August 26, 2020

நான் ஏன் பிறந்தேன்

 நான் ஏன் பிறந்தேன்

தமாம் பாலா

 

நான் பிறந்திருந்தேன் அன்றொரு

நாள் ஒரு  தொட்டிலிலே கிடந்தே

நல்லதொரு தாலாட்டும் கேட்டு

நல்லபடி உடல் வளர்த்திருந்தேன்

 

ஒருக்களித்து குப்புற விழுந்து பின்

தவழ்ந்து எழுந்து நடைவண்டி கை

பிடித்து நடந்து ஓடி பட்டாம்பூச்சி

தட்டான்களைத் துரத்தி விளையாடி

 

சிட்டாய் பறந்த வாழ்வில் சிலநேரம்

கரப்பான் பூச்சி வண்டு பல்லி பாம்பு

தேளும் கூட கண்டதுண்டு என்னுலகம்

அவற்றின் உலகத்துடன் உரசிய போது

 

நான் படித்திருந்தேன் பள்ளிகளில் கூட

நான்கெழுத்து பல காலம் வகுப்புகள்

மாற வயதும் ஏற பெயருக்குப் பின்னால்

மாட்டி கொண்ட பட்டங்கள் பலவிதமாய்

 

சேரவும் எனக்கு எல்லாம் தெரியும் என்று

தூரத்துக் கனவுகளை துரத்தியிருந்தேன்

நேரத்தே பணி செய்து கை நிறையவே

பொருள் சேர்த்து காலப் பெட்டகத்தில்

 

நிரப்பிடும் ஆர்வத்தில் ஓடி உழைத்தேன்

நான் அமர்ந்திருந்தேன் வெவ்வேறு வித

நாற்காலிகளில் அறையின் வெளியில்

நானாவித பெயர் பலகைகள் மாறிடவே

 

இரவில் நான் படுத்திருந்தேன் பாயில்

தரையில் கட்டிலில் பஞ்சுமெத்தையில்

தஞ்சையில் கோவையில் சென்னையில்

தமாமில் ஹனாயில் ஹோசிமின்னில்

 

உலகம் என்னைச் சுற்றியே சுழன்றது

சகலம் நான் நடத்துவதே என்ற சர்வ

அதிகார கர்வமும் ரகசியமாக எனது

அடிமனதில் மெல்ல நுழைந்திட அதை

 

வெளிக்காட்டாமல் அடக்கி வைத்திட

வெட்கத்துடன் முயன்றேன் நானும்

சட்டென்று வந்தது உலகுக்கு கிருமி

பட்டென்று பலர் கதையை முடித்தது

 

ஏழை பணக்காரர் வித்தியாசங்கள்

ஏதும் இல்லாமல் எல்லோர் மூக்கிலும்

எளிதாய் நுழைந்து நுரையீரலுக்குள்

எட்டிப் பார்க்கும் கோரோனாவினால்

 

கொஞ்சமாய் ஞானம் பெற்றேன் நான்

நம்மால் நடப்பதல்ல வாழ்வென்பது

நமக்கு நடப்பதே நம் வாழ்வென்பது

வாழும் காலம் வரை ரசித்திருப்போம்