August 31, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 2)

(தமாம் பாலா)
2. கொங்கணேஸ்வரா ஸ்கூல் நினைவுகள்..

வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிறது என்றோ, வேறு ஒரு காரணத்துக்கோ இந்த பள்ளிக்கு மாற்றி விட்டார்கள் என்னை. மேலவீதியின் மத்தியிலே, சகாநாயக்கன் தெருவும் மேலவீதியும் சந்திக்கும் முனையிலே இருப்பது.. கொங்கணேஸ்வரர் கோயில். அந்த கோயிலின், வெளி பிரகாரத்திலே தான், எங்கள் பள்ளிக்கூடம். வேறு எங்கும் இது போல கோயில் பள்ளிக்கூடம் இருக்கின்றதா என்று தெரியவில்லை. பள்ளிக்கூடம், விளையாட்டுக்கு கிரவுண்டு எல்லாமே கோயில் பிரகாரம் தான்.

இந்த காலத்து பிள்ளைகள் போல ‘இடமாற்றத்தின் மன அழுத்தங்களோ’ ‘மூட் அவுட்டோ’ அன்று இருந்ததில்லை. கிட்டத்தட்ட, இடமாறிய ஆட்டுக்கொட்டில் ஆடு போல ‘டேக் இட் ஈஸி பாலிசி தான்’ மூன்றாம் வகுப்பு நினைவுகள் அதிகமாக இல்லை. நான்காம் வகுப்பில் ‘கந்தசாமி வாத்தியார்’ வந்து சேர்ந்தார். கறுப்பிலும் களையான முகம்; ஒளிரும் கண்களும், முன் தலைமுடி சுருளும், வசீகர புன்னகையுடன் பாடம் நடத்தும் அழகே, அழகு! அதே கந்தசாமி வாத்தியார், பல வருடங்களுக்கு பின், கல்யாணம் பண்ணி.. பிள்ளைகள் பெற்று.. கொஞ்சம் ‘டொக்கு’ மாதிரி ஆகிவிட்டார்; எல்லாம் காலமும், வாழ்க்கைக்கு தரும் விலையும் செய்யும் கோலம் போல!

ஐந்தாம் வகுப்பில், விநாயகராவ் வாத்தியார் வகுப்பு. அவருக்கும் கிட்டத்தட்ட ஓய்வு பெறும் வயது, அவரும் அவர் தம்பியும் கூட அந்த வயதிலும் பிரம்மச்சாரிகள் என்று ஞாபகம். “நல்ல மதிப்பெண் பெறும் மாணவனுக்கு, இந்த பேனாவை தருவேன்” என்று அடிக்கடி எடுத்து, காட்டுவார்.. வகுப்பில்.. அதே போல நான் மார்க்கு வாங்கிவிட்டேன்; ஆனால் அவரோ தருவதாகவே தெரியவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்து விட்டு.. “ஒரு நாள் போய், நீங்க சொன்ன மாதிரி, எனக்கு..பேனா குடுக்கறீங்களா சார்?” என்று வாய்விட்டே கேட்டு விட்டேன். அவர் பாவம், சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லியிருப்பார் போல..

நான் கேட்ட கேள்விக்கு.. “ராஜ்ஜியத்தில் பாதியையும், இளவரசியையும்.. கொடுங்கள் மன்னா” என்று நான் கேட்டது போல, ஒரு ‘அடிப்பட்ட பார்வை’ பார்த்தார்! கடைசி வரை பேனா தரவே இல்லை :( அப்போது, புரியவில்லை; வாத்தியாருக்கு கிடைப்பது இலவச சல்யூட்டும், வெற்று மரியாதை மட்டுமே, சில்லறை அல்ல என்று, எனக்கு!

பள்ளியிலே நாங்கள் பெரும்பாலானோர், கும்பலோடு கும்பலாக ‘எக்ஸ்ட்ரா நடிகர்கள்’ போல வந்து போவோம். சில பேர், இந்த கால ஹீரோயின்கள் போல, அம்மாவுடன் வருவார்கள். அதிலும் ராஜா என்று ஒரு பையன் இருந்தான்; ஸ்கூல் நடக்கும் போதே, அம்மாவும் அப்பாவும் அடிக்கடி அவனை பார்க்க வருவார்கள்; அவ்வப்பொது ஹார்லிக்ஸ் அது இது என அவர்கள் உபசாரமும் நடக்கும். ஒரு நாள், அந்த பையன் ராஜா, ஐயங்குளத்தில் விழுந்து இறந்து விட்டான் என்று தெரிந்தபோது, மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது; பாவம், மிகவும் போற்றி வளர்த்த பையன் :-(((

தஞ்சாவூரில், குளங்களும், அகழிகளும் ஜாஸ்தி; தஞ்சாவூர்காரர்கள் நிறைய பேர் வாழ்க்கையிலே அவற்றின் கோர நிழலும், சோக பதிவுகளும் இருக்கும். எங்கள் வாழ்விலும் அது விளையாடி விட்டது;அது பற்றி, இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

கொங்கணேஸ்வரா பள்ளியில் ஜானகிராமன் என்று ஒரு தலைமை ஆசிரியர் இருந்தார். நரைத்த தலையும், தாடியுமாக சிரித்த முகத்துடன் ஓடி ஓடி வேலை செய்வார். ஐந்தாம் வகுப்புக்கு மேல் கொங்கணேஸ்வரா பள்ளியில் வகுப்புகள் இல்லாததால், ஆறாம் வகுப்புக்கு எங்கள் அனைவரையும் அணிவகுத்து நடத்திச்சென்று.. சகாநாயக்கன் தெருவில் இருக்கும் கல்யாணசுந்தரம் உயர்நிலைப்பள்ளியில் சேர்த்து விட்டார், அந்த புண்ணியவான்! :)))

பள்ளி பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்; வீட்டுக்கும் போய் வரலாமா? கொங்கணேஸ்வரா பள்ளிக்கு பக்கத்து தெருவில் நுழைந்து சுமார் ஒரு பர்லாங்க் நடந்தால், முருகன் ஆசிரமம் வரும், இடது புறம் திரும்பினால், காளி கோயில் முதலில், அதன் பிறகு மேல அலங்கம் ஆரம்பம்!

தெருவின் இடது புறமெல்லாம் வீடுகள்; வலது பக்கத்தில், உயர்ந்த.. கோட்டை மேடு மட்டுமே. எங்கள் குடியிருப்பு அந்த தெருவில், நான்காவது அல்லது ஐந்தாவது என நினைக்கிறேன். எங்கள் காம்பவுண்டுக்கு முதல் வீடாக, ஒரு பெரிய மாளிகை போன்ற வீடு இருந்தது. அதில் ஒரு போலீஸ் அல்லது சிஐடி ஆபீஸ் இருந்தது; பின்னர் தான் அந்த வீட்டில் டாக்டர் மாமா குடும்பத்தினர் வந்தனர். மாமா என்றால், சொந்தம் என்று அர்த்தம் இல்லை; அக்கம் பக்கம் அனைவருமே, மாமா/அத்தை தானே? :-))
எங்களுக்கு அடுத்த வீட்டில், எல்.வெங்கடேச ஐயங்கார் என்று ஒரு பாகவதர் இருந்தார்; பெண் போன்ற அழகான கூந்தலை முடித்து ஹார்மோனியம் வைத்து கர்நாடக சங்கீதம் பயிற்சி செய்த படி இருப்பார். மாமி, பெரிய குங்கும பொட்டு வைத்து (டேஞ்சர் சிக்னல்?!) சிரித்த முகமாக இருப்பார். அவர்கள் வீட்டில் அண்ணன்கள், ஒரு அக்கா என்று நினைக்கிறேன்; என் பெஸ்ட் ஃப்ரெண்டு முரளியும் அங்கே தான் இருந்தான், பின்னால் ஹைதராபாத்தில் அம்மா அப்பாவிடம் போய் விட்டான்!

இப்போது, எங்கள் வீட்டிற்கு வருவோம். அந்த காம்பவுண்ட் முன்பகுதி திறந்த வெளியாக, செடி கொடிகளுடன் இருக்கும். நுழைவாயிலில் மல்லிகை கொடி ஆர்ச். அந்த திறந்த வெளியிலே ஒரே ஒரு அவுட் ஹவுஸ் இருக்கும். அதிலே ஒரு அம்மாவும் மகளும் மாத்திரம் வசித்தனர். மகளை, நாங்கள் அத்தாச்சி என்போம்; தஞ்சை மத்திய நூலகத்தில் பெண்கள்/குழந்தைகள் பிரிவில் வேலை செய்ததால், எங்களை அடிக்கடி அங்கு அழைத்துச்செல்வார், புத்தகம் படிக்கும் வழக்கமும் வந்தது, அதனால். அத்தாச்சியின் அம்மாவுக்கு, அடிக்கடி வலிப்பு வந்து, பல்லு கிட்டி விடும்; எல்லோரும் போய் முதல் உதவி செய்வார்கள்!

இப்போது, உள் வாயிலை தாண்டி போனால், இடது புறத்தில் மூன்று வீடுகள்.. வலது புறத்தில் ‘ட வடிவில்’ இன்னொரு வீடு.. ட வடிவத்துக்குள், பெரிய சிமெண்டு தளம்! அந்த காம்பவுண்டுக்குள்ளேயே இரண்டு முறை வீடு மாறிவிட்டோம். மாலை வேளையிலே நானும் நண்பன் உமா சங்கரும், மல்லிகை காம்பவுண்டின், துணி துவைக்கும் கல்லின் மேல் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருப்போம்; சாக்லேட் பேப்பர் எல்லாம் சேகரித்து, கடையில் கொடுத்தால், பேனா கொடுப்பார்கள் என்று கதை விட்டுக்கொண்டிருப்பான், நானும் ஆவென்று வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருப்பேன்..

மாலை நேரத்தில், வீதியே களை கட்டிவிடும். கிரிக்கெட்டு, பம்பரம், கோலிகுண்டு, கிட்டிபுள் என்று சீசனுக்கு சீசன் பயல்கள் தெருப்புழுதியிலேயே திரிவார்கள். எப்போதாவது அப்பா கூட கிரிக்கெட்டில் கலந்து கொண்டு பவுல் செய்வார். எங்கள் காம்பவுண்டுக்குள் ராமமூர்த்தி மாமாவும், புனிதா அக்காவும் புதிதாக கல்யாணம் ஆகி குடிவந்தனர். அக்காவுக்கு கொஞ்சம் கிராமத்து களையோடு, மஞ்சள் பூசிய முகம். ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு போன போது.. முட்டையை உடைத்து வாயில் ஊற்றி விட்டார்! அதுவும் நன்றாகத்தான் இருந்தது. அக்கம் பக்கம் இருந்தவர்களுடன் அம்மா,அப்பாவுக்கு நல்ல நட்பும், பழக்கமும் இருந்தது. இன்றைய சென்னை ஃப்ளாட்டுகளில், பக்கதில் இருப்பவர் யார் என்றே தெரியாத தீவு வாழ்க்கை, அன்று இல்லை அங்கே. மாலை,இரவு வந்து விட்டால், இரவு நிலவு ஒளியில் பெரியவர்கள் செஸ் விளையாடுவார்கள்; வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம்.

பள்ளியில் இருந்து வரும்போது, அணில், முயல் என்று சிறுவர் பத்திரிக்கைகள் வாங்கி மகிழ்வோம். ரத்தம் குடிக்கும் மனிதர்கள் என்று ஒரு திகில் கதை கூட முயலில் படித்த ஞாபகம். முத்துகாமிக்ஸ், இரும்புக்கை மாயாவியும் அதில் சேர்த்தி.

பக்கத்து வீட்டு, அண்ணனோடு, சிவகங்கை பூங்கா சென்று, பெரிய மனிதன் போல திறந்திருக்கும் எலெக்ட்ரிக் கம்பத்தையெல்லாம் பார்த்து கமெண்ட் அடித்து, கவனக்குறைவாய் ஊஞ்சலில் அடிபட்டு, ராசா மிராஸ்தார் மருத்துவமனை தாமஸ் ஹாலில், க்ளோரஃபார்ம் வாசத்தில், கன்னத்தில் தையல் போட்டுக்கொண்ட அனுபவமும் கிடைத்தது எனக்கு நாலாம் வகுப்பில்; முகம் கொஞ்ச நாளுக்கு அனுமார் போல தமாஷாக ஆகிவிட்டது அப்போது!

பைத்தியக்காரர்கள் போல தெருத்தெருவாக, சிகரெட் அட்டைகள் பொறுக்கி, காலி பெட்டிகளை கடையில் 10-20 பைசாவுக்கு வாங்கி வருவோம். சிசர்ஸ்,வில்ஸ்,சார்மினார்,பாஸிங் ஷோ என்று பல ப்ராண்டுகள். வீடு முழுவதும் பாம்பு போல வளைந்து வளைந்து பெட்டிகளை நிறுத்தி விட்டு.. முதல் பெட்டியை தள்ளி விட்டால்.. “அபூர்வசகோதரகள் குள்ள கமல் செய்யும் செயின் ரியாக்ஷன் போல’ அழகாக பெட்டிகள், விழும்; திரும்ப அடுக்கி, திரும்ப தள்ளிவிட்டு.. நாளெல்லாம் ஒரே பிசியாக இருக்கும்! :-))

காளிகோயில் பக்கத்து பிள்ளையார் கோயிலில், ‘பிள்ளையார் பிள்ளையார்.. பெருமை வாய்ந்த பிள்ளையார்” என்று பாடி, பொறிகடலை வாங்குவோம். முருகன் ஆசிரமத்துக்கு வருகை தரும் வாரியார், மதுரை சோமுவை வேடிக்கை பார்த்து வருவோம்; “மருதமலை மாமணியே, பாடுறீங்களா, ஐயா?.. சாயந்தரம் பாடுவேன் தம்பி, எல்லாரும் வரும்போது, அப்போ வந்து பாருங்க”

அன்பான அப்பா, அறிவான அம்மா, அழகான தம்பி என்று வாழ்க்கை, ஒரு தெளிந்த நீரோடை போல, இனிதாக, இன்பமாக, இசைவாக சென்று கொண்டிருந்தது.. கடலில் மிதக்கும் கப்பல் போல, காற்றில் மிதக்கும் பறவை போல வாழ்க்கை முழுவதுமே, சந்தோஷமாக போய்விடுகிறதா, என்ன? அவ்வப்போது, புயலும் வீசும் அல்லவா? எங்கள் வாழ்விலும் அப்படி ஒரு புயல் வீசியது.. அதைப்பற்றி, விரைவில் எழுதுகிறேன், நண்பர்களே!


-தஞ்சையிலிருந்து தமாம் வரை தொடரும்..

August 30, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 1)

தஞ்சையிலிருந்து தமாம் வரை...
(தமாம் பாலா)

1. ராணி வாய்க்கால் ஸ்கூல் நினைவுகள்..
சேரனின் ஆட்டோகிராப் படமும், ஞாபகம் வருதே பாடலும் நமக்கு பழைய நினைவுகளை மீட்டுத்தருபவை. சமீபத்தில் வந்த, தங்கர் பச்சனின் பள்ளிக்கூடம் திரைப்படமும் அதே வகை தான்.

வலைபதிவாளர்களில், எனக்குத் தெரிந்த வரையில் துளசி டீச்சரும், ராமலக்ஷ்மியும் தங்களது பள்ளி நாட்களை மிக அழகாக நினைவு கூர்ந்து எழுதியிருக்கின்றனர்.

நேற்று காலை என்ன சாப்பிட்டோம், போனவாரம் எங்கு போனோம் என்பதெல்லாம் மறந்து விடுகிறது இந்த நாற்பதுகளின் தொடக்கத்தில்; ஆனால், பள்ளிக்கூட கால நினைவுகள் மட்டும் பல்லில் சிக்கிய உணவு துகள் போல, உறுத்திக்கொண்டே இருக்கிறது.. மனதில் பசுமையாக!

எனது பள்ளி நாட்களில், ரொம்ப சுவாரசியமாக எதுவும் நடந்துவிடவில்லை. இருந்தாலும் இப்போது நினைத்து பார்க்கையில், விரல் விட்டு எண்ணும் சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன..

அது 1970ம் வருடம். இப்போது போல பெற்றோர்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்க, முட்டி மோதி.. விண்ணப்ப படிவத்துக்கே தேவுடு காக்க வேண்டிய நிலை இருக்கவில்லை.

அப்பா அலுவலகம் போய்விட, பக்கத்து வீட்டு தாத்தா ஒருத்தர் ஸ்கூலில் சேர்த்து விட்ட நினைவு. எல்கேஜி/ யூகேஜி எல்லாம் இல்லை.. நேரடியாக முதல் வகுப்புதான். சேர்ந்த பள்ளிதான், ராணிவாய்க்கால் பள்ளிகூடம். பெயரே ஒரு ராஜா காலத்தை நினைவுபடுத்துகிறது அல்லவா? உண்மையில் அங்கு ராணியும் இல்லை, வாய்க்காலும் இல்லை; அங்கு பக்கத்தில் இருந்ததெல்லாம், பெரிய.. வாய்க்கால் போன்ற சாக்கடைதான்! :)) நம் தஞ்சாவூர்தான், சந்துகளுக்கும், சாக்கடைகளுக்கும் உலகப்பிரசித்தி பெற்றதாயிற்றே!

பள்ளிக்கூடத்திலே, சகுந்தலா டீச்சர் க்ளாஸ். அவர் புதிதாக ஆசிரியர் பணியில் சேர்ந்தவர் போல; அன்பும், ஆர்வமும் குறையாமல் இருந்தார். பாடமும் நடக்கும், அரட்டையும் நடக்கும். நானும் ராஜாவின் பார்வை என்று பாடிக்காட்டுவதும், ரவா உப்புமா எப்படி செய்வது என்று செய்வது என்று சொல்வதும் (வாணலியிலே சொய்ங்னு... தண்ணிய ஊத்தணும்!), ஒரே ரவுசு பாண்டி தான் போங்கள். (ரவா உப்புமா செய்வது எப்படி என்று, இப்போது, மறந்து விட்டது!) சகுந்தலா டீச்சரும் என் நச்சரிப்பு தாங்காமல், ஒரு நாள் வீட்டிற்கு வந்து, அம்மா கையால் ரவா உப்புமா சாப்பிட்டு போனது, தனி கதை!

அது ஒரு அமைதியான, பொருளாதார ரீதியாக எதிர்பார்ப்புக்களோ, தேடுதல்களோ இல்லாத ஒரு காலம்; வீடு, பள்ளி, வீடு.. நடுநடுவே சைக்கிள் ரிக்.ஷா, சினிமா, மிஞ்சிபோனால் சரவண பவன் ஹோட்டல், அதுவே பெரிய ஆடம்பரம்!

அம்மாவின் தயாரிப்பாக, அர்த்தம் புரியாமலேயே, நிறைய திருக்குறள்களை மனப்பாடம் செய்து பள்ளியில் ஒப்பிப்பதும் உண்டு. கற்பூரம் போல கண்டதையெல்லாம் கப்பென்று பற்றிக்கொள்ளும் மனதும், வயதும் அன்று! (இப்போது, அது பச்சை வாழை மட்டை ஆகிவிட்டது.. ஹி.ஹி..)

ஒண்ணாம் வகுப்பில் இருந்த உற்சாகம் எல்லாம், ரெண்டாம் வகுப்பில் சுத்தமாக வடிந்து விட்டது. இந்த முறை வந்த டீச்சர், ஒரு வயதான மராட்டி பாய் என்று நினைவு! வாழ்ந்து முடித்த அலுப்பும், சலிப்பும் முகத்தில் நிரந்தரமாக ஒட்டியிருக்கும்; அவரது வீடுதான், பள்ளியின் எக்ஸ்டென்ஷன்.. அவ்வப்போது சமையலை பார்க்க எழுந்து போய்விடுவார். க்ளாஸும் அவரைப்போலவே, அழுது வடியும். அவரது கணவர், பள்ளியின் கரஸ்பாண்டட் என்றும் நினைவு. பார்ட் டைம் ஆக, மஞ்சள் காமாலைக்கும் மந்திரிப்பார்; இலை/பேப்பர் போட்டு மூடிய மந்திரித்த தண்ணீர் டம்பளருடன், நிறைய பேர் அந்த ஏரியாவில் நடமாடுவதை பார்க்கலாம் :))

இப்போது, விடு மாறி வெகு தொலைவுக்கு போய் விட்டோம். பள்ளி இருந்தது வடக்கு வீதியின் நடுவில்; நாங்கள் வீடு மாறியது, மேல வீதி தாண்டி, முருகன் ஆசிரமம், காளி கோயில் அருகே.. மேல அலங்கத்தில்.. கோட்டைமேடு பார்த்த வீதியில். எப்படியும் ஒரு கிலோமீட்டருக்கு மேல் இருக்கும். தனியாக, நடந்து வந்து திரும்பி போக வேண்டும். (இப்போது குட்டிகள் என்னவென்றால், அடுத்த தெரு பள்ளிக்கே.. ஆட்டோ/ வண்டி என அட்டகாசம் பண்ணுதுகள்.. :-))

பள்ளி முடிந்ததும், வகுப்புத்தோழிகளுடன் புறப்பாடு. தமிழ் மணியும், சுபாஷினியும் கூட வருவார்கள். சிரிப்பும் கும்மாளமுமாக, அவர்களை தத்தம் வீடுகளில் சேர்த்து விட்டு.. சமத்தாக என் வீட்டிற்கு திரும்பி விடுவேன். இப்படியாக.. ராணி வாய்க்கால் பள்ளியின் தொடர்பு ரெண்டாம் வகுப்போடு முடிந்து விட்டது; மூன்றிலிருந்து.. கொங்கணேஸ்வரர் கோயில் பள்ளி.. (வரும் பதிவுகளில் பார்க்கலாம், விட்டுருவோமா உங்களை அவ்வளவு சுலபமாக?!)

பின்னாளில், தமிழ்மணியையும் சுபாஷினியையும், ஆறாம் வகுப்பில் சேரும் போது கே.ஹெச்.ஸ் பள்ளியில் சேரும்போது தொலைவிலிருந்து பார்க்க நேரிட்டது; இப்போது, சிறு வயதின் குழந்தைத்தனம் மறைந்து, புதிதாக வெட்கம்(?!) தோன்றி விட்டதால், அவர்களிடம் என்றுமே பேசும் வாய்ப்பு கிட்டவில்லை!!

இன்று ஏறத்தாழ 36/37 ஆண்டுகள் கழித்து இந்த பதிவை எழுதும்போது.. எனக்கே பத்தாவது படிக்கும் மகனும் எட்டாவது படிக்கும் மகளும் இருக்கிறார்கள். இந்நேரம் தமிழ்மணியும், சுபாஷினியும் எங்கே எப்படி இருக்கிறார்கள், தஞ்சையிலா, சென்னை, மும்பையிலே அல்லது வெளிநாட்டிலா? தெரியவில்லை... அவர்களுக்கு திருமணமாகி மகன் இருந்தால் கல்லூரி படிப்பை முடித்தும், மகள் இருந்தால், பேரன் பேத்தி கூட எடுத்திருக்கலாம், யார் கண்டது?? :-))))

-தஞ்சையிலிருந்து தமாம் வரை தொடரும்..

August 21, 2008

யாருங்க, அது பாலோ கொயில்ஹொ?


பாலோ கொயில்ஹோ-ஒரு அறிமுகம்
(நன்றி: ஆனந்த விகடன்)



நழுவும் நதி!
(கார்த்திகேயன்)



கேரளக் காயல் நதிப் பயணத்தின் பரவசத்தை ஏற்படுத்துபவை பாலோ கொயில்ஹோவின் எழுத்து. பிரேசிலிய எழுத்தாளரான இவர், வலிக்காத வார்த்தைகளால் வாழ்க்கையின் நழுவிய பக்கங்களை வாசிக்கக் கொடுக்கிறார். 'தி பில்கிரிமேஜ்', 'தி அல்கெமிஸ்ட்' என இவரின் பெஸ்ட் செல்லர் புத்தக வரிசையில் லேட்டஸ்ட்... 'லைக் தி ஃப்ளோயிங் ரிவர்'. நழுவும் நதியிலிருந்து சில துளிகள்...

பேராசிரியர் பாடத்தைத் துவக்கும் முன் ஓர் இருபது டாலர் நோட்டினை மாணவர்களிடம் காட்டினார். ''யாருக்கு இந்த நோட்டு வேண்டும்?'' அனைவரின் கைகளும் உயர்ந்தன. அந்த நோட்டை சிறு பந்தாகக் கசக்கிச் சுருட்டியவர், ''இப்போது யாருக்கு வேண்டும்?'' என்றார். மீண்டும் எல்லா கைகளும் உயர்ந்தன. ''இப்போதும் வேண்டுமா பாருங்கள்!'' என்றவர் அந்த நோட்டை பிளாக்போர்டில் தேய்த்து, தரையில் புரட்டி அழுக்காக்கினார். அப்போதும் எல்லாரும் ஹேண்ட்ஸ் அப்! ''இதை எப்போதும் மறக்காதீர்கள். இந்த இருபது டாலர் நோட்டினை நான் என்ன பாடுபடுத்தினாலும் அதன் மதிப்பு 'இருபது டாலர்' என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். இதுதான் வாழ்க்கை. நாம் எத்தனை அவமதிப்புகள், விரக்திகள், வேதனைகள், சோகங்கள், சதிகளை எதிர்கொண்டாலும் நமக்கான மதிப்பு குறையாது. நாம் எப்போதும் நாம்தான்!''
அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற ஷிமொன் பெரெஸ் சொன்ன குட்டிக் கதை இது. ஒரு குரு தன் சிஷ்யர்களிடம், ''ஒரு நாளின் இருள் விலகி வெளிச்சம் பரவும் அந்தக் கணத்தை மிகச் சரியாக நாம் எப்படிக் கண்டுபிடிப்பது?'' என்று கேட்டார்.

'இது நாய், இது ஆடு என்று தெளிவாகக் கூறுமளவுக்கு வெளிச்சம் பரவும்போது!', 'ஆலமரத்துக்கும் அரசமரத்துக்குமான வித்தியாசம் தெரியும் சமயம்!' என்பன போன்ற இன்னும் பல விளக்கங்கள். 'இவை எதுவுமே இல்லை!' என்ற குருவிடம் சரியான பதிலைக் கேட்டனர் மாணவர்கள். ''நமக்கு அறிமுகமே இல்லாதவர் நம்மைத் தேடி வந்தாலும், நம் சகோதரர் என நினைத்து வரவேற்று உபசரிக்கும் அளவிலான இருள் விலகி ஒளி பரவும் கணம்!'' என்றார் குரு. எனவேதான், அவர் குரு!

'மனிதனிடம் உள்ள விசித்திரமான குணம் என்ன?' என்று என் நண்பன் ஜேமி கொஹென்னிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில்... ''மனிதனின் முரண்பாடுகள். 'பெரியவனாக வேண்டும்' என்று நமக்கு அத்தனை அவசரம். வளர்ந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது 'அவசரமாகக்' கடந்து வந்த குழந்தைப் பருவத்துக்காக ஏங்குவோம். பணம் சம்பாதிப்பதற்காக உடலை வருத்தி வீணாக்குவோம். அதைச் சீராக்குவதற்காகச் சம்பாதித்த பணத்தைச் செலவழிப்போம். எதிர்காலத்தை நினைத்து மிகவும் கவலைப்பட்டு, நிகழ்காலத்தையும் ரசித்து ருசிக்கத் தவறிவிடுவோம். 'எனக்கு இறப்பே இல்லை' என்பது போல ஆர்ப்பாட்டமாக வாழ்வோம். 'இந்தப் பூமியில் வாழவே இல்லை' என்பது போன்ற கவலையுடன் இறப்போம்!''

1981-ன் ஒரு பனிப் பொழுதில், என் மனைவியுடன் பிரேக் நகர வீதிகளில் நடந்துகொண்டு இருந்தேன். பிரேக் நகரக் கட்டடங்களை ஓவியங்களாக வரைந்து விற்பனைக்கு வைத்திருந்தான் ஓர் இளைஞன். பொதுவாக, பயணங்களின்போது சுமைகள் எனக்குப் பிடிக்காது என்றாலும் ஏனோ அவனிடம் ஒரு படத்தை வாங்க வேண்டுமெனத் தோன்றியது. படத்துக்குக் காசு கொடுக்கும்போதுதான் கவனித்தேன், அந்த மைனஸ் 5 டிகிரி குளிரிலும் அவன் கைகளில் கிளவுஸ் இல்லை. 'கிளவுஸ் அணிந்தால் பென்சில் பிடித்து படங்களைச் சரியாக வரைய முடிவதில்லை!' என்றவனை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவனுக்கும் என்னைப் பிடித்திருக்கும் போல, 'பிரேக் நகரம் எப்படியெல்லாம் தன்னை வரையத் தூண்டுகிறது, இந்த சீஸனில்தான் நகரின் உச்சகட்ட அழகு மிளிரும்!' என்று ஏதேதோ பேசத் துவங்கி விட்டான். 'உங்களுக்கு இது எனது பரிசு. காசு எதுவும் வேண்டாம்!' என்று பிடிவாதமாக எனது மனைவியை வரையத் துவங்கினான். அவன் படம் வரைந்து முடிக்கக் காத்திருந்தபோதுதான் விநோதமான அந்த விஷயம் எனக்கு உறைத்தது. அத்தனை நேரம் நாங்கள் உரையாடிக்கொண்டு இருந்தாலும் இருவருக்கும் மற்றவர் மொழி தெரியாது. சிரிப்பு, மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, முகபாவனைகளாலேயே இத்தனை நேரமும் மனம்விட்டுப் 'பேசிக்'கொண்டு இருந்தோம் என்பது. பிறருடன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள வார்த்தைகள் அற்ற உலகத்தில் நுழைந்தாலே போதும். அந்த உலகத்தில் எல்லாமே தெளிவு!

மொராக்கோ நாட்டில் இருந்து வந்த நண்பர் வித்தியாசமான 'ஆதாம்-ஏவாள்' கதை சொன்னார். அவர்கள் நாட்டில் உள்ள சில குறிப்பிட்ட பாலைவனப் பழங்குடியினர்களின் நம்பிக்கையாம் அது. ஈடன் தோட்டத்தில் ஏவாள் நடந்துகொண்டு இருந்தபோது குறுக்கிட்ட சாத்தான், ''இந்த ஆப்பிளைச் சாப்பிடு!'' என்றது. கடவுளின் கட்டளை காரணமாக மறுத்த ஏவாளிடம், ''இதைச் சாப்பிட்டால் நீ இன்னும் அழகாவாய்! ஆதாமுக்கு உன்னை இன்னும் பிடிக்கும்!'' என்று ஆசைகாட்டியது சாத்தான். ''அதற்கு அவசியம் இல்லை. வேறு பெண்களே இல்லாததால், ஆதாமுக்கு என்னைப் பிடிக்கவே செய்யும்'', ''ஹா ஹா ஹா! நீதான் அப்படி நினைத்துக்கொண்டு இருக்கிறாய். ஆதாம் இன்னொருத்தியை ஒளித்துவைத்திருக்கிறான்'' என்ற சாத்தான், ஏவாளை அழைத்துக்கொண்டு மலையுச்சிக் கிணற்றுக்குச் சென்றது. ''இந்தக் குகைக்குள்தான் அவள் இருக்கிறாள்!'' என சாத்தான் கிணற்றைக் காட்ட, உள்ளே எட்டிப் பார்த்தாள் ஏவாள். தண்ணீரில் 'அழகிய பெண்ணின்' முகத்தைப் பார்த்த ஏவாள், பதற்ற பயத்தில் உடனே ஆப்பிளைக் கடித்துச் சாப்பிடுகிறாள். தண்ணீரில் தன் பிம்பத்தை உணர்ந்து பதறாதவர்களுக்கு, 'இழந்த சொர்க்கம்' நிச்சயம் என்று இப்போதும் அந்தப் பழங்குடியினர் நம்புகிறார்கள்!

சிட்னி துறைமுக அழகை நான் ரசித்துக்கொண்டு இருந்தபோது என்னிடம் வந்த ஆஸ்திரேலியர் ஒருவர், ''இந்த பேப்பரில் இருக்கும் விளம்பரத்தைப் படிக்க முடியுமா? மிகவும் சிறிய எழுத்துக்களாக இருக்கின்றன!'' என்று கேட்டார். நான் வீட்டிலிருந்து கண்ணாடி எடுத்து வராததால், என்னாலும் படிக்க முடியவில்லை. நான் அவரிடம் மன்னிப்பு கேட்டதற்கு, ''ஓ! அது பரவாயில்லை. கடவுளுக்கும் கண்களில் இதே குறைபாடு உண்டு. ஆனால், அது வயதாவதால் இல்லை. யாராவது ஏதேனும் தவறு செய்தால், அதைக் கவனிக்காமல் இருக்க கடவுளே விரும்பி ஏற்றுக்கொண்ட குறைபாடு. தவறிழைத்தவர்களுக்குத் தன்னால் பெரிய தண்டனை எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கிறார் கடவுள்.'' ''அப்போது நல்லது செய்பவர்களையும் கடவுள் கவனிக்காமல் கடக்க வாய்ப்பிருக்கிறதே?'' என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன். சின்னச் சிரிப்புடன் நடக்கத் துவங்கிய அந்த ஆஸ்திரேலியர் திரும்பினார், ''ஆனால், கடவுள் ஒருபோதும் தன் கண்ணாடியை வீட்டில் மறந்துவைப்பதில்லை!''

பயணங்களால் நான் கற்றுக்கொண்டது நிறைய. ஒரு பயணத்தைச் சுவாரஸ்யமாக்க எனது டிப்ஸ்...

