August 21, 2008

யாருங்க, அது பாலோ கொயில்ஹொ?


பாலோ கொயில்ஹோ-ஒரு அறிமுகம்
(நன்றி: ஆனந்த விகடன்)



நழுவும் நதி!
(கார்த்திகேயன்)



கேரளக் காயல் நதிப் பயணத்தின் பரவசத்தை ஏற்படுத்துபவை பாலோ கொயில்ஹோவின் எழுத்து. பிரேசிலிய எழுத்தாளரான இவர், வலிக்காத வார்த்தைகளால் வாழ்க்கையின் நழுவிய பக்கங்களை வாசிக்கக் கொடுக்கிறார். 'தி பில்கிரிமேஜ்', 'தி அல்கெமிஸ்ட்' என இவரின் பெஸ்ட் செல்லர் புத்தக வரிசையில் லேட்டஸ்ட்... 'லைக் தி ஃப்ளோயிங் ரிவர்'. நழுவும் நதியிலிருந்து சில துளிகள்...

பேராசிரியர் பாடத்தைத் துவக்கும் முன் ஓர் இருபது டாலர் நோட்டினை மாணவர்களிடம் காட்டினார். ''யாருக்கு இந்த நோட்டு வேண்டும்?'' அனைவரின் கைகளும் உயர்ந்தன. அந்த நோட்டை சிறு பந்தாகக் கசக்கிச் சுருட்டியவர், ''இப்போது யாருக்கு வேண்டும்?'' என்றார். மீண்டும் எல்லா கைகளும் உயர்ந்தன. ''இப்போதும் வேண்டுமா பாருங்கள்!'' என்றவர் அந்த நோட்டை பிளாக்போர்டில் தேய்த்து, தரையில் புரட்டி அழுக்காக்கினார். அப்போதும் எல்லாரும் ஹேண்ட்ஸ் அப்! ''இதை எப்போதும் மறக்காதீர்கள். இந்த இருபது டாலர் நோட்டினை நான் என்ன பாடுபடுத்தினாலும் அதன் மதிப்பு 'இருபது டாலர்' என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். இதுதான் வாழ்க்கை. நாம் எத்தனை அவமதிப்புகள், விரக்திகள், வேதனைகள், சோகங்கள், சதிகளை எதிர்கொண்டாலும் நமக்கான மதிப்பு குறையாது. நாம் எப்போதும் நாம்தான்!''
அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற ஷிமொன் பெரெஸ் சொன்ன குட்டிக் கதை இது. ஒரு குரு தன் சிஷ்யர்களிடம், ''ஒரு நாளின் இருள் விலகி வெளிச்சம் பரவும் அந்தக் கணத்தை மிகச் சரியாக நாம் எப்படிக் கண்டுபிடிப்பது?'' என்று கேட்டார்.

'இது நாய், இது ஆடு என்று தெளிவாகக் கூறுமளவுக்கு வெளிச்சம் பரவும்போது!', 'ஆலமரத்துக்கும் அரசமரத்துக்குமான வித்தியாசம் தெரியும் சமயம்!' என்பன போன்ற இன்னும் பல விளக்கங்கள். 'இவை எதுவுமே இல்லை!' என்ற குருவிடம் சரியான பதிலைக் கேட்டனர் மாணவர்கள். ''நமக்கு அறிமுகமே இல்லாதவர் நம்மைத் தேடி வந்தாலும், நம் சகோதரர் என நினைத்து வரவேற்று உபசரிக்கும் அளவிலான இருள் விலகி ஒளி பரவும் கணம்!'' என்றார் குரு. எனவேதான், அவர் குரு!

'மனிதனிடம் உள்ள விசித்திரமான குணம் என்ன?' என்று என் நண்பன் ஜேமி கொஹென்னிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில்... ''மனிதனின் முரண்பாடுகள். 'பெரியவனாக வேண்டும்' என்று நமக்கு அத்தனை அவசரம். வளர்ந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது 'அவசரமாகக்' கடந்து வந்த குழந்தைப் பருவத்துக்காக ஏங்குவோம். பணம் சம்பாதிப்பதற்காக உடலை வருத்தி வீணாக்குவோம். அதைச் சீராக்குவதற்காகச் சம்பாதித்த பணத்தைச் செலவழிப்போம். எதிர்காலத்தை நினைத்து மிகவும் கவலைப்பட்டு, நிகழ்காலத்தையும் ரசித்து ருசிக்கத் தவறிவிடுவோம். 'எனக்கு இறப்பே இல்லை' என்பது போல ஆர்ப்பாட்டமாக வாழ்வோம். 'இந்தப் பூமியில் வாழவே இல்லை' என்பது போன்ற கவலையுடன் இறப்போம்!''

1981-ன் ஒரு பனிப் பொழுதில், என் மனைவியுடன் பிரேக் நகர வீதிகளில் நடந்துகொண்டு இருந்தேன். பிரேக் நகரக் கட்டடங்களை ஓவியங்களாக வரைந்து விற்பனைக்கு வைத்திருந்தான் ஓர் இளைஞன். பொதுவாக, பயணங்களின்போது சுமைகள் எனக்குப் பிடிக்காது என்றாலும் ஏனோ அவனிடம் ஒரு படத்தை வாங்க வேண்டுமெனத் தோன்றியது. படத்துக்குக் காசு கொடுக்கும்போதுதான் கவனித்தேன், அந்த மைனஸ் 5 டிகிரி குளிரிலும் அவன் கைகளில் கிளவுஸ் இல்லை. 'கிளவுஸ் அணிந்தால் பென்சில் பிடித்து படங்களைச் சரியாக வரைய முடிவதில்லை!' என்றவனை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவனுக்கும் என்னைப் பிடித்திருக்கும் போல, 'பிரேக் நகரம் எப்படியெல்லாம் தன்னை வரையத் தூண்டுகிறது, இந்த சீஸனில்தான் நகரின் உச்சகட்ட அழகு மிளிரும்!' என்று ஏதேதோ பேசத் துவங்கி விட்டான். 'உங்களுக்கு இது எனது பரிசு. காசு எதுவும் வேண்டாம்!' என்று பிடிவாதமாக எனது மனைவியை வரையத் துவங்கினான். அவன் படம் வரைந்து முடிக்கக் காத்திருந்தபோதுதான் விநோதமான அந்த விஷயம் எனக்கு உறைத்தது. அத்தனை நேரம் நாங்கள் உரையாடிக்கொண்டு இருந்தாலும் இருவருக்கும் மற்றவர் மொழி தெரியாது. சிரிப்பு, மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, முகபாவனைகளாலேயே இத்தனை நேரமும் மனம்விட்டுப் 'பேசிக்'கொண்டு இருந்தோம் என்பது. பிறருடன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள வார்த்தைகள் அற்ற உலகத்தில் நுழைந்தாலே போதும். அந்த உலகத்தில் எல்லாமே தெளிவு!

மொராக்கோ நாட்டில் இருந்து வந்த நண்பர் வித்தியாசமான 'ஆதாம்-ஏவாள்' கதை சொன்னார். அவர்கள் நாட்டில் உள்ள சில குறிப்பிட்ட பாலைவனப் பழங்குடியினர்களின் நம்பிக்கையாம் அது. ஈடன் தோட்டத்தில் ஏவாள் நடந்துகொண்டு இருந்தபோது குறுக்கிட்ட சாத்தான், ''இந்த ஆப்பிளைச் சாப்பிடு!'' என்றது. கடவுளின் கட்டளை காரணமாக மறுத்த ஏவாளிடம், ''இதைச் சாப்பிட்டால் நீ இன்னும் அழகாவாய்! ஆதாமுக்கு உன்னை இன்னும் பிடிக்கும்!'' என்று ஆசைகாட்டியது சாத்தான். ''அதற்கு அவசியம் இல்லை. வேறு பெண்களே இல்லாததால், ஆதாமுக்கு என்னைப் பிடிக்கவே செய்யும்'', ''ஹா ஹா ஹா! நீதான் அப்படி நினைத்துக்கொண்டு இருக்கிறாய். ஆதாம் இன்னொருத்தியை ஒளித்துவைத்திருக்கிறான்'' என்ற சாத்தான், ஏவாளை அழைத்துக்கொண்டு மலையுச்சிக் கிணற்றுக்குச் சென்றது. ''இந்தக் குகைக்குள்தான் அவள் இருக்கிறாள்!'' என சாத்தான் கிணற்றைக் காட்ட, உள்ளே எட்டிப் பார்த்தாள் ஏவாள். தண்ணீரில் 'அழகிய பெண்ணின்' முகத்தைப் பார்த்த ஏவாள், பதற்ற பயத்தில் உடனே ஆப்பிளைக் கடித்துச் சாப்பிடுகிறாள். தண்ணீரில் தன் பிம்பத்தை உணர்ந்து பதறாதவர்களுக்கு, 'இழந்த சொர்க்கம்' நிச்சயம் என்று இப்போதும் அந்தப் பழங்குடியினர் நம்புகிறார்கள்!

சிட்னி துறைமுக அழகை நான் ரசித்துக்கொண்டு இருந்தபோது என்னிடம் வந்த ஆஸ்திரேலியர் ஒருவர், ''இந்த பேப்பரில் இருக்கும் விளம்பரத்தைப் படிக்க முடியுமா? மிகவும் சிறிய எழுத்துக்களாக இருக்கின்றன!'' என்று கேட்டார். நான் வீட்டிலிருந்து கண்ணாடி எடுத்து வராததால், என்னாலும் படிக்க முடியவில்லை. நான் அவரிடம் மன்னிப்பு கேட்டதற்கு, ''ஓ! அது பரவாயில்லை. கடவுளுக்கும் கண்களில் இதே குறைபாடு உண்டு. ஆனால், அது வயதாவதால் இல்லை. யாராவது ஏதேனும் தவறு செய்தால், அதைக் கவனிக்காமல் இருக்க கடவுளே விரும்பி ஏற்றுக்கொண்ட குறைபாடு. தவறிழைத்தவர்களுக்குத் தன்னால் பெரிய தண்டனை எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கிறார் கடவுள்.'' ''அப்போது நல்லது செய்பவர்களையும் கடவுள் கவனிக்காமல் கடக்க வாய்ப்பிருக்கிறதே?'' என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன். சின்னச் சிரிப்புடன் நடக்கத் துவங்கிய அந்த ஆஸ்திரேலியர் திரும்பினார், ''ஆனால், கடவுள் ஒருபோதும் தன் கண்ணாடியை வீட்டில் மறந்துவைப்பதில்லை!''

பயணங்களால் நான் கற்றுக்கொண்டது நிறைய. ஒரு பயணத்தைச் சுவாரஸ்யமாக்க எனது டிப்ஸ்...

முடிந்தவரை தனியாக பயணித்துப் பழகுங்கள். திருமணமாகியிருந்தால் மனைவி, குழந்தைகளுடன் மட்டுமே! பழகிய பெருங் கும்பலுடனே வெளியூரிலும் பயணித்தால், அதே மொழி, அதே சிரிப்பு, அதே கோபம், அதே சூழல் என எந்த வித்தியாசமும் இல்லாத பயணமாக இருக்கும். உங்கள் சொந்த மொழியிலேயே பேசி, உங்கள் நண்பனே உங்களுக்கு வழிகாட்டி, சொந்த ஊர் கதைகளையே அங்கும் பேசுவதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடக் கூடும்! அந்த ஊரின் மொழியில் உங்களுக்கு ஒரு வார்த்தைகூடத் தெரியாவிட்டால்தான் பயணம் ருசிக்கும். மொழி தெரியவில்லையே என்ற எந்தப் பயமும் வேண்டாம். ஒரு வார்த்தைகூடத் தெரியாத ஊரில் எனக்கு 'கேர்ள் ஃப்ரெண்ட்'கள்கூடக் கிடைத்திருக்கிறார்கள். நிச்சயம் உங்களைப்பற்றி அறியாதவர்கள் உங்களைக் கைவிட மாட்டார்கள்!

எந்த ஒரு நகரத்தையும் இரண்டொரு நாளில் கண்டு களித்திட முடியாது. ஒரு நகரமும் பெண்ணைப் போலத்தான். அணு அணுவாக அனுபவித்தால்தான் சுகம்!

5 comments:

வேளராசி said...

பயணங்களால் நான் கற்றுக்கொண்டது நிறைய.
முடிந்தவரை தனியாக பயணித்துப் பழகுங்கள்.எனது கருத்தும் அதுவே.

none said...

////அந்த ஊரின் மொழியில் உங்களுக்கு ஒரு வார்த்தைகூடத் தெரியாவிட்டால்தான் பயணம் ருசிக்கும். மொழி தெரியவில்லையே என்ற எந்தப் பயமும் வேண்டாம்.////

பாலோ கொயில்ஹொ கொடுத்துவைத்தவர். இப்பல்லாம் பாசை தெரியாத ஊரில் பராக்கு பாத்துக்கொண்டு போனால் புடிச்சு உள்ள போட்டிருவான்கள். அதுவும் நம்ம ஊர் கலர் என்றால் விசேஷம்.

Dammam Bala (தமாம் பாலா) said...

வரவுக்கு நன்றி வேளராசி.
கருத்துக்கும் பின்னூட்டத்துக்கும் தான்!
:-))

Dammam Bala (தமாம் பாலா) said...

ரொம்பவே சரியா சொன்னீங்க கல்கி தம்பி! :))

சின்ன வயசுலேயே அப்பா சொல்வாரு..
வெளியே போகும்போது பராக்கு பாக்காதேடான்னு!
நம்ம ஊருக்கே 'நம்ம கலர்'தானே விசேஷம்.

Blogger said...

என்னைப் பொறுத்த வரை பயணங்களே மனிதனின் உயிர் நாடி...இது சற்றே மிகையாக தெரிந்தாலும் உண்மை அதுவே.நல்லதொரு பதிவு நண்பரே வாழ்த்துக்கள்...