October 26, 2021

டனா தெரு

டனா தெரு
தமாம் பாலா

1978ம் ஆண்டு; அப்போது நான் ஏழாவதோ எட்டாவதோ படித்ததாக நினைவு. தஞ்சாவூரில் ராணி வாய்க்கால் சந்தில் எங்கள் வாசம். சியாமளா தேவி கோயிலை ஒட்டி கார் போக இயலாத சிமண்டு போட்ட சைக்கிள் ஸ்கூட்டர் மட்டும் போகக் கூடிய ஒற்றையடிப் பாதை அதுவும் ஒருவழிப் பாதையாக ஒன்று இருந்தது.

அந்த சந்தின் பெயர் சேவு அமிர்தலிங்கம் பிள்ளை தெரு. இப்போது இன்னும் இருந்தால் அதில் பிள்ளையை வெட்டி இருப்பார்கள். தெரு டனா வடிவில் இருக்கும். ஆரம்பத்தில் பள்ளி கரஸ்பாண்டண்ட் ராமதாஸ் அய்யாவின் உயர்ந்த திண்ணை வீடு. கொஞ்சம் தாண்டி டனா வின் முனையில் பாபு வீடு. அவனும் என் வகுப்புதான், சியமளா அக்கா, கீர்த்தி தம்பி, (வி)சாலாட்சி குட்டி தங்கை. எல்லோருமே ஒல்லி அவர்கள் அம்மா போல. அவர்கள் அப்பா எல்.ஐ.சியில் எங்கள் அப்பாவுக்கும் மேலான அதிகாரி.

அவர்கள் வீட்டுக்கு எதிரே என் தோழன் சுந்தர மோகன் வீடு. அவன் என்னை விட ஒரு வயது பெரியவன், நல்லவன் சிரித்த முகம். அவன் தம்பி பாண்டு. அவன் அப்பா கண்ணாடி போட்டு வழுக்கை தலையோடு இருப்பார். அவர்கள் வீட்டின் பின் தோட்டம் தென்னை மரத்துடன் எங்கள் வீடு வரை நீண்டு இருக்கும்.

டனாவின் முனை தாண்டி வரும் போது இரு வழி காலனி இருக்கும். உள்ளே இரண்டு மூன்று குடித்தனங்கள். ரயில்வே பிரேமா அக்காவும் அம்மாவும் ஒரு போர்ஷன். சிகரெட்டு சண்முகம் மாமா அவர் மனைவி, மகள் சாந்தி பானு சின்னக்குட்டி கவிதா. இன்னொரு போர்ஷனில் திருநெல்வேலி தெலுங்கு சமையல் தொழில் பெருங்குடும்பம். விச்சு, அக்காக்கள் ராஜி, அங்கச்சி, இன்னும் ஒர் அண்ணன், மனவளர்ச்சி குன்றிய அழகிய தம்பி கண்ணா.

எங்கள் வீடு ஒரு தனி வீடு, சிறு திண்ணை, ஒரே அறை அதில் தடுத்து சமையல், குளியலறை சுந்தர மோகன் வீட்டு காம்பவுண்டு ஒட்டி இருந்தது. 

எங்களைத் தாண்டி இருபதுக்கு முப்பது திறந்தவெளி அடுத்து வீட்டு ஓனர் ராசாத்தி அம்மாள் தங்கவேல் மூப்பனார் வீடு. வெளியில் உள்ள முருங்கமரம், அதில் உள்ள எல்லா முருங்கை காய்களிலும் அம்பு தைத்து இருக்கும், விளக்குமாறு அம்பு எல்லாம் என் கை வண்ணம்.

எங்கள் வீட்டுக்கு முன் ஒரு ஒதிய மரம் அது நான் உங்களுக்கு சொல்ல விட்டுப் போய் விட்டது. ஒரு நாள் அங்கு நான் பார்த்த காட்சி தான் இந்த கதை.

எங்கிருந்தோ ஒரு அணில் வந்தது. நேராக ஓடி ஒதிய மரம் ஏறி பக்கத்து காம்பவுண்டு சுவர் அளவில் மரத்தில் நின்று, சுவற்றில் தாவியது. ஒரு முறை அல்ல பலமுறை. கூர்ந்து பார்த்த போது அணில் தனியாக இல்லை, கூட அதன் குட்டி அணிலும் இருந்தது. அதற்கு பயிற்சி வகுப்பு தான் அன்று நடந்தது. மரத்தின் மீது ஏறும் வரை அணில் குஞ்சு கற்று விட்டது.

அங்கிருந்து சுவருக்கு தாவுவது தான் அணில்குஞ்சின் பயம் போலும். பல முறை பொறுமையாய் முயன்ற தாய் அணில் இறுதியில் வென்றது குட்டி அணில் சுவருக்குத் தாவிய அந்த வெற்றி நிகழ்வுக்கு பதக்கம் தரவோ அல்லது அதை நேரடி ஒளிபரப்பு செய்யவோ அப்போது தனியார் தொலைக்காட்சி எதுவும் இல்லை.

அமெரிக்காவில் எனது கல்லூரி நண்பர்கள் வீட்டுத் தோட்டத்துக்கு அணில்கள் வந்து தினம் விருந்து சாப்பிடுவதாக அறிந்து கொண்ட இந்த நாளில், என் (மனப்)பையிலிருந்து பூனைக்குட்டி, மன்னிக்கவும் குட்டி அணில் வெளியில் வந்து விட்டது அதுவும் நாற்பது ஆண்டுகள் கழித்து!

No comments: