October 26, 2008

வளைகுடாவில் ஒரு தீபாவளியும், ஐம்பத்து ஒன்றாம் பதிவும்

வளைகுடாவில் ஒரு தீபாவளியும், ஐம்பத்து ஒன்றாம் பதிவும்
தமாம் பாலா

வருடத்துக்கு ஒருமுறை புத்தாடை கிடைக்கும் காலம் அது ; பார்த்து பார்த்து பட்டாசுகளை வாங்கிய வேளை அது. தீபாவளி வருகிறதென்றால், சுமார் ஒரு மாசம் முன்பு ஊரே களைகட்டி விடும். வழக்கமான அதே கடைவீதிகள், மனிதர்கள் ஆனால் புதிதான உற்சாகம். மீட்டர் பத்து ரூபாயிலிருந்து நூறு ரூபாய் வரை கூட துணிமணிகள் கிடைக்கும்; பட்டாசுகளும் பலபல விலையில். தீபாவளி போனஸை பொறுத்து, பர்ஸின் கனத்தை பொறுத்து அவர் அவர் வசதி, அந்தஸ்தை காட்டும் விதமாக வாங்குவார்கள்.

தஞ்சையிலே பள்ளி நாட்களில் நான் கொண்டாடியது தான் ஒரிஜினல் தீபாவளி. இப்போது வருவதெல்லாம், கம்ப்யூட்டர் கேம் போன்ற விர்ச்சுவல் தீபாவளிதான். மத்திய,மாநில அரசுகள் போடும் பட்ஜெட் போல அப்பா நிதி ஒதுக்கீடு செய்வார். நம் கண்ணீரின் சக்தி மற்றும் அம்மாவின் கூட்டணியில், துண்டு விழும் பட்ஜெட்டையும் தாண்டி பட்டாசுக்கு இடஒதுக்கீடு செய்யப்படும் :))

காலை நான்கு மணிக்கு எழுந்து எண்ணை தேய்த்து குளித்து, புது துணி உடுத்தி இருட்டிலே வெளியே வந்தால் நமக்கு முன்பே நாலுபேர் ரோட்டிலே வந்து வெடி வெடித்து அட்டகாசம் செய்து கொண்டிருப்பார்கள். இனிப்புகள்,மைசூர்பாக்கு,ஜாங்கிரி,முறுக்கு போல விதம்விதமாக சங்குசக்கரம்,புஸ்வாணம்,சாட்டை,பாம்பு மாத்திரை,எலெக்ட்ரிக் ஸ்டோன்,வெடி வகைகள் என்று தட்டிலே எடுத்துச்செல்லும் போதே கண் கொள்ளா காட்சியாக இருக்கும்!

வெடியின் திரியை பதமாக கிள்ளி, ஊதுபத்தியால் நெருப்பு முத்தம் கொடுக்க, அது மெதுவாக உட்செல்லும் காட்சியை காண்பதற்கே ஒரே த்ரில்லிங்க் ஆக இருக்கும். பயந்து பயந்து வைக்கும் வெடி, சமயத்தில் புஸ் என்று போவதும் உண்டு; சில நேரம் புஸ்வாணம் கூட வெடித்து பேஜாராவதும் உண்டு. எல்லாம் நம் நேரத்தை பொறுத்தே அமையும். பல இளவட்ட அண்ணன்கள் அக்கம் பக்கத்து அக்காக்களை அசத்த, வெடிகளை கையில் பிடித்து கொளுத்தி மேலே எறிவதும் உண்டு; அது அவர்கள் கையிலேயே சமயத்தில் வெடித்து அவர்களை பழிவாங்குவதும் உண்டு. :))))

இருக்கும் வெடிகளிலேயே ரொம்ப டேஞ்சரானது, ராக்கெட் தான். மண்ணில் புதைத்தோ, பாட்டிலில் நிற்க வைத்தோ, தீ வைக்கும் வரை சமர்த்தாக இருப்பது போல பாவ்லா செய்யும். கொஞ்ச நேரத்திலேயே, பின்பக்கம் நெருப்பு கக்கிக்கொண்டு, கிழக்கிலோ,மேற்கிலோ நேராகவோ, வளைந்து கொண்டோ.. வாழ்க்கை போகும் திசையை போல வகை தொகையில்லாமல் போய்விடும்! ஒருமுறை காமராஜர் காய்கறி மார்க்கெட் முழுவதும் இது போன்ற ராக்கெட்டால் எரிந்துவிட்டது என்று, பெரிசுகள் ஒவ்வொரு தீபாவளியும் பேசிக்கொள்வார்கள்.

