November 18, 2021

ஆண்டவனும் நானும்

ஆண்டவன் அருளால்
தாண்டவம் ஆடுவதாக
மகிழ்ச்சி வாழ்விலென
மனமார வாழ்த்தினார்

மகிழ்ச்சியும் வாழ்வும்
தாண்டவமும் அருளும்
புரிந்த எனக்கு ஒன்று
புரியவில்லை யாரந்த

ஆண்டவன் அவனும்
நீண்டகாலம் முன்னே
ஆண்டவனா நாட்டை
ஆட்சியில் கடந்தகால

இறந்தகாலத்தில் வரும்
இவன் இன்றும் ஆளும்
இல்லை ஆளப்போகும்
இன்னொரு அவதாரமா

நேற்றைய ஆண்டவனின்
இன்றைய தேடலில் நாம்
சுயநலப் பேய்களாய் மாறி
பணப் பேய்களாய் திரிந்து

ஆள்பவர் காலில் விழுந்து
ஆசிகள் பெற்று சொல்வது
ஆண்டவன் அருளால் என
தாண்டும் பாம்புக் கயிறாய்

November 15, 2021

கடவுள் இல்லை

காலையில் பிள்ளையார்
கோயிலில் பூசை செய்து
மாலையில் ஆஞ்சநேயர்
கோயிலில் வடைமாலை

சார்த்தியும் குடும்பத்தில்
பார்க்கவே முடியவில்லை
நிம்மதி மகிழ்ச்சி சிரிப்பை
வெகுமதி நல்வளர்ச்சியை

வேண்டும் தெய்வங்களின்
சுயவிபரம் வரசித்தி படித்து
வட இந்திய சாய்பாபாவை
திடமாக நம்பினேன் ரொம்ப

காலம் பலன் தந்த பாபாவும்
ஆலகால கோவிட் வந்தபின்
சீலம் குறைந்து போனாரோ
மேல வீதி ராமரைப் பார்த்து

நாலு கேள்வி நறுக்கென்று
நானும் கேட்டிடலாம் என்று
எட்டி நடை போட்டேன் என்
எதிரில் வந்தார் கறுப்பில்

சட்டை போட்டு கண்சிவந்த
குட்டைத் தோழர் ஒருவரும்
கடவுள் இல்லை இல்லவே
இல்லை பகுத்தறி என்றார்

அறிவில் உண்டோ பகுத்த
மற்றும் பகுக்காததும் சுட்ட
பழம் சுடாத பழம் போலவும்
பழனியப்பன் ஔவையின்

உரையாடல் போல கடவுள்
இல்லை என்பதை கடவுள்
கோயிலில் மட்டும் இல்லை
சிலையினுள் ஒளிந்திடவும்

இல்லை என்றும் நம்பிக்கை
மூடம் ஆகும்போது மனிதன்
முடம் ஆகிறான் சொன்னது
கடவுள் மறுப்பின் பெரியார்

கடவுள் மறுப்பு மனிதத்தின்
திடமான ஏற்பு உனக்குமுன்
உள்ள மனிதனை நம்பாமல்
உள்ளத்தில் உள்ளதாக ஒரு

இறையை நம்புகின்றாயோ
திரையை செலுத்துவாயோ
திரை விலக்கி தரை பார்க்க
விரைவில் வரும் பகுத்தறிவு

என் பக்கம்

எத்தனையோ ஆண்டுகள்
புத்தகங்களைத் படித்தேன்
மதிப்பெண் மூலம் எனது
விதிப்பயன் மாற்றினேன்

வாழ்க்கையெனும் புத்தகம்
வாழ்ந்து பார் நீயும் என்றது
அதில் ஒரு பக்கம் முடிந்து
அடுத்த பக்கம் தொடங்குது

இறைவன் என் பக்கமா என
இன்னொரு பக்கம் தேடும்
இனிய பொழுதிலே வந்த
இந்த சிந்தனையும் தந்தது

படிப்பினை புத்தகம் மட்டும்
படித்தால் போதாது மனிதம்
படித்து உணர்தல் வேண்டும்
படிப்படியாய் பணி செய்திட

மனிதர் என் பக்கம் இருக்க
இனி நான் அவரை மட்டுமே
புனித நூலாய் படித்திருக்க
கனிந்தது காலம் இப்போது