October 11, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 10)



ஓமகுச்சி நரசிம்மன், உசிலை மணி ஆன கதை..

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்னு சொல்ல கேட்டிருக்கோம் இல்லையா? இது போல அனுபவம் உங்களுக்கும் பலமுறை ஏற்பட்டிருக்கும். ஓமகுச்சி நரசிம்மன், உசிலைமணி ஆன கதை தெரியுமா உங்களுக்கு? அதுதான் என் பள்ளி பருவத்துல நடந்தது!

நான் சின்ன வயசிலே குச்சி மாதிரி இருப்பேன்னு முன்பே எழுதியிருக்கேன். புல்தடுக்கி பயில்வானா நான் 8ம் கிளாஸ் வரைக்கும் இருந்ததுக்கு காரணம் யார் தெரியுமா? துவார பாலகர்கள்! துவாரபாலகர்னா.. கோயில்ல சன்னதிக்கு முன்னாலே பயங்கரமா ரெண்டு பேர் இருப்பாங்களே? அவங்க இல்ல.. :-)))) நம்ம தொண்டையிலே இருக்கிற துவாரபாலகர்கள்.. ஆங்கிலத்துலே டான்ஸில்ன்னு சொல்வாங்களே அவங்க!

திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு மறுபடி செவ்வாய்-னு ஒண்ணு விட்டு ஒரு நாள் வி.ஐ.பி டூர் ப்ரோக்ராம் மாதிரி ஜுரம்; தொண்டை வலி அப்படின்னு ஆறுமுதல் எட்டு வரை வாட்டி எடுத்துடுச்சு டான்ஸில் ப்ராப்ளம். சாப்பிடற சாப்பாடு ஜுரத்துக்கே சரியா போறதாலே, ஒடம்புலே ஒட்டவே இல்லே.. ஒடம்புதான்.. ரொம்ப ஒட்டி போயிடுச்சு.. :-((

மணி.. நல்ல பையன் தான், ஆனா ஒடம்பு தான் கொஞ்சம் வீக்கு.. எப்ப பாத்தாலும் ஜொரம்/அழுகாச்சின்னு பேராய்டுச்சு எனக்கு. பச்ச தண்ணீருக்கு 144, ஐஸ்க்ரீமுக்கு தடா, கூல் ட்ரிங்குக்கு பொடான்னு, கட்டுப்பாடுகள் நிறைஞ்ச வாழ்க்கை ஆயிடுச்சு!

அம்மா,அப்பாவுக்கு தான் ரொம்ப பொறுமை! டம்பளர் சுடுதண்ணியோட மாத்திரை கொடுத்தாலும், எதுவும் உள்ளே போகாது.. உல்டாதான்.. அமர்க்களம் தான். இப்போ நினைச்சு பார்த்தாலும், எனக்கே நான் பண்ணிய அமர்க்களமெல்லாம், ஓவரா.. கொஞ்சம் வெக்கமா கூட இருக்கு..

மாத்திரை கொடுத்து கொடுத்து, டாக்டரே ஓய்ஞ்சு போயிட்டார்; பேசாம ஆப்பரேஷன் பண்ணிடலாம், அதுதான் ஒரே தீர்வுன்னு சொல்லிட்டார். சரி எங்கே செய்யலாம் அப்படின்னு யோசிச்சப்போ, போபாலுக்கு வாங்க, நான் அரேஞ்ச் பண்றேன் அப்படின்னு, போபால் தாத்தா, புண்ணியம் கட்டிக்கிட்டார்.

பிறந்தது, போபாலிலே தாத்தா வீட்டிலேதான் என்றாலும், 14 வருஷம் கழிச்சு, மறுபடி போபால் போக முடிஞ்சது துவாரபாலகர்கள் உபயத்தாலேதான். தஞ்சாவூரிலேர்ந்து, சென்னை வந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸிலே போபால் போய் சேரவே 2/3 நாள் ஆகிவிட்டது. போபாலிலே, வீட்டுலே போய் சேர்ந்து, கட்டிலிலே படுத்த பின் கூட, ட்ரெயின் போல தடக் தடக்குன்னு ஆடுற மாதிரியே ஒரு ஃபீலீங்!

அது 1979ம் வருஷம், போபால் விஷ வாயு ஆக்சிடெண்ட் எல்லாம் நடக்கிறதுக்கு ரொம்ப வருஷம் முன்னாடி. தாத்தா வீடு இருந்த பிப்ளானி, ரொம்ப சுத்தமாவே இருந்தது. டாக்டரை பார்த்ததும், ப்ளட் டெஸ்ட்; ரத்தம் சோகை.. அயர்ன் டாப்லட் சாப்பிட்டு ஹீமோக்ளோபின் கவுண்ட் ஏத்தினாதான், ஆப்பரேஷன்னு சொல்லி ஒரு வாரம் ப்ரேக்.

அப்புறம் ஹாஸ்பிட்டல்லே, அட்மிட் பண்ணி, ஆப்பரேஷன் நாள் வந்துடுச்சு. அம்மா, அப்பாவுக்கெல்லாம் ஒரே கலக்கம். நமக்கு மட்டும் பயமே இல்லை; அதுவும் ஐஸ்க்ரீம் வேற சாப்பிடலாங்கிற எதிர்பார்ப்பு வேறே! அசட்டு தைரியம்தான் நம்ம கூடவே பிறந்த குணமாச்சே.. சிரிச்சுக்கிட்டே, ஸ்ட்ரெச்சரிலே உள்ளே போயாச்சு.
ஆப்பரேஷன் தியேட்டரிலே, கிங்கரர்கள் மாதிரி, டாக்டர்ஸ், வாணலிய கவுத்த மாதிரி லைட்ஸ்.. கொஞ்சமா பயம் எட்டி பார்த்தது. டாக்டர் என்னவோ பேச்சு கொடுத்திட்டே, கை நரம்புலே ஊசி குத்தி.. ஒண்ணு, ரெண்டு.. எண்ண.. சுகமான.. மயக்கமா, தூக்கமான்னு தெரியாத ஒரு உலகத்துக்குள்ளே நழுவறமாதிரி இருந்துச்சு.. கண்ணு தொறந்து பார்க்கும் போது, மறுபடியும் பெட்டுலே. நடுவிலே போன சில மணிநேரங்கள், ஜஸ்ட் ப்ளாங் தான்!

அன்ஸ்தீஷ்யாவோட மகிமை அப்போதான் புரிஞ்சுது. அளவு ரொம்ப கரெக்டா கொடுக்கணுமாமே! கம்மியானா, ஆப்பரேஷன் நடுவிலே முழிப்பு? ஜாஸ்தியானா, ஒரேடியா தூக்கம்?!? டாக்டருக்கு, நம்ம கோ-ஆப்பரேஷனிலே ஒரே சந்தோஷம். பக்கத்து பெட்டுலே ஒரு ஃபைனல் இயர் மெடிக்கல் ஸ்டூடண்ட், இதே டான்ஸில் ஆப்பரேஷனுக்கு வந்து, ரொம்பவே அழுது கலாட்டா பண்ணிட்டான்; ‘மதராஸி லட்கா, தேக்கோ.. கித்னா அச்சா ஹை.. என்று பாண்டே டாக்டர், புகழ்ந்து தள்ளி விட்டார். எல்லாம் இரு கோடுகள் தத்துவம் தானே!

ஆப்பரேஷனுக்கு பின்னால், நடக்கும் போது மயக்கம் வந்து, கொஞ்சம் கலாட்டா ஆகிவிட்டது. ரமேஷ் மாமா, குழந்தை போல தோளில் தூக்கி போட்டு படுக்கையில் போட்டு விட்டார். தமிழ் வாசனையே இல்லாத அந்த ஹாஸ்பிடலில், அப்போது.. தூரத்தில்.. ‘மீனா ஹல்லோ மீனா’ என்று ஜெயச்சந்திரன் குரலில் சன்னமாக பாட்டு கேட்டது. ஜாடையை பார்த்து, அப்பா இன்னொரு பெட்டிலிருந்து ட்ரான்சிஸ்டர் கொண்டு வந்தார். பாட்டு கேட்டதும், புது தெம்பே வந்து விட்டது. தமிழ்நாட்டிலிருந்து, கண்காணா தூரத்துக்கு எதிர்காலத்தில் போக வேண்டும்; தமிழை மட்டுமே துணை கொண்டு அங்கு வாழ வேண்டும் என்பதற்கு அச்சாரம் போட்டது போல அந்த சம்பவம் நடந்திருக்கிறது என்று இப்போது தோன்றுகிறது!