முதல் ரவுண்டு வெடித்த பின், கையில் மினுமினுக்கும் வெடிமருந்தை, கழுவியும் கழுவாமலும் தின்பண்டங்களை ஒரு கை பார்ப்போம்; காலை மணி பத்துக்குள்ளே கைவசம் இருக்கும் வெடிகள் காகித குப்பையாய் வீதியெங்கும் நிறைந்திருக்கும்; சாயந்தரத்துக்கு மத்தாப்பூக்களும், மற்ற சைவ பட்டாசுகள் மட்டுமே மிஞ்சும். அதில் கார்த்திகைக்கும் கொஞ்சம் எடுத்து வைக்க வேண்டிய கட்டாயமும் உண்டு! காத்திருந்து அடைகாத்த தீபாவளி எதிர்பார்ப்புகள் ஒரு வழியாய் வடிந்து, ஒரு மந்தமான சகஜ நிலை திரும்பும். இதற்குள்ளே, புது சட்டையில் ஊதுபத்தி நெருப்பு துளிகள் போட்ட ஓட்டைகளும் பரிசாக கிடைத்து விடும்.

சாப்பிட்டு முடிக்கும் போது, குழம்பு,ரசம்,மோர்,பொரியல் கலந்து வரும் சுவை போல, வெடிக்காத பட்டாசுகளை உரித்து, மொத்த கலவையாய் கலந்து, அதை புஸ்ஸு கொளுத்தும் போது வரும் சுகமே தனி.

நாம்தான் பத்து/பனிரெண்டு வருஷ அஞ்ஞாத வாசத்தில் தீபாவளியை தொலைத்திருக்கிறோம் என்றால், பாவம் குழந்தைகள். அவர்களும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், ஜீலை ஆகஸ்டில் இந்தியா வரும்போது, மாமா/சித்தப்பா ஸ்டாக் வைத்திருக்கும் பட்டாசுகளை, ஒரு இரவு வெடித்து தீர்ப்பதே இப்போதைய நடைமுறை; அக்கம்பக்கத்து “கீழ்பாக்கம் கேஸோ” என்பது போன்ற பார்வைகளை அப்போது நாங்களும் சட்டை செய்வதில்லை! :)))

சின்ன வயதில், ஒரு புது துணிக்கு ஒருவருடம் காத்திருக்க வேண்டும்; இன்று நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் புது துணி வாங்கலாம். ஆனால் அன்று இருந்த சந்தோஷமும், உற்சாகமான எதிர்பார்ப்புகளும் இன்று இல்லவே இல்லை! மகாபாரத்து தங்க அணில் போல.. ஏன் என்று யோசித்து பார்க்கையில், இன்றைய வாழ்க்கையின் பொருளாதார குடுமி பிடி சண்டையில், ஓட்டத்தில்.. நின்று நிதானித்து எதையும் ரசிக்கவோ, அனுபவிக்கவோ மறந்து போய்விட்டது என்றே தோன்றுகிறது, நண்பர்களே!

கல்யாண வீட்டில் மொய் எழுதுவது போல 51வது பதிவாக இதை போட்டிருக்கிறேன். கொசுறாக தீபாவளி கவிதை ஒன்றும் உங்களுக்காக, இதோ. உங்கள் அனைவருக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!!!


