December 25, 2009

“ஹவ் ஆர் யூ பேபி? - ஃபில்லி டீச்சர்”

“ஹவ் ஆர் யூ பேபி? - ஃபில்லி டீச்சர்”
தமாம் பாலா

டிசம்பர் 23 2009, தம்மாமில் வழக்கம் போல ஒரு அலுவலக நாள்; இந்த கொட்டேஷன் அர்ஜண்ட், அந்த கொரிக்கு ஆன்ஸர் கொடுக்கணும்னு சுறுசுறுப்பா நாள் தொடங்கிடுச்சு. காலை பத்துமணிக்கு ராதிகாவிடமிருந்து மொபைல் கால்! ஸ்கூல் லேர்ந்து, இந்த நேரத்திலேயா? சம்திங் ராங்..

“உங்களுக்கு விஷயம் தெரியுமா? ஃபில்லி டீச்சர் இன்னைக்கு காலைல செத்துப் போயிட்டாங்களாம்!” சொல்லும் போதே கிட்டதட்ட குரல் கம்மி அழுதுவிட்டாள் அவள்.

“ஸ்கூல்-கா புட்டி டீச்சர் மர்கையா க்யா?” என்று பினுஜார்ஜும், “இங்கினெ கையபிடிச்சு டெய்லி கூட்டி போன டீச்சர் மரிச்சு போயோ.. எண்ட மோன் ஸ்கூல் ஃபோகஸ் புக்கிலெ ஃபோட்டோ காணிச்சு” என வர்கீஸும் சொல்ல, கொஞ்ச நேரத்திலேயே ஆபிஸிலும் விஷயம் பரவி விட்டது தெரிந்தது.

ஃபில்லி, டீச்சர்! கறுப்பான குள்ளமான தேகம்; அறுபதுக்கும் மேல் பிராயம். ராதிகா ஃபில்லியுடன் 7/8 ஆண்டுகளாக ஸ்கூலில் இணைந்து பணியாற்றினாலும், எனக்கு கடந்த சில மாதங்களாகத்தான் தெரியும்.

“ஸ்கூல் ஃபவுண்டேஷன் டே ஒர்கிலே நான் இருக்கேன்; வழக்கம் போல ஃபில்லி டீச்சர்தான் ஸாங் லிரிக்ஸ்! சாயந்தரம் நாம தான் அவங்களை பிக்கப் செய்யணும்; தம்மாம் சீக்கோ பில்டிங் பக்கத்திலே பாரிஸ் ஸ்டோர் பக்கத்திலே வீடு” என்றாள் என் மனைவி ராதிகா.

“அங்கே என்னமா ட்ராபிக் இருக்கும்னு உனக்கு தெரியாது? என்னாலே முடியாது” என்று நான் முதலில் சிடுசிடுத்தாலும் கடைசியில் வெற்றி அவளுக்குத்தான். பிஸியான சீக்கோ ஏரியாவில் நாங்கள் நுழைந்த போது, நல்லவேளையாக எனக்கு முன்பே ஒருத்தர் டபுள் பார்க்கிங் போட்டு தோதாக இருந்த இடத்தில் காரை நிறுத்தினேன். ராதிகா இறங்கி போய், அந்த அரபிக் ஆப்டிகல் ஷாப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஃபில்லி டீச்சரை, கை தாங்கலாக மெதுவாக அழைத்து வந்து, காரின் பின்சீட்டில் கிட்டத்தட்ட ஒரு குழந்தையை தூக்குவது போல ஏற்றி விட்டாள்.

“குட் ஈவெனிங், மிஸ்டர்.பாலன், ஸாரி ஃபார் த ட்ரபிள் ஐ ஹவ் கிவன் யூ..” ஃபில்லி டீச்சர்! வயதால் தளர்ந்து போன உடலுக்கு சற்றும் பொருத்தமில்லாத, உற்சாகமான, இனிமையான குரல்! அந்த கார் பயணத்தின் போதும் அதன் பின் வேறு சில சந்தர்ப்பங்களிலும் ஃபில்லி டீச்சர் என்னை தன் இனிமையான பேச்சால் என்னை மிகவும் கவர்ந்து விட்டார். “யூ ஹவ் காட் எ நைஸ் கார் மிஸ்டர். பாலன், ஐ ப்ளெஸ் யுர் கார்” என்றார் ஒரு முறை. “ராதிகா டோல்ட் மீ, யூ ஆர் இண்டெரெஸ்டெட் இன் ம்யூசிக்; டூ யூ ப்ளே எனி இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்?” என்றும் கேட்டார் இன்னொரு முறை. “நோ இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்; ஒன்லி வோக்கல்”- இது நான் ; அந்த காலத்து புல்புல்தாரா முதல், இன்றைய கீபோர்ட் கிட்டார் வரை நான் தொட்டு, கெட்டதை சொல்ல என் கௌரவம் இடம் தரவில்லை :((..

ஆங்கிலோ இண்டியன்களுக்கே உரித்தான, அழகிய ஆங்கில உச்சரிப்பு.. கனிவான மென்மையான பேச்சு..கிட்டத்தட்ட 22 வருடமாக ஃபில்லி டீச்சர் தம்மாம் இந்திய பள்ளியில் கேஜி டீச்சராக இருக்கிறாராம்; பிள்ளைகளுக்கு அன்புடன் பாடம் சொல்லிக் கொடுப்பதிலும், டான்ஸ்/ லிரிக்ஸ் என்று எல்லாவற்றிலும் ஆர்வம். குழந்தைகள் மட்டுமல்ல, சக டீச்சர்ஸ் ஏன் ஹெட்மிஸ்ட்ரஸ் கூட ஃபில்லிக்கு.. “ஹவ் ஆர் யூ பேபி தான்! (பிரின்ஸிபலை கூட ஃபில்லி, ஒருநாள் பேபீஈஈ.. என்று கூப்பிட்டு விட்டதாக ஒரு உறுதி செய்யப்படாத புரளி உண்டு)

