December 9, 2018

கொடுப்பினை

கொடுப்பினை
தமாம் பாலா

நல்வினையால் எப்போதும்
நன்மையே விளையும் எனும்
நம்பிக்கை உண்டு ஒருபுறம்

ஊழ்வினையால் வாழ்க்கை
பாழ்படவும் நேரும் என்பதும்
ஆழ்மன எண்ணம் மறுபுறம்

செய் வினை கொள் வினை
செல்வத்தின் அடிப்படையில்
பல்கிப் பெருகிடும் வரையில்

அவ்வியான் ஆக்கமும் நல்ல
செவ்வியான் கேடும் தேடும்
பவ்வியமாய் காரணங்களை

உழைப்பினை மூலதனமாக்கி
இழைத்து இரவு பகல் பாராது
அழைத்த குரலுக்கு ஆதரவுக்

கரம் நீட்டும் கரும வீரருக்கும்
நிரந்தர சிரமமும் ஏது அவரது
பரந்த மனமே கொடுப்பினை

November 24, 2018

மாறுதல்

மாறுதல்
தமாம் பாலா

பெற்றோர் உடன் பிறந்தோர் எனது கரம்
பிடித்தவள் பிள்ளைகளுடன் என்னையும்
நேசிக்க இன்று கற்றேன் ஒரு மாறுதலாக

பூமிப்பந்தை மொத்தமாக தன் முதுகில்
சுமக்கும் அட்லாஸ் மனோபவத்தையும்
கை விட்டேன் நானும்  ஒரு மாறுதலாக

தெருவோர தள்ளுவண்டி காய்கனியின்
கறார் பேரம் விட நிரம்பும் சில வயிறு
நான் முடிவு செய்தேன் ஒரு மாறுதலாக

சாலை பயணத்து சிக்கலில் பிழைக்கும்
ஏழை ஓட்டுனர் கேளாது கொடுத்தேன்
அவரது முகமும் மலர ஒரு மாறுதலாக

எத்தனையோ முறை கேட்டுப் புளித்த
பழங்கணக்கு பெரிசுகளை பொறுத்து
வடிகாலாய் ஆனேன் ஒரு மாறுதலாக

அடுத்தவர் கூற்றின் பிழை சடுதியில்
அடித்துத் திருத்தும் என் நக்கீரத்தை
ஒளித்து வைத்தேன்  ஒரு மாறுதலாக

ஊக்கத்தையும் பாராட்டையும் அள்ளி
தாராளமாய் அவரும் நானும் சிறந்திட
வழங்கினேன் நானும் ஒரு மாறுதலாக

சட்டையில் பட்ட சின்னக் கறைகளை
சட்டை செய்வதில்லை நான் கறைகள்
இல்லா ஆளுமையில் ஒரு மாறுதலாக

எனது மதிப்பை ஏற்காதவரின் திசை
விலகி நடந்தேன் சுயமதிப்பை நான்
உணர்ந்ததால் இன்று ஒரு மாறுதலாக

எலிப் பந்தயத்தில் எதிர் கொள்ளும்
சலிப்பூட்டும் பழுப்பு அரசியலையும்
வலிக்காமல் ஏற்றேன் ஒரு மாறுதலாக

எனது கோப தாபங்களுடன் சமரசம்
செய்து கொண்டேன் நான் என்பதே
உணர்ச்சிகள் என்ற ஒரு மாறுதலாக

உறவுகள் முறிந்து போகாமல் இருக்க
நான் எனும் அகந்தையை கொஞ்சம்
தள்ளியே வைத்தேன் ஒரு மாறுதலாக

ஒவ்வொரு நாளையும் முழுதாய் வாழ
ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து
வாழ முடிவு செய்தேன் ஒரு மாறுதலாக

எது எனக்கு மகிழ்ச்சி தருமோ அதை
செய்கிறேன் நான், எனது மகிழ்ச்சியின்
ஏகபோக பிரதிநிதியாய் ஒரு மாறுதலாக

(நன்றி, I am changing - author unknown)

November 18, 2018

உள்ளீடு

உள்ளீடு
தமாம் பாலா

ஒரு விதைக்குள் பல மரங்கள்
ஒரு மரத்தில்  பல இலைகள்
ஒரு இலைக்குள் பல பூக்கள்
ஒரு பூவில் பல காய்கனிகள்

ஒரு கனிக்குள் பல விதைகள்
ஒரு விதை முளைக்க தேவை
ஒரு பிடிமண் ஒரு துளிநீரும்
ஒரு ஒளியாக சூரிய கதிரும்

ஒரு சிந்தனை ஒரு கவிதை
ஒரு இலை காய் கனி மரம்
ஒரு வாழ்வின் தன முதலீடு
ஒரு நாளின் நல்ல உள்ளீடு

November 15, 2018

குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினம்
தமாம் பாலா

பூக்கள் பலபல வண்ணங்களில்
பூத்து சிரித்தன வாசனையுடன்
நான் குழந்தையாய் இருந்தபோது

காற்றும் தென்றலாய் மெல்லவே
வீசியது என் உடலைத் தழுவியது
நான் குழந்தையாய் இருந்தபோது

வானம் பகலில் ஒரு நீல கடலாய்
மேக ஓடங்கள் மிதந்து சென்றன
நான் குழந்தையாய் இருந்தபோது

கடலின் அலைகள் வந்து என்னிடம்
கை குலுக்க முயன்று கால் தொட்டன
நான் குழந்தையாய் இருந்தபோது

பூவுக்கும் காற்றுக்கும் வானுக்கும்
கடலுக்கும்  குழந்தைகள் தினமோ
நான் குழந்தையாய் இருந்தபோது

November 6, 2018

தீபாவளி

ஆண்டு முழுவதும் அகத்தில்
நீண்டு சேர்ந்த தீய இருளை
விளக்கு மட்டும் நீக்காதென
வெடி வைத்துத் தகர்த்தோம்

மனிதன் வாழ்வில் இன்பம்
பொங்கும்  நீரூற்று போல்
மீண்டும் வரும் அதை நாம்
கொம்புவாணம் என்றோம்

ஏவுகணைகளைத் தாவவிட்டு
சங்குச்சக்கரம் சுழலக்கண்டு
எங்கள் வாழ்க்கைச் சக்கரம்
இங்கு நினைவில் கொண்டு

சுத்தமாக குளித்து முடித்து
புத்தம் புது உடையணிந்து
முத்தான ஒரு தீபாவளியை
இத்தினம் கொண்டாடுவோம்

November 5, 2018

உறக்கம்

உறக்கம்
தமாம் பாலா

தூங்காதே தம்பி தூங்காதே
நீ சோம்பேறி என்ற பெயர்
வாங்காதே என்றது பாடல்

உணவு உடையுடன் சேர்ந்து
உடல் மன ஆரோக்கியதிற்கு
உறக்கமும் உயிரின் தேவை

மூன்றிலொரு பங்காய் திட
நீர் காற்றை புசித்தல் நலம்
அதே விகிதத்தில் நாளதின்

மூன்றிலொரு பகுதி நேரம்
மூச்சு சீராக முழு ஓய்வாக
மூடிய இருட்டறை தூக்கம்

செப்பனிடும் உறுப்புகளை
செக்கச்சிவந்த மலர் போல
செழிப்பான விடியல் காண

செந்தமிழ் செய்யுள் வாசித்து
செவ்வனே கனவும் காண்பீர்
அவ்வப்போது கண்ணயர்ந்து

October 30, 2018

வேதம்

வேதம்
தமாம் பாலா

ரிக் யஜூர் சாம அதர்வண
வேதங்கள் நான்மறையாம்
வடமொழியில் வடித்ததை
வடமணிந்தவரே அறிவார்

கிருத்துவத்தின் பைபிள்
இறுதிவேதமாம் குர்ஆன்
மறுபிறவி உண்டென்றும்
மறுமை நாளது நிச்சயம்

என்றும் மாறிமாறி கூறும்
எண்ணற்ற பலபல வேதம்
எழுதியது யார் எங்கேயோ
எப்படியோ தோன்றியவை

அறம் பொருள் இன்பமும்
அதனுடன் கூட வீடுபேறும்
அமைந்தது நான்மறையே
அது பிறந்தது மனமெனும்

பாற்கடலை அறிவெனும்
மத்தால் தேவ அசுர குண
எண்ணங்களால் கடைந்து
வெளிப்பட்ட மறைபொருள்

வானத்திலிருந்து வந்தது
வேதமென்பது நம்பிக்கை
நம்மைப் போல் ஒரு முனி
இம்மியும் அசையா தவம்

செய்து பெற்ற வேதங்கள்
அறிந்து உணர்ந்தவருக்கு
மருந்து அறியாதோருக்கு
விருந்துக்கு முன் கேட்கும்

பொருள் விளங்காத ஓசை
அருள் பெற வேதம் ஓதும்
உரிமை அந்தணர் கையில்
உண்டென்பது ஒரு வேதம்

மூத்தோர் சொல் சிலரிடம்
வேதவாக்கு இறைமறுப்பு
பகுத்தறிவும் இன்னொரு
பகுதியில் ஆனது வேதம்

ஒரு வேதத்தின் தெய்வம்
மறு வேதத்தின் சாத்தான்
நம்பிட புத்தகமும் வேதம்
வேதமும் புத்தகம் தானே

October 1, 2018

முறை

முறை
தமாம் பாலா

எதையும் செய்ய உண்டு
ஒருமுறை அதை நாமும்
பலமுறை யோசித்தோம்

இந்த முறையில் உலகில்
பிறந்து வளர்ந்தது பலபல
தலைமுறை ஆண்டாண்டு

நேர்க்கோடு வாழை முறை
நெளிவு சுளிவு நதி முறை
தெளிவான அணுகுமுறை

பெற வேண்டும் வழிமுறை
முறைசார்ந்த கல்வியுடன்
முறைசாரா கல்வியறிவும்

எத்தனையோ முறைகள்
மோதி வென்ற கதைகள்
சொல்லும் சரித்திரங்கள்

அண்ணன் தம்பி மேலே
உண்ண உடுத்த அருந்த
எண்ண எழுத தொழுதிட

தன்முறையைத் திணிக்கும்
தன்மையானதும் புதுமுறை
வன்முறையென அறிவீரே

September 23, 2018

கதை

கதை
தமாம் பாலா

ஒரு ஊரில் ஒரு பாட்டியும்
கருகாமல் சுட்ட வடையை
கருங்காக்கை கொத்தியே
பெருமரத்தின் உச்சியிலே

பறந்து போய் உட்கார்ந்தது
ஆற அமர தின்னலாமென
மரத்தின் கீழே நின்றிருந்த
அரக்கு நிறக் குள்ளநரியும்

இதுதான் நல்ல சமயமென
புது நட்புடன் வந்து காகமே
மதுரம் உன் குரலில் கானம்
அதுவே எனக்கும் வேணும்

என்றிடவும் ஏமாளிக்காகம்
தன் வாயைத் திறந்திடவே
பொன்னிற வடை போனது
சொன்ன நரியின் வசமாய்

திருடும் காகமும் ஏமாற்றும்
குறுநரியும் எந்த வகையில்
தரும் நீதி போதனையென
வருங்காலத்தின் சந்தேகம்

உழைத்துப் பிழைப்பவரை
உரசிப் பிழைப்பது ஒட்டாது
உடம்பில் எத்திப் பெற்றதும்
உடன் எளிதில் மறையுமாம்

September 16, 2018

ஓட்டம்

ஓட்டம்
தமாம் பாலா

இட்ட அடி நிலத்தைத் தொட
எடுத்த அடியும் முன்னோட
நில்லாத ஓட்டம் நானோட

எதற்காக ஓடுகிறாய் எனும்
எளிய வினாவுக்கு பதிலாய்
எனக்கு முன்னும் பின்னும்

ஓடுபவரைக் கேளென்றேன்
ஓடி ஓடி உழைக்காதவரையே
ஓரம் கட்ட நினைக்கும் இந்த

அரங்கத்தில் ஓட்டம் உயிரின்
அடையாளம் நடப்பதென்பது
அவமானம் ஓரிடத்தில் கால்

நின்று விட்டால் அது ஆகும்
பெருங்குற்றம் எங்களூரின்
நாய்கூட தினம் நாலுமுறை

சந்தைவரை ஓடித் திரும்பும்
அதையே சாதனையென்று
கதைபேசும் தொழிலுலகும்

தலைமுதல் பாதம் வரையில்
தங்கு தடையில்லாமல் ஓடும்
செங்குருதியின் உயிரோட்டம்

தருகின்ற தொடர் ஓட்டத்தில்
தம் இறக்கைகளை விரித்துப்
பறக்கும் அதிசயப் பிறவிகள்

நாம் மேகத்தில் தலைவைத்து
நாற்காலி விமானங்கள் ஓட்டி
நாளும் கணினியில் செய்யும்

வெறும் கண்ணோட்டம் அதில்
பெறும் மகிழ்ச்சிக்குத் தேவை
பெருமுயற்சியாம் தேரோட்டம்

September 5, 2018

ஆசிரியப்பா

ஆசிரியப்பா
தமாம் பாலா

தரையில் தொடங்கி
தளத்தில் முடியும்படி
தன் முதுகில் சுமந்து
தரம் உயர்த்தும் ஏணி

மாதா பிதா குருவென
ஆதாம் ஏவாள் பெற்ற
மேதாவிப் பிள்ளையை
சூதானமாய் செதுக்கி

பட்டை தீட்டி வைரமாய்
பளபளவென மின்னச்
வைக்கும் சேவையால்
ஆசிரியர் ஆனாரப்பா

பத்து மாதம் சுமப்பாள்
தாய் பத்து முழு வருடம்
பள்ளியில் சுமந்தோர்
அள்ளி தந்த அறிவுக்கு

சொல்லிக் கொள்வோம்
சல்லியளவு நன்றியை
நேச நினைவில் நின்று
ஆசிரியர் தினம் இன்று

August 16, 2018

உயரம்

உயரம்
தமாம் பாலா

யானை படுத்திருந்தாலும்
ஏனைய பிற விலங்கினும்
தானே உயர்ந்து காணும்

உருவத்தில் உயர்ந்தவன்
உயரத்தில் குறைந்தவன்
இதில் சிறந்தவன் எவன்

அழகுத் தமிழில் இதற்கு
புழக்கத்தில் இருக்கின்ற
பழமொழிகள் பலவுண்டு

சாண்பிள்ளை ஆனாலும்
ஆண்பிள்ளையே என்றும்
கள்ளனைக் கூட நம்பலாம்

குள்ளனை மட்டும் நம்பாதீர்
தெள்ளத் தெளிவாய் இவர்
அள்ளித் தெளித்திட்ட பதர்

வெறும் சொல் அலங்காரம்
தரையில் கிடந்து உறங்கிட
தலையும் காலும் சம உயரம்

சம்மணத்தில் சற்று  உயரம்
மண்டியிட மிதமான உயரம்
எழுந்து நடக்க நகர்ந்திடவும்

ஓடவும் உழைக்கவும் வாழ்வும்
உயரும் பிறர் துயரம் தீர்க்கும்
உள்ளம் என்றும் வளர்ந்திடும்

தென்னை பனை மர உயரம்
தன்னையே தந்தும் மகிழும்
அன்னை மனம் வானுயரம்

August 11, 2018

அல்லது

அல்லது
தமாம் பாலா

நல்லது எது கெட்டது எது
அல்லதாய் இருப்பது எது
இல்லாதது கேள்வி இது
இதற்கும் பதில்தான் எது

பாகற்காய் கசக்கும் வரை
சீனி இனிக்கும் வரையில்
கத்தி வெட்டும் வரையில்
நாகம் படமெடுக்கும் வரை

மிளகாய் உறைக்கும் வரை
தேனது தித்திக்கும் வரை
நட்பு சுற்றம் உதவும் வரை
கூடி ஒன்றி இருக்கும் வரை

எல்லாமே நல்லது அதனது
சுயத்தை நிலை நிறுத்தும்
வரை உயிர்த் துடிப்போடு
செயல்படும் வரை நல்லது

இரப்பதுவும் இறப்பதுவும்
மறப்பதுவும் மறுப்பதுவும்
மறைப்பதும் கெடுப்பதும்
குரைப்பதும் குறைப்பதும்

நல்லது அல்லது கெட்டதும்
நமது பார்வையில் உள்ளது
வெயிலுக்கு நிழல் நல்லது
வளர்ச்சிக்கு அது கெட்டது

August 5, 2018

மதம்

மதம்
தமாம் பாலா

இஸ்லாமும் கிடையாது
பௌத்தமும் சமணமும்
கிருஸ்தவமும் இல்லை

அப்பா அம்மா அக்கா
அண்ணன் தம்பியோ
அன்றி வேறு உறவோ

கிடையாது கருப்போ
சிகப்போ உயரமோ
குள்ளமோ உருவில்

பொருளில் அறிவில்
வேறுபட்டிருந்தாலும்
ஒரு நேர்க்கோட்டில்

இணைக்கும் மதம்
இனிய நல்லுறவு
இதன் பெயர் நட்பு

August 1, 2018

தாவணி

தாவணி
தமாம் பாலா

பட்டுப் பாவடைக்கு பத்து
வயதிருக்கும் பாவாடை
தாவணி பதினாறு வயது

புடவை சேலைக்கு அகவை
இருபதும் அதற்கு மேலும்
ஆடைகளுக்கே ஆகின்ற

வயதுகள் ஒரு போதுமே
ஆவதில்லை யுவதிக்கு
அவள் என்றும் குழந்தை

அதனால் தானோ அவள்
அகழ்ந்தெடுத்த மரமாய்
அடுத்த வீட்டில் பூப்பதும்

July 28, 2018

தூய அன்பு

தூய அன்பு
தமாம் பாலா

தாயன்பு தன் பிள்ளையை
தாலாட்டி பாலூட்டி சீராட்ட
சேயன்பு தாய் தந்தையை
சேவித்து நன்றி செலுத்த

உறவுகள் காட்டும் அன்பில்
உறையும் பொது நலத்தில்
உண்டு சுயநலம் துளியாய்
உண்மையான யதார்த்தம்

வளர்ப்புப் பிராணி மட்டும்
அளவிலா எதிர்பார்ப்பிலா
அன்பை மனிதரிடம் தரும்
அதில் இல்லை கலப்படம்

தானாடாவிட்டாலும் தனது
தசையாடும் என்பார் நேச
நாய் ஆடாவிடினும் அதன்
வாய் பேசாவிடினும் வால்

ஆடும் என்பதையும் அறிவீர்
ஈடு இணையில்லாத நன்றி
மிக்க தூய அன்பை போற்றி
தக்க மதிப்பைத் தந்திடுவீரே

July 27, 2018

பெயரியல்

பெயரியல்
தமாம் பாலா

என்ன தான் இருக்கின்றது
என் பெயரில் என்று தான்
எண்ணி நான் பார்த்தேன்

ஆண் பாலா பெண் பாலா
ஆதார் அட்டையா ஆதிகால
ஆதாம் ஏவாளின் சங்கிலி

அதில் நான் எந்த கண்ணி
அடுத்ததாய் என் குலமும்
அன்னை மொழி இனமும்

மதமும் நிறமும் குணமும்
மணமும் வீடும் வாசலும்
மகிழ்வுந்து வண்டிகளும்

எண்ணம் சொல் செயல்
எதிர்பார்ப்பு ஆசாபாசம்
அன்பு கருணை பணிவு

அதிகாரம் அகங்காரமும்
அற்புத அறிவு கொஞ்சம்
அற்பத் தன்மை அபூர்வ

ஆற்றலும் ஆங்காங்கே
ஆற்றாமை பொறாமை
ஆட்டுவிக்கும் பேராசை

அடுத்தவன் பொருளை
அபகரிக்கும் ஆசையும்
அவ்வப்போது எழுந்து

என் பெயரைச் சுற்றியே
எச்சமிடும் அக்கணத்தில்
எந்தன் பெயருக்குப் பின்

ஒளிந்திருக்கும் அரசியல்
ஒளிர்கிறது பிழைப்புக்கு
ஒட்டகம் போல் நீர் தீவன

வசதிக்கு புலம் பெயர்ந்து
வண்டல் மண் பூமி விட்டு
வளர்த்த சுற்றத்தை விட்டு

காடு மலை பாலை எங்கும்
காசு தேடி நடை உடையும்
காலத்துக்கு ஏற்ப மாற்றி

பெயர் பெற்ற குழுமத்தில்
பெயருக்கு கடமை செய்து
பெயரது நல்லது வேண்டி

உள்ள பெயரை மாற்றியும்
உள்ளத்துக்குள்ளே மாற்றம்
உண்டாகும் வரை இல்லை

உண்மையில் நல்லுயர்வும்
உப்பு பருப்பு ஜாடியின் மீது
உள்ள பெயர் சீட்டை மட்டும்

சர்க்கரை என்று மாற்றினால்
சடுதியில் இனித்திடுமெனில்
சகட்டுமேனிக்கு பெயர்களை

மட்டுமே மாற்றி சாதிக்கலாம்
மளமளவென உயர்ந்திடலாம்
மகிழ்ச்சியும் பெற்றிடலாமே!






July 24, 2018

முனை

முனை
தமாம் பாலா

வாள்முனையில் வெற்றி
கற்காலம் எழுதும் கோல்
முனை வெற்றி தற்காலம்

கூர்முனைகள் ஓலைகீறி
கூறிய பல போர் முனை
செய்தி மெய் கீர்த்திகள்

யார் முனைந்தாலும் தன்
சீர் தரவே காத்திருப்பாள்
கலை மகள் மலை மகள்

திருமகள் அருள் பெறவும்
திருப்பு முனையாய் வந்து
திகழ்வதாம் முனைப்பும்!




July 22, 2018

ஒன்று

ஒன்று
தமாம் பாலா

தாமரை இலையின் மேல்
தண்ணீர் துளிகள் போல்
தனித்திருக்கும் மனிதரில்

மழையாய் வந்து பொழிந்து
மண்ணுக்குள்ளே ஊடுருவி
மரத்தின் வேருக்குள் பரவும்

விரல்கள் ஐந்து கை ஒன்று
குரல்கள் பல பாடல் ஒன்று
மனிதர் பல குழுவது ஒன்று

எழுதல் உழைத்தல் நன்று
உழுதல் விளைச்சல் என்று
தழுவும் குறிக்கோள் ஒன்று

வெற்றிக்கு வழியே ஒன்று
பற்றிப் படரும் கொடிபோல்
சுற்றுப்புறத்துடன் நீ ஒன்று

ஒன்றாவிடில் உயர்வில்லை
ஒன்றே நன்றாகும் இன்றும்
என்றும் எங்கும் எப்போதும்






July 12, 2018

கமர்கட்டு

கமர்கட்டு
தமாம் பாலா

பெட்டி நிறைய வாங்கிய
பால் இனிப்புகள் தந்தது
கசப்பான அனுபவத்தை

கலோரிக் கணக்கறியா
குண்டன் கிராமத்தான்
காசு கொடுத்து நோய்

வாங்குகிறான் என்றே
வேலைக் காரர்களுக்கு
அதிர்ஷ்டம் அவர் பெயர்

எழுதியிருந்தது போலும்
எண்ணியதைத் தின்ன
எளிமையாய் பேச பழக

இல்லை காலம் இன்று
கண்ணாடி ஜாடிக்குள்
கைவிட்டு எடுத்த நாள்

நேற்று, கமர்கட்டுக்கும்
போலியாய் தங்க தாள்
சுற்றி மதிப்புக் கூட்டும்

நாள் இன்று எப்போதோ
மென்ற கமர்கட்டு சுவை
நினைக்கவே இனிக்கும்

July 10, 2018

ஆத்மாவின் மகுடம்

ஆத்மாவின் மகுடம்
தமாம் பாலா

என்வசம் உள்ள ஆண்டுகளை
எண்ணிப் பார்த்து வியந்தேன்
வாழ்ந்து விட்ட காலத்தை விட
மீதியிருப்பது கொஞ்சம் தான்

கை நிறைய இனிப்பு கொண்ட
குழந்தை போல் உணர்கிறேன்
தின்ன தின்ன இன்பம் முதலில்
கடைசி துண்டின் சுவை நாவில்

முடிவில்லாத சந்திப்புகளிலும்
பல்வேறு விதிகள் வழிமுறை
வெற்றுக் கட்டுப்பாடுகளிலும்
விரயமானது கடைசி நிமிடம்

அகவை வளர்ந்தும் அறிவும்
வளரா அற்பமான மனிதரை
சகித்துக் கொள்ள இயலாது
போனது இப்போது எனக்கு

 எஞ்சியிதோ சொற்ப காலம்
 எனது ஆத்ம தேடலின் சாரம்
 பையில் மிஞ்சிய மிட்டாயும்
 விரல் விட்டு எண்ணிடலாம்

 தன் பிழையை தானே நகும்
 உண்மை முகத்து மானிடரை
 தனது வெற்றியால் ஊதிடா
 மனது படைத்த உத்தமரை

கூடி வாழ்வது என் விருப்பம்
மதிப்பு மிக்க புனித மனிதம்
நேர்மை சத்தியம் நிறையும்
வாய்மை இவை வாழ்வின்

பயன் விளக்கும் தீபங்கள்
வாழ்வின் முரட்டுப்பிடியில்
ஆத்மாவின் மென்வருடல்
இடையில் இதயம் தொடும்

இனியவர் சுற்றத்தில் இதம்
காண்பது எனக்கு அவசியம்
அனுபவ முதிர்வு கொண்டு
செறிவாக வாழும் அவசரம்

சொச்சமுள்ளது தின்பண்டம்
இச்சை தீர்க்கும் தனிச்சுவை
மிச்சம் வைத்திடும் எண்ணம்
துளியும் இல்லை திண்ணம்

இனியவருடன் இணங்கிடும்
நிறைவானதொரு சாந்தியும்
சமாதானமும் இணைந்திடும்
இறுதி முடிவுவே என் இலக்கு

உலகில் ஒன்றுக்கு இரண்டு
வாழ்க்கை உண்டு அவற்றில்
முதலாவது மட்டும் சாசுவதம்
அறிந்திட அடுத்தது பிறக்கும்

நன்றி: My soul has a hat by Mario de Andrade

July 3, 2018

ஊக்கமது கைவிடேல்

ஊக்கமது கைவிடேல்
தமாம் பாலா

எண்ணியது போல் கை கிட்டாது
எதுவும் சில நேரங்களின் போது
களைத்த காலடிகள் ஊர்ந்திடும்
செங்குத்து மலைப்பாதையாகும்

கரையும் கையிருப்பும் குறையா
கடன் தொல்லைகளும் சூழ்ந்திட
போலிப் புன்னகை முயற்சிகள்
ஏக்கப் பெருமூச்சாக முடிந்திட

கவலைச் சுமை அழுத்தினாலும்
கண நேரம் ஓய்வு கொள்ளலாம்
களம் விட்டு விலகிட எண்ணும்
கழிவிரக்கம் மட்டும் வேண்டாம்

வளைந்து நெளிந்து செல்லும்
வாழ்க்கைப் பாதை சொல்லும்
அனுபவப் பாடங்கள் ஏராளம்
அதில் தோல்வி என்பது வரும்

வெற்றிக்கு ஒரு நாழிகை முன்
வெளியேறும் அவசரக் காரன்
என்றே நம்மை ஏங்க வைக்கும்
எவ்வளவு அடித்தாலும் தாங்கும்

பாறை இன்னும் ஒரே அடியில்
பாளம் பாளமாய் வெடிப்பதில்
உள்ள சூட்சமம் அறிந்தவர்க்கு
உள்ளத்தில் உறுதி நிலைக்கும்

சோர்ந்த மனதினருக்கு கூப்பிடு
தூரத்தில் அமைந்த சொர்க்கம்
புலப்படுவது இல்லை வாய்ப்பும்
கை நழுவி போகும் வரை அதன்

வாசம் கூட தெரிவதில்லை இரவு
நேரம் கண்ட கனவு விடிந்த பின்பு
மாயமாகி விடும் விழித்திருக்கும்
வேளை காணும் கனவே என்றும்

நிலைத்திருக்கும் வெற்றி என்பது
தோல்வி எனும் முட்டை ஓட்டினை
உடைத்து உள்ளிருந்து  வெளியே
உயிர் பிறந்திடும் தேவ ரகசியம்

தன்னம்பிக்கை எனும் ஆதவனை
தமது கை கொண்டு மறைத்திடும்
சன்னமான சந்தேக மேகங்களின்
மின்னும்  வெள்ளி விளிம்பாகவே

இன்னும் கொஞ்சம் பொறுத்தார்
இனிதாய் பூமியையும் ஆள்வார்
வென்றவர் என்றுமே துறந்திலர்
துறந்தவர் என்றுமே வென்றிலர்

June 3, 2018

காதல்

காதல்
(தமாம் பாலா)

காதல் சமிஞ்சை கண்டு செல்வீர்
காதலின் பாதை கடினமான உயர்
செங்குத்தான மலையே ஆயினும்

காதலின் இறக்கைகள் உங்களை
ஆதரவுடன் தழுவினால் இணங்கி
விடுவீர் அவற்றினூடே மறைந்து

இருக்கும் வாள் உங்கள் சதையை
அறுத்திடும் அபாயம் இருப்பினும்
காதலின் பேச்சை நீர் நம்பிடுவீர்

அதன் குரல் உங்கள் கனவுகளை
அடித்து நொறுக்கி தூளாக்கினும்
ஆடிக்காற்றில் சாயும் வாழையாய்

தலையில் மகுடம் வைத்து காதல்
சிலுவையில் அறைந்து முடிக்கும்
வளர்ப்பதும் வெட்டுவதும் காதல்

கானகத்து மரமாய் வானளாவியே
வளர்ந்து நிற்கும் உமது கிளைகள்
வெயிலில் அசைந்தாட அவற்றை

மெல்லத் தடவி முத்தமிடும் காதல்
சல்லி வேர் ஆணி வேரையும் கூட
ஆட்டி அசைத்துப் பார்க்கும் காதல்

சோளத்தின் கதிராய் கட்டும் காதல்
போரடித்து தோலுரிப்பதுவும் காதல்
சலித்து உமி விலக்கும் மாவையும்

பிரித்தெடுக்கும் காதல் தொடர்ந்து
பிசையும் பதமாய் பந்தாய் உருட்டி
வேள்வித் தீயில் ஆகுதி செய்திடும்

இதெல்லாம் காதலின் சித்து மாயம்
இதயத்தின் ரகசியங்கள் புலப்படும்
வாழ்வின் இதயத்தின் துண்டாகும்

காதலில் மன அமைதியும் இன்பமும்
மட்டுமே தேடும் கோழைத்தனம் தன்
நிர்வாணம் மூடி களத்து மேடு விட்டு

காத தூரம் செல்லட்டும் பருவ காலம்
காணாத வறண்ட பாலை தேடி அங்கு
வாய்விட்டு சிரித்திடவோ மனம்விட்டு

அழுது தீர்த்திடவோ இயலாது அறிவீர்
சூன்யத்தில் தோன்றும் சூன்யத்தில்
முடியும் காதல் எதற்கும் வசப்படாதது

வசப்படுத்தவும் முயலாது காதலுக்கு 
காதல் மட்டுமே போதுமானது வேறு  
விதமான தேவைகளும் கிடையாது 

காதலிக்கும் போது கடவுள்  உங்கள் 
இதயத்தில் இருக்கிறார் என்று  நீர் 
உரைத்தலாகாது அவர் இதயத்தில்

காதலர் வீற்றிருக்கின்றீர் என்பதே
சத்தியம் காதலை வழி நடத்திடும் 
உத்தேசமே வேண்டாம் ஏனெனில்

காதல் உங்களது  மதிப்பைக் கூட்டி  
பாதை காட்டி வழி நடத்தும் காதல் 
தன்னிறைவு தவிர்த்த ஆசாபாசம்

அற்றது அதையும் தாண்டி நீங்கள் 
ஆசைப்பட்டால் மெழுகாய் உருகி 
இரவின் கானம் பாடும் நீரோடை

போலாகிடுவீர் வரம்புகள் கடந்த 
மென்மையில் காதலின் வலியை 
உணர்ந்தும் காதலின்  புரிதலில்

காயப்பட்டும் களித்து ரத்தம் சிந்தி  
சிறகுகள் முளைத்த இதயத்துடன் 
காலையில் கண் விழித்து காதல்

நிறைந்த நாளுக்கு நன்றி சொல்லி 
நண்பகலில் காதலின் தியானத்தில் 
ஆழ்ந்திருந்து இரவில் வீடு சேர்ந்து

இனியவருக்கான இறை வாழ்த்தை
இதயத்தில் இருத்திடுவீர்  இறைவன் 
புகழை உதடுகள் உச்சரித்திருக்கவே.

(நன்றி: கலீல் கிப்ரானின் காதல்)

May 26, 2018

யாரும் போகாத பாதை

யாரும் போகாத பாதை
(தமாம் பாலா)

மஞ்சள் பூத்த கானகத்தில்
மண் பாதைகள் பிரிந்தன
இரண்டாய் இடதா வலதா
இதில் எனது பாதையென

மரங்களுக்குள்ளே சென்று
மறையும் பாதைகள் ஊடே
பார்த்த போது இடது பாதை
பாதம் பல பட்ட தடத்துடனும்

வலது பாதை புல் மண்டியே
வசப்படாத இயற்கையோடு
புது வாசனை மாறாதிருக்க
புரிதல் எனக்குள் முளைக்க

எல்லோரும் போகும் பாதை
எழுதியெழுதி சலித்த கதை
யாரும் போகாத ஒரு பாதை
யான் தெரிவு செய்த பாதை

நல்லூர் சென்று சேர்க்குமோ
இல்லை முன் வைத்த காலை
பின் வைக்க நேருமோ என்ற
பிரச்சினை எதிர் கொள்ளும்

தீரம் தருமே வெற்றி உயர்வு
காலம் காலமாய் ஒரு தேர்வு
காட்டில் பிரிகின்ற இரு வழி
காட்டுவோம் நடந்து நம் வழி

(நன்றி: The Road Not Taken BY ROBERT FROST)

May 25, 2018

பருந்தின் உறக்கம்

பருந்தின் உறக்கம்
(தமாம் பாலா)

உயர்ந்த மரத்தின்  உச்சியில்
அமர்ந்திருக்கிறேன் நான்
சிறிதும் ஆடாது அசையாது
கண்களை மூடியபடியே

எனது வளைந்த அலகுக்கும்
கூர் நகங்களுக்கும் நடுவில்
பொய்க் கனவுகள் இல்லை
தேர்ந்த வேட்டைக்கான ஒரு
தேடுதல் ஒத்திகை மட்டுமே

விருட்சத்தின் வசதி உயரம்
தாங்கிப் பிடிக்கும் காற்றும்
தழுவிச் செல்லும் கதிரொளி
இயற்கை தந்த நற்கொடை

என் கண்காணிப்பில் உள்ள
பூமியின் முகம் அது என்னை
அண்ணார்ந்து பார்த்திருக்க
காய்ந்த மரத்தின் கிளையை
இறுகக் கவ்விப் பிடித்த என்
முரட்டுக் கால்கள் இரண்டு

படைத்தல் முழுமை பெற்றது
எனது பாதம் இறகும் செய்து
அந்த படைத்தலையே இன்று
எனது காலடியில் வைத்தேன்

உயர உயர எழும்பிப் பறந்து
ஆர அமர காற்றில் சுழன்று
நின்று நிதானமாகச் சென்று
கொல்லுவதே என் விருப்பம்

இங்கு அனைத்தும் எனக்கு
சொந்தமானது என்பதனால்
பாசாங்குகள் எதுவுமில்லை
என்னுடைய உடல்மொழியில்

மண்டைகளைக் ஒரே குத்தில்
கிழித்தல் எனது எளிய பாணி
நேர்க்கோட்டில் அம்பாய் பறந்து
உயிர்களின் எலும்பைப் பிளந்து
மரணத்தை பரிசளிக்கும் எனது
உரிமைக்கு மறு பேச்சும் ஏது?

சூரியன் என்றும் என் பின் நிற்க
நான் தோன்றியது முதற்கொண்டு
எதிலும் எந்த மாற்றமும் கிடையாது
அதை என் கண்ணும் அனுமதியாது
சகலமும் இங்கு என் கைப்பிடியில்!

(நன்றி: Hawk Roosting by Ted Hughes)

May 13, 2018

வேலை

வேலை
(தமாம் பாலா)

உன் வேலை ஓயாமல் சுழன்றிடும்
உலகத்தின் வேகத்திற்கு இணை
அதன் ஆத்மாவுடன் ஒரு பிணை

சும்மா இருப்பது மாறி வரும் பருவ
கால சூழ்நிலைக்கு அன்னியமாகி
எல்லையில்லா பிரபஞ்சத்தை நாடி

பெருமிதத்துடன் பீடு நடைபோடும்
வாழ்க்கை பேரணியினை விட்டு
விலகிப்போகும் இழிநிலையாகும்

வேலையில் ஆழ்ந்திடும் வேளை
வேய்ங்குழலாய் நீ மாறி விட உன்
இதயத்தில் பிறக்கும் இன்னிசை

இல்லாவிடில் ஒரு பிண்டமாய்
பொல்லாத மௌனத்தில் நாம்
எல்லாரும் ஓய்ந்து விடுவோம்

வேலையே ஒரு சாபம் என்றும்
உழைப்பே துரதிஷ்டம் என்றும்
உரைத்தார் நம் மனம் கெடவே

மாற்றி யோசிப்போம் அதை
ஆற்றும் பணியில் நீ பூமியின்
நேற்றைய கனவு ஒன்றினை

நிறைவேற்றி உன் பிறவியின்
பயனை அடைகிறாய், வேலை
வாழ்க்கையின் மீது கொண்ட

காதல் அன்னியோனிய அன்பு
இரகசியம் அதை உணராமலே
சிலர் பிறந்ததே பாரம் என்றும்

தொழில் என் தலையெழுத்து
என்றெண்ணி வாடியிருக்க
மின்னும் வியர்வை வழிந்து

அழித்திடும் அந்த எழுத்தை
ஊழ்வினை நம் வாழ்வினை
பாழ் செய்யும் இருட்டென்றும்

உரையாடல் கேட்டிருந்தோம்
தேடல் இல்லா வாழ்வு இருள்
அறிவு இல்லா தேடல் இருள்

உழைப்பில்லா அறிவு இருள்
அன்பிலா வேலையும் இருள்
ஈடுபாடு மிகுந்த செயல்கள்

உன்னை உன்னுடனே சேர்த்து
உன்னுள் உறையும் இறையை
உணர வைக்கும் நற்கனிகள்

ஆத்மார்த்தமாய் அனுபவித்து
உற்சாகமாக செய்யும் கடமை
இதயத்தின் நூலிழை எடுத்து

நெய்த பட்டுத்துணி போன்றது
நேசிப்பவர் அணிந்து மகிழவும்
நேர்த்திபட கட்டும் வீடு அதுவே

உற்றாரின் உறைவிடம் ஆகும்
பிஞ்சு விதை பயிரிட்டு பின்னே
அறுவடை செய்வதிலே இன்பம்

அன்புக்கினியர் புசிக்கும் கனி
அகமகிழ்ந்து செய்யும் தொழில்
அனைத்திலும் உன் உயிர் மூச்சு

இணைந்திட வானகத்து வாழ்
முன்னோரும்ஆசி வழங்குவர்
பளிங்குக்கல்லை செதுக்கும்

பணியாளன் தனது ஆவியின்
பரிமாணத்தை கல்லில் காண
மண்ணை உழுவதை விடவும்

உயர்ந்தது அவன் கைத்திறன்
வான வில்லதனை வளைத்து
மானம் காக்கும் நூலாடையில்

பதிக்கும் நெசவாளி சிறந்தவன்
பாதம் காக்கும் செருப்பு தைக்க
பாடுபடும் மனிதனை விடவும்

என்றெல்லாம் உறக்கத்தினிலே
எவரோ சொல்லக் கேட்டதுண்டு
எழுச்சிமிக்க விழிப்பு நிலையில்

எடுத்துரைப்பேன் நானும் இன்று
அடுத்து வீசும் ஆடிமாத காற்றும்
நெடுநெடுவென உயர வளர்ந்த

மரத்திடம் பேசுவதை விட  அதன்
அடியில் காணும் புல்வெளியுடன்
அளவளாவுவதே அதிகம் என்று

காற்றின் குரலை இன்னிசையாய்
மாற்றுபவனே சிறந்த கலைஞன்
ஏற்றம் தரும் நல்லன்பின் வழியே

வேலை செயல் ஆதூரக் காதலின்
வெளிப்பாடே ஆகும் ஆர்வமில்லா
தொழிலில் ஈடுபட்டு கால விரயம்

