December 8, 2020

கடற்கரை மணலில்

கடற்கரை மணலில்
தமாம் பாலா

சுடும் வெண்மணலும் கூட
பாடும் கடலலைகளும் ஆட
படுத்திருக்கிறேன் நானும்
அடுத்ததோர் குடைநிழலில்

ஆடாமல் அசையாமல் நான்
தேடாமலே குழந்தைகளின்
கிரீச்சிட்ட குரல் கேட்கிறேன்
கிடந்த கடற்கரை மணலில்

விரிந்த கரைக்கு அப்பால்
துரித கதியில் சுழலுகின்ற
பெரிய உலகம் லாப நட்டம்
தெரிந்த முதலீடும் செய்ய

இரு வேறு உலகங்களிலே
இதுவா அல்லது அதுவா
எது நிஜம் என்பது கேள்வி
எருது பூட்டி உழுது உணவு

தேடுவதா திரைகடலுக்குள் 
மீண்டு செல்லும் அலைகள்
கண்டு காலம் நேரத்தினை
தாண்டி லயித்து மகிழ்வதா

நிலம் தொடும் கடலின் முன்
பலபல மணல் கோட்டைகள்
சில காலம் கட்டினேன் நான்
பொலபொலவென உதிரவே

November 2, 2020

தான் எனும் அகந்தை

தான்
தமாம் பாலா

தான் என்ற தன்னம்பிக்கை
அதனால் தான் வாழ்கிறேன்
வெல்கிறேன் என்பார் சிலர்

தான் என்ற அகந்தையாலே
தலைகால் தெரியாமல் ஆடி
அழிந்தனர் பலர் என்றும் கூட

சொல்லக் கேட்டிருக்கிறோம்
என்ன தான் சேதி இதனுள்ளே
இது தான் சரி என்றும் உண்டா

உங்களுக்கு இடையில் நடக்கும்
சதுரங்கப் போட்டியில் பரமபத
ஆட்டத்தில் சுய அங்கீகாரமாய்

கொஞ்சம் அகங்காரமாய் தான்
இருக்கும் வரை ராணிகளும்
ஏணிகளும் வசமாகலாம் பின்

நிஜத்தை மிஞ்சிய நிழலாகவே
விரலை மிஞ்சிய வீக்கமாகவே
தான் என்பது தலைவிரித்தாட

சொந்த காவலரே பகையாகி
சடுதியில் கொன்றிடுவதுண்டு
பயந்தோடிய பாம்புகள் திடீர்

பலம் பெற்று கடித்திடுவதுண்டு
பளபளக்கும் பட்டு சட்டையாக
பல நேரம் தான் அமைந்திடினும்

அளவில் சிறியதென்றால் அதை
அணிவதே சிரமம் தொளதொள
அளவில் ஊர் பார்த்து சிரிக்கும்

மனிதரில் மட்டுமல்ல தான் அது
இருக்கும் கூட்டில்  அவியலில்
மணக்கும் சாம்பாரிலும் உண்டு

தான் இல்லாத போது ரசமானது
தன்னடக்கமே ஒர் சமரசமானது
தங்கமனம் நமது கைவசமானது

October 11, 2020

கண்ணாடிக்கு

கண்ணாடிக்கு
தமாம் பாலா

பெல்ஜியம் நாட்டில் செய்த
முகம் பார்க்கும் கண்ணாடி
ஒன்று எங்களது வீட்டினில்
இருந்தது அந்தக் காலத்தில்

கருப்பு சட்டத்தில் கனமாய்
நாலு ஓரமும் முப்பட்டகமாய்
வானவில் நிறம் காட்டிடும்
மாயக் கண்ணாடி அதனில்

எங்கள் முகம் இளமையாக
எப்போதும் தெரிந்தது அது
எக்கச்சக்க தலைமுடியோடு
எங்களைக் காட்டும் போது

சலூன் சென்று சரி செய்து
தலைவாரி பொட்டு வைத்து
பவுடர் போட்டு நாங்களும்
கண்ணாடியும் வளர்ந்தோம்

ஒன்றாகவே எங்களது தலை
நெற்றியில் மேல் நோக்கிய
கேசம் நரைக்கும் முன்னரே
வயதாகி போனது எங்களது

கண்ணாடிக்கு பாதரசப்பூச்சு
புண்ணான முகம் போலவே
புள்ளி புள்ளியாய் தேய்ந்திட
அள்ளி வீசினோம் வெளியே

September 6, 2020

ஆசிரியர் தினம் 2020

ஆசிரியர் தினம் 2020
தமாம் பாலா

மாதா பிதா குரு என்றார்கள் 
மாதாவால் பிறந்தோம் நாம்
பிதா ஆதரவில் வளர்ந்தோம்
குருவால் முழுமை பெற்றோம்

கை பிடித்து எழுத வைத்தார்
வகை வகையாய் கற்றுத் தந்து
கல்விக் கண் திறந்து வைத்து
கேள்விகள் பல தினம் கேட்டு

சிந்தனையைத் தூண்டி நம்மை
சிறகடித்துப் பறக்க வைத்தார்
கற்றுத் தந்த ஆசிரியர் பலத்தில்
விற்றுக் கொண்டோம் அதிகமான

விலைக்கு சர்வதேச சந்தையில்
தலை நிமிர்ந்த வாழ்வு தந்திட்ட
இலையுதிர்கால ஆலமரங்களை
தலைகுனிந்து வணங்கிடுவோம்

தொற்றுக் காலத்திலும் தளராது
தொலைத் தொடர்பு கல்வியில்
சற்றும் தளராது சாதனை புரியும்
வெற்றி விக்கிரமாதித்தன் போல

அறியாமையாம் வேதாளத்தை
அரிந்து வீழ்த்தும் ஆசிரியருக்கு
அரிதாய் நாம் வாழ்த்துரைக்கும்
அந்த நாள் ஐந்தாம் நாளின்று

August 26, 2020

நான் ஏன் பிறந்தேன்

 நான் ஏன் பிறந்தேன்

தமாம் பாலா

 

நான் பிறந்திருந்தேன் அன்றொரு

நாள் ஒரு  தொட்டிலிலே கிடந்தே

நல்லதொரு தாலாட்டும் கேட்டு

நல்லபடி உடல் வளர்த்திருந்தேன்

 

ஒருக்களித்து குப்புற விழுந்து பின்

தவழ்ந்து எழுந்து நடைவண்டி கை

பிடித்து நடந்து ஓடி பட்டாம்பூச்சி

தட்டான்களைத் துரத்தி விளையாடி

 

சிட்டாய் பறந்த வாழ்வில் சிலநேரம்

கரப்பான் பூச்சி வண்டு பல்லி பாம்பு

தேளும் கூட கண்டதுண்டு என்னுலகம்

அவற்றின் உலகத்துடன் உரசிய போது

 

நான் படித்திருந்தேன் பள்ளிகளில் கூட

நான்கெழுத்து பல காலம் வகுப்புகள்

மாற வயதும் ஏற பெயருக்குப் பின்னால்

மாட்டி கொண்ட பட்டங்கள் பலவிதமாய்

 

சேரவும் எனக்கு எல்லாம் தெரியும் என்று

தூரத்துக் கனவுகளை துரத்தியிருந்தேன்

நேரத்தே பணி செய்து கை நிறையவே

பொருள் சேர்த்து காலப் பெட்டகத்தில்

 

நிரப்பிடும் ஆர்வத்தில் ஓடி உழைத்தேன்

நான் அமர்ந்திருந்தேன் வெவ்வேறு வித

நாற்காலிகளில் அறையின் வெளியில்

நானாவித பெயர் பலகைகள் மாறிடவே

 

இரவில் நான் படுத்திருந்தேன் பாயில்

தரையில் கட்டிலில் பஞ்சுமெத்தையில்

தஞ்சையில் கோவையில் சென்னையில்

தமாமில் ஹனாயில் ஹோசிமின்னில்

 

உலகம் என்னைச் சுற்றியே சுழன்றது

சகலம் நான் நடத்துவதே என்ற சர்வ

அதிகார கர்வமும் ரகசியமாக எனது

அடிமனதில் மெல்ல நுழைந்திட அதை

 

வெளிக்காட்டாமல் அடக்கி வைத்திட

வெட்கத்துடன் முயன்றேன் நானும்

சட்டென்று வந்தது உலகுக்கு கிருமி

பட்டென்று பலர் கதையை முடித்தது

 

ஏழை பணக்காரர் வித்தியாசங்கள்

ஏதும் இல்லாமல் எல்லோர் மூக்கிலும்

எளிதாய் நுழைந்து நுரையீரலுக்குள்

எட்டிப் பார்க்கும் கோரோனாவினால்

 

கொஞ்சமாய் ஞானம் பெற்றேன் நான்

நம்மால் நடப்பதல்ல வாழ்வென்பது

நமக்கு நடப்பதே நம் வாழ்வென்பது

வாழும் காலம் வரை ரசித்திருப்போம்

July 29, 2020

அடுத்த சுற்று

அடுத்த சுற்று
தமாம் பாலா

ஆடிவிட முடியும் என்ற போது
மேடைகள் கைவிட்டு போகும்
இனி தோல்வி தான் என்றிட
தனித்து வெற்றியும் காணும்

கண்ணீர் காய்ந்த நேரத்தில்
கனிவாக சாய்ந்திட தோளும்
வெறுக்கவும் கற்ற நேரத்தில்
இறுக்கி அணைக்கும் காதல்

மணிக்கணக்கில் வெளிச்சம்
மறந்து உறங்கிய நிலையில்
பிறக்கும் கதிரவனின் ஒளி
இதுதான் வாழ்வின் இயல்பு

திட்டமிடினும் இடாவிடினும்
சட்டென வாழ்வின் திட்டமும்
புலப்படும் அதை யாரறிவார்
உலகுக்கு நீ யார் என்பதை

அடையாளம் காட்ட வெற்றி
நடைமுறையில் புவியினை
உனக்கு புரிய வைக்கின்ற
கணக்கு தோல்வி வடிவில்

எனவே நித்தம் மகிழ்ந்திடு
எல்லாம் முடிந்து விட்டதாய்
இற்றுப் போகாதே அடுத்த
சுற்றாக அதை நினைத்திடு

July 19, 2020

ஆப்பிள் மனிதன்

ஆப்பிள் மனிதன்
தமாம் பாலா

பழங்களை ருசிக்கிறோம்
பழங்களை மனிதருடனும்
ஒப்பிடுவதை அறிவோமா

இடைக்கு மேல்பகுதி உடல்
இது பெருத்தால் ஆப்பிள்
வடிவ மனிதர் என்றிடலாம்

இன்னொன்று பேரிக்காய்
இடைக்குக் கீழே தொடை
பகுதியில் சதை போடும்

ஆப்பிள் வடிவத்தினருக்கு
ஆபத்து அதிகமாம் இதய
நோய்க்கும் வாய்ப்பாகவே

ஆப்பிளோ பேரிக்காயோ
அளவுக்கும் அதிகமான
எடை என்றும் உதவாது

அடுத்தவனை எடைபோடு
அதில் தவறில்லை உடன்
உன்னையும் எடைபோடு

எப்போதும் உனது எடை
ஏறிவிடாமல் கட்டுப்பட
என்றும் நீ நடை போடு


June 30, 2020

அரணும் முரணும்

அரணும் முரணும்
தமாம் பாலா


பாலிருக்க பழமிருக்க
பசி மட்டும் இருக்காது 
பஞ்சணையில் காற்று
வர தூக்கம் வராதென

பாடல் கேட்டது உண்டு
நிஜத்தில் நடக்குமோ
நினைத்துப் பார்க்காத
நிதர்சன சிக்கல் இன்று

சுத்தமானது காற்றும்
மொத்தமாய் மூடியது
கட்டாய முகக் கவசம்
தொட்டால் தொல்லை

பாதைகள் வெறிச்சிட
பயணங்கள் மறக்கும்
பயம் கண் மறைக்கும்
பதுங்கிடல் பாதுகாப்பு

கை சுத்தமான மனிதர்
கை குலுக்கிட மட்டும்
கையாலாகாத நிலை
கை கூப்பும் சூழ்நிலை 

நண்பருடன் செலவிட
நம்மிடம் நேரம் உண்டு
ஒன்று கூடி மகிழ்ந்திட
இன்று காலமில்லை

விதம் விதமாய் உணவு
நிதம் சமைக்க முடியும்
விருந்துக்கு அழைக்க
ஒருவரும் தயாரில்லை

திங்களன்று வேலைக்கு
செல்ல ஏங்கிடும் மனம்
முடிவில்லா சனிஞாயிறு
பிடிவாதமாய் தினமும்

செல்வம் நிறைந்தவரும்
செலவழிக்க இயலாமல்
இல்லாதவர் பிழைத்திட
இல்லையாம் வழிகளும்

கண்ட கனவுகள் இன்று
கனவாகவே போகவும்
காணாத கிருமி ஒன்று
கண்ணாமூச்சி ஆடவும்

உலகம் இன்று மொத்த
முரண்பாட்டின் உருவம்
மருத்துவ பரிசோதனை
மட்டுமே வெற்றியாகும்

June 11, 2020

ஆலயத்துக்கு

ஆலயத்துக்கு செல்லாதீர்
ஆண்டவன் பாதத்தில் மலர்
தூவி வழிபட அதற்கு முன்
தூய அன்பை கருணையை
உமது வீடுகளில் நிறைப்பீர்

