March 16, 2008

சொல்லும்.. செயலும்..

(பாலசுப்ரமணியன்)

அம்மா சொல்ல நினைத்தாள்.. சொன்னாள்..
கண்ணா.. நீ இன்று சின்னப்பையன்..உனக்கு
பொம்மை வாங்கித் தருவேன்..நீ வளர..வளர..
விண்ணைத் தொடும் கல்வி தருவேன்.. உனக்கு

தின்ன தினம் அறுசுவை உணவு தருவேன்
இன்னும் பல செல்வம் தருவேன்.. உனக்கு
பொன் நிகர் பெண்ணை மணமுடித்து வைப்பேன்
அன்று சொல்லிய வண்ணம் செய்து காட்டினாள்.

கண்ணன் அன்று சொன்னான்..
அம்மா நான் அன்பைத் தருவேன்..உனக்கு
வீடு தருவேன்.. வாகனம் தருவேன்..
அவையில் பெருமை தருவேன்..உனக்கு

மகிழ்ச்சி தருவேன்.. மரியாதை தருவேன்..
கண்ணன் சொல்லிய வண்ணம் செய்தான்
கண்ணன் சொல்லாதது என்ன?
இது எல்லாம் என்..திருமணத்திற்கு முன்

என்..திருமணத்திற்கு பின்..நான்..
உனக்கு பிடித்த "முதியோர் இல்லத்தில்"
பொறுப்பாய் இடம் வாங்கித் தருவேன்..
கண்ணன்.. சொல்லவில்லை.. ஆனால்

செய்து காட்டினான்.. நம்மால் சொல்ல முடிவதை
செய்ய முடிந்தாலும்.. செய்ய முடிவதை..
சொல்ல முடிவதில்லை.. எதையும்
செய்வதற்குகூச்சம் இல்லை.. சொல்வதற்குத்தான்!

(நன்றி, கீற்று.காம்)

March 14, 2008

அம்மா மட்டும்தான்...

(எரா.சுரா)

தொலை தூரம் வந்து விட்டதால்
தொலைபேசினேன் வீட்டிற்கு
அக்கா : தம்பி நல்லா இருக்கியா
10 நாள்ள ஊருக்கு வரதா அம்மா
சொல்லிச்சி வரும்போது எனக்கும்
மாமவுக்கு ஒரு வாட்ச் வாங்கிவா
தங்கை : அண்ணா ந்ல்லா இருக்கியா
வரும்போது எனக்கு ஒரு CD Player
வாங்கிவா
அண்ணன் : எப்புர்ரா இருக்க, வரும்போது
ஒரு கூலிங்கிளாசு வாங்கிட்டு வா
அண்ணன் மகன் : சித்தப்பா எனக்கு
சாக்லெட்டு வாங்கிட்டு வா
தங்கை மகன் : மாமா எனக்கு துப்பாக்கி
வாங்கினு வரியா?
மனைவி : ஏங்க யாருக்கும் எதுவும்
வாங்கிட்டு வராதீங்க..சொல்லிட்டேன்,
நமக்கு மட்டும் எதாவது வாங்கிட்டு வாங்க
அப்பா: நல்லபடியா வாப்பா எனக்கு
ஒரு தலவலி தைலம் வாங்கிட்டு வா
எல்லோரும் கேட்டார்கள்.. அம்மாவும்
கேட்டார்கள், அம்மா மட்டும்தான்
கேட்டார்கள்“சுரேசு சாப்டியா”

தெரிந்தேன்..தெளிந்தேன்

(பாலசுப்ரமணியன்)


அன்றொரு நாள் கண்ட கனவொன்று
அறியாமலே வளர்ந்து எழுந்து நின்று
அழகாய் என் கண்முன் நடனம் ஆடும்
அதிசயம் கண்டு மகிழ்ந்தேன் நானும்

கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிற்பங்கள்
காலத்தில் ஒளிந்திருக்கும் நிகழ்வுகள்
சொல்லுக்குள் நிறைந்த வண்ணங்கள்
நல்லுணர்வாய் நதியாய் எண்ணங்கள்

சில விதைகள் பயிராகி பலன் தரும்
பல விதைகள் ஆழத்தில் புதைந்திடும்
நிலத்தில் விதைத்திட்டவன் மறந்தும்
கோலத்தின் நெளிவுகளாய் ஆதியும்

அந்தமும் இல்லாத கால வெளியின்
சந்தத்தில் முளைக்கின்ற சங்கீதத்தின்
நாதங்கள் இன்று ஒலிக்க, வாழ்வின்
வினோதம் தெரிந்தேன்,தெளிந்தேன்!

(நன்றி : கீற்று.காம்)

தகப்பனானதினால்...

(கற்பனை பாரதி)


