September 1, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 3)

தமாம் பாலா
3. கொஞ்சம்.. அப்பா புராணம்!
டில்லிக்கு ராஜா, தல்லிக்கு பிட்ட.. என்பார்கள் தெலுங்கில். தகப்பன் என்பவர் வீட்டுக்கு வெளியே என்ன வேலை பார்த்தாலும், வீட்டில் அவர் தான் ராஜா. பிள்ளைகளுக்கு அவர்தான் ரோல் மாடல்.

இப்போ, எங்க அப்பாவை பற்றி கொஞ்சம் பார்போமா? ரோஸ் கலர், என்றால் அப்படி ஒரு ரோஸ் கலர். எம்.ஜி.ஆர் மாதிரி. நல்ல ஒரு கமலா ஆரஞ்சு பழத்தின் தோலில் உள்ள செல்ஃப் டிசைன் புள்ளிகள் போல சருமம், பெண்களும் பொறமைப்படக்கூடிய அழகிய பெரிய கண்கள்/புருவம், பெரிய கோயில் சிற்பம் போன்ற மூக்கு, தாடி/மீசை இல்லாமல் மழமழவென்று ஷேவ் செய்த முகம். ரொம்பவும் தான் நிதானஸ்தர்; பொறுமை, பொறுமை அப்படி ஒரு பொறுமை.. முகத்தில் நிரந்தரமாக தேங்கிய ஒரு புன்சிரிப்பு!

காலையில் சீக்கிரம் எழும் வழக்கம் உண்டா உங்களுக்கு? அப்போது அவசியம் அவரை நீங்கள் பார்த்திருக்க கூடும். காலை ஆறு மணிக்கு, வேஷ்டியை டப்பா கட்டு கட்டிக்கொண்டு, நாலுகால் மண்டபம், காசுகடைத்தெரு, தாஸ்ராவ் கடை மற்றும் போஸ்ட் ஆபிஸ் தாண்டி காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு செல்வார். கடைகளையெல்லாம் சுற்றி, காய்கறிகளை நோட்டம் விட்டு, வழக்கமான கடையில் வந்து, நல்ல தரமான கத்திரிக்காயை, காசு பார்க்காமல் வாங்குவார். காய்கறிகாரியிடம், பூக்காரியிடம் பேரம் பேசக்கூடாது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார்.


பத்து மணிக்கு எல்.ஐ.சி ஆபீஸ்; மதியானம் வீட்டுக்கு வருவது இல்லை; மாலை டாண் என்று ஐந்து மணிக்கு கிளம்பி, வீட்டுக்கு வந்து விடுவார். வெறுங்கையோடு அல்ல, விதவிதமாக தீனிகளோடு! வெள்ளரி பிஞ்சு, மாம்பழம், வாழைப்பழம், கொய்யா பழம் என்று சீசனுக்கு ஏற்றமாதிரி. சம்பள நாட்களில், பாம்பே ஸ்வீட்ஸ் ஸ்பெஷல் ட்ரை குலோப்ஜானும் உண்டு. நீறு பூத்த சர்க்கரை நெருப்பாக, வாயில் கரையும் அது!


மாலை முடிந்தும் பை எடுத்துக்கொண்டு, இரவு உலா மார்க்கெட்டுக்கு.. இந்த முறை புண்ணிய மூர்த்தி கடை, உப்பு, புளி சாமான் என்று தீரதீர பார்த்து பார்த்து வாங்குவார். அதிகம் நண்பர்கள் கிடையாது, தத்துவ விசாரங்கள் கிடையாது, புத்தகங்கள் படித்து பார்த்ததாகவும் எனக்கு நினைவும் இல்லை. வீடு, ஆபிஸ், வீடு, வீட்டின் தேவைகள், பண்டிகைகள், ஆபிஸ் அட்வான்ஸ், கடன், வட்டி என்று ஒரு தீர்க்கமான வட்டம், திருப்தியான வாழ்க்கை!


கையில் பணம் இருக்கிறதோ, இல்லையோ.. சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை; கஞ்சத்தனம் கொஞ்சமுமில்லை. அவ்வப்போது, எம்.ஜி.ஆர் படம் பார்ப்பார், எங்களையும் அழைத்துக்கொண்டு போவார். சிவாஜி படம், ஊஹூம்; நோ! வாழ்க்கையிலேயே நிறைய பிரச்சனை, அழுது வடியிறோம், அதுலே காசு குடுத்து வேறே அழணுமா? என்பார். கலைஞர் மீட்டிங்கில், திலகர் திடலில் கண்டிப்பாக அவரை பார்க்கலாம்.