அப்படிப்பட்ட ஃபில்லி டீச்சர் இன்று நம்முடன் இல்லை! 23ம் தேதி காலையில் கூட, “குட்மார்னிங், டுடே ஐயம் நாட் அட்டெண்டிங் ஸ்கூல்; ப்ளானிங் டு ஸெலிப்ரேட் க்ரிஸ்மஸ் அட் ஹோம்” என்று எஸ்.எம்.எஸ் அனுப்பிய ஃபில்லி டீச்சர் காலை 7 மணி சுமாருக்கு வீட்டிலேயே, திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்து, அவரது கணவர் ஆம்புலனஸ் ஏற்பாடு செய்வதற்குள் சில நிமிடங்களுக்குள்ளேயே எல்லாம் முடிந்து, சகலமும் அடங்கிவிட்டது!

இத்தனை ஆண்டுகளாக, சளைக்காமல் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து, கரெக்ஷ்ன் செய்து, கையை பிடித்து ஏபிசிடி எழுத சொல்லிக்கொடுத்து, ஸ்டிக்கர் ஒட்டி, புக்லெட் செய்து, போர்ட் ஒர்க் செய்து, உடல் ஒத்துழைக்க மறுத்தாலும், உள்ளார்ந்த அன்புடன் பணி செய்தவர் ஃபில்லி! வயதான காலத்தில், மகன்களும் மகள்கள் இருவரும் இந்தியாவில் இருக்க ஃபில்லி டீச்சரும் அவர் கணவர் மட்டும் சவுதியில் வசித்து வந்திருக்கின்றனர். இப்போது ஃபில்லியின் பூதவுடலை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவும், அவரது கணவருக்கு தேவையான செட்டில்மெண்டை செய்யவும் ஸ்கூல் நிர்வாகத்தினர் ஆவன செய்து வருகின்றனர்.

எத்தனையோ பிள்ளைகளின் வாழ்வில் கல்வியின் ஒளியால் வளம் சேர்த்த ஆத்மார்த்தமான ஆசிரியை ஃபில்லி டீச்சரின்.. “ஹவ் ஆர் யூ பேபி..” என்ற இனிமையான குரல் இன்னும் பலபல ஆண்டுகள் தம்மாம் இந்திய பன்னாட்டுப்பள்ளியின் மழலையர் கல்வி வளாகத்தில் எதிரொலிக்கும் என்பதில் சற்றும் சந்தேகமே இல்லை!

November 27, 2009

டிஜிட்டல் கேமரா, ஃபியூஜி ஃபைன்பிக்ஸ் J30

டிஜிட்டல் கேமரா, ஃபியூஜி ஃபைன்பிக்ஸ் J30
தமாம் பாலா

வலையுலக நண்பர்களே, புகைப்பட ஆர்வலர்களே, நாளுக்கு நாள், டிஜிட்டல் காமராக்களின் மெகாபிக்ஸல் அதிகரித்தும், விலை குறைந்து கொண்டும் வருகிறது அல்லவா?


அந்த வகையில், ஃபியூஜி அறிமுகப்படுத்திய ஃபைன்பிக்ஸ் J30 என்ற கையடக்க டிஜிட்டல் காமரா பற்றி, உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு!

இந்த புகைப்பட கருவியின் விவரங்கள் பின் வருமாறு:

அதிக பட்ச படத்தின் அளவு : 12 மெகா பிக்ஸல்கள்

ஆப்டிகல் ஸூம் = 3x ஃபேஸ் டிடக்ஷன், ரெட் ஐ ரிடக்ஷன், ஷேக் ஃப்ரீ, பானரோமா ஷாட் வசதிகள் உண்டு

உள்ளடக்க மெமரி= 10 MB மட்டும், எஸ்டி கார்ட் 8ஜிபி வேலை செய்கிறது

வீடியோ பதிவும் செய்யலாம் - 640x 480 அளவு 30 ஃப்ரேம் வரை (டிவிடிக்கு நிகர்)

உள்ளங்கை அளவு, கிட்டத்தட்ட ஒரு மொபைல் ஃபோன் சைஸ் தான்.

இவை எல்லாவற்றையும் விட ஆச்சரியம், அதன் விலை.. 400 சவுதி ரியால்கள் (கிட்டத்தட்ட 5000 ரூபாய், இந்திய மதிப்பில்)


இந்த காமராவின் புகைப்படமும், அதனை உபயோகித்து நான் எடுத்த புகைப்படங்களும் இங்கே உங்கள் பார்வைக்கு.

பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என பின்னுட்டம் இடுவீர்கள் தானே??!! :-)))













September 21, 2009

விளம்பரமா? அது எனக்கு..கொஞ்சம் கூட பிடிக்காது..

விளம்பரமா? அது எனக்கு..கொஞ்சம் கூட பிடிக்காது..
தமாம் பாலா


இடது கை கொடுக்கிறது, வலது கைக்குத் தெரியக்கூடாது.. சுண்டு விரல் கொடுப்பது மோதிர விரலுக்குத் தெரியக்கூடாது.. ஏன்னா.. எனக்கு விளம்பரம்னா.. கொஞ்சம் கூட பிடிக்காதுன்னு சொல்றவங்க நிறைய பேர் இருப்பாங்க; நானும் அப்படித்தான் இருந்தேன்.. கொஞ்ச நாளுக்கு முன்னாடி வரைக்கும்!


பின்னே என்னங்க.. ஒரு பாட்டு கூட முழுசா நிம்மதியா கேட்டு இருக்க மாட்டோம், அதுக்குள்ள.. அணில் சேமியா வாங்குங்க, முயல் ரவா வாங்குங்கன்னு ஆயிரம் விளம்பரம்.. மிரட்டும் குரலிலே, வறட்டுக்கத்தலாக.. ரேடியோவிலே கேட்டு கேட்டு காதெல்லாம் புளிச்சு போன எண்பதுகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்புன்னு பேர் வெச்சாலும் வெச்சாங்க.. வர்த்தகம் ஜாஸ்தி, ஒலிபரப்பு கம்மின்னு ஆயிடுச்சு..


ரேடியோ போச்சு, டிவி வந்தது ; கேட்கிற விளம்பரம் போயி பார்க்கிற விளம்பரம் வந்தது. வண்ணச்சுடர், ஒலிச்சித்திரம், எஸ்விசேகர்/க்ரேஸி மோகன்/காத்தாடி ராமமூர்த்தின்னு பார்க்காமலேயே காதல்.. ஸாரி.. பார்க்காமலேயே சிரிச்சு மகிழ்ந்தது அந்த(க்) காலம்.


பிழிய பிழிய அழுவறது, இல்லேன்னா முன்னாடி சிரிச்சு முடிச்சு, முகத்தை அஷ்டகோணலாக்கி, பின்னாலே குழி தோண்டுறதுன்னு மெகா சீரியல் எல்லாம் ஒரே ரணகளமாயிடுச்சு.. இன்றைய சேனல் மகா யுத்தத்திலே.. பாலைவனத்து பட்டை வெயிலா! இந்த சீறியல் நடுநடுவே.. ஒரு சின்ன கவிதையா, ஹைக்கூவா, குறைஞ்ச பட்சம், நம்ம முகத்திலே சின்ன புன்னகையை வரவழைப்பது, யாரு/எது?


விளம்பரம்!! ஆமாங்க.. இப்போதெல்லாம், டிவியிலே வர்ற ப்ரோக்ராம் எல்லாத்தையும் விட விளம்பரங்கள் தான் சுவாரசியமா, ரசிக்கிற மாதிரி இருக்குன்னு எனக்குத் தோணுது.. மூணுமணி நேரத்து சினிமாவுடைய சஸ்பென்ஸ், மெஸேஜ், க்ரியேடிவிடியை மூணு நிமிஷத்தை தாண்டாத விளம்பரம் கொடுக்குது!


சிறியவர்/பெரியவர் அனைவரும் விரும்பும் நிஜாம் பாக்குன்னு ஒரு விளம்பரம்.. அழகான பாப்பா முகம் முதல் பல்லுபோன தாத்தா முகங்கள் வரை. சொட்டு நீலம் டோய், ரீகல் சொட்டு நீலம் டோய்னு மல்டி ஷாட் விளம்பரங்கள், கொஞ்சம் பழைய விளம்பரங்களிலே குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை.


இப்போ வர்ற ஒரு விளம்பரத்துலே, சிக்னலே கார்லே ஒரு பெரிய மனுஷன் இருப்பாரு.. சைக்கிள்லே வேர்த்து விறுவிறுத்து ஒரு பையன் வருவான்.. “சே.. எங்கேர்ந்தோ வந்திடறாங்கன்னு, பையனைப் பார்த்து முகம் சுளிப்பார் கார் கனவான்.. உடனேயே பையன், அவர் மாதிரியே ஷர்ட்டை இன் செய்துட்டு, கழுத்துலே டை கட்டிக்கிட்டு, “அங்கிள், ரெண்டு சக்கரம் தான் கம்மி.. ஒரு நாள்.. அதுவும் வந்திடும்”னு சொல்லிட்டு கம்பீரமா சைக்கிளை ஓட்டிக்கிட்டு போவான்.. ரொம்ப பாஸிடிவா இருக்கும் அது!


வர வர இந்த விளம்பரங்கள் செய்ற குறும்பு/ரவுசை தாங்கவே முடியல்லை; அதற்கு முத்தாய்ப்பாய் இந்த பதிவை எழுத தூண்டிய ஒரு விளம்பர சங்கிலியை(?!) உங்களோடே பகிர்ந்துக்கிறேன். கொஞ்ச நாள் முன்னாடி ஒரு பைக் விளம்பரம் வந்துக்கிட்டிருந்தது, தொலைகாட்சியிலே (டிவிக்கு தமிழ் நமக்கும் தெரியுமுங்க :-) குண்டு நபர் ஒரு பைக்கிலே, ஒல்லி நபர் இன்னொரு ப்ராண்ட் பைக்கிலே, ரோடு சிக்னலிலே சந்திப்பாங்க. ஒல்லி நபர், குண்டு நபர் பைக்கை குறை சொல்லி, விலையிலே மட்டும்.. உன்னோடது அதிகம்..!! அப்படின்னு சொல்லி பன்ச் வைப்பார்.


ஜெயிக்கிறவன் ஒரு நாள் தோற்பான்; தோற்கிறவன் ஜெயிப்பான்னு சொல்ற மாதிரி, சன் டைரக்டிலே ரொம்ப க்ளவரா, காமெடியா இடம் மாத்தி போட்டுட்டாங்க, குண்டரையும் ஒல்லி பிச்சானையும்! முதல் விளம்பரத்துலே குண்ட்ஸும் ஒல்லியும் மொட்டை மாடியிலே சந்திபாங்க.. டிஷ் பின்னணியிலே.. பைக்குலே தோத்த குண்டர், வெறுப்பேத்தி ஜெயிக்கிறார் டிஷ் போரிலே!


இரண்டாவது விளம்பரம், நம்ப நண்பர்கள் கு-வும் ஒ-வும் இப்போ சந்திக்கிறது, ஒரு சலூனிலே.. வெறும் 440ரூபாயிலே 130 சானல்னு குண்ட்ஸ் கொளுத்திபோட, ஒல்லீஸ்.. “சே என்னை மொட்டை அடிச்சுடான்யா”(என்னோட டி.டி.ஹெச்) அப்படின்னு பொலம்புறதும், உடனே முடிதிருத்துபவர்.. “மொட்டை அடிக்கணுமா சார்?” அப்படின்னு அப்பாவியா கேட்கறதும், ஒல்லி முறைக்கிறதும்.. சுத்தமான தமிழிலே சொன்னால்.. சூப்பர்!! :-))


இவங்க ட்விஸ்ட் ட்ராமாவிலே லேட்டஸ்டா வர்ற விளம்பரம் இது.. குண்டர் இதிலே, ஜிம்மிலே ட்ரெட் மில்லிலே நடந்து உடற்பயிற்சி செய்துக்கிட்டிருக்கார்.. ஒல்லியர் வந்து சேர்ந்துக்கறார்; வழக்கம் போல பேச ஆரம்பிக்கிறாங்க..


ஒல்லி: என்ன பார்த்துக்கிட்டிருக்கே..
குண்டு: ###### (வழக்கம் போல எடுத்து வுடுறார்)


ஒல்லி: நானும் ######
குண்டு: 440, சுட்டி டீவி, பாக்ஸ் டீவி, ஆதித்யா..


ஒல்லி: நானும் தான்.. 440, சுட்டி டீவி, பாக்ஸ் டீவி, ஆதித்யா..
குண்டு: ?????!!!?????


ஒல்லி: ஆமான்யா, நானும் இப்போ மாறிட்டேன்.. டண் டன் டண்...
குண்டு(ஒல்லியை கட்டிக்கொண்டு): வீட்டுக்கு வீடு சன்..(பாக்கியை) நீ சொல்லு..


ஒல்லி: டண் டன் டண் டனாட்டன் டண் !!
கவிதை.. கவிதை! எப்படித்தான் இப்படியெல்லாம், ரூம் போட்டு யோசிக்கறாய்ங்களோ, தெரியவில்லை!! ;-))


வேறே, குறிப்பிட்டு சொல்லக்கூடிய விளம்பரங்கள்:-


கால் பந்து கோல் அடித்து விட்டு, ஓடி ஆடி கொண்டாடி சட்டையால் முகத்தை மூடிக்கொண்டு கம்பத்தில் மோதி விழும் வீரர் / காதலிக்கு மெழுகுவர்த்தி விருந்தும் வைர மோதிரமும் கொடுத்து கவர் பண்ணி முடிக்கும் நேரத்தில் அவள் தலையில் நூடுல்ஸ் கொட்டும் சர்வர் / விமானத்தில் பக்கத்து இருக்கையில் ஒரு பிகர் வந்தும், சீட் மாறும் ஜொள்ளர், இரண்டு பெண்கள் நடுவில் போய் சேர்வது.. (வாழ்க்கை, சில நொடியிலேயே மாறிவிடும் போது.. ஏன்.. நிமிடத்துக்கு பணம் செலுத்த வேண்டும்?? டாட்டா டோக்கோமோ விளம்பரம்!)


அண்ணே.. பிஸ்கெட் முளுகிடுச்சு (பிரிட்டானியா மில்க் பிக்கிஸ்)
மிச்சம் மூணு ரூபாய்க்கு ஐஸ்க்ரீம் சாப்ட்டேன்(பெப்ஸொடெண்ட்)
கண்ண மூடுங்க..ஸர்ப்ரைஸ்.. (நான்கில் ஒரு ஆண் களைப்பை உணர்கிறார்,  ஹார்லிக்ஸ் லைட்)



வாழ்க்கையிலே ஆரம்பிச்ச எல்லாமே, ஒரு நாள் முடிவுக்கு வந்தே தீரும்முன்னு சொல்லுவாங்க.. அது இந்த பதிவுக்கும் பொருந்தும் அல்லவா? அப்படி.. முடிவா ஒரு விளம்பரத்தை பத்தி..


யோகி பி : (தன் கரகர இன்ப்ரா ரெட் தகர குரலில்) கண்ண்ணதாஸன், விஸ்வன்னாத்தன்.. (எங்கேயும் எப்போதும் ரீமிக்ஸ்)
முன்னணிப்பாடகர் எஸ்.பி.பி: இந்தாங்க காஜா பாம் தடவுங்க..
(அவரைப்போய் பின்னணிப் பாடகர்ன்னு சொல்றது.. தப்பு! )


யோகி பி: (தொண்டை மூக்கடைப்பு நீங்கி..) எங்கேயும்ம்ம் எப்போதும்ம்ம்ம்.. (எஸ்.பி.பியின் ஸ்வீட் வாய்ஸ்-ல்!!!)


இப்போ சொல்லுங்க, உங்களுக்கு.. விளம்பரம், பிடிக்குமா, பிடிக்காதா? பிடிக்கும்-னு சொன்னா, நீங்களும் எங்(யங்)கட்சி!! உங்களுக்கு, என் வலைப்பக்கத்திலே.. கட் அவுட்டும், டிஜிட்டல் பேனரும் வச்சு அசத்திடுறேன்..ஓக்கேவா?


நன்றி.. வணக்கம்!!!! :)))))

August 10, 2009

எஸ்.பி.பியின் மகா கொண்டாட்டம் (சென்னை, 9-8-2009)



எஸ்.பி.பியின் மகா கொண்டாட்டம் (சென்னை, 9-8-2009)
தமாம் பாலா


வருட விடுமுறை கிட்டத்தட்ட முடிந்து ஒரு வாரம் தான் பாக்கி. ஞாயிறு,லீவு நாளா இருக்கு, நண்பர் கருணாநிதியை போய் ஒரு நடை பார்த்திட்டு வந்திடலாம்னு போன் போட்டேன்; வாங்க வீட்டிலே தான் இருக்கேன் அப்படின்னாரு அவரும்.

சாயந்தரம் ஆயிடுச்சே, காபி சாப்பிட்டுட்டு போங்கன்னு வீட்டிலே சொல்றாங்க. அப்போ தான் நம்ப மச்சான் வெங்கட்டுக்கு ஒரு போன் கால்! “பாலா... எஸ்.பி.பியோட மியூசிக் ப்ரோக்ராமுக்கு டிக்கெட் கிடைச்சிருக்கு”, நீங்க போயிட்டு வரலாமே” அப்படிங்கறாரு போன் பேசிட்டு..

பூசாரியை பார்க்க கிளம்பினவன் முன்னாடி, பக்தா என்ன வரம் வேணும்னு சாமியே வந்த மாதிரி, இந்த திடீர் பரிசு! அசடு வழிய கருண்ஸ்க்கு போன் போட்டு.. ஹி..ஹி.. அப்புறம் வர்றேன்னேன், அவரும் புரிஞ்சுக்கிட்டு, அதனாலென்ன, பரவாயில்லைன்னுட்டார்.

சேப்பாக்கம் யூனிவர்சிட்டி செண்டினரி ஏசி(?!) ஹாலில் 9-8-2009 அன்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் வழங்கும் மகா கொண்டாட்டம், அப்படின்னு ஏ4-ஏ3 சைஸ்க்கு இடைப்பட்ட பெரிய நுழைவுச்சீட்டு.. எப்போ வேணும்னாலும் உங்களை ஹாலை விட்டு வெளியே அனுப்பிடுவோம்னு ஏகப்பட்ட கண்டிஷனோடு.

குழந்தைங்க யாரும் வரலைன்னுட்டாங்க; நானும், மனைவி ராதிகாவும், அவளோட அண்ணி ஜெயாவும் சேப்பாக்கிலே ஆஜர் ஆயிட்டோம். ஷீன்லாக், எல்.ஜி.மொபைல்னு ஒரே பாம்ப்லெட்டா கையிலே திணிச்சு உள்ளே அனுப்பினாங்க.. ஹாலில் மிதமான கூட்டம். மங்கள மஞ்சள் சீருடையிலே கணேஷ் க்ருபா இசைக்குழுவினர், சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்னு இன்ஸ்ட்ருமெண்டலிலே அமர்க்களமா ப்ரோக்ராமை ஆரம்பிச்சுட்டாங்க.

டிக்கெட்டிலேயும், வாசலிலேயும் இருந்த எஸ்.பி.பி பெயர், மேடையிலே மிஸ்ஸிங்! கோவை முரளி,அனந்து மற்றும் குழுவினர் பாடின ஜனனி, ஜனனி பாட்டும் தவப்புதல்வன் படத்து, இசைக்கேட்டால் புவி அசைந்தாடும் பாட்டும் அடுத்து அடுத்து வந்துச்சு. நல்லாவே பாடுனாங்க.

எல்லாரும் ஆவலோட எதிர்பார்த்த எஸ்.பி.பி, தக தகன்னு ஒரு தங்க பட்டு சட்டையிலே மேடைக்கு வந்ததும், சபை களைகட்டிடுச்சு! தொகுப்பளினியை டீவிலே பார்த்த ஞாபகம்; தமிழும் இங்க்லீஷும் கலந்து சரளமா எஸ்.பி.பி பத்தி பல புள்ளி விவரங்கள சும்மா அள்ளி விட்டாங்க. ஆனா, வயசு ஆக ஆக “அவரோட யூத் புல்நெஸ் கொறஞ்சுகிட்டே வருதுன்னு” சொன்னப்போ, அர்த்தம் வேறெ மாதிரி வருதேன்னு, ராதிகா டக்குன்னு கண்டுபிடிச்சிட்டா!

நான் உங்கள் வீட்டுப்பிள்ளைங்கிற மாதிரி ஒரு நட்போட, யதார்த்தமா சிம்பிளா இருக்கார் எஸ்.பி.பி. ஆடியன்ஸோட சிரிச்ச முகமா பேசுறதாகட்டும், பாடுற பொண்ணுங்க வீக்கா இருக்காங்க; மைக் வால்யூமை பாத்து ஜாஸ்தி பண்ணுங்க, பாடிட்டு போகும் போது ஸ்பீக்கரோட மைக் க்ளாஷ் ஆகுது, பாத்து ஆப் பண்ணுங்க, ஹாலிலே ஏசி எப்பவுமே சரியா வேலை செய்றது இல்லே நீங்க எல்லாரும் யுனிவர்சிடிக்கு லெட்டர் போடுங்கன்னு, இனிமையா இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கறதாகட்டும் எஸ்.பி.பிக்கு இணை எஸ்.பி.பி தான்! லல்லுவை ஐ.ஐ.எம்மில் லெக்சர் கொடுக்க கூப்பிட்ட மாதிரி இங்கிதமான வழி நடத்துதலுக்கு பாடும் நிலா பாலுவை பணித்தாலும் தகும்!

முப்பத்து அஞ்சாயிரம் பாட்டுக்கு மேலே பாடின மனுஷன், சொல்றார்.. நல்ல பாட்டுன்னு, ஒரு பத்து/பதினஞ்சு பாட்டையே, (அரச்ச மாவை அரச்சது போல, இது என் அண்டர்ஸ்டாண்டிங்க் :-) பாடாமே, இந்த தடவை வித்தியாசமான அபூர்வமான பாட்டை எடுத்திருக்கோமுன்னு! கையோட பாடல் வரிசையை குறிச்சு வச்சுக்காதது என் தப்புதான்.. :-( நினைப்புலே இருக்கிற முக்கிய பாட்டுங்க..