நான் கண்விழித்து படித்த போது
நீ கூட விழித்ததற்க்கு நினைத்து கொண்டேன்..
சிறு வயதில் சரியாக படித்ததில்லையென்று !!
நான் கிரிக்கெட்டில் கோப்பை வாங்கியவுடன்
நீ தெண்டுல்கர் என்பதை போல் பெருமை
பேசியவுடன் நினைத்து கொண்டேன்....
நீ விளையாடியதேயில்லையென்று !!
நான் பள்ளியில் முதல் மாணவனானபோது
நீ ஊரெல்லாம் சொல்லிய போது
நினைத்து கொண்டேன்...நீ பதக்கமே வாங்கியதில்லையென்று !!
நான் சிறு பிணியில் விழுந்தாலும்
நீ துரும்பாக இளைத்தாயே நினைத்து கொண்டேன்....
உனக்கு பயம் ஜாஸ்தியென்று !!
நான் கடவுசீட்டுக்காக காவல் நிலையம்
சென்ற போது நீ வக்கீல் நண்பனுடன்
வந்து நின்றாயே நினைத்து கொண்டேன்....
உனக்கு பதற்றம் அதிகமென்று !!
நான் சிறிய வேலை சேர்ந்தவுடன்
நீ ஆட்சி தலைவராய் நினைத்த போது
நினைத்து கொண்டேன்....நீ தொழிலாளி
என்பதாலென்று என் திருமணம் நடக்க ,
நீ பிறர் காலை பிடித்தவுடன்
நினைத்து கொண்டேன்....
உனக்கு தைரியம் குறைவென்று
என் குழந்தை பிறந்தவுடன்....
எனை பார்த்து சிரித்தவுடன்
உண்மை தெரிந்ததப்பா!!
உன் பெருமை புரிந்ததப்பா!!
தகப்பனானதினால்
தன்னையே தந்தாயென்று!!!

March 13, 2008

புதிய இசையமைப்பாளர் அறிமுகம்

(பாலசுப்ரமணியன்)

அறிமுகம், புதிய இசையமைப்பாளர் பாலா.
படம்: சற்று முன் கிடைத்த தகவல்

திரைக்கு வர இருக்கும் புதிய தமிழ் படங்களில் ஒன்றான "சற்று முன் கிடைத்த தகவல்" படத்தின் பாடல்களை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. வார்த்தைகளை மூழ்கடித்து மூச்சுத்திணற செய்யும் இன்றைய தமிழ் திரைப்பாடல்கள் நடுவே இளையராஜாவின் அன்றைய 80 களை நினைவூட்டும் வகையில் புது ரத்தம் பாய்கிறது பாலாவின் பாடல்களில். இவர் இந்தப் படத்தில் தான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

சுட்டிப்பூவே...(பாடகர்கள்:அனுராதா ஸ்ரீராம்-மகேஷ்)

அமைதியான நதியின் ஓட்டம் போல மெல்லிசையாய் வழியும் பாடல். அனுராதா ஸ்ரீராமின் இழையும் குரலில் புல்லாங்குழல் கசிந்துருக அருமையான அன்பான வரிகளில் உள்ளம் கவரும் பாடல். புதிய பாடகர் மகேஷின் உயிரோட்டம் நிறைந்த குரலில் ஒரு நல்ல மெலொடி என நாளை பேசப்படும்.

கொஞ்சும் மொழி...(பாடகர்கள்:ஹரீஷ் ராகவேந்திரா-சின்மயி)

ஹரீஷின் குரலில், சட்டென ஒரு விமானம் வானில் எழும்புவது போல பீறிடும் வயலின்கள் பின்னணியில் கிளம்பும் பாடல். பாடகர்களின் தெளிவான தமிழ் உச்சரிப்பில் தமிழ்-கொஞ்சும் மொழியாக இனிக்கிறது. ஹரீஷ்-சின்மயி குரல்கள் பாடலுக்கு அழகு சேர்க்கின்றன.

சாய்-சாய்...(பாடகர்கள்:கார்த்திக்-மதுமிதா)

ஆங்கில இசையின் ஆல்பம் சாயலில் இன்னொரு மெல்லிசைப் பாடல். கவிதையான வரிகள். பாடலின் இசை-தாளம் போட வைக்கிறது. இளம் வயதினரை ஆடவும் வைக்கலாம் இநதப் பாடல்.

ரோஜா வனம்...(பாடகர்: அனுராதா ஸ்ரீராம்)

ஆளுமை நிறைந்த அனுராதா ஸ்ரீராமின் அதட்டும் குரலில் மிரட்டுகிறது இந்தப்பாடல். எல்.ஆர்.ஈஸ்வரிக்குப் பிறகு இவர் அதிரடியாகப் பாடும் விதம் அற்புதம். பாடலின் இடையில் ராப் இசையுடன் மென்மையும் வன்மையும் மாறிமாறித்தோன்றும் இசை நம்மை கேட்கும் போதே வெவ்வேறு தளத்திற்கு கொண்டு செல்கின்றன.

ஹிட்சு காக்கு...(பாடகர்கள்: ராம் ஷங்கர்-சாய்இமகேஷ்)

வேகமாக செல்லும் இந்த பாடலும் கேட்பதற்கு இனிமையாய் இருந்தாலும் பாடல் வரிகளும் இசையும் ஜனரஞ்சகத்துக்கு இசையமைப்பாளர் செய்து கொண்ட சமரசமாகவே தோன்றுகிறது. ஒருவேளை படத்தின் காட்சி அமைப்புக்கு ஏற்றதாக இருக்கலாம்.

பிச்சாவரம் குப்பத்துல்ல...(பாடகர் திப்பு)

குத்துப்பாடலாக இருந்தாலும் திப்புவின் குரலும் பழைய பாடகர் ஜெயசந்திரன் போன்ற தெளிவான தமிழ் உச்சரிப்பில். பாலாவே எழுதி இசையமைத்திருக்கிறார். பாடலின் பிரம்மாண்டமும் இசை செறிவும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தவே செய்கின்றன.

படத்தின் இசையமைப்பாளர் பாலா, இயக்குனர் தக்காளி சீனிவாசன், பாடகர் மகேஷ் அனைவரும் கோவை பி.எஸ்.ஜி பொறியல் கல்லூரி நண்பர்கள் என்பதும் காலம் அவர்களது கலை தாகத்தை கலைத்து விடாமல் காத்து வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(நன்றி, கீற்று.காம்)