தீபாவளிக்கு துணி வாங்க போவதே, ஒரு பெரிய ரிச்சுவல் போல இருக்கும். ரொம்ப தூரம் நடந்து, கீழ வாசல் போவோம். துணியெல்லாம் பார்ப்போம், வழக்கமான கடையிலேதான். எல்லாம் தேர்ந்தெடுத்து பில் போடப்போகும் போதுதான், ரகளை ஆரம்பமாகும். கடைக்காரர் ஒரு விலை சொல்வார்; அப்பாவும் சிரித்துக்கொண்டே, நாம் கேட்கவும் பயப்படக்கூடிய ஒரு குறைந்த விலை கேட்பார். பேரம் முடியாது, அப்பா கூலாக, சிரிப்பு மாறாத முகத்துடன் எங்களை அழைத்துக்கொண்டு கடையை விட்டு வருவார். கடைக்காரர், பின்னாலேயே வந்து, அப்பா கேட்ட விலைக்கே எடுத்துக்கொள்ள சொல்வார்; இது ஒவ்வொரு வருஷமும் நாங்கள் பார்க்கும்.. அதே நாடகம்! :))


தப்பித்தவறி, என்றாவது ஒரு நாள் நம்மை கடைக்கு அனுப்பினால், ஒரு நாற்பது பக்க நோட்புக் அளவுக்கு.. இன்ஸ்ட்ரக்ஷன் கொடுப்பார். “நீ.. இப்போ கடைக்கு போற..” “போய், கடைக்காரன் கிட்டே.. என்ன கேட்பே? சொல்லு!” கடைக்கு போவதை விட ஸ்பூன் ஃபீடிங் பேஜாராக்கி விடும் என்னை. அப்போது, அவரிடம் முறைத்துக்கொண்டே போய், மார்க்கெட்டில் பணத்தை தொலைத்து முகத்தில் கரி பூசிக்கொண்டதும் உண்டு; அதையும் பெருந்தன்மையோடு மன்னித்து விட்டு விட்டார், அடி உதை இல்லாமல்!!

குழந்தைகள் அவரிடம் ஆசையாக வந்துவிடும்; க்ரீன் பெல்ட் கதை, சின்னவயதில்.. அணாக்கணக்கில் செலவு செய்து ஓலைபட்டாசு வாங்கியது, தின்பண்டம் வாங்கியது, புதுக்கோட்டை பக்கத்து காடுகளுக்கு போனது, (நரி, ஒன் பாத்ரூம் போய்விட்டு.. பரபரவென மண்ணை தூற்றுமாம்..) உப்புமாவுக்கு பூவரச இலை பறிக்க கிணற்று கைப்பிடி சுவரில் ஏறி, கீழே விழுந்து கையை உடைத்து கொண்டது, மிலிட்டரி ட்ரைனிங் எடுத்துக்கொண்டது, என பல விஷயங்களை கதை போல சொல்வார், அப்பா!


எங்கே போனாலும், அவரது களங்கமில்லா முகத்தை பார்த்து, மரியாதை தருவார்கள்; ஒரு நாள், சைக்கிள்காரன் ஒருத்தன் கூட அவர் மீது மோதிவிட்டு, “சார்.. நீங்க பெரிய (?!) ஆபிஸரா, இருக்கலாம், அதுக்காக என் வண்டியிலே வந்து விழணுமா?!?” என்று அவரை பாராட்டி விட்டு சென்றானாம்.. :-)


நண்பர்கள், வீட்டுக்கு வந்தாலும், ரொம்ப நேரம் ஆகி விட்டால்.. ரொம்ப நாசுக்காக, நீங்களும் படிக்கணும்/ அவனும் படிக்கணும் இல்லையா, என்று கன்க்ளூட் செய்வார். படித்தது எஸ்.எல்.சி தான் என்றாலும் (அதுவே அவர் அப்பா போனதால் தடைபட்டு, முப்பதுக்கும் மேல்தான் முடித்தார்) அழகான ஆங்கிலத்தில்.. “எவரிதிங் இன் எ ப்ளேஸ்- எ ப்ளேஸ் ஃபார் எவ்வரிதிங், ச்சாரிடி பிகின்ஸ் அட் ஹோம், ஹானஸ்டி இஸ் த பெஸ்ட் பாலிசி’ அது இதுவென்று, சமயத்துக்கு தகுந்த மாதிரி,பொன்மொழிகளை எடுத்து விடுவார்!


மாலையில் அவர் வருவதற்கு, பத்து நிமிடம் அதிகமாக ஆகிவிட்டாலும், பயந்து போய் விடுவோம் நாங்கள்; ஆக்ஸிடெண்ட் ஏதும் ஆகிவிட்டதோ, என்னவோ ஏதோ என்று. அப்பா புண்ணியத்தில், பதினாறு/பதினேழு வயதுவரை வெளியுலகமே தெரிந்ததில்லை; ஒரு பேங்க் ஃபார்ம் ஃபில் அப் செய்ய கூட தெரியாது எனக்கு. படிப்பதும்,புசிப்பதும் மட்டுமே வேலை. இப்போது யோசித்து பார்க்கும்போது தான், அவரது அலுவலக முத்திரை (எம்பளம்) போல, கைகளில் வைத்து காத்திருக்கிறார் என்று புரிகின்றது.


நடக்கப்போகும் விஷயம் எல்லாவற்றையும் ஒரு ‘குண்ஸாகவே’ யூகித்து சொல்லி விடுவார். புதிதாக ஒருத்தனை பார்த்தாலும், “அவன் பார்வை சரியில்லே, நம்பகூடாது” என்பார். சும்மா அபாண்டமா ஒருத்தர் மேலே, ஆதாரம் இல்லாமே, பழி சொல்லாதீங்க என்று, சண்டை பிடிப்போம்; கடைசியில், அவர் சொன்னது போலவே, ஹீரோ.. வில்லன் ஆகி சாயம் வெளுத்து விடுவான், நாங்கள் வழக்கம் போலவே ஆச்சரியப்படுவோம். வெய்யில் கொளுத்தும் வெளியில்.. சாய்ங்காலம் மழை வரும், குடை எடுத்துகொண்டு போ என்பார்; காதில் போட்டுகொள்ளாமல் போய்விட்டு, நனைந்து கொண்டு வீடு திரும்புவோம்!


பள்ளி நாட்கள் முடிந்த பின், கல்லூரிக்கு கோவை சென்றுவிட்டதால், அப்பாவை லீவுக்கு லீவுதான் பார்க்க முடிந்தது; அவரைப்பற்றிய கணிப்பும், மரியாதையும் உயர்ந்தது. அவருக்கும் மகன் படிக்கிறான் என்று அலுவலகத்திலும், சமுதாயத்திலும் ஒரு புதிய கௌரவம், அந்தஸ்து கிடைத்தது. இப்படிப்பட்ட அப்பா, காலமெல்லாம் கூடவே இருந்து வழிகாட்டுவார் என்று தானே நினைக்க தோன்றும்? நானும் கூட.. அப்படித்தான் நினைத்தேன்; ஆனால் விதி வேறு விதமாக இருந்தது! :-(((


இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதெல்லாம், அப்பா பற்றி.. என் மனதில் எஞ்சியுள்ள.. இருபது ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்வுகளின் நினைவுகள் மட்டுமே!
உங்கள் யாரிடமாவது, டைம் மிஷின் இருந்தால், சொல்லுங்கள்.. நானும் நீங்களும் அதில் ஏறி 1980களுக்கு போகலாம்... தூரத்தில் அப்பா.. மாலையில் மணிக்கூண்டு, சிங்க ஆர்ச்/பஸ் ஸ்டாண்டு தாண்டி.. ஆபிஸ் ஆஸ்தான சப்ளையர் நாகராஜன் போட்ட ‘அடை அவியலை, சுடச்சுட’ கையில் எடுத்துக் கொண்டு வருவது தெரிகிறதல்லவா..? அதில் உங்களுக்கும் கொஞ்சம் கொடுக்க சொல்லி ரெக்கமண்ட் செய்கிறேன்; ஆனால் அவர் கையில் இருக்கும் ‘துப்பறியும் சாம்பு’ புக்கை நீங்கள் கேட்டால்.. ரொம்ப சாரி.. அதை என்னாலே தரமுடியாது.. ஏன்னா.. ஆபிஸ் லைப்ரரி புக்கை சர்க்குலேஷனுக்கு விட்றது.. எங்க அப்பாவுக்கு பிடிக்காத விஷயம் !!!!


