June 30, 2020

அரணும் முரணும்

அரணும் முரணும்
தமாம் பாலா


பாலிருக்க பழமிருக்க
பசி மட்டும் இருக்காது 
பஞ்சணையில் காற்று
வர தூக்கம் வராதென

பாடல் கேட்டது உண்டு
நிஜத்தில் நடக்குமோ
நினைத்துப் பார்க்காத
நிதர்சன சிக்கல் இன்று

சுத்தமானது காற்றும்
மொத்தமாய் மூடியது
கட்டாய முகக் கவசம்
தொட்டால் தொல்லை

பாதைகள் வெறிச்சிட
பயணங்கள் மறக்கும்
பயம் கண் மறைக்கும்
பதுங்கிடல் பாதுகாப்பு

கை சுத்தமான மனிதர்
கை குலுக்கிட மட்டும்
கையாலாகாத நிலை
கை கூப்பும் சூழ்நிலை 

நண்பருடன் செலவிட
நம்மிடம் நேரம் உண்டு
ஒன்று கூடி மகிழ்ந்திட
இன்று காலமில்லை

விதம் விதமாய் உணவு
நிதம் சமைக்க முடியும்
விருந்துக்கு அழைக்க
ஒருவரும் தயாரில்லை

திங்களன்று வேலைக்கு
செல்ல ஏங்கிடும் மனம்
முடிவில்லா சனிஞாயிறு
பிடிவாதமாய் தினமும்

செல்வம் நிறைந்தவரும்
செலவழிக்க இயலாமல்
இல்லாதவர் பிழைத்திட
இல்லையாம் வழிகளும்

கண்ட கனவுகள் இன்று
கனவாகவே போகவும்
காணாத கிருமி ஒன்று
கண்ணாமூச்சி ஆடவும்

உலகம் இன்று மொத்த
முரண்பாட்டின் உருவம்
மருத்துவ பரிசோதனை
மட்டுமே வெற்றியாகும்

No comments: