December 25, 2009

“ஹவ் ஆர் யூ பேபி? - ஃபில்லி டீச்சர்”

“ஹவ் ஆர் யூ பேபி? - ஃபில்லி டீச்சர்”
தமாம் பாலா

டிசம்பர் 23 2009, தம்மாமில் வழக்கம் போல ஒரு அலுவலக நாள்; இந்த கொட்டேஷன் அர்ஜண்ட், அந்த கொரிக்கு ஆன்ஸர் கொடுக்கணும்னு சுறுசுறுப்பா நாள் தொடங்கிடுச்சு. காலை பத்துமணிக்கு ராதிகாவிடமிருந்து மொபைல் கால்! ஸ்கூல் லேர்ந்து, இந்த நேரத்திலேயா? சம்திங் ராங்..

“உங்களுக்கு விஷயம் தெரியுமா? ஃபில்லி டீச்சர் இன்னைக்கு காலைல செத்துப் போயிட்டாங்களாம்!” சொல்லும் போதே கிட்டதட்ட குரல் கம்மி அழுதுவிட்டாள் அவள்.

“ஸ்கூல்-கா புட்டி டீச்சர் மர்கையா க்யா?” என்று பினுஜார்ஜும், “இங்கினெ கையபிடிச்சு டெய்லி கூட்டி போன டீச்சர் மரிச்சு போயோ.. எண்ட மோன் ஸ்கூல் ஃபோகஸ் புக்கிலெ ஃபோட்டோ காணிச்சு” என வர்கீஸும் சொல்ல, கொஞ்ச நேரத்திலேயே ஆபிஸிலும் விஷயம் பரவி விட்டது தெரிந்தது.

ஃபில்லி, டீச்சர்! கறுப்பான குள்ளமான தேகம்; அறுபதுக்கும் மேல் பிராயம். ராதிகா ஃபில்லியுடன் 7/8 ஆண்டுகளாக ஸ்கூலில் இணைந்து பணியாற்றினாலும், எனக்கு கடந்த சில மாதங்களாகத்தான் தெரியும்.

“ஸ்கூல் ஃபவுண்டேஷன் டே ஒர்கிலே நான் இருக்கேன்; வழக்கம் போல ஃபில்லி டீச்சர்தான் ஸாங் லிரிக்ஸ்! சாயந்தரம் நாம தான் அவங்களை பிக்கப் செய்யணும்; தம்மாம் சீக்கோ பில்டிங் பக்கத்திலே பாரிஸ் ஸ்டோர் பக்கத்திலே வீடு” என்றாள் என் மனைவி ராதிகா.

“அங்கே என்னமா ட்ராபிக் இருக்கும்னு உனக்கு தெரியாது? என்னாலே முடியாது” என்று நான் முதலில் சிடுசிடுத்தாலும் கடைசியில் வெற்றி அவளுக்குத்தான். பிஸியான சீக்கோ ஏரியாவில் நாங்கள் நுழைந்த போது, நல்லவேளையாக எனக்கு முன்பே ஒருத்தர் டபுள் பார்க்கிங் போட்டு தோதாக இருந்த இடத்தில் காரை நிறுத்தினேன். ராதிகா இறங்கி போய், அந்த அரபிக் ஆப்டிகல் ஷாப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஃபில்லி டீச்சரை, கை தாங்கலாக மெதுவாக அழைத்து வந்து, காரின் பின்சீட்டில் கிட்டத்தட்ட ஒரு குழந்தையை தூக்குவது போல ஏற்றி விட்டாள்.

“குட் ஈவெனிங், மிஸ்டர்.பாலன், ஸாரி ஃபார் த ட்ரபிள் ஐ ஹவ் கிவன் யூ..” ஃபில்லி டீச்சர்! வயதால் தளர்ந்து போன உடலுக்கு சற்றும் பொருத்தமில்லாத, உற்சாகமான, இனிமையான குரல்! அந்த கார் பயணத்தின் போதும் அதன் பின் வேறு சில சந்தர்ப்பங்களிலும் ஃபில்லி டீச்சர் என்னை தன் இனிமையான பேச்சால் என்னை மிகவும் கவர்ந்து விட்டார். “யூ ஹவ் காட் எ நைஸ் கார் மிஸ்டர். பாலன், ஐ ப்ளெஸ் யுர் கார்” என்றார் ஒரு முறை. “ராதிகா டோல்ட் மீ, யூ ஆர் இண்டெரெஸ்டெட் இன் ம்யூசிக்; டூ யூ ப்ளே எனி இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்?” என்றும் கேட்டார் இன்னொரு முறை. “நோ இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்; ஒன்லி வோக்கல்”- இது நான் ; அந்த காலத்து புல்புல்தாரா முதல், இன்றைய கீபோர்ட் கிட்டார் வரை நான் தொட்டு, கெட்டதை சொல்ல என் கௌரவம் இடம் தரவில்லை :((..

ஆங்கிலோ இண்டியன்களுக்கே உரித்தான, அழகிய ஆங்கில உச்சரிப்பு.. கனிவான மென்மையான பேச்சு..கிட்டத்தட்ட 22 வருடமாக ஃபில்லி டீச்சர் தம்மாம் இந்திய பள்ளியில் கேஜி டீச்சராக இருக்கிறாராம்; பிள்ளைகளுக்கு அன்புடன் பாடம் சொல்லிக் கொடுப்பதிலும், டான்ஸ்/ லிரிக்ஸ் என்று எல்லாவற்றிலும் ஆர்வம். குழந்தைகள் மட்டுமல்ல, சக டீச்சர்ஸ் ஏன் ஹெட்மிஸ்ட்ரஸ் கூட ஃபில்லிக்கு.. “ஹவ் ஆர் யூ பேபி தான்! (பிரின்ஸிபலை கூட ஃபில்லி, ஒருநாள் பேபீஈஈ.. என்று கூப்பிட்டு விட்டதாக ஒரு உறுதி செய்யப்படாத புரளி உண்டு)

அப்படிப்பட்ட ஃபில்லி டீச்சர் இன்று நம்முடன் இல்லை! 23ம் தேதி காலையில் கூட, “குட்மார்னிங், டுடே ஐயம் நாட் அட்டெண்டிங் ஸ்கூல்; ப்ளானிங் டு ஸெலிப்ரேட் க்ரிஸ்மஸ் அட் ஹோம்” என்று எஸ்.எம்.எஸ் அனுப்பிய ஃபில்லி டீச்சர் காலை 7 மணி சுமாருக்கு வீட்டிலேயே, திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்து, அவரது கணவர் ஆம்புலனஸ் ஏற்பாடு செய்வதற்குள் சில நிமிடங்களுக்குள்ளேயே எல்லாம் முடிந்து, சகலமும் அடங்கிவிட்டது!

இத்தனை ஆண்டுகளாக, சளைக்காமல் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து, கரெக்ஷ்ன் செய்து, கையை பிடித்து ஏபிசிடி எழுத சொல்லிக்கொடுத்து, ஸ்டிக்கர் ஒட்டி, புக்லெட் செய்து, போர்ட் ஒர்க் செய்து, உடல் ஒத்துழைக்க மறுத்தாலும், உள்ளார்ந்த அன்புடன் பணி செய்தவர் ஃபில்லி! வயதான காலத்தில், மகன்களும் மகள்கள் இருவரும் இந்தியாவில் இருக்க ஃபில்லி டீச்சரும் அவர் கணவர் மட்டும் சவுதியில் வசித்து வந்திருக்கின்றனர். இப்போது ஃபில்லியின் பூதவுடலை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவும், அவரது கணவருக்கு தேவையான செட்டில்மெண்டை செய்யவும் ஸ்கூல் நிர்வாகத்தினர் ஆவன செய்து வருகின்றனர்.

எத்தனையோ பிள்ளைகளின் வாழ்வில் கல்வியின் ஒளியால் வளம் சேர்த்த ஆத்மார்த்தமான ஆசிரியை ஃபில்லி டீச்சரின்.. “ஹவ் ஆர் யூ பேபி..” என்ற இனிமையான குரல் இன்னும் பலபல ஆண்டுகள் தம்மாம் இந்திய பன்னாட்டுப்பள்ளியின் மழலையர் கல்வி வளாகத்தில் எதிரொலிக்கும் என்பதில் சற்றும் சந்தேகமே இல்லை!