October 26, 2008

வளைகுடாவில் ஒரு தீபாவளியும், ஐம்பத்து ஒன்றாம் பதிவும்

வளைகுடாவில் ஒரு தீபாவளியும், ஐம்பத்து ஒன்றாம் பதிவும்
தமாம் பாலா

வருடத்துக்கு ஒருமுறை புத்தாடை கிடைக்கும் காலம் அது ; பார்த்து பார்த்து பட்டாசுகளை வாங்கிய வேளை அது. தீபாவளி வருகிறதென்றால், சுமார் ஒரு மாசம் முன்பு ஊரே களைகட்டி விடும். வழக்கமான அதே கடைவீதிகள், மனிதர்கள் ஆனால் புதிதான உற்சாகம். மீட்டர் பத்து ரூபாயிலிருந்து நூறு ரூபாய் வரை கூட துணிமணிகள் கிடைக்கும்; பட்டாசுகளும் பலபல விலையில். தீபாவளி போனஸை பொறுத்து, பர்ஸின் கனத்தை பொறுத்து அவர் அவர் வசதி, அந்தஸ்தை காட்டும் விதமாக வாங்குவார்கள்.

தஞ்சையிலே பள்ளி நாட்களில் நான் கொண்டாடியது தான் ஒரிஜினல் தீபாவளி. இப்போது வருவதெல்லாம், கம்ப்யூட்டர் கேம் போன்ற விர்ச்சுவல் தீபாவளிதான். மத்திய,மாநில அரசுகள் போடும் பட்ஜெட் போல அப்பா நிதி ஒதுக்கீடு செய்வார். நம் கண்ணீரின் சக்தி மற்றும் அம்மாவின் கூட்டணியில், துண்டு விழும் பட்ஜெட்டையும் தாண்டி பட்டாசுக்கு இடஒதுக்கீடு செய்யப்படும் :))

காலை நான்கு மணிக்கு எழுந்து எண்ணை தேய்த்து குளித்து, புது துணி உடுத்தி இருட்டிலே வெளியே வந்தால் நமக்கு முன்பே நாலுபேர் ரோட்டிலே வந்து வெடி வெடித்து அட்டகாசம் செய்து கொண்டிருப்பார்கள். இனிப்புகள்,மைசூர்பாக்கு,ஜாங்கிரி,முறுக்கு போல விதம்விதமாக சங்குசக்கரம்,புஸ்வாணம்,சாட்டை,பாம்பு மாத்திரை,எலெக்ட்ரிக் ஸ்டோன்,வெடி வகைகள் என்று தட்டிலே எடுத்துச்செல்லும் போதே கண் கொள்ளா காட்சியாக இருக்கும்!

வெடியின் திரியை பதமாக கிள்ளி, ஊதுபத்தியால் நெருப்பு முத்தம் கொடுக்க, அது மெதுவாக உட்செல்லும் காட்சியை காண்பதற்கே ஒரே த்ரில்லிங்க் ஆக இருக்கும். பயந்து பயந்து வைக்கும் வெடி, சமயத்தில் புஸ் என்று போவதும் உண்டு; சில நேரம் புஸ்வாணம் கூட வெடித்து பேஜாராவதும் உண்டு. எல்லாம் நம் நேரத்தை பொறுத்தே அமையும். பல இளவட்ட அண்ணன்கள் அக்கம் பக்கத்து அக்காக்களை அசத்த, வெடிகளை கையில் பிடித்து கொளுத்தி மேலே எறிவதும் உண்டு; அது அவர்கள் கையிலேயே சமயத்தில் வெடித்து அவர்களை பழிவாங்குவதும் உண்டு. :))))

இருக்கும் வெடிகளிலேயே ரொம்ப டேஞ்சரானது, ராக்கெட் தான். மண்ணில் புதைத்தோ, பாட்டிலில் நிற்க வைத்தோ, தீ வைக்கும் வரை சமர்த்தாக இருப்பது போல பாவ்லா செய்யும். கொஞ்ச நேரத்திலேயே, பின்பக்கம் நெருப்பு கக்கிக்கொண்டு, கிழக்கிலோ,மேற்கிலோ நேராகவோ, வளைந்து கொண்டோ.. வாழ்க்கை போகும் திசையை போல வகை தொகையில்லாமல் போய்விடும்! ஒருமுறை காமராஜர் காய்கறி மார்க்கெட் முழுவதும் இது போன்ற ராக்கெட்டால் எரிந்துவிட்டது என்று, பெரிசுகள் ஒவ்வொரு தீபாவளியும் பேசிக்கொள்வார்கள்.

முதல் ரவுண்டு வெடித்த பின், கையில் மினுமினுக்கும் வெடிமருந்தை, கழுவியும் கழுவாமலும் தின்பண்டங்களை ஒரு கை பார்ப்போம்; காலை மணி பத்துக்குள்ளே கைவசம் இருக்கும் வெடிகள் காகித குப்பையாய் வீதியெங்கும் நிறைந்திருக்கும்; சாயந்தரத்துக்கு மத்தாப்பூக்களும், மற்ற சைவ பட்டாசுகள் மட்டுமே மிஞ்சும். அதில் கார்த்திகைக்கும் கொஞ்சம் எடுத்து வைக்க வேண்டிய கட்டாயமும் உண்டு! காத்திருந்து அடைகாத்த தீபாவளி எதிர்பார்ப்புகள் ஒரு வழியாய் வடிந்து, ஒரு மந்தமான சகஜ நிலை திரும்பும். இதற்குள்ளே, புது சட்டையில் ஊதுபத்தி நெருப்பு துளிகள் போட்ட ஓட்டைகளும் பரிசாக கிடைத்து விடும்.

சாப்பிட்டு முடிக்கும் போது, குழம்பு,ரசம்,மோர்,பொரியல் கலந்து வரும் சுவை போல, வெடிக்காத பட்டாசுகளை உரித்து, மொத்த கலவையாய் கலந்து, அதை புஸ்ஸு கொளுத்தும் போது வரும் சுகமே தனி.

நாம்தான் பத்து/பனிரெண்டு வருஷ அஞ்ஞாத வாசத்தில் தீபாவளியை தொலைத்திருக்கிறோம் என்றால், பாவம் குழந்தைகள். அவர்களும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், ஜீலை ஆகஸ்டில் இந்தியா வரும்போது, மாமா/சித்தப்பா ஸ்டாக் வைத்திருக்கும் பட்டாசுகளை, ஒரு இரவு வெடித்து தீர்ப்பதே இப்போதைய நடைமுறை; அக்கம்பக்கத்து “கீழ்பாக்கம் கேஸோ” என்பது போன்ற பார்வைகளை அப்போது நாங்களும் சட்டை செய்வதில்லை! :)))

சின்ன வயதில், ஒரு புது துணிக்கு ஒருவருடம் காத்திருக்க வேண்டும்; இன்று நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் புது துணி வாங்கலாம். ஆனால் அன்று இருந்த சந்தோஷமும், உற்சாகமான எதிர்பார்ப்புகளும் இன்று இல்லவே இல்லை! மகாபாரத்து தங்க அணில் போல.. ஏன் என்று யோசித்து பார்க்கையில், இன்றைய வாழ்க்கையின் பொருளாதார குடுமி பிடி சண்டையில், ஓட்டத்தில்.. நின்று நிதானித்து எதையும் ரசிக்கவோ, அனுபவிக்கவோ மறந்து போய்விட்டது என்றே தோன்றுகிறது, நண்பர்களே!

கல்யாண வீட்டில் மொய் எழுதுவது போல 51வது பதிவாக இதை போட்டிருக்கிறேன். கொசுறாக தீபாவளி கவிதை ஒன்றும் உங்களுக்காக, இதோ. உங்கள் அனைவருக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!!!


வளைகுடாவில் ஒரு தீபாவளி

சூரியன் பகலில் பணி செய்து
சோர்ந்து மறைய,பின் இரவில்
சூழும் இருள் அக,புறங்களில்
நழுவும் மீனாய் மேக நடுவில்
தண்ணொளிச்சந்திரன் முயலும்
தன்னால் இயன்ற கடனொளியை
வழங்க,மெழுகாய் தேய்ந்துவிடும்
வராமல் போகும் அமாவாசையாய்
ஆண்டு முழுவதும் அகத்தில்
நீண்டு சேர்ந்த தீய இருளை
விளக்கு மட்டும் போக்காதென
வெடி வைத்துத் தகர்த்தோம்
மனிதன் வாழ்வில் பெரும்பாலும்
மகிழ்ச்சி பொங்கும் சில நிமிடம்
மறையும்,மீண்டும் வரும் அதை
இங்கு கொம்புவாணம் என்றோம்
ஏவுகணைகளை பறக்கவிட்டு
தாவும் அதன் அழகைக்கண்டு
துள்ளும் பிள்ளை மனம் உண்டு
அள்ளும் அழகு வாணவேடிக்கை
சங்குச் சக்கரம் சுழலக் கண்டு
எங்கள் வாழ்க்கைச் சக்கரம்
நினைவில் கொண்டோம்,இன்று
பனைவெளி பாலையில் இருந்து
சுத்தமாக குளித்து முடித்து பின்
புத்தம்புது உடையணிந்து, இங்கு
சத்தம் இல்லாமல் தீபாவளியை
மொத்தமாக கற்பனை செய்தோம்!

8 comments:

குப்பன்.யாஹூ said...

வளைகுடாவில் மட்டும் அல்ல, இப்பொழுது சென்னையிலும் தீபாவளி டிவி முன்னாலேயே கழிந்து விடுகிறது.

அதுவும் விஜய் டிவி கலைஞர் டிவி சன் டிவி என்று மாற்றி மாற்றி பார்க்கும் பாடு எங்களுக்கு தான் தெரியும்.

வழ்க்கமாக cd விற்கும் பய்யன் ஏகன், சேவல் cd நாளை தந்து விடுகிறேன் என்று உறுதி அளித்து உள்ளன்.

குப்பன்_யாஹூ

ராஜ நடராஜன் said...

தீபாவளியா? அப்பிடின்னா என்னங்க!!!

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க குப்பன், வாங்க ராஜ நடராஜன்.
உங்க கருத்துக்களுக்கு நன்றி!

ராமலக்ஷ்மி said...

ஐம்பத்தொன்றுக்கு வாழ்த்துக்கள்.

//அன்று இருந்த சந்தோஷமும், உற்சாகமான எதிர்பார்ப்புகளும் இன்று இல்லவே இல்லை!//

உண்மை உண்மை.

கவிதை அருமை. கடைசி இரண்டு வரிகள் உணர்த்துவதோ இன்றைய வாழ்வில் இழையோடும் மெல்லிய வெறுமையை. சரியா:(?
//இங்கு
சத்தம் இல்லாமல் தீபாவளியை மொத்தமாக கற்பனை செய்தோம்!//

cheena (சீனா) said...

அன்பின் பாலா,

அருமையா கொசுவத்தி சுத்தீட்ட்டீங்க - இனிய நினைவுகள் - தற்கால குழந்தைகளுக்குக் கிட்டாத ஒன்று

நல்லா எழுதி இருக்கீங்க

நன்று

ஆமா நான் VHS - தஞ்சை

நீங்க ?

cheena (சீனா) said...

ஐய்ம்பத்தி ஒன்றாவது பதிவினிற்கு நல்வாழ்த்துகள் - பாலா

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க சீனா-அய்யா,

என் வலைப்பதிவுக்கு உங்கள் வரவு நல்வரவாகுக!

வி.ஹெச்.எஸ் அப்படின்னா, வீரராகவா ஹை ஸ்கூல்தானே? :))

நான்.. கே.ஹெச்.எஸ் (கல்யாண சுந்தரம்)

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க ராமலஷ்மி,
நீங்க சொன்னது ரொம்பவே சரி!
புரிதலுக்கு நன்றிகள் :))