-தஞ்சையிலிருந்து தமாம் வரை தொடரும்..

10 comments:

ஆயில்யன் said...

//பாம்பே ஸ்வீட்ஸ் ஸ்பெஷல் ட்ரை குலோப்ஜானும் உண்டு//

அப்ப அந்த டைம்ல பாம்பே ஸ்வீட்ஸ் திருவையாறு அசோகா அவ்ளோ பிரபலமில்லியா அல்லது இல்லியா?


கொஞ்சம் தெரிஞ்சுக்கத்தான் திருவையாறு அசோகான்னா அப்படியே சாப்பிடுவேனாக்கும் ! :)))

ஆயில்யன் said...

தொடரில் கண்டிப்பாக பஸ் ஸ்டாண்டு ஸ்பெஷல் லெஸி பாதாம் பால் இந்த ஐட்டங்களை தொடணும்!
:)))

M.Rishan Shareef said...

ஐயையோ..அப்பாவுக்கு என்ன ஆச்சு?

ராமலக்ஷ்மி said...

ஆசானாகப் பார்த்த அப்பாவின் ஞாபகங்களை அருமையாகப் பதிந்திருக்கிறீர்கள்.

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க ஆயில்யன். இருபது வருஷத்திலே கொஞ்சம் மறந்து போயிடுச்சு. அசோகா கூட ரொம்ப ப்ரமாதமான ஸ்வீட்தானே! பழைய பஸ்டாண்ட் எதிரே உள்ள ஒரு கடையிலே போடுவாங்கன்னு நினைக்கிறேன். நினைவுபடுத்தியதுக்கு நன்றி!

Dammam Bala (தமாம் பாலா) said...

பஸ்டாண்டு, மணிக்கூடு தாண்டி, வளநாடு சில்க் எதிரிலே, மங்களாம்பிகா ஹோட்டல், அதுக்கு பக்கதுலே ஒரு கடையிலே பாதாம்பால் சாப்பிட்டதா ஞாபகம், ஆயில்யன்! :))

Dammam Bala (தமாம் பாலா) said...

ரிஷான்,
நான் காலேஜ் சேரும் வரைக்கும்
அப்பா நல்லாதான் இருந்தாரு..
ஆனால் பொறியியல் மாஸ்டர்ஸ் படிக்கும்போது, முடிப்பதற்கு ஆறுமாதம் முன் நோய் வந்து இறந்துட்டாரு.. 1988லே :-(((

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க ராமலக்ஷ்மி,
படிக்கிற காலத்துலே வாத்தியாரைவிட
நமக்கு ரொம்ப தெரியும் என்கிற மாதிரி, ஒரு மனோபாவம் வந்துடுது.
ஆனால், இப்போ நாம் வாழ்க்கையோட பொறுப்புகளை எடுத்து செய்யும் போதுதான், அவங்க மதிப்பு இன்னும் அதிகமாகுது.

உங்கள் வரவுக்கும்,வாழ்த்துக்கும் நன்றி! :-))

தியாகராஜன் said...

வாழ்வின் வசந்தங்களை அள்ளிக் கொடுத்த நாட்களை வடித்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்று மதியம் அந்நாட்களை நினைந்து சில நிமிடங்கள் கண்ணீர்விட்டேன்.
தற்போது தமது தளத்தைக் கண்டவுடன் அதே நினைவலைகள்.
வாழ்த்துகளுடன் தியாகராஜன்

Dammam Bala (தமாம் பாலா) said...

அன்பு நண்பர் தியாகராஜன்,
நீங்கள் சொன்னது போன்ற
அனுபவம் எனக்கும் உண்டு

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம்
ஆயிரம் மாற்றங்கள், பாடலை
கேட்கும்போது அழுகையே
வந்துவிடும்.. நிலவுகள் தோன்றி
பூமியில் வாழ்ந்தது அது ஒரு
பொற்காலம் என்ற வரிகளில்!

உங்கள் உணர்வுகளை பகிர்ந்து
கொண்டதற்கு மிக்க நன்றி,தியாகு!