது. ஒரே சொல்லுக்கு நான்கு வெவ்வேறு பொருள், வெவ்வேறு பலுவலில். 

கா என்றால் - கோழி, மீன், ரயில் நிலையம் மற்றும் காஸ் சிலிண்டர். என்ன தலை சுற்றுகிறதா?? சொல் இறுதி அவருக்கு முக்கியம் இல்லை, அது இல்லாமலே சொல் புரியும்.

இப்போது வரை படத்துக்கு வருவோம். இந்தியாவில் ஒரு ஊருக்கு "தன் ஜியா வூ" என்று மூன்று பதங்களில் குறிப்பிட்டு இருந்தது. வியட்நாமியர் பெயர் கூட அது போல மூன்று பெயர்களால் ஆனது, பால-சுப்பிர-மணியன் போல.

அவர்கள் குறிப்பிட்ட ஊர் அது என் சொந்த ஊர் 2010ல் ஹனோய் நகரம் 1000 ஆண்டு கொண்டாடிய போது உடன் இணைந்து மகிழ்ந்த நமது தஞ்சாவூர்!

இந்த பெயர் பார்த்ததும் எனக்கு இப்போது தமிழில் வரும் கலைச்சொற்கள் பற்றி ஏனோ ஒரு சிந்தனை வந்தது. கலைச்சொல் மூலச்சொல்லுக்கு கிட்டத்தட்ட அருகாமையில் உச்சரிப்பு வருவது வழக்கில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள ஒரு நிகழ்வு, பாரம்பரியம்.

நாம் இங்க்லீஷ் அதை ஆங்கிலம் என்கிறோம். வியட்நாமியர் அதை அங் என்கின்றனர். நாம் இண்டியன் என்றால் அவர் நம்மை அண்டோ என்கின்றனர்.

அது போல நாம் ஒரு கலைச்சொல் செய்தால், என் கற்பனையில் வாட்ஸ் அப், வாசப்பூ ஆகலாம், யூடியூப் யூதுடிப்பு ஆகலாம். தமிழறிஞர் மன்னிக்க, இப்போது கூகுள் புண்ணியத்தால் பொறிஞர் மற்றும் மருத்துவரும் ஆவார் தமிழறிஞராய். நன்றி மீண்டும் பேசுவோம்.

Er.தமாம் பாலா (எ) பாலசுப்ரமணியன்
220821 வியட்நாம் அ.த.ம 1.0

No comments: