September 10, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 7)

தமாம் பாலா
7. கே.ஹெச்.எஸ் நினைவுகள்-முதல் ரவுண்டு..

அந்த காலத்து நீதி மன்றம் போல, ஒரு கவர்மெண்ட் பில்டிங் போல இருக்கும் எங்கள் பள்ளிக்கூடம்! படிகள் ஏறி, முதல் வராந்தாவை தாண்டி உள்ளே நுழைந்தால்.. ஒரு பெரிய உயரமான மத்திய மண்டபம்.. டிரஸ் மற்றும் ஷீட்டிங்கால் ஆனது! அதன் பெயர் செண்ட்ரல் ஹால். தினமும் காலை ப்ரேயர் நடப்பது, மற்றும் முக்கியமான மீட்டிங் நடைபெறும் இடம்; செண்ட்ரல் ஹாலை சுற்றி, வகுப்பு அறைகள், தரைத்தளத்தில்.

வலதுபுறம் முதல் அறை ஹெட்மாஸ்டர் அறை. இடதுபுறம் முதல் அறை ஸ்கூல் ஆபிஸ், இரண்டாவது அறை.. ஸ்டாஃப் ரூம். கீழே உள்ளது போலவே, முதல் மாடியிலும், சுற்றிலும் வகுப்பு அறைகள். வகுப்புஅறைகளை சுற்றி, வெளிப்பகுதியில் வராந்தாவும் உண்டு; மாடி வகுப்புஅறைகளுக்கு உட்பகுதியில், செண்ட்ரல் ஹாலின் உள்கூடாக, மரத்தாலான பால்கனி உண்டு; ஹாலின் முழு உள் சுற்றளவுக்கு. ஸ்கூல் நுழைவு வாயிலுக்கு நேர் மேலே பெல் அடிக்கும் இடம். இதுதான் மெயின் ஸ்கூல்.

இது தவிர இந்த பள்ளி வளாகத்திலேயே, சுற்றிலும் லைப்ரரி, அடிஷனல் வகுப்புகள், பின்புறம் எலும்புக்கூடு இருக்கும் பயாலஜி லேப், பாத்ரூம்கள்,பிஸிக்ஸ் லாப், கெமிஸ்ட்ரி லாப், இடம் வலமாக ஸ்கூலை சுற்றி வர, அவ்வப்போது லாரல் ஹார்டி 16எமெம் படம் போடும், சின்ன தியேட்டர்!


கொங்கணேஸ்வராவில் இருந்து ஜானகிராமன் சார் எங்களை அழைத்து வரிசையில் உட்கார வைத்ததும் செண்ட்ரல் ஹால்தான். ஐந்து வரை தமிழ் மீடியத்தில் படித்து, ஆறவது கே.ஹெச்.எஸ்ஸில் இங்க்லீஷ் மீடியம் வகுப்பில் போட்டுவிட்டனர். வகுப்பில் டீச்சர்கள் என்ன பேசுகின்றார்கள், என்று தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. ரத்னா பாய் டீச்சர்தான், க்ளாஸ் டீச்சர். கண்ணுங்களா, நல்லா படிக்கணும் என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் கனிவாக மிரட்டுவார். தம்பி இறந்த சோகத்திலிருந்து மீள்வதற்கு, நானும் அம்மா அப்பாவும் கொஞ்ச நாள் லீவு போட்டு விட்டு மாயவரத்தில் பெரியம்மா வீட்டுக்கு சென்று விட்டோம்; பெரியப்பாவும், பெரியம்மாவும், என் அப்பா/அம்மாவுடன் உடன்பிறந்தவர்கள். இந்த டபுள் பாண்ட், மற்றும் பெரியம்மா பிள்ளைகள் நிம்மி, குமார்,(எனக்கு வயதில் மூத்தவர்கள்) ஜெயஸ்ரீ(சின்னவள்) அன்பாலும் நாங்கள் தேறி வந்தோம். அவர்கள் ஒருநாளும் என்னை ‘கஸின்’ என்றே சொன்னதில்லை; தம்பி/அண்ணா என்றே எப்பொழுதும் குறிப்பிடுவார்கள் என்னை!

பழக்க தோஷத்தால், அம்மா அவ்வப்போது.. மணி,ராதா என்று விளிக்கும் போது, அது மிஸ்-அப்ராப்ரியேஷனாகவும், அதே சமயம் மனதை வருத்துவதாகவும் இருக்கும்.

பசங்கள் நாங்கள், அப்போதெல்லாம் துண்டு பிலிமை லென்ஸ் வைத்து, சூரிய ஒளியை கண்ணாடியில் ரிஃப்ளெக்ட் செய்து, வீடு முழுக்க படுதா போட்டு விடுவோம்; லென்ஸ் போதாமல், குண்டு பல்பை காவிரி மணலில் உடைத்து, நீர் நிரப்பி, சினிமா காட்டும் போது, அதில் மணலையும் தூவுவோம்.

அம்மாவை சோகத்திலிருந்து மீட்டு வெளிக்கொண்டு வரும் பார்ட் டைம் ஜாபும் எனக்கு இருந்தது. மாயவரத்திலிருந்து தஞ்சை திரும்பியதும், மேல அலங்கம்/மல்லிகை கொடி வீடே வேண்டாம் என்று வீடு மாறி விட்டோம். இந்த முறை, மீண்டும் ராணி வாய்க்கால் தெரு ஏரியாவுக்கு. முன்பு சொன்ன, மஞ்சள் காமாலை கரஸ்பாண்டண்ட் வீடு தாண்டி, ரவா தோசை வீடு(?!) சுந்தர மோகன் வீடு எல்லாம் தாண்டி, ஒரு டெட் எண்ட் இல்.. சேவு அமிர்தலிங்கம் பிள்ளை சந்து!

ராசாத்தி அம்மாள் வீட்டுக்குத்தான் நாங்கள் குடி போனோம். அவர்கள் கணவர் தங்கவேல் மூப்பனார். 60 வயதுக்கு மேல் இருக்கும்; எங்கேயோ ட்ரைவராக இருந்தார்; நேரம் கிடைக்கும் போதெல்லாம், வீட்டிலேயே கான்கிரீட் செங்கல் செய்வதுமாய் பிசியாக இருப்பார். ராசாத்தி அம்மாள், அவரது உயிரோடு இருக்கும் (இரண்டாவது) மனைவி; ஒரு மகன்/மகள். அதை தவிர குடவாசலில் ஒரு மலேஷிய மனைவியும் உண்டு; அந்த அம்மாவுக்கும் மூன்று அழகான சைனீஸ் முகஜாடையில் பெண் குழந்தைகள். சின்ன வயதில், மலேஷிய பெண்ணை இந்தியா அழைத்து வந்து, யாரும் கல்யாணம் செய்ய ரெடி இல்லாததால், தானே கல்யாணம் செய்து கொண்டாராம்.

பக்கத்து காலனியில், சாந்தி அம்மா, சதா சிகிரெட் பிடிக்கும் அவர் கணவர் சண்முகம் மாமா,(அவருக்கு ஆண்டி ஸ்மோக்கிங் அட்வைஸர், அடியேன் :)) திருநெல்வேலி தெலுங்கு குடும்பத்தினர், அவர்கள் பிள்ளைகள்...ராஜி, அங்கச்சி, விச்சு, சௌந்தர், பூரணி மற்றும் மெண்டலி ரிடார்டெட் கண்ணா ஆகியோர் உண்டு. ரயில்வேயில் வேலை செய்து மறைந்த ஒருவரின் மனைவியும், அவர் மகள் ப்ரேமா அக்காவும் கூட அங்கே இருந்தனர்; அக்காவுக்கு கலெக்டர் ஆபிஸ் எதிரில் டாக்குமெண்ட் டைப் செய்யும் வேலை. இருந்த போதும் சிரிப்பு மாறாத முகமாய், அம்மாவிடம் வேலையின் களைப்பால் விலாவே வலிக்குது என்று சொல்லிக் கொண்டிருப்பார். அம்மாவும், அப்பாவும் நானும், மெல்ல இந்த புதிய உலகத்தில் எங்கள் பழைய சோகத்தை மறக்க ஆரம்பித்தோம்.

இதற்கு இடையில், ஒரு பக்கத்து வீட்டு அமெச்சூர் ஜோசிய பெண்மணி, மணியும் அப்பாவும் ஒரு வருஷம் பிரிந்து இருந்தால் நல்லது, என ஒரு புது குண்டை தூக்கி போட்டுவிட்டாள். அதுவும் கணக்கில் ஒரு பத்து வருடத்தை மிக்ஸ் அப் செய்து விட்டு!

ஏழாங்க்ளாஸிலோ, இங்க்லீஷ் மீடியம் தொடர்ந்து தொல்லை தந்து வந்தது. வெள்ளை விஸ்வலிங்கம் சார்.. “ராஜராஜ ச்சோளா வாஸ் எ க்ரேட் கிங்.. என்று ஆரம்பித்து நடத்தும் ஹிஸ்ட்ரி க்ளாஸும், பிடிபடவே இல்லை; எல்லாம் நன்மைக்கே என்று, மாயவரத்திலிருந்து ஆடுதுறைக்கு மாற்றல் ஆகி விட்ட, பெரியம்மா வீட்டிற்கு போய்விட்டேன், எட்டாம் க்ளாஸ் படிக்க.


மீண்டும், தமிழ் மீடியம், இந்த முறை படிப்பு கொஞ்சம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. பள்ளி ஆசிரியர்கள், என்னையும் அண்ணா குமாரையும் ஆள்மாறாட்டம் செய்து குழம்பும் தமாஷும் அவ்வப்போது உண்டு. அப்பா வழிப்பாட்டியின், நித்திய விருந்துபசாரமும், வீட்டு தோட்டத்தில் எங்கள் கத்திரிக்காய்/ வெண்டைக்காய் விவசாயமும் ஜரூராக நடந்தன; ஆடுதுறை குமரகுரு பள்ளியில் எட்டாம் வகுப்பு, இயற்கையான சூழலில், புறாக்கள் முணங்கும் பரிட்சை ஹாலோடு, இனிதாக நிறைவேறியது; அப்பா, ஜெயராம் வாத்தியாரை பிடித்து, மீண்டும் தஞ்சை கே.ஹெச்.எஸ்ஸில் இடம் கிடைத்து விட்டது!

ஆடுதுறை நண்பர்கள், கணேசனும், வரதராஜனும்.. “நீ.. போய் விட்டாய், ஒரு பெண்பிள்ளை எங்களை முந்திவிட்டது” என்று கொஞ்சநாளுக்கு குறைபட்டு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்கள். ஸோ.. பேக் டு கே.ஹெச்.எஸ், பார் நைந்த், பட் சேஃப்லி இன் தமிழ் மீடியம், திஸ் டைம் :))

ஒன்பது முதல் பனிரெண்டு வரையான, பள்ளி அனுபவங்களை, சந்தித்த விதம் விதமான ஆசிரியர்களை பற்றி, அடுத்த பதிவுகளில் எழுதுகிறேன், நண்பர்களே :))))

தஞ்சையிலிருந்து தமாம் தொடரும்...





2 comments:

Thanjavurkaran said...

// செண்ட்ரல் ஹாலின் உள்கூடாக, மரத்தாலான பால்கனி உண்டு; ஹாலின் முழு உள் சுற்றளவுக்கு//

நான் 1983-1986 KHSல் படித்தேன் . மர பால்கனியில் நடந்தால் அபராதம் உண்டு. ஒரு முறை சென்று அபராதம் விதிக்கப்பட்டு அந்த ரூபாயை வீட்டில் பொய் சொல்லி வாங்குவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது.

பிறகு ஒருமுறை TNPSC தேர்வு எழுத சென்றபோது இந்த சம்பவ நினைவு வந்தது. இப்போது மறுபடியும்.

நீங்கள் படித்தபோது அப்படி ஏதும் உண்டா. ஒருவேளை அப்போது மர பால்கனி உறுதியாக இருந்திருக்கும்

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க தஞ்சாவூர்காரரே,

நான் 82ல் பள்ளி படிப்பை முடித்து விட்டேன்; அப்போதே அதிகம் பால்கனியில் நடக்க விடமாட்டார்கள். ஆனால் பண அபராதம் எதுவும் நடைமுறையில் இருந்ததாக நினைவு இல்லை; செண்ட்ரல் ஹாலில் முட்டி போட வைப்பதுதான் அதிகபட்ச தண்டனை; அதற்கே அவமானம் தாங்காமல் அழுதுவிடுவோம்