January 2, 2016

ஜா…

ஜா…
(தமாம் பாலா)

‘பாத்ரூமா அது.. கோயில் மாதிரி இருக்கு சார்’ என் ஹனாய் வீட்டுக்கு வந்த பின் ஒருநாள் ஜா, சொன்னது இது. யாருங்க அது ஜா? சொல்றேன். அவரைப் பத்தி எழுதத்தானே இந்த பதிவு! 

வியட்நாம் வந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆன சமயம். கொரியாவிலேந்து நண்பன் ரவிக்குமார் கிட்டே இருந்து ஒரு போன் கால் வந்தது அன்னைக்கு; எப்பிடி இருக்கே பாலு.. வழக்கமான விசாரிப்புக்கு பின்னாடி சொன்ன விஷயம், அவனும் பார்ட்னரும் சேர்ந்து வியட்நாமிலே தொழில் தொடங்க இருப்பதாகவும், அதற்காக ஒருத்தரை வேலைக்கு நியமித்தாகவும். அந்த ஒருத்தர் தான்… ஜா.

‘குட்மார்னிங் சார்.. நான் தான் ஜா பேசரேன், லாங் பியன் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்துட்டேன், கவ் ஜாய்க்கு எப்படி வரணும்? முதல் முறையா வியட்நாமுக்கு சைனாவிலிருந்து 500-600 கிலோமீட்டர் பஸ்ஸிலேயே வந்திருக்கான்னா, ஆசாமி கெட்டிக்காரன் தான், என்று நினைத்துக் கொண்டேன் நான்.

மாநிறம், 50+ கொடுத்த வழுக்கை, மழுங்க ஷேவ் செய்த, தாடி மீசை இல்லாத முகம்; சிரிக்கும் கண்கள், பெரிய உதடுகள் மற்றும் ஒரே ஒரு பெட்டி, படுக்கை இது தான், ஜா என்கிற ‘ரா-ஜா-ராமன். முதல் பார்வையிலேயே, நாங்கள் நீண்ட நாட்கள் பழகியவர்கள் போல உணர்ந்தேன்.

தனியனாக இருந்த எனக்கு தாற்காலிக தமிழ் துணையாய், ஜா வந்து சேர்ந்திட, வியட்நாமிய பணிப்பெண் ஹியனிடம், அவருக்கும் சேர்ந்து சமைக்க சொல்லிவிட்டேன். தினமும் மாலை நேரத்தில் வீடு திரும்பும் ஜா, தொழில் தொடங்க வியட்நாம் அரசு அலுவலகங்களில் ஏறி இறங்கிய அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்.

நானும் என் பங்குக்கு எனக்கு தெரிந்த இந்திய நண்பர் தொடர்பை கொடுத்தேன். முதலில் நல்லாத்தான் போயிட்டிருக்கு, என்று ஆரம்பித்த விஷயம், நண்பர் போன் காலில் வெடித்தது. ‘சார், என்ன சார் இப்பிடி பண்ணிட்டீங்க, ஒங்க பிரண்டை நான் தான் வியட்நாமிக்கு அறிமுகம் செஞ்சு வைச்சேன்; இப்போ என்னை விட்டுட்டு அவர் கூட டைரக்ட் டீலிங், போடராரு… படபடத்தார் என் கிரிக்கெட் நண்பர். ஓஹோ அறிமுகம் செய்வதில் கூட இவ்வளவு வில்லங்கம் இருக்கா, என்று பாடம் படித்தேன், நான்.

ஹுவான் கிம் லேக் அருகே வியட்நாமிய கல்லூரி மாணவிகளை, ஏரிக்கரையிலேயே இன்டர்வியு செய்து, டவுன் பஸ்ஸிலேயே பயணம் செய்து ஜா..வின் குறைந்த விலை தொழில் தொடக்க முயற்சிகள் ஜல்லி அடிக்க தொடங்கின. ஒரு ஞாயிற்றுக்கிழமை நான் வீட்டில் இல்லாத போது, பிஸினஸ் மீட்டிங் நடத்தியதால், நானும் கொஞ்சம் அவரிடம் படபடத்து விட்டேன். இருந்த போதும், சமாதானம் ஆன பிறகு, ஜா இந்தியாவில் தான் வாழ்ந்த, கை நிறைய சம்பாதித்த நாட்களைப்பற்றியும், பின்னர் சைனாவுக்கு வேலைக்கு வந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்த அனுபவங்களையும் சொன்ன போது அவர் மேல் பரிதாபம் தான் மேலோங்கியது.

சில நாட்களில், னோய் பாய் விமான நிலையம் அருகிலேயே பெரிய வீடு இருப்பதாக ஒரு நண்பர் சொல்ல, எங்கள் தொழிற்சாலைக்கு அருகில் என்பதால் நாங்கள் வீடு மாறிவிட்டோம், நாங்கள் என்றால் நானும், ஜா-வும் தான். ஹியன் அப்போது தான் கல்யாணம் முடித்து, குழந்தைப்பேற்றுக்கு தயார் ஆகிக்கொண்டிருந்தாள், அவள் வீடும் னோய் பாய் பக்கம் தான், மொத்தத்தில் எல்லோருக்கும் வசதி ஆகிவிட்டது.

நகர் புறமான கவ் ஸாயிலிருந்து வயல்வெளியான நம் ஹோங் சென்றது எனக்கு சவுகரியமாக இருந்தாலும், தினமும் ஹனாய், பழைய நகரத்துக்கு செல்ல வேண்டியதால், ஜா வுக்கு தோது படவில்லை. லாங்பியன் பக்கத்தில் லாட்ஜ் எடுத்து தங்கிவிட்டார். பின்னர் பிசினஸ் செய்ய ஹனாயில் லைசன்ஸ் சரி வர அமையாமல், 24 ++மணி நேர ரயில் பயணத்தில், தெற்கு வியட்நாம்- ஹோசி மின் சிட்டிக்கு சென்றார் ஜா. பின் வியட்நாமே வேண்டாம் என்று ஒரு வழியாக கம்போடியாவில் கம்பெனி ஆரம்பித்தார், இருந்தும் ஏதோ காரணத்தால், வேலையை விட்டு விட்டு இந்தியா சென்று விட்டார் அவர்.

இதற்குள்ளாக, எனது அலுவலகத்தில் ஏராளமான நிர்வாக மாறுதல்கள், பரமபத ஏணி/பாம்பு விளையாட்டுகளுக்கு நடுவே, நானும் ஹனாயில் இருந்து ஹொ-சி-மின் சிட்டிக்கு மாற்றப்பட்டேன். தீடீரென ஒரு நாள் சம்பந்தமே இல்லாமல், ஜா-வின் நினைவு வந்தது. 

அன்று இரவு, ஸ்கைப்பில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். பத்து மணிக்கு மேல் ஒரு அழைப்பு வந்தது, ஜா- தான் பேசினார்… ‘இப்போ வியட்நாமிலே ஒரு முந்திரி கம்பெனியிலே அசிஸ்டன்ட் மேனேஜரா இருக்கேன் சார், உங்களை மறக்கவே மாட்டேன்’ என்றார். பக்கதிலே தான் இருக்கோம் ஜா, ஒரு சண்டே மீட் பண்ணுவோம் என்றேன்.

ஒருவழியாக ஜா-வும் நல்லபடி இருக்கிறார் என்ற மகிழ்ச்சி ஒரு வாரம் கூட நிலைக்க வில்லை; ரவிக்குமார் போன் கால் வந்த போது.. ஜா, எதிர்பாராத விதமாக, மாரடைப்பு வந்து காலமாகி விட்டதாகவும், அவர் என்ற அது, ஹோ சி மின் சிட்டி வழியாக விமானத்தில் அனுப்பப்படுவதாகவும், அறிய மிகவும் வேதனையாக இருந்தது. கஷ்டப்பட்ட காலத்தில் எல்லாம் உடல் உறுதியாக இருந்த நண்பன், நல்ல நிலையை அடைந்தும், விதியின் வலிமையால் மறைந்தது, கொடுமை. 

நானும் இன்று வியட்நாமில் இருந்து இடம் மாறி விட்டேன்; இருந்தும் ‘இன்னாத்துக்கு, இப்டி சொல்றீங்கோ சார்?’ என்று தெலுங்கு உச்சரிப்பில் ஜா- என்கிற ரா-ஜா-ராமின் குரலும், சிரிப்பும் என்னை தொடர்ந்து வந்ததால் இந்த பதிவு என் நண்பனுக்காக !!

பின் குறிப்பு;
இன்னும் கூட வலையில் உலவும் போது, ஸ்கைப், லிங்க்டு இன் மற்றும் நியு ஹனாயன் டாட் காமில், இவரை (ஜா) உங்களுக்குத் தெரியுமா என்று, ப்ரொபைல் மற்றும் அவதார் காட்டும் போது, பூமியை சுற்றும் கை விடப்பட்ட ஒரு செயற்கை கோள், காற்றில்லாத காலவெளியில் இலக்கு இல்லாமல் சுற்றுவது போல ஒரு பிரமையை தவிர்க்க முடியவில்லை.