முடிந்தவரை தனியாக பயணித்துப் பழகுங்கள். திருமணமாகியிருந்தால் மனைவி, குழந்தைகளுடன் மட்டுமே! பழகிய பெருங் கும்பலுடனே வெளியூரிலும் பயணித்தால், அதே மொழி, அதே சிரிப்பு, அதே கோபம், அதே சூழல் என எந்த வித்தியாசமும் இல்லாத பயணமாக இருக்கும். உங்கள் சொந்த மொழியிலேயே பேசி, உங்கள் நண்பனே உங்களுக்கு வழிகாட்டி, சொந்த ஊர் கதைகளையே அங்கும் பேசுவதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடக் கூடும்! அந்த ஊரின் மொழியில் உங்களுக்கு ஒரு வார்த்தைகூடத் தெரியாவிட்டால்தான் பயணம் ருசிக்கும். மொழி தெரியவில்லையே என்ற எந்தப் பயமும் வேண்டாம். ஒரு வார்த்தைகூடத் தெரியாத ஊரில் எனக்கு 'கேர்ள் ஃப்ரெண்ட்'கள்கூடக் கிடைத்திருக்கிறார்கள். நிச்சயம் உங்களைப்பற்றி அறியாதவர்கள் உங்களைக் கைவிட மாட்டார்கள்!

எந்த ஒரு நகரத்தையும் இரண்டொரு நாளில் கண்டு களித்திட முடியாது. ஒரு நகரமும் பெண்ணைப் போலத்தான். அணு அணுவாக அனுபவித்தால்தான் சுகம்!

August 10, 2008

'தல'விதி

'தல'விதி
(தமாம் பாலா)

கருமம் புடிச்ச அந்த களுதைங்க
காம வெறி புடிச்ச களுசடைங்க
மனோகரு நம்பியாரு அசோகனு
மறுபடியும் மறுபடியும் பொண்ண



மறிச்சு கற்ப அழிச்சுட துடிச்சாங்க
மறக்காம பேசி துடிக்க வச்சாங்க
காரியம் முடியுரத்துக்கு மின்னால
கதவ ஒடச்சு நொழஞ்ச வாத்யாரு


பொரட்டி எடுத்தாரு பேமனிகள
பொத்தி அணச்சாரு குட்டியத்தா..
கற்பூரம் ஏத்தி கும்பிட்டே நானு
கையிலே பச்ச குத்தி கிட்டேன்


அப்புறமா தா தெரிஞ்சுது அவனுகள
அவகிட்ட அனுப்சு வெச்சது அவரு
அடிக்கு அஞ்சு ரூபா ஒதையும் ஒரு
நடிப்புன்னு அப்பதான் நல்லா புரிஞ்சது


திரையில நாயகரெல்லாம் வாள்கையில
தினுசா திரிய, சினிமா ரவுடி மாலபோட்டு
சபரி மல ஏறுறான் சாமிய கும்புடுறா
சட்டுனு ஒரு விசயம் பொறி தட்டுது


அடிக்கிறது மட்டு தலைவன் தகுதி
அடி வாங்குறது தொண்ட தலவிதி
அடி வாங்குறவ திருப்பியடிக்க சொல்ல
அப்போ மாறுது நாட்டோட தலவிதி!!!

August 6, 2008

மடக்கு

மடக்கு
(கார்த்தி)

கவிதையே
எங்கே சென்றாய்
என்னைக் கண்டு பயம ஏன்


நான் என்ன செய்தேன்
ஏன் என்னைச் சேராமல் நிற்கிறாய்
நானும் எழுதுகிறேன்
கவிதையென்று

மடக்கி மடக்கி
உரைநடையை
என்ன செய்ய

நானறிந்த தமிழ் அப்படி
கவிக்கோ தயவிருந்தால்
வென்றிடலாம் கவிதையுலகை
தயவொன்று கிடைத்திடுமா

நான் படித்த
வைரமுத்து தமிழ்
கொண்டு அறிந்தேன்
இப்படித்தான்

மடக்கி மடக்கி
எழுதினால்
கவிதையென்று

எங்களூரில் இனிப்பொன்று
உண்டு மடக்கு என்று
நாடா போன்று மாவை
மடக்கி மடக்கி பொறித்து
இனிப்பேற்றி வைப்பார்கள்

அதைப் பார்த்து உண்டு
மகிழ்ந்ததனால்
எழுதினாரோ
கவிதையை
மடக்கி மடக்கி

நானும் உண்டதனால்
எழுதிப்பார்க்கிறேன்
மடக்கி மடக்கி
வந்து விடாதா
கவிதையும் என்று

மடக்கி மடக்கி
முயல்வதைப் பார்த்து
மடங்காமல்
தறிகெட்டு ஓடுகிறது
கவிதை
எனைக்கண்டு!

சோகத்துடன்
வைரமுத்துவுக்கு பக்கத்து ஊர்க்காரன்