வளைகுடாவில் ஒரு தீபாவளி

சூரியன் பகலில் பணி செய்து
சோர்ந்து மறைய,பின் இரவில்
சூழும் இருள் அக,புறங்களில்
நழுவும் மீனாய் மேக நடுவில்
தண்ணொளிச்சந்திரன் முயலும்
தன்னால் இயன்ற கடனொளியை
வழங்க,மெழுகாய் தேய்ந்துவிடும்
வராமல் போகும் அமாவாசையாய்
ஆண்டு முழுவதும் அகத்தில்
நீண்டு சேர்ந்த தீய இருளை
விளக்கு மட்டும் போக்காதென
வெடி வைத்துத் தகர்த்தோம்
மனிதன் வாழ்வில் பெரும்பாலும்
மகிழ்ச்சி பொங்கும் சில நிமிடம்
மறையும்,மீண்டும் வரும் அதை
இங்கு கொம்புவாணம் என்றோம்
ஏவுகணைகளை பறக்கவிட்டு
தாவும் அதன் அழகைக்கண்டு
துள்ளும் பிள்ளை மனம் உண்டு
அள்ளும் அழகு வாணவேடிக்கை
சங்குச் சக்கரம் சுழலக் கண்டு
எங்கள் வாழ்க்கைச் சக்கரம்
நினைவில் கொண்டோம்,இன்று
பனைவெளி பாலையில் இருந்து
சுத்தமாக குளித்து முடித்து பின்
புத்தம்புது உடையணிந்து, இங்கு
சத்தம் இல்லாமல் தீபாவளியை
மொத்தமாக கற்பனை செய்தோம்!

October 17, 2008

பழனிக்கு ஒரு பதிவு

பழனிக்கு ஒரு பதிவு
தமாம் பாலா

“ஐயா, நீங்கள் எந்த ஊரைச்சேர்ந்தவர்?”-பையன்.
“நான்.. எல்லா ஊர்களையும் சேர்ந்தவன்!”-பெரியவர்.
-அல்கெமிஸ்ட், பாலோ கொயிலோ


எந்த ஒரு மனிதனுக்கும், சொந்தமாக சொத்தோ, வீடு, வாசல் நிலம் புலமோ இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறைந்த பட்சமாக ஒரு பெயரும், ஊரும் இருக்கும். சில பேருக்கு, அந்த ஊரே, பெயராகவும் அமைந்து விடுவது உண்டு. பழனி, திருப்பதி, சிதம்பரம் என்று அது போன்ற பெயர் உள்ளவர்களை சந்திக்கும் போது, எனக்கு அவர்கள் தனிமனிதன் போல் இல்லாமல் அந்த ஊர் போலவே தோன்றுகிறார்கள்.

போன மாதம், வானவில்லாய் தோன்றி மறைந்த வருட விடுமுறையில், பழனி என்ற ஒரு மனிதரை சென்னையில் சந்தித்தேன் ; அன்றாட வாழ்வின் ஒரு அரை மணி நேர பயணத்தின் போது. வழக்கமான ஒரு சுவாரஸ்யம் குறைந்த சந்திப்பு என்றுதான், நானும் உங்களைப்போல நினைத்திருந்தேன்.

சென்னையின் இரண்டாம் வெயில் காலம் செப்டம்பரில்; போக்குவரத்து நெரிசல் என்று வழக்கமான ‘இட/கால நிரப்பல்’ பேச்சுகளில் தொடங்கினோம். அவர், திசை மாறி, ‘வோல்காவிலிருந்து கங்கை வரை’ படித்திருக்கிறீர்களா? என்றார். கேள்விப்பட்டிருக்கிறேன், வாசிக்க வாய்ப்பு கிட்டவில்லை இன்னும் என்றேன்.

பிறகு மெல்ல, தான் எழுத்துலக ஜாம்பவான் ஜெயகாந்தனின் தீவிர வாசகர் என்றும், அவரை நேரில் பார்த்து பழகும் பேறு பெற்றவன் என்றும் விளக்கினார். அந்த எழுத்துலக சிங்கத்தின் கதைகள், வாழ்க்கை அனுபவ புத்தகங்கள், மற்றும் பிரமிக்க வைத்த மேடைப்பேச்சுகள் என்று சொல்லிக்கொண்டே போனார். பேச்சு, சினிமா பழங்கால திரைக்கவிஞர் மாயவநாதன் என்று எல்லா திசைகளிலும் பயணித்ததில் அரை மணிநேரம், அரை நிமிடமாக சுருங்கி விட்டது; எனக்கோ ஒரு தமிழ் இலக்கிய பட்டறையில் கலந்து கொண்டது போன்ற ஒரு உணர்வும், நிறைவும் ஏற்பட்டு விட்டது.
ஒரு மாதம் ஆகியும், நினைவில் நிற்கும் இந்த சம்பவத்தை நண்பர்கள் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் சந்தோஷமே!