வீட்டுக்கு வந்த பின்னும் ராஜ உபசாரம் தான்; போபால் தாத்தா தன் கைப்பட ரஸ்கை பிசைந்து கட்லெட் செய்து கொடுத்தார். பின் தான் ரிடையர்மெண்ட் பிறகும் வேலை செய்த க்ளப்பிலிருந்து டென்னிஸ் பால் 3/4கும் கொடுத்தார். மறுபடியும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், தாலாட்டு, சென்னை.. பழையபடி தஞ்சாவூர்!

துவார பாலகர்களுக்கு, விடுதலை.. திக்கான பூஸ்ட், சாப்பாடு, கவனிப்பு! குரல்வளம்(?!) போய்விடுமோ என்று பயந்தபடி எதுவும் ஆகிவிடவில்லை. இப்போது, சாப்பாடும் கொஞ்சம் கொஞ்சமாக, உடம்பில் ஒட்ட ஆரம்பித்து விட்டது. ஒல்லி பையன் இவன் என்பது ஹிஸ்டரி ஆகிவிட்டது. ஓமக்குச்சி நரசிம்மன் மெல்ல மெல்ல உசிலை மணி ஆகிவிட்டான்!
9/10 படிக்கும் காலத்திலேயே, குமார் அண்ணாவுடன் நான் கும்பகோணத்தில் நடந்து போனால், அக்கம் பக்கம்.. குமாரோட போற பெரிய ஆள் யாரு அப்படின்னு கேட்கிற மாதிரி காலம் மாறிவிட்டது!

ஒற்றை நாடியா இருந்து, இரட்டை நாடியாய் ஆகி, இப்போது 1½ நாடியா இருக்கேன்னு நினைக்கிறேன். இந்த முறை விடுமுறைக்கு இந்தியா வந்த போது, ஆசான். சுப்பையா வாத்தியாரோட, கோவையிலே எடுத்துக்கிட்ட புகைப்படத்தை இந்த பதிவிலே போட்டிருக்கிறேன்; பார்த்து நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க நண்பர்களே! :-))))

தஞ்சையிலிருந்து தமாம் வரை தொடரும்..

5 comments:

Anonymous said...

நல்ல பதிவு..வாழ்த்துக்கள்
....
ஓம் ...என்ற மலக்கட்டை
கழிய வைத்தால்
உடலில் உள்ள வாதைஎல்லாம்
ஓடிபோச்சு
தாம் ...என்ற சிறுநீரை
தெளிய வைத்தால்
சடத்திலுள்ள ரோகமெல்லாம் தணிந்து போச்சு
கூம் ...என்ற உமிழ் நீரை
முறிய வைத்தால் கூட்டிலுள்ள பகைஎல்லாம் குலைந்து போச்சு
கோ ....வென்ற இவை மூன்றும்
களங்கம் அற்றால்
கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே ...!
-ஈஸ்வரன் மெய் ஞான நாடி ....பாடல்

Subbiah Veerappan said...

கோவையில் உங்களுடன் செலவழித்த அந்த ஒரு மணி நேரம் மறக்க முடியாத சந்திப்பு. நன்றி பாலா!

ராமலக்ஷ்மி said...

வழக்கம் போலவே அனுபவங்களைச் சிறப்பாகப் பதிந்திருக்கிறீர்கள். உடல் சரியில்லாத போது உறவுகள் உள்ளன்போடு கவனித்துக் கொண்டதை இயல்பாகச் சொல்லியிருந்தாலும் அதில் உருக்கம் தெரிகிறது. வாழ்த்துக்கள்!

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க ராமலஷ்மி, வணக்கம்.

சரியாத்தான் சொல்லிருக்கீங்க!

உடம்பு சுகமில்லாம போகும் போதுதான் உறவுகளோட அருமையே புரியுது நமக்கு.. :))

திவாண்ணா said...

அட நம்ம சப்ஜெக்டு!
டான்சில் ஆபரேஷன் முடிஞ்சு ஐஸ்க்ரீம் எல்லாம் கொடுத்து இருப்பாங்களே! என்ன, சாப்பிடத்தான் முடியாது!
:-))

ஆமாம் கொஞ்சம் குழப்பமா போச்சு! நான் படிச்சு வந்து இடையிலே விட்டு விட்ட அல்கெமிஸ்ட் தமிழாக்கம் எங்கே? உங்க ப்ளாக்ல தேடல்ல கொஞ்சம் பிரச்சினை இருக்கப்பல இருக்கு!