June 4, 2019

நல்ல நேரம்

நல்ல நேரம் (திருத்திய பதிப்பு)
தமாம் பாலா

சிறியதாய் பெரியதாய் வட்டமாய்
சதுரமாய் செவ்வகமாய் மனிதர்
முகம் போல் பலவித வடிவமாய்
காலநேரம் காட்டும் கடிகாரங்கள்

பேசவும் பாடவும் தெரிந்த டிக்டிக்
ஓசையில் இதயம் துடிக்க பத்து
ஒரு கண்ணாய் எண்ணிரண்டு
மறு கண்ணாய் தெரிவதுண்டு

பன்னிரெண்டு நெற்றிப்பொட்டு
முள் சிரிக்கும் முகமும் சுளிக்கும்
ஓடும் வினாடி முள் சுட்டி பையன்
ஓரிடத்தில் நிற்காமல் சுற்றிடவும்

காலை உலை வைப்பது முதல்
மாலை வரை இல்லத்தரசியாய்
இடம் மாறும் பெரியமுள் கூடவே
இருந்த இடத்தே எல்லா கடனும்

எடுத்தாளும் கணவன் சின்னமுள்
அவளைத் தொட்டும் தொடாமலும்
என கடிகாரத்துக்குள்ளே குடும்பம்
ஒரே வீட்டில் தனித்தனி உலகமாய்

ஒரு ஊரிலுள்ள மருத்துவர் இருவர்
வருநோய் கணிப்பில் வேறுபடவே
ஒரே வீட்டிலுள்ள இரு கடிகாரங்கள்
ஒரு பொழுதும் ஒரே நேரம் காட்டா

பழம்பெரும் ரோமானிய கடிகாரம்
பதினொன்றா ஒன்பதா தெரியாது
முள்ளிருந்தும் குத்தாத பூப்போல
காற்றில் கொளுத்திய கற்பூரமாய்

மின்னணு கடிகாரத்தில் திறக்கும்
குழாயில் வழியும் நீராய் கண்முன்
கொட்டிடும், எண்ணிடை புள்ளிகள்
சிமிட்டும் தமது யந்திரக் கண்கள்

பேரழகு சேர்க்கும் மணிக்கூண்டாய்
பார்த்து ரசித்த நேற்றைய கடிகாரம்
இருமுறை தினம் சரி நேரம் காட்டும்
இப்போது ஓடாமல் ஓய்ந்த கடிகாரம்