July 29, 2020

அடுத்த சுற்று

அடுத்த சுற்று
தமாம் பாலா

ஆடிவிட முடியும் என்ற போது
மேடைகள் கைவிட்டு போகும்
இனி தோல்வி தான் என்றிட
தனித்து வெற்றியும் காணும்

கண்ணீர் காய்ந்த நேரத்தில்
கனிவாக சாய்ந்திட தோளும்
வெறுக்கவும் கற்ற நேரத்தில்
இறுக்கி அணைக்கும் காதல்

மணிக்கணக்கில் வெளிச்சம்
மறந்து உறங்கிய நிலையில்
பிறக்கும் கதிரவனின் ஒளி
இதுதான் வாழ்வின் இயல்பு

திட்டமிடினும் இடாவிடினும்
சட்டென வாழ்வின் திட்டமும்
புலப்படும் அதை யாரறிவார்
உலகுக்கு நீ யார் என்பதை

அடையாளம் காட்ட வெற்றி
நடைமுறையில் புவியினை
உனக்கு புரிய வைக்கின்ற
கணக்கு தோல்வி வடிவில்

எனவே நித்தம் மகிழ்ந்திடு
எல்லாம் முடிந்து விட்டதாய்
இற்றுப் போகாதே அடுத்த
சுற்றாக அதை நினைத்திடு

July 19, 2020

ஆப்பிள் மனிதன்

ஆப்பிள் மனிதன்
தமாம் பாலா

பழங்களை ருசிக்கிறோம்
பழங்களை மனிதருடனும்
ஒப்பிடுவதை அறிவோமா

இடைக்கு மேல்பகுதி உடல்
இது பெருத்தால் ஆப்பிள்
வடிவ மனிதர் என்றிடலாம்

இன்னொன்று பேரிக்காய்
இடைக்குக் கீழே தொடை
பகுதியில் சதை போடும்

ஆப்பிள் வடிவத்தினருக்கு
ஆபத்து அதிகமாம் இதய
நோய்க்கும் வாய்ப்பாகவே

ஆப்பிளோ பேரிக்காயோ
அளவுக்கும் அதிகமான
எடை என்றும் உதவாது

அடுத்தவனை எடைபோடு
அதில் தவறில்லை உடன்
உன்னையும் எடைபோடு

எப்போதும் உனது எடை
ஏறிவிடாமல் கட்டுப்பட
என்றும் நீ நடை போடு