1. உனை நினைத்தேன் பூவே,பூவே

2. உன்ன நினைச்சேன்.. பாட்டு படிச்சேன் சூப்பரோ சூப்பர், (அதிலும் ஆல்பர்ட் வயலின் ஒத்துழைப்போடு) கண்ணுலே தண்ணி தளும்பிடுச்சு..
3. அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ..ஒத்திக்கோ (நம்ப சவுதி காலை ஆபீஸ் சவாரியிலே ஆஸ்தான பாட்டுங்கோ அது :-)) நம்ப ஜே வரிசைக்கு மேலே உள்ள பால்கனியிலே, ஒரு வெண்தாடி பெரியவர் டான்ஸ் ஆடி அனுபவிச்சு, மிராண்டா கிப்ட் ஹாம்பரும் வாங்கிட்டார் இந்த பாட்டுக்கு.
4. மாருகோ மாருகோ மாருகையி.. துள்ளல் பிரம்மாண்டம்.. பொம்பிளைங்க கூட ஆடி அசத்திட்டாங்க! சென்னை நாம நினைச்சதை விட ரொம்ப்ப.. முன்னேறிடுச்சுடா, சாமி!!
5. வா வா பக்கம் வா (தங்க மகன் பாட்டு.. 25 வருஷத்துக்கு முன்னாடி அப்பா தஞ்சை குமரன் தியேட்டருக்கு கூப்பிட்டு போன ஞாபகம்)
6. மைனே பியார் கியா படத்தின், தில் திவானா மற்றும் சங்கராபரணம் பாடல்கள் சிறப்பு போனஸ் !!
7. நாளை நமதே டைட்டில் சாங், கோவை முரளியுடன் இணைந்து.. அதே அந்த காலத்து இனிமை துளியும் மாறாமல்
8. தாயின் மணிக்கொடி, தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய் ஹிந்த்- சும்மா ஜிவ்வுன்னு மயிர்கூச்செரியும் அனுபவமாய்!
9. இந்தியன் படத்தின் கப்பலேறி போயாச்சு, சூப்பர் ஹிட் சாங், கலக்கலாய்
10. ராகங்களின் சுகமான மெலடியான, நீயொரு ராக மாலிகை மற்றும் பாட்டு உருவான கதைகள்.


சாயங்காலம் 6-30க்கு ஆரம்பிச்ச நிகழ்ச்சி 10மணிக்கு மேலேயும் போய்கிட்டே இருந்துச்சு.. பிள்ளைங்க வீட்டிலேர்ந்து கூப்பிட்டதாலே வீட்டுக்கு போகவே மனசு இல்லாம இடத்தை காலி பண்ண வேண்டியதா போயிடுச்சு :((


நம்ப பதிவை முடிக்கிறத்துக்கு முன்னாடி குறிப்பிட்டு சொல்ல வேண்டியது..


இசைக்குழு :-
கணேஷ் க்ருபா இசைக்குழு பத்தி எனக்கு அதிகம் தெரியாது; ஆனாலும் இந்த நிகழ்ச்சி மூலமா அதன் இசைக்கலைஞர்களுடைய, கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் நிகழ்ச்சி பூராவும் பளிச்சிட்டது. கோட் சூட் போட்டு வழி நடத்தியவர் தான் கணேஷ் க்ருபான்னு நினைக்கிறேன், தான் பாட்டு எதுவும் பாடமே, கமெண்ட்ஸ் அது இதுன்னு டாமினேட் செய்யாமே கருமமே கண்ணாயினார் போல நல்ல நிகழ்ச்சிய குடுத்திருக்காரு அவரு!


ஆண் பாடகர்கள் எஸ்.பி.பிக்கு ஈடு கொடுத்தாங்க; பாடகிகள் தான் ரொம்பவே அடக்கி/அமுக்கி வாசிச்சிட்டாங்க.. ஹூம். அதிலும் 14 வயசு பையன் ஒருத்தன் கூட பாடினான்.. அவனையும் பாராட்டி எழுத ஆசைதான். என்ன செய்யறது, இந்த காலத்துலே டிவி ஷோவிலே பசங்க டேலண்டுலே கலக்கறாங்க; எஸ்.பி.பி பாடற மைடை அல்லவா, அந்த லெவலுக்கு ஹோம் ஒர்க் பண்ண வேண்டாமோ? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்! குழு பாடகர்கள் பாடிய பாடல்களை இந்த பதிவிலே பட்டியல் போடத வகைக்கு எனக்கும் ஒரு குட்டு போட்டுக்கறேன்!


ஆடியன்ஸ்:-
டிக்கெட்டிலே போட்ட பல கண்டிஷன்களோட, ஒன்லி சீரியஸ் லிஸனர்ஸ் ஆர் அல்லௌட் அப்படின்னு போட்டிருக்கலாம் (க்ளாஸிபைட்லே ஒன்லி சீரியஸ் பையர்ஸ் டு காண்டாக்ட்/ப்ரோகர்ஸ் எக்ஸ்க்யூஸ்னு போடற மாதிரி)


நானே பாடின பாட்டுன்னாலும், நிகழ்ச்சிக்காக புதுசா பக்குவமா ப்ராக்டீஸ் பண்ண எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு, பாலு விலாவாரியா சொல்றார்; ஏசி வேலை செய்யாத/ சூடான விளக்குகளோட வியர்வையோட அவரும் இசைக்குழுவும் சும்மா மாங்கு மாங்குன்னு பாடிக்கிட்டு இருக்காங்க, ஆடியன்ஸ் என்னடான்னா, தீவுத்திடல் எக்ஸிபிஷன் கணக்கா ஆளுக்கு ஆளு பக்கதுலே அரட்டை அடிச்சிக்கிட்டு, செல்போன் பேசிக்கிட்டு, நொறுக்கு தீனி வாங்கறத்துக்காக கால் வீசி நடந்து கிட்டு.. கொடுமைடா சாமி! :(((


இது போதாதுன்னு, ஜெயண்ட் ஸ்க்ரீன்லே, ப்ரோக்ரமை காட்டிகிட்டு இருக்கும் போதே, குறுக்கே குறுக்கே சைலண்டா, ப்ரகாஷ் ராஜ் ஷீன் லாக் மாப்பிள்ளைக்கு லட்டு திணிக்கிறாரு/ ராதிகா வந்து ராசியான குமரன் நகை மாளிகைக்கு உதடு அசைகிறாங்க, இது ஸ்பான்ஸர் ரவுசு!


கைத்தட்டல் பஞ்சம் கூட தெரிஞ்சது. கை தட்டி ஊக்குவிக்கிறத்துக்கும், சைலண்டா பாட்டு முடியறத்துக்கும் எல்லாரையும் டோஸ்ட்மாஸ்டரிலே தான் சேர்க்கணும்னு தோணுது!


(நாமளும் எஸ்.பி.பி போல ஒரு இஞ்சினியர், “பெயரளவிலும்” சின்ன ஒத்துமை.. என்ன அவரு ஒரு ஜம்போ ஸ்பெஷல் மசால் தோசைன்னா, நாம சாதா தோசை!! அவரு சிகரம்/அடியேன் தகரம் அவ்வளவுதான் வித்தியாசம்)


மொத்ததில், அப்பாஸ் கல்சுரல் வழங்கிய மகா கொண்டாட்டம், எங்கும் பாலு, எதிலும் பாலு, பரவசமூட்டிய பழரசம்.


இந்த பதிவை முழுக்க படிச்சவங்களுக்கும், முதல் வரியோ, முக்காவாசியோ, இல்லே அப்புறம் ஆப் லைனில் படிக்கலாம்னு சேவ் செஞ்சு படிக்காமலேயே டெலீட் செய்ய போறவங்களுக்கும், நன்றி.. வணக்கம் !!!!!

June 17, 2009

பய(ண)ம்

பய(ண)ம்
தமாம் பாலா


தோளிலே ஒரு பை, கையிலே ஒரு சூட்கேஸ் ; ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்ஃபாரம்!

ஸ்டேஷனுக்கு ரயில் வர்றத்துக்கு 1 மணி நேரத்துக்கு முன்னாலேயே வந்துட்டு, தண்டவாளத்து கற்பனை கூட்டு புள்ளியிலே ரயில தேடுற ஜாதி நாம.. அப்பா ட்ரெய்னிங் அப்படி; இன்னைக்கு என்னடான்னா.. ஓட்டமும் நடையுமா உள்ளே நுழையும் போதே, ப்ளாட்ஃபார்மிலே ரயில் தென்படுது!

இன்னும் ஒரு படிக்கட்டுதான்; தம் கட்டி ஓடி பிடிச்சிடலாமுன்னு மூட்டை முடிச்சோடு ஓடறேன்; மூச்சு இறைக்குது.. இருதயம் துள்ளி வாய் வழியா வந்திடும் போல.. இன்னும் ரெண்டே படி தான்.. “கூ..” ட்ரெயின் கிளம்பியே விட்டது..

ப்ளாட்ஃபாரத்துலே கை பையும், சூட்கேஸும் கிடக்க.. அநாதையா நிக்குறேன்.. ட்ரெயினோட கார்டு வேன்.. தூரத்துலே.. புள்ளியா மறையுது.. அப்போதான்.. டக்குன்னு முழிப்பு வந்தது; ஒரே குழப்பமா.. வேர்த்து கொட்டி.. அட.. எல்லாமே கனவுதாங்க!
நம்ப பிஸ்ஜி காலேஜுலே படிக்கிற காலத்துலேர்ந்தே நிறைய தடவை இந்த கனவு வரும், எனக்கு.

நிறைவேறாத ஆசைகள் மட்டுமில்ல, நிறைவேறாத பயங்கள் கூட கனவுகளா வரும்னு கேள்விப்பட்டிருக்கோம் இல்லையா? நாம வேற ஏற்கனவே தொடைநடுங்கி.. இருட்டை பார்த்து பயப்படுவோம்; இருக்கிறது இல்லாதது எல்லாத்துக்குமே கவலைப்படுவோம்.

காலேஜு முடிச்சு வேலை, தொழில், கல்யாணம்னு கொஞ்ச நாளுக்கு ரொம்ப பிஸியா இருந்ததாலேயோ என்னமோ, இந்த கனவு வர்ற்து நின்னு போயிடுச்சு.

1993லே கல்யாணம் ஆச்சு, 1994லே ஆகாஷ் பொறந்தான் எனக்கு (எனக்குன்னா, என் பொண்டாட்டி ராதிகாவுக்கு :)) அவன் பொறந்து ஒரு வாரம் தான் இருக்கும்; ஆபீஸ்லே பாஸ் ஒரு குண்டை தூக்கி போட்டார்.. “பாலா, நாளைக்கே நீ நேபாள் போறே.. போயி.. திரிசூலி தேவிகாட் அக்விடக்ட் அப்ரூவலோட வர்ற..”

எப்படி நானு குடும்பத்தை விட்டுட்டு போறது? தெனம் லேட்டா போனலும் 9 மணிக்கு வீட்டுக்கு போயிடறோம்; ராதிகாவும், மாமாவும் சொல்றாங்க, எல்லாம் நாங்க பாத்துக்கறோம், நீங்க போயிட்டு வாங்கன்னு. (பின்னாலே சவுதி போகவும் இதுதான் அச்சாரம்!)

சென்னைலேர்ந்து டெல்லிக்கு ரயில் பயணம்; டெல்லி-காட்மாண்டு விமானத்துலே, வாழ்க்கையிலே முதல் ஆகாய வழி பயணம், இமயமலை பனி சிகரம் சூரிய ஒளியிலே சும்மா மின்னுது. நேபாளத்துலே பத்து நாள் இருந்தேன்; ஆபீஸ் வேலையெல்லாம் நல்ல முடிஞ்சது; கம்பெனியிலே வேலை செய்ற தமிழ் நண்பர்கள் குடும்பத்து புண்ணியத்துலே சாப்பாடு பிரச்சனை எதுவும் இல்லை!
வேலை முடிஞ்சு டெல்லி வந்துட்டேன்; சென்னை ரயில் ராத்திரி தான். அதுவரைக்கும் கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்லே தங்கலாம்னு போனேன். எல்லாம் சௌகரியமாத்தான் இருந்தது; சாயந்தரம் வரைக்கும்.

ஒரு நாளைக்கு, முழுசா மூணு வேளை சாப்புடுற பாரம்பரியம் நம்பளது; சின்ன வயசுலே அம்மா, இட்லி/தோசை/ஆப்பம்-தேங்காபால் வச்சா கணக்கு பாக்காம சாப்பிட்றது வழக்கம். ட்ரெயினுக்கு இன்னும் 2 மணி நேரம் இருக்கு; கெஸ்ட் ஹவுஸிலே உபசாரம் பிரமாதம்; சூடா சப்பாத்தி குருமா சாப்பிட்டுட்டு போகலாம்னு கெஞ்சுறான். சரி எதுக்கு குறை வைப்பானேன்னு, தட்டோட டைனிங் டேபிள்லே ஒட்கார்ந்து ஒரு கட்டு கட்டிட்டேன் :)


ஒரு வழியா கிளம்பியாச்சு; ரயில்வே ஸ்டேஷன் போறத்துக்கு ஒரு ஆட்டோ கூட்டி வந்துட்டாங்க; பெட்டி படுக்கையோட ஆட்டோவிலே ஏறிட்டேன், ஆட்டோ போகுது.. போகுது.. போய்கிட்டே இருக்குது.. ஸ்டேஷன் வந்த பாடு இல்லே.. நானும் எனக்கு தெரிஞ்ச பட்லர்(?) இந்தியிலே ஆட்டோ ட்ரைவர் கிட்டே என்ன என்னமோ கேக்குறேன்; அரைகுறையா புரிஞ்ச வகையிலே, அவன் புதுசா கிராமத்துலேர்ந்து, டெல்லிக்கு வந்துருக்கான், அவனுக்கு.. டெல்லியிலே ஒரு ரூட்டும் தெரியாதுன்னு.. மெல்ல விளங்குது! (ஆகா.. எல்லாரும் எப்படிடா க்ரெக்டா.. என்னையே குறிவெச்சு வர்றீங்க?!?)

சுத்து சுத்துன்னு சுத்தி.. தெருவுக்கு தெரு ஆட்டோவை நிறுத்தி.. டெல்லி ரெயில்வே ஸ்டேஷன் பாத்தீங்களா.. பாத்தீங்களான்னு.. மோதிரத்தையோ சாவியையோ தொலைச்சவன் மாதிரி துழாவி.. ஒரு வழியா ஒரு சந்துக்குள்ளே புகுந்து டெல்லி ரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்துட்டான்; அந்த படுபாவி!

பணத்தை குடுத்துட்டு, லக்கேஜோட.. ப்ளாட்ஃபாரத்துலே ஓடுறேன்.. கண்ணு எதிரே.. தமிழ் நாடு எக்ஸ்பிரஸ்.. கூ..கூ.. போயே.. போச்சு.. போயிந்தி.. சல்கயாச்சே.. இட்ஸ் கான்!

ஒரு வழியா, என் நீண்ட நாள் கனவு நிறைவேறிடுச்சு! சோர்ந்து போய் ப்ளாட்ஃபாரத்துலேயே உட்கார்ந்துட்டேன்; கொஞ்ச நேரத்துக்கு உலகமே முடிஞ்சிட்டமாதிரி, எல்லாத்தையும் தொலைச்சிட்ட மாதிரி இருந்தது ; சுதாரிச்சுக்கிட்டேன்.. முதல் வேலையா, ஃபர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட்டை ரிட்டன் கொடுத்து அடுத்த நாளுக்கு செக்கண்ட் க்ளாஸ் டிக்கெட் வாங்கினேன்; ஆபிசுக்கு அர்ஜெண்ட் பேப்பரை ஃபேக்ஸ் பண்ணிட்டு, வீட்டுக்கும் ஒரு ஃபோன் போட்டேன்; ஒரு வழியா நேபாளத்து பயணம், பல நாள் கனவு நிறைவேற்றத்தோடே இனிதே(!) நிறைவேறிச்சு!

இன்னிக்கு நினைச்சுப் பார்த்து அசை போடும் போது 15 வருஷம் ஓடியே போச்சு.. இப்பொ எல்லாம் ‘ரயில் மிஸ் பண்ணுற கனவு வர்றதே இல்லே” ; நம்பளும் ட்ரெயினுக்கு போறத்துக்கு முன்னாடி தட்டு வெச்சுகிட்டு உட்கார்றதே இல்ல. முதல்ல ட்ரெயின பிடிப்போம், இருக்கவே இருக்கு ‘பொங்கல்/இட்லி/வடை/ போண்டா.. இல்லைன்னா பச்சை வாழை பழம் அல்லது பிஸ்கட் (பக்கத்து சீட்காரன் கொடுத்தாதான் டேஞ்சர்!)

உண்மையிலே நல்லது கெட்டது நடக்குறதை விட அப்படி ஆயிடுமோ, இப்படி நடந்துடுமோங்கற பயம் தாங்க நம்மை பிடிச்சு ஆட்டுது; உண்மையிலேயே அது நடந்துட்டாலும், எப்படியாவது தட்டுதடுமாறி எழுந்து வந்திடுவோம், இல்லையா?

என்னுடைய காலப்பய(ண)த்துலே கலந்துகிட்டதுக்கு நன்றி! :))