அது சரி.. யார் அந்த பழனி, நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே என்கின்றீர்களா? அவரை பார்க்க வேண்டுமென்றால், நீங்கள் சென்னை ராஜ தானிக்கு வரவேண்டும்; ஒரு ‘தானி’யில் பயணிக்க வேண்டும். தமிழ், அரசுக்கட்டிலிலும் ஆள்கிறது, ஆட்டோவும்.. ஓட்டுகிறது; ஆம்.. பழனி.. ஒரு ஆட்டோ ஓட்டுனர்!

அன்றாட வாழ்வின் லாப நஷ்டங்களை மீறி, ஒரு இலக்கிய வாசகனின் நிரந்தர மகிழ்ச்சியை அவரிடம் கண்டேன், அதை பாராட்டும் விதமாய் அவருக்கு இந்த பதிவு! :))))

October 11, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 10)



ஓமகுச்சி நரசிம்மன், உசிலை மணி ஆன கதை..

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்னு சொல்ல கேட்டிருக்கோம் இல்லையா? இது போல அனுபவம் உங்களுக்கும் பலமுறை ஏற்பட்டிருக்கும். ஓமகுச்சி நரசிம்மன், உசிலைமணி ஆன கதை தெரியுமா உங்களுக்கு? அதுதான் என் பள்ளி பருவத்துல நடந்தது!

நான் சின்ன வயசிலே குச்சி மாதிரி இருப்பேன்னு முன்பே எழுதியிருக்கேன். புல்தடுக்கி பயில்வானா நான் 8ம் கிளாஸ் வரைக்கும் இருந்ததுக்கு காரணம் யார் தெரியுமா? துவார பாலகர்கள்! துவாரபாலகர்னா.. கோயில்ல சன்னதிக்கு முன்னாலே பயங்கரமா ரெண்டு பேர் இருப்பாங்களே? அவங்க இல்ல.. :-)))) நம்ம தொண்டையிலே இருக்கிற துவாரபாலகர்கள்.. ஆங்கிலத்துலே டான்ஸில்ன்னு சொல்வாங்களே அவங்க!

திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு மறுபடி செவ்வாய்-னு ஒண்ணு விட்டு ஒரு நாள் வி.ஐ.பி டூர் ப்ரோக்ராம் மாதிரி ஜுரம்; தொண்டை வலி அப்படின்னு ஆறுமுதல் எட்டு வரை வாட்டி எடுத்துடுச்சு டான்ஸில் ப்ராப்ளம். சாப்பிடற சாப்பாடு ஜுரத்துக்கே சரியா போறதாலே, ஒடம்புலே ஒட்டவே இல்லே.. ஒடம்புதான்.. ரொம்ப ஒட்டி போயிடுச்சு.. :-((

மணி.. நல்ல பையன் தான், ஆனா ஒடம்பு தான் கொஞ்சம் வீக்கு.. எப்ப பாத்தாலும் ஜொரம்/அழுகாச்சின்னு பேராய்டுச்சு எனக்கு. பச்ச தண்ணீருக்கு 144, ஐஸ்க்ரீமுக்கு தடா, கூல் ட்ரிங்குக்கு பொடான்னு, கட்டுப்பாடுகள் நிறைஞ்ச வாழ்க்கை ஆயிடுச்சு!

அம்மா,அப்பாவுக்கு தான் ரொம்ப பொறுமை! டம்பளர் சுடுதண்ணியோட மாத்திரை கொடுத்தாலும், எதுவும் உள்ளே போகாது.. உல்டாதான்.. அமர்க்களம் தான். இப்போ நினைச்சு பார்த்தாலும், எனக்கே நான் பண்ணிய அமர்க்களமெல்லாம், ஓவரா.. கொஞ்சம் வெக்கமா கூட இருக்கு..

மாத்திரை கொடுத்து கொடுத்து, டாக்டரே ஓய்ஞ்சு போயிட்டார்; பேசாம ஆப்பரேஷன் பண்ணிடலாம், அதுதான் ஒரே தீர்வுன்னு சொல்லிட்டார். சரி எங்கே செய்யலாம் அப்படின்னு யோசிச்சப்போ, போபாலுக்கு வாங்க, நான் அரேஞ்ச் பண்றேன் அப்படின்னு, போபால் தாத்தா, புண்ணியம் கட்டிக்கிட்டார்.

பிறந்தது, போபாலிலே தாத்தா வீட்டிலேதான் என்றாலும், 14 வருஷம் கழிச்சு, மறுபடி போபால் போக முடிஞ்சது துவாரபாலகர்கள் உபயத்தாலேதான். தஞ்சாவூரிலேர்ந்து, சென்னை வந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸிலே போபால் போய் சேரவே 2/3 நாள் ஆகிவிட்டது. போபாலிலே, வீட்டுலே போய் சேர்ந்து, கட்டிலிலே படுத்த பின் கூட, ட்ரெயின் போல தடக் தடக்குன்னு ஆடுற மாதிரியே ஒரு ஃபீலீங்!

அது 1979ம் வருஷம், போபால் விஷ வாயு ஆக்சிடெண்ட் எல்லாம் நடக்கிறதுக்கு ரொம்ப வருஷம் முன்னாடி. தாத்தா வீடு இருந்த பிப்ளானி, ரொம்ப சுத்தமாவே இருந்தது. டாக்டரை பார்த்ததும், ப்ளட் டெஸ்ட்; ரத்தம் சோகை.. அயர்ன் டாப்லட் சாப்பிட்டு ஹீமோக்ளோபின் கவுண்ட் ஏத்தினாதான், ஆப்பரேஷன்னு சொல்லி ஒரு வாரம் ப்ரேக்.

அப்புறம் ஹாஸ்பிட்டல்லே, அட்மிட் பண்ணி, ஆப்பரேஷன் நாள் வந்துடுச்சு. அம்மா, அப்பாவுக்கெல்லாம் ஒரே கலக்கம். நமக்கு மட்டும் பயமே இல்லை; அதுவும் ஐஸ்க்ரீம் வேற சாப்பிடலாங்கிற எதிர்பார்ப்பு வேறே! அசட்டு தைரியம்தான் நம்ம கூடவே பிறந்த குணமாச்சே.. சிரிச்சுக்கிட்டே, ஸ்ட்ரெச்சரிலே உள்ளே போயாச்சு.
ஆப்பரேஷன் தியேட்டரிலே, கிங்கரர்கள் மாதிரி, டாக்டர்ஸ், வாணலிய கவுத்த மாதிரி லைட்ஸ்.. கொஞ்சமா பயம் எட்டி பார்த்தது. டாக்டர் என்னவோ பேச்சு கொடுத்திட்டே, கை நரம்புலே ஊசி குத்தி.. ஒண்ணு, ரெண்டு.. எண்ண.. சுகமான.. மயக்கமா, தூக்கமான்னு தெரியாத ஒரு உலகத்துக்குள்ளே நழுவறமாதிரி இருந்துச்சு.. கண்ணு தொறந்து பார்க்கும் போது, மறுபடியும் பெட்டுலே. நடுவிலே போன சில மணிநேரங்கள், ஜஸ்ட் ப்ளாங் தான்!

