September 21, 2009

விளம்பரமா? அது எனக்கு..கொஞ்சம் கூட பிடிக்காது..

விளம்பரமா? அது எனக்கு..கொஞ்சம் கூட பிடிக்காது..
தமாம் பாலா


இடது கை கொடுக்கிறது, வலது கைக்குத் தெரியக்கூடாது.. சுண்டு விரல் கொடுப்பது மோதிர விரலுக்குத் தெரியக்கூடாது.. ஏன்னா.. எனக்கு விளம்பரம்னா.. கொஞ்சம் கூட பிடிக்காதுன்னு சொல்றவங்க நிறைய பேர் இருப்பாங்க; நானும் அப்படித்தான் இருந்தேன்.. கொஞ்ச நாளுக்கு முன்னாடி வரைக்கும்!


பின்னே என்னங்க.. ஒரு பாட்டு கூட முழுசா நிம்மதியா கேட்டு இருக்க மாட்டோம், அதுக்குள்ள.. அணில் சேமியா வாங்குங்க, முயல் ரவா வாங்குங்கன்னு ஆயிரம் விளம்பரம்.. மிரட்டும் குரலிலே, வறட்டுக்கத்தலாக.. ரேடியோவிலே கேட்டு கேட்டு காதெல்லாம் புளிச்சு போன எண்பதுகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்புன்னு பேர் வெச்சாலும் வெச்சாங்க.. வர்த்தகம் ஜாஸ்தி, ஒலிபரப்பு கம்மின்னு ஆயிடுச்சு..


ரேடியோ போச்சு, டிவி வந்தது ; கேட்கிற விளம்பரம் போயி பார்க்கிற விளம்பரம் வந்தது. வண்ணச்சுடர், ஒலிச்சித்திரம், எஸ்விசேகர்/க்ரேஸி மோகன்/காத்தாடி ராமமூர்த்தின்னு பார்க்காமலேயே காதல்.. ஸாரி.. பார்க்காமலேயே சிரிச்சு மகிழ்ந்தது அந்த(க்) காலம்.


பிழிய பிழிய அழுவறது, இல்லேன்னா முன்னாடி சிரிச்சு முடிச்சு, முகத்தை அஷ்டகோணலாக்கி, பின்னாலே குழி தோண்டுறதுன்னு மெகா சீரியல் எல்லாம் ஒரே ரணகளமாயிடுச்சு.. இன்றைய சேனல் மகா யுத்தத்திலே.. பாலைவனத்து பட்டை வெயிலா! இந்த சீறியல் நடுநடுவே.. ஒரு சின்ன கவிதையா, ஹைக்கூவா, குறைஞ்ச பட்சம், நம்ம முகத்திலே சின்ன புன்னகையை வரவழைப்பது, யாரு/எது?


விளம்பரம்!! ஆமாங்க.. இப்போதெல்லாம், டிவியிலே வர்ற ப்ரோக்ராம் எல்லாத்தையும் விட விளம்பரங்கள் தான் சுவாரசியமா, ரசிக்கிற மாதிரி இருக்குன்னு எனக்குத் தோணுது.. மூணுமணி நேரத்து சினிமாவுடைய சஸ்பென்ஸ், மெஸேஜ், க்ரியேடிவிடியை மூணு நிமிஷத்தை தாண்டாத விளம்பரம் கொடுக்குது!


சிறியவர்/பெரியவர் அனைவரும் விரும்பும் நிஜாம் பாக்குன்னு ஒரு விளம்பரம்.. அழகான பாப்பா முகம் முதல் பல்லுபோன தாத்தா முகங்கள் வரை. சொட்டு நீலம் டோய், ரீகல் சொட்டு நீலம் டோய்னு மல்டி ஷாட் விளம்பரங்கள், கொஞ்சம் பழைய விளம்பரங்களிலே குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை.


இப்போ வர்ற ஒரு விளம்பரத்துலே, சிக்னலே கார்லே ஒரு பெரிய மனுஷன் இருப்பாரு.. சைக்கிள்லே வேர்த்து விறுவிறுத்து ஒரு பையன் வருவான்.. “சே.. எங்கேர்ந்தோ வந்திடறாங்கன்னு, பையனைப் பார்த்து முகம் சுளிப்பார் கார் கனவான்.. உடனேயே பையன், அவர் மாதிரியே ஷர்ட்டை இன் செய்துட்டு, கழுத்துலே டை கட்டிக்கிட்டு, “அங்கிள், ரெண்டு சக்கரம் தான் கம்மி.. ஒரு நாள்.. அதுவும் வந்திடும்”னு சொல்லிட்டு கம்பீரமா சைக்கிளை ஓட்டிக்கிட்டு போவான்.. ரொம்ப பாஸிடிவா இருக்கும் அது!


வர வர இந்த விளம்பரங்கள் செய்ற குறும்பு/ரவுசை தாங்கவே முடியல்லை; அதற்கு முத்தாய்ப்பாய் இந்த பதிவை எழுத தூண்டிய ஒரு விளம்பர சங்கிலியை(?!) உங்களோடே பகிர்ந்துக்கிறேன். கொஞ்ச நாள் முன்னாடி ஒரு பைக் விளம்பரம் வந்துக்கிட்டிருந்தது, தொலைகாட்சியிலே (டிவிக்கு தமிழ் நமக்கும் தெரியுமுங்க :-) குண்டு நபர் ஒரு பைக்கிலே, ஒல்லி நபர் இன்னொரு ப்ராண்ட் பைக்கிலே, ரோடு சிக்னலிலே சந்திப்பாங்க. ஒல்லி நபர், குண்டு நபர் பைக்கை குறை சொல்லி, விலையிலே மட்டும்.. உன்னோடது அதிகம்..!! அப்படின்னு சொல்லி பன்ச் வைப்பார்.


ஜெயிக்கிறவன் ஒரு நாள் தோற்பான்; தோற்கிறவன் ஜெயிப்பான்னு சொல்ற மாதிரி, சன் டைரக்டிலே ரொம்ப க்ளவரா, காமெடியா இடம் மாத்தி போட்டுட்டாங்க, குண்டரையும் ஒல்லி பிச்சானையும்! முதல் விளம்பரத்துலே குண்ட்ஸும் ஒல்லியும் மொட்டை மாடியிலே சந்திபாங்க.. டிஷ் பின்னணியிலே.. பைக்குலே தோத்த குண்டர், வெறுப்பேத்தி ஜெயிக்கிறார் டிஷ் போரிலே!


இரண்டாவது விளம்பரம், நம்ப நண்பர்கள் கு-வும் ஒ-வும் இப்போ சந்திக்கிறது, ஒரு சலூனிலே.. வெறும் 440ரூபாயிலே 130 சானல்னு குண்ட்ஸ் கொளுத்திபோட, ஒல்லீஸ்.. “சே என்னை மொட்டை அடிச்சுடான்யா”(என்னோட டி.டி.ஹெச்) அப்படின்னு பொலம்புறதும், உடனே முடிதிருத்துபவர்.. “மொட்டை அடிக்கணுமா சார்?” அப்படின்னு அப்பாவியா கேட்கறதும், ஒல்லி முறைக்கிறதும்.. சுத்தமான தமிழிலே சொன்னால்.. சூப்பர்!! :-))


இவங்க ட்விஸ்ட் ட்ராமாவிலே லேட்டஸ்டா வர்ற விளம்பரம் இது.. குண்டர் இதிலே, ஜிம்மிலே ட்ரெட் மில்லிலே நடந்து உடற்பயிற்சி செய்துக்கிட்டிருக்கார்.. ஒல்லியர் வந்து சேர்ந்துக்கறார்; வழக்கம் போல பேச ஆரம்பிக்கிறாங்க..


ஒல்லி: என்ன பார்த்துக்கிட்டிருக்கே..
குண்டு: ###### (வழக்கம் போல எடுத்து வுடுறார்)


ஒல்லி: நானும் ######
குண்டு: 440, சுட்டி டீவி, பாக்ஸ் டீவி, ஆதித்யா..


ஒல்லி: நானும் தான்.. 440, சுட்டி டீவி, பாக்ஸ் டீவி, ஆதித்யா..
குண்டு: ?????!!!?????


ஒல்லி: ஆமான்யா, நானும் இப்போ மாறிட்டேன்.. டண் டன் டண்...
குண்டு(ஒல்லியை கட்டிக்கொண்டு): வீட்டுக்கு வீடு சன்..(பாக்கியை) நீ சொல்லு..


ஒல்லி: டண் டன் டண் டனாட்டன் டண் !!
கவிதை.. கவிதை! எப்படித்தான் இப்படியெல்லாம், ரூம் போட்டு யோசிக்கறாய்ங்களோ, தெரியவில்லை!! ;-))


வேறே, குறிப்பிட்டு சொல்லக்கூடிய விளம்பரங்கள்:-


கால் பந்து கோல் அடித்து விட்டு, ஓடி ஆடி கொண்டாடி சட்டையால் முகத்தை மூடிக்கொண்டு கம்பத்தில் மோதி விழும் வீரர் / காதலிக்கு மெழுகுவர்த்தி விருந்தும் வைர மோதிரமும் கொடுத்து கவர் பண்ணி முடிக்கும் நேரத்தில் அவள் தலையில் நூடுல்ஸ் கொட்டும் சர்வர் / விமானத்தில் பக்கத்து இருக்கையில் ஒரு பிகர் வந்தும், சீட் மாறும் ஜொள்ளர், இரண்டு பெண்கள் நடுவில் போய் சேர்வது.. (வாழ்க்கை, சில நொடியிலேயே மாறிவிடும் போது.. ஏன்.. நிமிடத்துக்கு பணம் செலுத்த வேண்டும்?? டாட்டா டோக்கோமோ விளம்பரம்!)


அண்ணே.. பிஸ்கெட் முளுகிடுச்சு (பிரிட்டானியா மில்க் பிக்கிஸ்)
மிச்சம் மூணு ரூபாய்க்கு ஐஸ்க்ரீம் சாப்ட்டேன்(பெப்ஸொடெண்ட்)
கண்ண மூடுங்க..ஸர்ப்ரைஸ்.. (நான்கில் ஒரு ஆண் களைப்பை உணர்கிறார்,  ஹார்லிக்ஸ் லைட்)



வாழ்க்கையிலே ஆரம்பிச்ச எல்லாமே, ஒரு நாள் முடிவுக்கு வந்தே தீரும்முன்னு சொல்லுவாங்க.. அது இந்த பதிவுக்கும் பொருந்தும் அல்லவா? அப்படி.. முடிவா ஒரு விளம்பரத்தை பத்தி..


யோகி பி : (தன் கரகர இன்ப்ரா ரெட் தகர குரலில்) கண்ண்ணதாஸன், விஸ்வன்னாத்தன்.. (எங்கேயும் எப்போதும் ரீமிக்ஸ்)
முன்னணிப்பாடகர் எஸ்.பி.பி: இந்தாங்க காஜா பாம் தடவுங்க..
(அவரைப்போய் பின்னணிப் பாடகர்ன்னு சொல்றது.. தப்பு! )


யோகி பி: (தொண்டை மூக்கடைப்பு நீங்கி..) எங்கேயும்ம்ம் எப்போதும்ம்ம்ம்.. (எஸ்.பி.பியின் ஸ்வீட் வாய்ஸ்-ல்!!!)


இப்போ சொல்லுங்க, உங்களுக்கு.. விளம்பரம், பிடிக்குமா, பிடிக்காதா? பிடிக்கும்-னு சொன்னா, நீங்களும் எங்(யங்)கட்சி!! உங்களுக்கு, என் வலைப்பக்கத்திலே.. கட் அவுட்டும், டிஜிட்டல் பேனரும் வச்சு அசத்திடுறேன்..ஓக்கேவா?


நன்றி.. வணக்கம்!!!! :)))))