செய்வதை விட ஆலய வாசலில்
அனுதினம் கையேந்தி அமர்ந்து
உழைப்பவனிடம் பிச்சை எடுத்து

உண்பது மேலானது வெறுப்பில்
சமைக்கும் உணவில் ருசியேது
பசியும் தணியாது வெஞ்சினம்

கொண்டவர் பிழிந்த திராட்சை
ரசமும் விஷமாக மாறி விடும்
தேன் குரலில் தேவதை போல்

பாடினாலும் விருப்பம் இல்லா
ராகம்  முழுவதும் மூடிய வாய்
முனகல் குரலாகவே கேட்கும்

(நன்றி, கலீல் ஜிப்ரான்)

May 12, 2018

குழந்தைகள்

குழந்தைகள்
(கலீல் கிப்ரான், தமிழில் தமாம் பாலா)

உங்கள் குழந்தைகள், அவர்கள்
உங்களது குழந்தைகளே அல்ல
வாழ்க்கை தனது சுயதேடலில்
விளைவித்த மகவுகள் இவர்கள்

உங்கள் மூலம் வந்தவர் ஆனால்
உங்களிடமிருந்து அல்ல, உங்கள்
உடன் வாழ்ந்தாலும் அவர் உமது
உடமையோ உரிமையோ அல்ல

அவர்களுக்கு உங்களது அன்பை
அளியுங்கள் அது மட்டும் போதும்
அவருக்கு உங்கள் சிந்தனைகள்
அவை தேவைப்படுவது இல்லை

ஏனெனில் அவருக்கென்று சுய
எண்ணங்கள் உண்டு, நீங்கள்
எழுப்பிய வீடுகள் குழந்தைகள்
எண்சாண் உடலுக்குக் கூடுகள்

அவர்தம் உயிர்ப்பு என்ற ஆத்மா
அது எதிர்காலத்தில் வாழ்கிறது
அதன் நிழலைக்கூட உங்களால்
அறிய இயலாது  உம் கனவிலும்

குழந்தைகள் போல வாழ்ந்திடவே
விழையுங்கள் தவறியும் அவரை
உங்களைப் போல மாற்றி விடும்
உத்திகள் வேண்டாம், வாழ்க்கை

என்கின்ற பயணம் பின்னோக்கி
என்றும் செல்வதில்லை, நேற்று
என்ற நாளில் தேங்கிடாமல் அடி
எடுத்து முன்னே செல்லும் பாதை

குழந்தைகள் உயிருள்ள அம்புகள்
இழுத்து நாண் ஏற்றிய வில்களே
நீங்கள், எல்லையில்லா தூரத்தில்
எங்கேயோ குறிவைத்து வில்லவன்

உங்களை வளைத்து விடும் பாணம்
உலகங்கள் பல தாண்டிப் பறக்கும்
உவகையுடன் உடல் வளைத்திடுவீர்
உயர்ந்த வில்லவன் பலத்தில் நீரே

அவன் அன்புடனேயே நேசிக்கிறான்
அற்புதமாய் விரைந்து செல்லுகின்ற
அம்பை மட்டுமல்ல அதை செலுத்தும்
அசையாத ஆடாத வில்லையும் கூட!

May 11, 2018

வரைந்து உயர்ந்தவன்

வரைந்து உயர்ந்தவன்
(தமாம் பாலா, திருத்திய பதிப்பு)

நிமிடத்தில் நூறு கோடு போடுவான்
இயந்திரங்களின் வட்ட சதுரங்களும்
வளைவுகளும் நெளிவுகளும் என்றும்
வரைவாளன் அவனுக்கு அத்துப்படி

பள்ளி முடித்ததும் தொழிலைத் தேடி
பட்டயம் பெற்று வென்றவன் இவன்
இவனே ஓவியத்தின் முதலெழுத்து
இன்றியமையாத நல்லுயிரெழுத்து

காகிதத்தில் கோடுகளை வரைந்து
வரைந்து அவன் செழிக்க, வாழ்க்கை
இவன் முகத்தில் பலகோடு வரைந்து
இசைக்கிறது ஒரு இனிய பாடலை

இரவும் பகலும், கண்சிமிட்டாமலும்
வரைவான் அவன், உறவும் பகையும்
உணராது அவனது தவ வலிமையும்
கல்லுடைக்கும் கடின உழைப்பினும்

வலியது, பெரியது கட்டிடத்தின் கீழே
அடித்தளமாய் நின்று அதன் கற்களை
சுவர்களை,கதவுகளை மனதில் தினம்
சுமக்கும் இவனது தவம் கர்ம யோகம்

உலக வரைபடத்தில் இல்லாத இடமும்
உடன் பெறும் முகவரி, இவன் கைப்பட
உருவாக்கிய கட்டுமானக் கவிதையால்
உண்டாகும் இவனுக்கும் ஒரு முகவரி

காகிதத்தில் அவன் போடும் புள்ளி, இலை
கோலங்கள் சிறிதளவும் பிசகுவதில்லை
புது இரத்தத்தை பாய்ச்சும் உற்சாக வேலை
புகழ் எனும் இளமை தரும் கறிவேப்பிலை

இருபதுக்கு முன் இவனது இரு கைகளில்
வருவது சில்லறையாய், இறுதி வரையில்
மிஞ்சுவது  உழைப்பின் ஆத்ம திருப்தியும்
நெஞ்சார்ந்த நேர்மையும் தன் வலிமையும்!

April 14, 2018

விளம்பி

விளம்பி
(தமாம் பாலா)

கிளம்பிப் போனது பங்குனி
விளம்பி வந்தது சித்திரை
இளம்பிறை வளர்ந்து ஒளி
பளபளக்கும் முழுநிலவாகி

விளிம்புகள் தேய்ந்து பின்
ஒளிந்து கொண்டாலுமே
நளினமான தன் ஈர்ப்பில்
பளிங்கு பாற்கடலையும்

பற்றி இழுப்பது போலவே
வெற்றிகரமான நட்புகள்
சுற்றி வரும் உலகம் இது
போற்றி ஆண்டு அறுபது



April 10, 2018

ஆ(ற்)றுதல்

ஆ(ற்)றுதல்
தமாம் பாலா

அஞ்சுதல் தேவை இல்லாத
அன்பு வாழ்க்கை நல்லதே
அதில் ஆறுதலும் பசிபிணி
அகல நற்பணி ஆற்றுதலும்

சிலரது சிந்தனை செயல்
மலரது மருந்தது ஆற்றும்
மனமது குணமது ஆற்றும்
சினமது தவிர்த்த கருணை

நிறைமாந்தர் கடைக்கண்
உறையும் கனிவில் உண்டு
மறையும் கூறாத ஆறுதல்
இறையும் இவர் வடிவமே

April 3, 2018

இரும்பு மனிதர் டான் ஸ்ரீ ஏ.கே.நாதன்


இரும்பு மனிதர் டான் ஸ்ரீ ஏ.கே.நாதன்
(தமாம் பாலா)

ஆசியாவின் தலைசிறந்த கட்டுமான நிறுவனம்; மலேசியா, ஐக்கிய அரபு எமீரகம், கத்தார் மற்றும் இந்தியாவில் இரும்புக் கட்டுமானத் தொழிற்சாலைகள் என விழுதுகள் வேர்விட்டு வானளாவ வளர்ந்து நிற்கும் “எவர்செண்டாய்” என்ற ஆலமரம்!

அந்த ஆலமரத்தை ஒரு சிறு விதையாய் நட்டு, ஆண்டாண்டுக் காலமாக, உழைப்பு எனும் நீர் ஊற்றி, உற்சாகம் என்ற உரம் இட்டு, விடாமுயற்சி எனும் சூரிய ஒளி பாய்ச்சி வளர்த்தவர் தான் மலேசிய தமிழர், சாதனையாளர் டான் ஸ்ரீ திரு. ஏ.கே. நாதன் அவர்கள்.
இந்திய வம்சாவளியில் பிறந்து, மலேசியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவராகத் திகழும் திரு. நாதனும் அவரது எவர்செண்டாய் நிறுவனமும்  கடந்து வந்த வெற்றிப் பாதையின், எளிய தொடக்கத்தையும், சந்தித்த சோதனைகளை அவர்கள் சாதனைகளாய் மாற்றிய மாயம் பற்றியும் சற்றே விரிவாகக் காண்போமா?

இரும்புக் கட்டுமானத் துறையில் கால் பதித்த அந்த முதல் தருணம் டான் ஸ்ரீ நாதன் அவர்தம் மனதில் இன்றளவும் பசுமையாக நிழலாடுகிறது. அப்போது அவர் 22 வயது இளம் காளை; வாழ்வில் வெற்றி பெறத் துடிக்கும் ஒரு கடின உழைப்பாளி. கல்லூரிப் படிப்பை முடிக்க விடாத கடும் பொருளாதார சிக்கல்களும், எதிர்பாராத சூழல்களால் தொடர முடியாமல் போன அச்சகத் தொழிலும் திரு. நாதனின் முன்னேற்றப் பாதையில் முட்டுக்கட்டை போட முயன்று தோற்றன என்பதே உண்மை.

அமெரிக்க காப்பீட்டுக் கழகத்தில் முகவராக இருந்த கொஞ்ச நாட்களிலேயே மனிதர்களைப் படிக்கவும், நேசிக்கவும் காந்தம் போல் வசீகரிக்கவும் கற்றுக் கொண்டார், அவர்.

கட்டுமானத் தொழிலில் 1982 ஆம் ஆண்டு ஏ.கே.நாதன் பிரவேசம் செய்ததே ஒரு தற்செயலான நிகழ்ச்சி தான். தயாபூமி திட்டத்தின் தாற்காலிக இரும்பு மேடை அமைக்கும் வேலையை எடுத்து வேறொரு ஒப்பந்தக்காரரிடம் கொடுத்திருந்தார் நாதன். கட்டுமானத் தொழிலுக்கு இவர் புதிது என்பதை பயன்படுத்தி அவரை பலவகையில் ஏமாற்ற முயன்றார் அந்த ஒப்பந்தக்காரர்.

ஒரு கட்டத்திலே, ஏ.கே.நாதன் பொறுமை எல்லை மீற, தகுதி வாய்ந்த பணியாளர்களையும், மேற்பார்வையாளர் ஒருவரையும் தேடிப் பிடித்து, ஏமாற்றுக்கார ஒப்பந்தக்காரரை வெளியேற்றினார். வேலையும் சீராக நடந்தது; இரவு பகலாக அயராது பணியாளருடன் கட்டுமானத் தளத்தில் நின்று தொழில் அறிவைப் பெருக்கிக் கொண்டார் நாதன்.
1983ம் ஆண்டு திரு. ஏ.கே. நாதன் கட்டிய “மலேசிய தேசிய கார் தொழிற்சாலை” (புரோட்டான் தொழிற்சாலை), ஜப்பானிய நிப்பான் இரும்பு நிறுவனம் மூலமாக கிடைத்தது அவரது தொழில் முன்னேற்றத்தின் திருப்பு முனையாக அமைந்தது. நிப்பான் நிறுவனத்துடன் எந்த முன் அனுபவமும் இல்லாத போதும், வேலை ஒப்பந்தத்தை தந்து உதவியர், அதன் ஜப்பானிய மேலாளர் தமேஷி யமாக்கி.

பின் ஒரு சந்தர்ப்பத்தில், எந்த நம்பிக்கையின் பேரில் தமக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது என்று யமாக்கியிடமே கேட்டாராம் நாதன். “நமது முதல் சந்திப்பு நினைவிருக்கிறதா? அப்போது உங்கள் கண்ணுக்குள் உற்று நோக்கினேன் நான்; அப்போது அதில் தெரிந்த உறுதியும் நேர்மையும், உங்களை நான் நம்பியதற்குக் காரணம்” என்றாராம் யமாக்கி.  இரவும் பகலும் மாறி வருவது போல, 1980ஆம் ஆண்டுகளின் நடுவில் வந்த பொருளாதார மந்த நிலை எல்லோரையும் போல ஏ.கே.நாதனையும்  விட்டு வைக்கவில்லை. அப்போதும் அவருக்கு கை கொடுத்தது நிப்பான் நிறுவனம் தான்; இந்த முறை சிங்கப்பூர் உள் அரங்க கட்டுமான ஒப்பந்தம் மூலமாக.

சிங்கப்பூரில் எனது கட்டிட வேலையை செய்யும் வாய்ப்பு கிடைத்த போது, மறுபடியும் கோலாலம்பூருக்குத் திரும்பவே மாட்டேன் என்றே நினைத்தேன்” என்கிறார் நாதன். அத்தனை கடினமான, தொழில்நுட்ப சிக்கல் மிகுந்த வேலையில் தூக்கம் தொலைத்த கர்ம யோக நாட்கள் அவை; அத்தனைக்கு அத்தனை பின்னாளில் துறை சார்ந்த அங்கீகாரத்தையும், மரியாதையையும் பெற்றுத் தந்தன. சிங்கப்பூருக்கு சென்று செய்த வேலை அவரது தொழில் வாழ்வின் நல்ல திருப்பமாகவும், எவர்செண்டாய் நிறுவனத்தின் சீரான வளர்ச்சிக்கு அடித்தளமாகவும் அமைந்து விட்டது.

காலச்சக்கரத்தில் பத்து இருபது ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிக்கையில், எவர்செண்டாய் இரும்புக் கட்டுமானத் துறையில் முத்திரை பதித்து, தனக்கென சிறப்பான ஒரு இடத்தை பெற்று இருப்பதை அறியலாம். அவர்கள் கட்டிய கட்டிடங்கள், பல்வேறு நாடுகளின் அடையாளச் சின்னங்களாகவே மாறி விட்டன.

அவற்றில் குறிப்பிட்டு சொன்னால், மலேசியாவின் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள், கேஎல்சிசி சுரியா, கேஎல் கோபுரம், கேஎல்ஐஏ விமான நிலையம், துபாய் விமான நிலைய கட்டுப்பாட்டுக் கோபுரம், துபாய் பண்டிகை நகரம், சவுதி அரேபியாவின் கிங்டம் சென்டர், கத்தாரின் கலீபா விளையாட்டரங்கம் மற்றும் அறிவியல் தொழில் நுட்ப பூங்கா, சிங்கப்பூரின் சங்கி விமான நிலைய மூன்றாவது கட்டிடம் மற்றும் செக் லப் கொக் விமான நிலைய விரிவாக்கம்-ஹாங்காங், என பட்டியல் நீள்கிறது. இன்று உலகிலேயே மிகவும் உயர்ந்த கோபுரமாக விண்ணை முட்டி நிற்கும் 828 மீட்டர் உயர புர்ஜ் கலிஃபா (துபாய்) கட்டிடமும் எவர்செண்டாயின் கைவண்ணமே.

இன்றளவிலும், மலேசியாவின் அடையாளச் சின்னமாக திகழும் பெட்ரோனாக்ஸ் இரட்டை கோபுரத்தின் கட்டுமானத்தில் பங்கு கொண்டதை நினைத்துப் பெருமிதம் கொள்கிறார் திரு.நாதன். ஒரு மலேசியனாக இந்த உலகத்திலேயே மிகவும் உயர்ந்த வானளாவிய ஒரு கட்டிடத்தைக் கட்டிவிட வேண்டும் என்ற தீவிர உந்துதல் காரணமாகவே அது நிஜமாகியது. அதற்காக நாதன் அவர்கள் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல; கொரிய ஒப்பந்ததாரரை ஈர்க்கும் வகையில், சிங்கப்பூரில் நடந்து கொண்டிருந்த கட்டுமானப்பணியை காட்டிட, அவர்களே தாமே அழைத்துச் சென்ற ஓய்வில்லாத ஐந்தரை மணி நேர கார் ஓட்டப்பயணம் உள்பட.

பெட்ரோனாக்ஸ் இரட்டை கோபுரங்களை கட்டியது எனக்கு பெருமை தந்த செயல். எனக்குக் கிடைத்ததோ இரண்டாவது கோபுரத்தின் பணி; அதுவும் முதல் கோபுரத்தின் பணி துவங்கி மூன்று மாதங்கள் கழித்து. ஆனால் நாங்கள் இரண்டாவது கோபுரத்தை, முதல் கோபுரம் கட்டி முடிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பே நிறைவு செய்து விட்டோம்” என்கிறார் திரு. நாதன் பூரிப்போடு.

எவர்செண்டாய் கட்டும் கட்டிடங்கள் மட்டுமல்ல, அதன் பெயர் கூட பலருக்கும் அது ஒரு ஜப்பானிய நிறுவனமோ என்ற எண்ணத்தை தந்து விடுகிறது. “பெயரைக் கேட்கும் போது அப்படி ஒரு அபிப்பிராயம் ஏற்ப வாய்ப்பு உண்டு என்பதை நான் அறிவேன்; ஆனால் அது நூற்றுக்கு நூறு சதவீதம் ஒரு மலேசியக் குழுமம்”- டான் ஸ்ரீ ஏ.கே.நாதன், முகத்தில் குறுஞ்சிரிப்புடன்.

தொழில்முறை உறவில் வெற்றி கண்டு, நீண்டகால நண்பர்களாக மாறி விட்டனராம், திரு. தமேஷி யமாக்கியும் திரு. நாதனும். யமாக்கியின் சொந்த ஊர் ஜப்பானைச் சேர்ந்த செண்டாய் என்பதாம்; அதன் பொருள் “ஆயிரம் தலைமுறைகள்” ஏ.கே.நாதனின் மனதை கவர்ந்த செண்டாய் உடன் ஆங்கிலத்தின் எவர் (என்றென்றும்) சேர்ந்து, “எவர்செண்டாய்” பிறந்தது, வளர்ந்தது.

தொழில்தர்மம் என்று வரும்போது, ஏ.கே.நாதன் அவர்கள் மூன்று கொள்கைகளில் உறுதியாய் நிற்பது வழக்கம்; அவை, எவ்வித குறைவோ சமரசமோ இல்லாத பாதுகாப்பான வேலையும், உயர்ந்த தரமும், சொன்னது சொன்னபடி முடிக்கும் நேர்மையும். இத்தகைய மிகவும் உயர்தரமான, தொழிலாளர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட, குறிப்பிட்ட கால அட்டவணைக்குள் கண்டிப்பாக முடிக்கப்படும் கட்டுமானப் பணிகளும் அதனால் உண்டாகும் வாடிக்கையாளர் மனநிறைவும், எவர்செண்டாய் என்றுமே இரும்புக் கட்டுமானத்துறையில் விரும்பப்படும் முதல் இடத்தைப் பிடித்திருப்பதின் ரகசியம்.

நான் ஒரு பொறியாளன் அல்லன்; அதற்கான பட்டமும் பெறவும் இல்லை. அன்றைய பொருளாதார சூழலில் என் கல்வி தடைபட்டு விட்டது. ஆனால், பிற்காலத்தில் தொழிலில் எனது அனுபவத்தால், விடாமுயற்சியால் நான் அறிந்த நுணுக்கங்கள், சூட்சமங்கள், பல கற்று அறிந்த பொறியியளாரையே மலைப்பில் ஆழ்த்தியுள்ளன” என்ற ஏ.கே.நாதன் கூற்றில் சிறிதும் மிகை இல்லை.

சேவையில் ஒரு முறை திருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் எவர்செண்டயைத் தேடி வருகின்றனராம், நாதன் அவர்கள் அனுபவத்தில்; பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, எந்த வித விளம்பரமோ, சந்தைப்படுத்துதலோ இல்லாமலேயே, மத்திய கிழக்கு நாடுகளில் இந்த விதமாக.

விற்பனை முகவர்கள் என தனியாக யாரும் கிடையாது, வாடிக்கையாளர்கள், உடன் பணியாற்றிய கட்டிட வல்லுனர்கள், திட்ட மேலாளர்கள், எவர்செண்டாயின் பணியின் தரத்தை நன்கு அனுபவித்து அறிந்தவர்கள்; இவர்களே நல்லெண்ண தூதுவர்களாக மாறி, மீண்டும் மீண்டும் பணி செய்ய அழைப்பு விடுக்கின்றனராம் நாதன் அவர்களுக்கு.

கட்டிடக்கலையில் அடுத்த படியாக, ஏ.கே.நாதனின் எவர்செண்டாய், மிகவும் நவீனமான காம்போஸிட் தொழில்நுட்பத்தை உருவாக்கி வெற்றி கண்டுள்ளது. தனது இயந்திரவியல் மற்றும் பொறியியல் தேர்ச்சியின் அடிப்படையில், எண்ணை மற்றும் எரிவாயு துறைகளிலும் தடம் பதித்து வருகிறது. சிங்கப்பூரின் எண்ணை வள நிறுவத்தின் 20 சதவீத பங்குகளையும் கையகபடுத்தியுள்ளது.

ஒளியமான ஒரு சிறந்த எதிர்காலத்தை எதிர்கொள்ள இருக்கிறது, எவர்செண்டாய். அதற்காக இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டி உள்ளது. அதை நான் செய்து முடிப்பதே என் லட்சியம்” என்கிறார் நாதன் மாறாத புன்னகையுடன்.

இரும்புக் கட்டுமானத் துறையில் தனது பல்லாண்டுக்கால உழைப்பின் பலனாக, ஏ.கே.நாதன் பெற்றுக் குவித்த விருதுகளும் பாராட்டுக்களும் பலபல. எர்னெஸ்ட் & யங் வழங்கிய மலேசியாவின் மிகச்சிறந்த தொழில் முனைவோர் பட்டமும், மாட்ரிட் ஸ்பெயின் நாட்டு வணிக தலைமை கழகத்தின் தங்க கட்டுமான பட்டயமும் அதில் அடங்கும்.

உருக்கி வார்க்கப்படும் இரும்பைப் போலவே, எனது தொழிலில் நான் சந்தித்த போராட்டங்கள் என்னை வார்த்து எடுத்து வெற்றிக்கனியைத் தந்து விட்டன என்கிறார், இரும்பு மனிதர் டான் ஸ்ரீ ஏ.கே. நாதன். டான் ஸ்ரீ என்பது அவரது சாதனைகளை கவுரவிக்கும் வகையில் மலேசிய அரசாங்கம் வழங்கிய உயரிய பட்டம். 25 ஆண்டுகளுக்கும் மேலாக, தொழிலில் தான் கண்ட ஏற்ற இறக்கங்கள், அனுபவங்கள் தன்னை பல விதத்திலும் கெட்டிப்படுத்தி, மேலும் மேலும் மன உறுதியையும் முனைப்பையும் கொடுத்ததாக கூறுகிறார் திரு. ஏ.கே.நாதன்.

திரு. நாதன் குடும்பம் அன்பான மனைவியும், அழகான மகளும், அறிவான மகனும் கொண்டது. அவரது குழந்தைகளுக்கு திருமணம் ஆகி, மகன் அவரது நிறுவனத்தின் துபாய் பிரிவை சிறப்புற கவனித்து வர, மகள் தன் கணவருடன் நியூசிலாந்து நாட்டில் வசித்து வருகிறார். அவரது தொழில் குடும்பமோ 15,000 உறுப்பினர்களுக்கு மேல் வளர்ந்து, மலேசியா, அமீரகம், சௌதி அரேபியா, கத்தார் மற்றும் இந்தியாவில் தழைத்தோங்கி வருகிறது.

ஓய்வில்லா உழைப்பின் நடுவே, திரு. ஏ.கே. நாதன் தன் நேரத்தை ஒதுக்குவது கொஞ்சம் கோல்ப் விளையாடி மகிழவும், நெப்போலியன் ஹில் எழுதிய “வெற்றிக்கான விதிகள்” போன்ற சுயமுன்னேற்ற நூல்களைப் படிக்கவும் தான்.

நான் தொழிலை அன்புமணம் புரிந்தவன்; அவள் மீது நான் கொண்ட காதல், என்னை மேலும் மேலும் உற்சாகமாக உழைக்கத் தூண்டுகிறது” எனும் ஏ.கே.நாதனின் சிரிக்கும் கண்கள் மின்ன, கூடவே மின்னுகின்றன அவரது வைரம் பதித்த தங்க கை கடிகாரமும், அவரது ஆழ்ந்த நீல நிற மேல் நாட்டு உடையும்.

இந்த அறுபது வயது இளைஞருக்கு, ஓய்வுக்காலம் என்றும் இல்லை என்றும் நம்புகிறார் அவர். ஏனென்றால் அவர் ஒரு இரும்பு மனிதர்!

(நன்றி: www.top10asia.org and www.eversendai.com)