ஆலயத்துக்கு செல்லாதீர்
பலிபீடத்தின் முன் தீபங்கள்
ஏற்றிட அதற்கு முன் கூட்டியே
பாவ கர்வ அகம்பாவ இருளை
அகத்திலிருந்து அகற்றிடுவீர்

ஆலயத்துக்கு செல்லாதீர்
தலைவணங்கி தொழுதிட
அதற்கு முன் சகமனிதருக்கு
தலை வணங்கி இழைத்த
அநீதிகளுக்கு வருந்துவீர்

ஆலயத்துக்கு செல்லாதீர்
முழந்தாளிட்டு இறைஞ்சிட
அதற்கு முன் இல்லாதவன்
ஒருவனை தூக்கி நிறுத்த
தரை நோக்கி தலை குனிவீர்
இளையோரை வளப்படுத்த
அன்றி நசுக்கிட நினையாதீர்

ஆலயத்துக்கு செல்லாதீர்
காலமெல்லாம் செய்த பாவம்
தீர மன்னிப்பு கோரி வழிபட
அதற்கு முன் இதயபூர்வமாய்
உங்களை காயப்படுத்தியவர்
எல்லோரையும் மன்னித்திடுவீர்

சுதந்திர சொர்க்கம்

எங்கே பயமறியாத மனமும்
நிமிர்ந்த தலையும் உளதோ
எங்கே அறிவுடமை மனிதர்
எல்லோருக்கும் பொதுவாக
எளிதில் கிடைக்கின்றதோ

எங்கே உலகமானது சின்ன
சின்ன சில்லுகளாய் மனம்
குறுகிய குட்டிச்சுவர்களால்
பிரிக்கப்படாது உள்ளதோ

எங்கே வார்த்தைகள் சுத்த
சத்திய உண்மையின் அடி
ஆழத்தில் பிறந்திடுமோ

எங்கே தளராத முயற்சி
முழுமை நாடி தன்னிரு
கைகளை விரித்திடுமோ

எங்கே வற்றாத நதியாய்
அறிதலும் புரிதலும் தன்
சுயத்தை பாலை மணல்
துகளாய் சிந்தனையை
தொலைத்த சிற்றறிவில்
இழக்காது இருக்கிறதோ

எங்கே மனம் பரந்ததாய்
விரிந்ததாய் எண்ணமும்
செயலும் சிறந்திட்டதாய்

அமைந்து விடும் அந்த
சுதந்திர சொர்க்கத்தில்
எந்தையே என்னாடும்
எழுந்திடவே அருள்வீர்

May 23, 2020

மாயமானது

மாயமானது
தமாம் பாலா

மாயமான் அது மண்ணில்
தோன்றிய மங்கையையே
மயக்கியதாம் அரண்மனை
தயக்கமின்றி துறந்தவளாம்

காட்டில் கல்லில் முள்ளில்
குடிலில் குறைவான வசதி
வாய்ப்பில் நிறைந்த மனம்
வாய்த்த சீதையை மட்டும்

ஏன் விட்டு வைக்கவென்று
மாயமானாகி மாயமானது
மான்விழியாள் கண்ணில்
பட்டது பத்து தலையோன்

சதியால் விளைந்திடினும்
மதியோன் ராமபிரானும்
தம்பியும் விதி வசப்பட்டு
ராமாயணமானது கதை

March 11, 2020

செருப்பு

செருப்பு
தமாம் பாலா

புது செருப்பு வாங்கினவன், புது பொண்டாட்டி கட்டினவன் மன நிலை கிட்டத்தட்ட ஒன்றுதான். யாராவது தூக்கிட்டு போயிடுவாங்களா என்ற அச்சம் தூக்கத்திலும் துரத்தும்.

கோயிலுக்கு போனா செருப்பு கவுண்டரில் வைக்கலாம். ரூ 1 அல்லது 2 போதும். கல்யாண வீட்டுல என்ன பண்றது?? இப்போ எல்லாம் பரவாயில்ல சில இடங்களில் செருப்புக்கு தடா இல்லை.

நிறைய புது செருப்பு தொலைச்ச அனுபவத்தில், செருப்பை தொலைக்காமல் இருப்பது எப்படி என்ற தலைப்பில் பி.ஹெச்.டி படிப்பில் பதிவு பண்ணி இருக்கிறேன். 2030க்குள் முடிச்சிடலாம்.

மகாபாரதத்தில் எனக்கு இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது. பீமன் ஜராசந்தன் போர் கதையிலே. எப்போது கிழித்து போட்டாலும் இணைந்திடுவான் ஜராசந்தன். பீமனும் சளைத்திடுவான். அப்போ கிருஷ்ண பரமாத்மா ஒரு ஓலையை கிழித்து கையை இடம் வலமாய் மாற்றி போடுவார். பீமனும் அதை பின்பற்றிட ஜராசந்தன் க்ளோஸ்.

செருப்பை ஒன்றை மண்டபத்து வாசல் இடது கோடியிலும், இன்னொன்றை வலது கோடியிலும் போடுப் பாருங்க, அப்புறம் கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் (புது) செருப்புதான் !!!

March 9, 2020

சிவசக்தி 3

சிவசக்தி 3
தொ.சூசைமிக்கேல்

சக்தியைப் பெண்ணாக்கி - அவள் 
சரீரமெல்லாம் புண்ணாக்கி - இந்தச்
சமுதாயம் தீங்கிழைத்த காரணத்தால்... காலம் அந்த 
சக்தியையே சிவனாக்கி, 
தீயுமிழ வைக்குது பார் 
திறந்த நெற்றிக் கண்ணாக்கி..

அன்புடன்,
பாலாவின் கவி ரசிகன்
தொ. சூசைமிக்கேல்.

சிவசக்தி 2

சிவசக்தி 2
செங்கை வேங்கடனார்

முகத்தின் கீழே 
நவீன ஆடையோ ஆயின் 
பண்டை தோற்ற முகமோ 
சான்று மூக்கின் அணிகலன் 
நுதலில் இட்ட சந்திர கீற்று 
சூரிய பொட்டும் 
கனன்ற சூலம் ஆயின்
நிமிர்ந்த நோக்கில் குளிர்ந்த பார்வை 
இவள் பேதங்களின் உருவகமோ 
போதனைகளின் கல்வியகமோ 
சிவனின் பாதி அன்றைய தேவை 
இன்று நானே முழுதும் 
முக்கண்ணும் உண்டு 
முக்காலமும் எனது!!

March 8, 2020

சிவசக்தி 1

சிவ சக்தி 1
தமாம் பாலா

மீன்விழி மான்விழி
தன்னை உணர்ந்த
பின் மூன்றாம் விழி
திறந்த பெண்ணே
இருளில் ஒளிரும்
உன் முகம் உடன்
தீயான திரிசூலம்
சந்திர திலகமும்
தங்க புல்லாக்கும்
இந்திர லோகத்து
பெண் சிவனோ
இவள் சக்தியோ
என பக்தி தரும்
படம் இது கீதை

உலக மகளிர் தினம்

பெண்
தமாம் பாலா

மகளாய் பிறந்தாள் அக்கா 
தங்கையாய் வளர்ந்தாள் 
அவள் மாணவியாய் முதல்
மதிப்பெண்களும் எடுத்தாள் 
பாரதி கண்ட புதுமைப்பெண்
இவளோ என்று எண்ணிடவும்
காதலியாய் மகிழ்ந்தாள் தன்
மனம் கவர்ந்தவன் கைபிடித்து
மனைவியாய் ஆனாள் பேனா
பிடித்தவள் கையில் கரண்டி
அம்மாவாய் ஆனாள் தனது
தொலைந்த கனவுகளை தன்
பிள்ளைகளில் விதைத்தாள்
பெண் என்பது வெறும் உடல்
அல்ல அது ஆத்மாவின் குரல்

March 1, 2020

திரிசங்கு


மரக்கிளையில் தொங்கல்
மரத்தை முறிக்கும் யானை
கிளை தின்கின்ற எலிகள்

காலடியில் காத்திருக்கும்
பாம்புகள் மேலே இருக்கும்
தேனடை சொட்டும் துளி

நாவில் ருசிக்க கொட்டும்
தேனீக்கள் என இன்பம்
துன்பம் கலந்த வாழ்க்கை

நம்பிக்கை விடாது நம்பி
கையை விட்டால் கடவுள்
வருவார் பறந்து காத்திட

February 20, 2020

தொடுபேசி


 தொடு பேசி
 தமாம் பாலா

பஞ்சாமிர்த டப்பாவில்
ஓட்டை போட்டு நூலை
கட்டி நாங்கள் பேசியதே

உலகின் முதல் ஃபோன்
அதை நகலெடுத்தான்
அலக்ஸாண்டர் கிரஹாம்

பெல் என்றே நீ சொல் 
தொடர்பு எல்லைக்குள்
வருவதற்காக மரத்தின்

கிளையில் ஏறினரோ
தொலைபேசி வேண்டாம்
அலைபேசியும் வேண்டாம்

நேரில் சந்தித்து பழகியே
தொடு, பேசி என்றுரைக்க
பிள்ளைகளாய் ஆனாரோ

January 28, 2020

மறுசந்திப்பு

மறுசந்திப்பு

வகுப்பில் முதல் மாணவி
இன்று ஒரு இல்லத்தரசி
பின் வரிசையில் இருந்த
பிள்ளை தொழிலதிபன்

நவ நாகரிக மாணவன்
அவனோ வழக்கறிஞன்
ஒன்றுக்கும் உதவாதவன்
இன்று ஒரு எழுத்தாளன்

கணிதத்தில் தவறியவன்
அணியும் ஆடைநிபுணன்
வகுப்புக்கு வெளியேவே
நின்றவன் சேனாதிபதி

மறுசந்திப்பின் பாடமது
மனிதரின் அடுக்குகள்
தனித்தன்மையானவை
புத்தகத்தை அட்டையால்

மட்டுமே கணிக்கலாகாது
விளையும் பயிரை முளை
வைத்து முடிவு செய்யாதே
வெற்றிக்கதை பலவிதம்

January 1, 2020

thirukural kavthai

திருக்குறள் கவிதைகள்
தமாம் பாலா

1. அறத்துப்பால்

கடவுள் வாழ்த்து 1-10

அகரம் தமிழுக்கு முதல்
ஆண்டவன் உலகுக்கும்
இறையடி தொழாவிடின்
ஈடில்லா கல்வியும் பாழ்

உள்ள மலர் உறை இறை
ஊர் மெச்சும் நல்வாழ்வு
எதுவும் வேண்டா நிலை
ஏகாந்தம் துன்பமில்லை

ஐயமில்லா தெய்வ பக்தி
ஒழித்திடும் சின்ன புத்தி
ஓங்காரம் ஐம்புலனுக்கும்
ஔடதம் அமரர் ஆக்கும்

கடவுளுக்கும் நிகரில்லை
கற்கவும் இல்லை கவலை
கடலில் நீந்துவது கடினம்
கரை சேர பக்தி படகாகும்

காணாத கேளாத கட்செவி
காலடி தொழாத தலையே
காணும் பிறவி சமுத்திரம்
காட்சி முன் எம்மாத்திரம்

வான் சிறப்பு 11-20

அமுதமாம் மழைக் கொடை
ஆகாயத்தின் பரிசு புவிக்கு
இலை தழைக்கு மழை உரம்
ஈர மழை தணித்திடும் தாகம்

உலகம் கடல் சூழந்திருந்தும்
ஊர் மழை இன்றில் வாடும்
என்று மழை பொய்க்குமோ
ஏர் உழாமல் நிற்கும் அன்று

தவறிய பருவ மழை மோசம்
தலை விரித்தாடிடும் பஞ்சம்
ஓரிலை பசும் புல்லின் தலை
ஔவை பாடிய வான் மழை

கடல் கூட வற்றிப் போகலாம்
கன மழை வராமல் போனால்
வானம் பொழிய மறந்திடில்
வானவர் பூசையும் இல்லை

தான தர்மங்களும் இல்லை
தங்க மழை தராமல் போக
தண்ணீர் இல்லாத உலகும்
தரிசாய் காய்ந்தே வாடும்

நீத்தார் பெருமை 21-30

அறவழி சென்றார் ஆசை
துறந்தாரைப் புகழ் நூலே
பிறந்து மறைந்த மொத்த
சிறந்த மனிதம் எண்ணி

இம்மை மறுமை அறிந்து
தம்மை வென்றோர் பலர்
அடங்காத புலன்களுக்கு
அங்குசமாய் ஆனவரே

இந்திரியம் வென்றதால்
இந்திரனுக்கு நிகரானார்
அரிய செயலால் பெரிய
பெயரினைப் பெற்றாரே

உடலின் நுகர்ச்சிகளையே
அடக்கி அகிலம் ஆண்டு
நிறைமொழியாளர் நல்ல
மறைமொழி சொன்னாரே

கண நேர சினம் காட்டும்
குணக்குன்றான அடியார்
அந்தணர் அறவோர் நல்
அன்பே சிவமாகியவரே

அறன் வலியுறுத்தல் 31-40

அறம் தரும் சிறப்பையும்
நிரந்தர நன்மைகளையும்
அறமே ஆக்கமும் அதை
மறப்பதே கேட்டின் விதை

செயலில் அறம் வேண்டும்
இயலாத தருணங்களிலும்
அறமெனில் அகத்தூய்மை
பிற அனைத்தும் வெறுமை

ஆசை சின ஔவியம் கடிதல்
அகற்றிட நிறையும் நல்லறம்
அன்றே செய்வதே அறமும்
அதற்கு என்றுமே முகூர்த்தம்

அறத்தின் பயனை பல்லக்கின்
அகத்தும் புறத்தும் காணலாம்
ஒரு நாளும் தவறிடாத அறம்
மறுபிறவி அழிக்கும் வரமாம்

அறமே இன்பமும் நற்புகழும்
அதுவன்றி யாவும் துன்பமே
அன்றாடம் வேண்டும் அறம்
மன்றாட விலகிடும் பழியும்

இல்வாழ்க்கை 41-50

பெற்றோர் பிள்ளை சுற்றம்
பெருவாழ்வுக்கு இல்லறம்
மறையோரும் வறியொரும்
மறைந்தோரும் மகிழ்ந்திட

முன்னோர் இறை விருந்து
தன் உறவின் துணை வீடு
பழியிலா பொருளீட்டல்
பகிர்ந்துண்ணலை நாடு

அன்பும் அறனும் ஆகும்
பண்போடு பயன் மிக்கதாக
அறநெறி இல்வாழ்வானும்
பிறநெறி செல்வதும் வீணே

அறவழி வாழ்பவர் அவர்
அனைவருக்கும் சிறந்தவர்
தன்வழி அறவழி கொள்ள
தவச்சீலருக்கும் மேலாவார்

இல்வாழ்க்கையே நல்லறம்
இல்லை அதில் பழிபாவம்
வளமாய் வாழ் இல்லத்தார்
உளமாரத் தொழும் தேவர்

வாழ்க்கைத் துணைநலம் 51-60

கொண்டவன் கொண்டதைக்
கொண்டு வாழ்வதே துணை
இல்லாள் நல்லாள் இன்றேல்
இருப்பதனால் பயனுண்டோ

மாண்புடைய மனைவி வரம்
ஆண் தின்னும் பெண் சாபம்
பெண்ணின் திண்மை அவள்
பேணும் கற்புநெறியில் காண்

தெய்வம் கணவனே என்பவள்
பெய் என்றால் மழை பெய்யும்
தன்னை கூட தன்னவனையும்
தகுதியுடன் காப்பவளே பெண்

எந்த சிறையும் இல்லை கற்பாம்
சொந்த சிறை தவிர அவளுக்கு
வாழுலகில் பதியை மதிப்பவள்
மேலுலகில் பாதமும் பதிப்பாள்

புகழ் காக்க துணைவி இல்லாது
இகழ் பகை முன் ஏற்றமும் ஏது
ஆணுக்குப் பெண் அலங்காரம்
அவர் தம் மக்களே அணிகலன்

மக்கட்பேறு 61-70

பெற்றதில் பெரிதான பேறு
பெற்றெடுத்த மக்கட்பேறு
தீதிலா பிள்ளைச் செல்வம்
தீண்டாது பிறவி வினையே

பிள்ளைகள் செல்வம் தான்
உள்ளபடி நல்ல வளர்ப்பில்
அவரது கை பட்ட கூழும்
அமுதமாம் பெற்றோர்க்கு

மகவைத் தழுவிட மகிழ்ச்சி
மழலை கேட்கவே இனிமை
குழலை யாழை ரசிப்பவரும்
குழந்தை குரல் கேளாதவரே

அவையில் மகனின் சிறப்பு
அப்பாவின் கடும் உழைப்பு
அறிவில் சிறந்த பிள்ளையே
அது நாட்டுக்கும் நன்மையே

ஈன்ற தாய்க்கு இன்பம் கோடி
சான்றோன் அவன் என்றபடி
தவம் செய்தானோ தகப்பன்
இவண் பேசும் மகன் செயல்

அன்புடைமை 71-80

அன்புக்கேது தாழ் வரையறை
அழுகை கண்ணீர் உள்ள வரை
அன்பிலார்க்கு எதுவும் தனது
அன்புடையார் என்பும் பொது

உடம்பும் உயிரும் சேர்ந்ததாய்
அன்பே பிறவியின் பயனதாய்
அண்மை விரும்பும் அன்பால்
நன்மை தரும் நட்பே பலனாம்

அன்பர் கொண்ட  நல்வாழ்வும்
அவரது இன்பத்தின் சிறப்பாம்
அறத்துக்கு மட்டுமல்ல துணை
அன்பு வீரத்துக்கும் நல்லிணை

வெயில் காயும் எலும்பிலா புழு
அறம் காயும் அன்பில்லா உயிர்
பாசம் இல்லாத குடும்ப வாழ்வு
பாலையில் பட்ட மரத்தின் தளிர்

அன்பெனும் உள்ளுறுப்பின்றி
அழகான வெளியுறுப்பும் வீண்
அன்பே உயிர் அன்பு அகன்ற
உடல் எலும்புக்கு மேல் தோல்

விருந்தோம்பல் 81-90

இருந்தோம் காத்து இல்லத்தில்
விருந்தோம்பல் வேண்டியதால்
அவரை விட்டு தாம் உண்ணும்
அமுதமே ஆயினும் தவறாகும்

வரும் விருந்து நோக்கும் வாழ்வு
வருத்தமில்லாத இன்பம் உயர்வு
முகம் மலர்ந்து உபசரிக்க அகம்
திருமகளின் இருப்பிடம் ஆகும்

விருந்தின்பின் மிஞ்சியது தின்ன
வித்தில்லாமல் விளையும் பொன்
செல்விருந்து செல்ல வருவிருந்து
கொள்வது தருமே தெய்வ விருது

விருந்தே வேள்வி விருந்தளவே
அருந்தவப் பயன் நல்விளைவே
விருந்தினைப் போற்றாத போது
வருந்துவர் தம் செல்வம் இழந்து

இருந்தும் விருந்தோம்பா மடமை
பொருளிருந்தும் இல்லா வறுமை
முகர்ந்தால் வாடும் அனிச்ச மலர்
முகராமல் வாடுபவர் விருந்தினர்

இனியவைகூறல் 91-100

வஞ்சமின்றி வாஞ்சை நிறைந்து
வாய்மை மிகுந்த சொல் இனிது
முகம் மலர்ந்த இனிய சொல்லது
முழுமன ஈகைக்கும் மேலானது

முகம் விரும்பி அகம் அரும்பிட
முத்தான அறச்சொல் விளம்பிட
அத்தனை இன்பம் விளையுமே
சொத்தனைத்தும் வந்து சேருமே

பணிவும் பகரும் சொல் கனிவும்
அணியேது நமக்கு வேறெதுவும்
ஒன்றே நன்றே இன்றே சொல்ல
ஓடும் பழி பாவம் என்றே சொல்

நன்றிமிகு நற்சொல்லே வழங்கிடு
நன்மையே விளையும் அறிந்திடு
சிறுமை நீக்கிய இன்சொல் தரும்
இம்மைக்கும் மறுமைக்கும் வரம்

இன்சொல் தரும் இனிமை கொள்
வன்சொல் வழங்கலாமோ சொல்
கனியிருக்க காய் எதற்கு நமக்கும்
இனியேனும் வருமோ நற்பழக்கம்

செய்ந்நன்றி அறிதல் 101-110

தானாக முன்னுவந்து உதவிடல்
தரணிக்கும் விண்ணுக்கும் மேல்
உரிய காலத்தில் செய் உதவியது
சிறிதாயினும் பூமிக்கும் பெரிது

ஆதாயம் பாராமல் உதவிடுவார்
ஆகாயம் கடலுக்கும் பெரியவர்
தினையளவு நன்மை பெறினும்
பனையளவு நன்றி கொள்வோம்

செய்த உதவிக்குக் கைமாறு அது
சேர்ந்த இடத்தின் நற்பண்பானது
காசிலாத போது கை கொடுத்தவர்
மாசிலாத நட்பையும் மறந்திடாதீர்

ஏழ்மையில் உதவிய நன்றிதனை
ஏழுலகம் ஏழுபிறவியில் நினை
நன்றி என்றும் மறக்கக் கூடாதது
நன்றல்லதை மறந்திடில் நல்லது

இன்று வந்த துன்பத்திலும் பிறர்
அன்று செய்த உதவியை மறவீர்
எது மறந்தாலும் மன்னித்திடலாம்
இதுவரை பெற்ற உதவி தவிர்த்து