February 23, 2019

திருக்குறள் கவிதைகள்

திருக்குறள் கவிதைகள்
தமாம் பாலா

1. அறத்துப்பால்

கடவுள் வாழ்த்து 1-10

அகரம் தமிழுக்கு முதல்
ஆண்டவன் உலகுக்கும்
இறையடி தொழாவிடின்
ஈடில்லா கல்வியும் பாழ்

உள்ள மலர் உறை இறை
ஊர் மெச்சும் நல்வாழ்வு
எதுவும் வேண்டா நிலை
ஏகாந்தம் துன்பமில்லை

ஐயமில்லா தெய்வ பக்தி
ஒழித்திடும் சின்ன புத்தி
ஓங்காரம் ஐம்புலனுக்கும்
ஔடதம் அமரர் ஆக்கும்

கடவுளுக்கும் நிகரில்லை
கற்கவும் இல்லை கவலை
கடலில் நீந்துவது கடினம்
கரை சேர பக்தி படகாகும்

காணாத கேளாத கட்செவி
காலடி தொழாத தலையே
காணும் பிறவி சமுத்திரம்
காட்சி முன் எம்மாத்திரம்

வான் சிறப்பு 11-20

அமுதமாம் மழைக் கொடை
ஆகாயத்தின் பரிசு புவிக்கு
இலை தழைக்கு மழை உரம்
ஈர மழை தணித்திடும் தாகம்

உலகம் கடல் சூழந்திருந்தும்
ஊர் மழை இன்றில் வாடும்
என்று மழை பொய்க்குமோ
ஏர் உழாமல் நிற்கும் அன்று

தவறிய பருவ மழை மோசம்
தலை விரித்தாடிடும் பஞ்சம்
ஓரிலை பசும் புல்லின் தலை
ஔவை பாடிய வான் மழை

கடல் கூட வற்றிப் போகலாம்
கன மழை வராமல் போனால்
வானம் பொழிய மறந்திடில்
வானவர் பூசையும் இல்லை

தான தர்மங்களும் இல்லை
தங்க மழை தராமல் போக
தண்ணீர் இல்லாத உலகும்
தரிசாய் காய்ந்தே வாடும்

நீத்தார் பெருமை 21-30

அறவழி சென்றார் ஆசை
துறந்தாரைப் புகழ் நூலே
பிறந்து மறைந்த மொத்த
சிறந்த மனிதம் எண்ணி

இம்மை மறுமை அறிந்து
தம்மை வென்றோர் பலர்
அடங்காத புலன்களுக்கு
அங்குசமாய் ஆனவரே

இந்திரியம் வென்றதால்
இந்திரனுக்கு நிகரானார்
அரிய செயலால் பெரிய
பெயரினைப் பெற்றாரே

உடலின் நுகர்ச்சிகளையே
அடக்கி அகிலம் ஆண்டு
நிறைமொழியாளர் நல்ல
மறைமொழி சொன்னாரே

கண நேர சினம் காட்டும்
குணக்குன்றான அடியார்
அந்தணர் அறவோர் நல்
அன்பே சிவமாகியவரே

அறன் வலியுறுத்தல் 31-40

அறம் தரும் சிறப்பையும்
நிரந்தர நன்மைகளையும்
அறமே ஆக்கமும் அதை
மறப்பதே கேட்டின் விதை

செயலில் அறம் வேண்டும்
இயலாத தருணங்களிலும்
அறமெனில் அகத்தூய்மை
பிற அனைத்தும் வெறுமை

ஆசை சின ஔவியம் கடிதல்
அகற்றிட நிறையும் நல்லறம்
அன்றே செய்வதே அறமும்
அதற்கு என்றுமே முகூர்த்தம்

அறத்தின் பயனை பல்லக்கின்
அகத்தும் புறத்தும் காணலாம்
ஒரு நாளும் தவறிடாத அறம்
மறுபிறவி அழிக்கும் வரமாம்

அறமே இன்பமும் நற்புகழும்
அதுவன்றி யாவும் துன்பமே
அன்றாடம் வேண்டும் அறம்
மன்றாட விலகிடும் பழியும்

இல்வாழ்க்கை 41-50

பெற்றோர் பிள்ளை சுற்றம்
பெருவாழ்வுக்கு இல்லறம்
மறையோரும் வறியொரும்
மறைந்தோரும் மகிழ்ந்திட

முன்னோர் இறை விருந்து
தன் உறவின் துணை வீடு
பழியிலா பொருளீட்டல்
பகிர்ந்துண்ணலை நாடு

அன்பும் அறனும் ஆகும்
பண்போடு பயன் மிக்கதாக
அறநெறி இல்வாழ்வானும்
பிறநெறி செல்வதும் வீணே

அறவழி வாழ்பவர் அவர்
அனைவருக்கும் சிறந்தவர்
தன்வழி அறவழி கொள்ள
தவச்சீலருக்கும் மேலாவார்

இல்வாழ்க்கையே நல்லறம்
இல்லை அதில் பழிபாவம்
வளமாய் வாழ் இல்லத்தார்
உளமாரத் தொழும் தேவர்

வாழ்க்கைத் துணைநலம் 51-60

கொண்டவன் கொண்டதைக்
கொண்டு வாழ்வதே துணை
இல்லாள் நல்லாள் இன்றேல்
இருப்பதனால் பயனுண்டோ

மாண்புடைய மனைவி வரம்
ஆண் தின்னும் பெண் சாபம்
பெண்ணின் திண்மை அவள்
பேணும் கற்புநெறியில் காண்

தெய்வம் கணவனே என்பவள்
பெய் என்றால் மழை பெய்யும்
தன்னை கூட தன்னவனையும்
தகுதியுடன் காப்பவளே பெண்

எந்த சிறையும் இல்லை கற்பாம்
சொந்த சிறை தவிர அவளுக்கு
வாழுலகில் பதியை மதிப்பவள்
மேலுலகில் பாதமும் பதிப்பாள்

புகழ் காக்க துணைவி இல்லாது
இகழ் பகை முன் ஏற்றமும் ஏது
ஆணுக்குப் பெண் அலங்காரம்
அவர் தம் மக்களே அணிகலன்

மக்கட்பேறு 61-70

பெற்றதில் பெரிதான பேறு
பெற்றெடுத்த மக்கட்பேறு
தீதிலா பிள்ளைச் செல்வம்
தீண்டாது பிறவி வினையே

பிள்ளைகள் செல்வம் தான்
உள்ளபடி நல்ல வளர்ப்பில்
அவரது கை பட்ட கூழும்
அமுதமாம் பெற்றோர்க்கு

மகவைத் தழுவிட மகிழ்ச்சி
மழலை கேட்கவே இனிமை
குழலை யாழை ரசிப்பவரும்
குழந்தை குரல் கேளாதவரே

அவையில் மகனின் சிறப்பு
அப்பாவின் கடும் உழைப்பு
அறிவில் சிறந்த பிள்ளையே
அது நாட்டுக்கும் நன்மையே

ஈன்ற தாய்க்கு இன்பம் கோடி
சான்றோன் அவன் என்றபடி
தவம் செய்தானோ தகப்பன்
இவண் பேசும் மகன் செயல்

அன்புடைமை 71-80

அன்புக்கேது தாழ் வரையறை
அழுகை கண்ணீர் உள்ள வரை
அன்பிலார்க்கு எதுவும் தனது
அன்புடையார் என்பும் பொது

உடம்பும் உயிரும் சேர்ந்ததாய்
அன்பே பிறவியின் பயனதாய்
அண்மை விரும்பும் அன்பால்
நன்மை தரும் நட்பே பலனாம்

அன்பர் கொண்ட  நல்வாழ்வும்
அவரது இன்பத்தின் சிறப்பாம்
அறத்துக்கு மட்டுமல்ல துணை
அன்பு வீரத்துக்கும் நல்லிணை

வெயில் காயும் எலும்பிலா புழு
அறம் காயும் அன்பில்லா உயிர்
பாசம் இல்லாத குடும்ப வாழ்வு
பாலையில் பட்ட மரத்தின் தளிர்

அன்பெனும் உள்ளுறுப்பின்றி
அழகான வெளியுறுப்பும் வீண்
அன்பே உயிர் அன்பு அகன்ற
உடல் எலும்புக்கு மேல் தோல்

விருந்தோம்பல் 81-90

இருந்தோம் காத்து இல்லத்தில்
விருந்தோம்பல் வேண்டியதால்
அவரை விட்டு தாம் உண்ணும்
அமுதமே ஆயினும் தவறாகும்

வரும் விருந்து நோக்கும் வாழ்வு
வருத்தமில்லாத இன்பம் உயர்வு
முகம் மலர்ந்து உபசரிக்க அகம்
திருமகளின் இருப்பிடம் ஆகும்

விருந்தின்பின் மிஞ்சியது தின்ன
வித்தில்லாமல் விளையும் பொன்
செல்விருந்து செல்ல வருவிருந்து
கொள்வது தருமே தெய்வ விருது

விருந்தே வேள்வி விருந்தளவே
அருந்தவப் பயன் நல்விளைவே
விருந்தினைப் போற்றாத போது
வருந்துவர் தம் செல்வம் இழந்து

இருந்தும் விருந்தோம்பா மடமை
பொருளிருந்தும் இல்லா வறுமை
முகர்ந்தால் வாடும் அனிச்ச மலர்
முகராமல் வாடுபவர் விருந்தினர்

இனியவைகூறல் 91-100

வஞ்சமின்றி வாஞ்சை நிறைந்து
வாய்மை மிகுந்த சொல் இனிது
முகம் மலர்ந்த இனிய சொல்லது
முழுமன ஈகைக்கும் மேலானது

முகம் விரும்பி அகம் அரும்பிட
முத்தான அறச்சொல் விளம்பிட
அத்தனை இன்பம் விளையுமே
சொத்தனைத்தும் வந்து சேருமே

பணிவும் பகரும் சொல் கனிவும்
அணியேது நமக்கு வேறெதுவும்
ஒன்றே நன்றே இன்றே சொல்ல
ஓடும் பழி பாவம் என்றே சொல்

நன்றிமிகு நற்சொல்லே வழங்கிடு
நன்மையே விளையும் அறிந்திடு
சிறுமை நீக்கிய இன்சொல் தரும்
இம்மைக்கும் மறுமைக்கும் வரம்

இன்சொல் தரும் இனிமை கொள்
வன்சொல் வழங்கலாமோ சொல்
கனியிருக்க காய் எதற்கு நமக்கும்
இனியேனும் வருமோ நற்பழக்கம்





























No comments: