November 2, 2020

தான் எனும் அகந்தை

தான்
தமாம் பாலா

தான் என்ற தன்னம்பிக்கை
அதனால் தான் வாழ்கிறேன்
வெல்கிறேன் என்பார் சிலர்

தான் என்ற அகந்தையாலே
தலைகால் தெரியாமல் ஆடி
அழிந்தனர் பலர் என்றும் கூட

சொல்லக் கேட்டிருக்கிறோம்
என்ன தான் சேதி இதனுள்ளே
இது தான் சரி என்றும் உண்டா

உங்களுக்கு இடையில் நடக்கும்
சதுரங்கப் போட்டியில் பரமபத
ஆட்டத்தில் சுய அங்கீகாரமாய்

கொஞ்சம் அகங்காரமாய் தான்
இருக்கும் வரை ராணிகளும்
ஏணிகளும் வசமாகலாம் பின்

நிஜத்தை மிஞ்சிய நிழலாகவே
விரலை மிஞ்சிய வீக்கமாகவே
தான் என்பது தலைவிரித்தாட

சொந்த காவலரே பகையாகி
சடுதியில் கொன்றிடுவதுண்டு
பயந்தோடிய பாம்புகள் திடீர்

பலம் பெற்று கடித்திடுவதுண்டு
பளபளக்கும் பட்டு சட்டையாக
பல நேரம் தான் அமைந்திடினும்

அளவில் சிறியதென்றால் அதை
அணிவதே சிரமம் தொளதொள
அளவில் ஊர் பார்த்து சிரிக்கும்

மனிதரில் மட்டுமல்ல தான் அது
இருக்கும் கூட்டில்  அவியலில்
மணக்கும் சாம்பாரிலும் உண்டு

தான் இல்லாத போது ரசமானது
தன்னடக்கமே ஒர் சமரசமானது
தங்கமனம் நமது கைவசமானது