அன்ஸ்தீஷ்யாவோட மகிமை அப்போதான் புரிஞ்சுது. அளவு ரொம்ப கரெக்டா கொடுக்கணுமாமே! கம்மியானா, ஆப்பரேஷன் நடுவிலே முழிப்பு? ஜாஸ்தியானா, ஒரேடியா தூக்கம்?!? டாக்டருக்கு, நம்ம கோ-ஆப்பரேஷனிலே ஒரே சந்தோஷம். பக்கத்து பெட்டுலே ஒரு ஃபைனல் இயர் மெடிக்கல் ஸ்டூடண்ட், இதே டான்ஸில் ஆப்பரேஷனுக்கு வந்து, ரொம்பவே அழுது கலாட்டா பண்ணிட்டான்; ‘மதராஸி லட்கா, தேக்கோ.. கித்னா அச்சா ஹை.. என்று பாண்டே டாக்டர், புகழ்ந்து தள்ளி விட்டார். எல்லாம் இரு கோடுகள் தத்துவம் தானே!

ஆப்பரேஷனுக்கு பின்னால், நடக்கும் போது மயக்கம் வந்து, கொஞ்சம் கலாட்டா ஆகிவிட்டது. ரமேஷ் மாமா, குழந்தை போல தோளில் தூக்கி போட்டு படுக்கையில் போட்டு விட்டார். தமிழ் வாசனையே இல்லாத அந்த ஹாஸ்பிடலில், அப்போது.. தூரத்தில்.. ‘மீனா ஹல்லோ மீனா’ என்று ஜெயச்சந்திரன் குரலில் சன்னமாக பாட்டு கேட்டது. ஜாடையை பார்த்து, அப்பா இன்னொரு பெட்டிலிருந்து ட்ரான்சிஸ்டர் கொண்டு வந்தார். பாட்டு கேட்டதும், புது தெம்பே வந்து விட்டது. தமிழ்நாட்டிலிருந்து, கண்காணா தூரத்துக்கு எதிர்காலத்தில் போக வேண்டும்; தமிழை மட்டுமே துணை கொண்டு அங்கு வாழ வேண்டும் என்பதற்கு அச்சாரம் போட்டது போல அந்த சம்பவம் நடந்திருக்கிறது என்று இப்போது தோன்றுகிறது!

வீட்டுக்கு வந்த பின்னும் ராஜ உபசாரம் தான்; போபால் தாத்தா தன் கைப்பட ரஸ்கை பிசைந்து கட்லெட் செய்து கொடுத்தார். பின் தான் ரிடையர்மெண்ட் பிறகும் வேலை செய்த க்ளப்பிலிருந்து டென்னிஸ் பால் 3/4கும் கொடுத்தார். மறுபடியும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், தாலாட்டு, சென்னை.. பழையபடி தஞ்சாவூர்!

துவார பாலகர்களுக்கு, விடுதலை.. திக்கான பூஸ்ட், சாப்பாடு, கவனிப்பு! குரல்வளம்(?!) போய்விடுமோ என்று பயந்தபடி எதுவும் ஆகிவிடவில்லை. இப்போது, சாப்பாடும் கொஞ்சம் கொஞ்சமாக, உடம்பில் ஒட்ட ஆரம்பித்து விட்டது. ஒல்லி பையன் இவன் என்பது ஹிஸ்டரி ஆகிவிட்டது. ஓமக்குச்சி நரசிம்மன் மெல்ல மெல்ல உசிலை மணி ஆகிவிட்டான்!
9/10 படிக்கும் காலத்திலேயே, குமார் அண்ணாவுடன் நான் கும்பகோணத்தில் நடந்து போனால், அக்கம் பக்கம்.. குமாரோட போற பெரிய ஆள் யாரு அப்படின்னு கேட்கிற மாதிரி காலம் மாறிவிட்டது!

ஒற்றை நாடியா இருந்து, இரட்டை நாடியாய் ஆகி, இப்போது 1½ நாடியா இருக்கேன்னு நினைக்கிறேன். இந்த முறை விடுமுறைக்கு இந்தியா வந்த போது, ஆசான். சுப்பையா வாத்தியாரோட, கோவையிலே எடுத்துக்கிட்ட புகைப்படத்தை இந்த பதிவிலே போட்டிருக்கிறேன்; பார்த்து நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க நண்பர்களே! :-))))

தஞ்சையிலிருந்து தமாம் வரை தொடரும்..