June 20, 2010

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 4.

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 4.
தமாம் பாலா                                                                                  For audio please click here


டப்பா வாலா தெரியுமா உங்களுக்கு?? பம்பாய்காரர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். வீட்டில் கட்டிய டிபன் கேரியரை, ஆள் மாற்றி மாற்றி, சரியாக அலுவலகம் சேர்த்து, மாலையில் பழையபடி வீட்டில் சேர்ப்பவர்கள் தான் இந்த டப்பா வாலாக்கள். பி.பி.சியில் இவர்களைப்பற்றி சிறப்பு செய்தி வந்தது என்றும் இளவரசர்(இன்னும் எத்தனை வருசத்துக்கு சாமி ?!?) சார்லஸ் இவர்களை பாராட்டி உடன் படம் எடுத்துக்கொண்டார் என்றும் கேள்வி!

இப்போது, ஏன் டப்பா வாலா பற்றி நாம் பேசவேண்டும் என்ற விஷயத்துக்கு வருவோமா? சுற்றுலாவில் பொதுவாக ரெண்டு வகை. தனி பஸ் எடுத்து, வீட்டிலிருந்து கைதட்டிக்கொண்டே ஊர் ஊராக போய் வருவது முதல் வகை. இல்லை, பொது ரயிலிலும் பஸ்ஸிலும் போய், குழுவாக சென்று வருவது இரண்டாவது வகை; இது பெரும்பாலும் தொலைதூரத்துக்கு பொருந்தும்.



ஸாபாவுக்கு நாங்கள் வந்தது இரண்டாவது வகையில்! ஹனாயில் ஏற்றிவிட்டதோடு ஏஜண்ட் குயன் வேலை முடிந்தது. லோகாய் ஸ்டேஷனிலிருந்து ஸாபா வரைக்கும் இன்னொருத்தர். ஸாபாவில், எல்லாம் ஹோட்டல் ஸம்மிட் பொறுப்பு. இங்கே தான் வில்லங்கம் ஆரம்பித்தது. காலங்காத்தாலே, விடுதியில் நுழைந்து சடுதியில் நம் காரியங்களை முடித்து கிளம்பலாம் என்ற நினைப்புக்கு ஆப்பு(!) வைத்து விட்டார் ஏஜண்டு(கள்)

உங்கள் பொருட்களை ஸ்டோர் ரூமில் வைத்துவிட்டு, பொதுவாக குளித்து, காலை சிற்றுண்டி முடித்து கிளம்பலாம்; மாலைக்கு மலையடிவார கிராமத்தில் வீட்டுத்தங்கல் (ஹோம் ஸ்டே) என்று ஸப்பா ஸம்மிட் ரிசப்ஷனில் ஒரு ஸ்டே ஆர்டர் போட்டு விட்டனர். அண்ணன் மணி டென்ஷன் ஆகி, ஹனாய் ஏஜண்டுக்கு மொபைல் கால் போட்டால், அவனது காலை தூக்கத்தில் அது மிஸ்டு காலா(வதி ஆ)கிவிட்டது.

ஒரு வழியாக போராடி எல்லோருக்குமாய் 2 மணி நேரத்துக்கு ஒரு ரூமை பிடித்தோம் ஸம்மிட்.டிலேயே. குளித்து முடித்து, ரவீந்திரர் கைவண்ணத்தில் ரெடிமேட் 3 இன் 1 காபியும், அடியேன் முயற்சியில் ப்ரெட் டோஸ்டுமாய் களை கட்டியது காலை உணவு.  அறையிலிருந்து வெளியே பார்த்த போது, ஆகாயத்திலிருந்து மழைக்கு பதிலாக பசுமையை தூவியது போல அக்கம்பக்கம் செடிகொடிகளும் மலர்களுமாய், கண்ணுக்கு குளிர்ச்சியாக தென்பட்டது.

முன்பே சொன்னது போல், திட்டமிட்ட சுற்றுலாவில் அவ்வப்போது நடைபெறும் தப்புக்களுக்கு நடுவே, சில சரியான விஷயங்களும் நடந்துவிடுவது உண்டு. எங்களுக்காக நியமிக்கப்பட்ட பழங்குடி சுற்றுலா வழிகாட்டிப் பெண் அதில் ஒன்று. (அப்பாடி, கஷ்டப்பட்டு எதனிக் டூரிஸ்ட் கைட்-ஐ மொழி “பெயர்த்து” விட்டேன் :))

நாங்கள் ஊர் சுற்றிப் பார்க்கும் நோக்கத்தில், ஸம்மிட்டுக்கு வெளியே வந்தபோது, வெளியே கண்ணை பறிக்கும் ஊதா நிறத்தில் ஒரே மாதிரி உடை அணிந்த பெண்கள் நின்றிருந்தனர். அவர்கள் வியட்னாமியர் போல வெண்ணை வெள்ளை நிறத்தில் இல்லாமல், பழுப்பேறிய சிவப்பு நிறத்தில், கொஞ்சம் செவ்விந்தியர் போல, முகத்தில் லேசான கிராமத்துக்களையுடன் தென்பட்டனர். அந்த கும்பலிலேயே சற்று தெளிவாகவும், பிரகாசமாகவும் தென்பட்ட ஜிங் என்ற பெண்தான் எங்களுக்காக ஸம்மிட் நியமித்த வழிகாட்டி!


ஜிங் வழிகாட்டுதலில் நாங்கள் பார்த்த லவ்வர்ஸ் மார்க்கெட், மற்றும் அன்று மாலை நாங்கள் செய்த ஹோம் ஸ்டே, இன்னும் பல விஷயங்களை புகைப்பட சான்றுகளோடு வரும் பதிவுகளில் பார்ப்போம் நண்பர்களே; அது வரை நன்றி, வணக்கம்!


 ஸா..பா.. தொடரும்

7 comments:

ராமலக்ஷ்மி said...

ஜிங் சொன்ன தகவல்களுடன் புகைப்படங்களும் அனுபவங்களும் மலரட்டும்.

முதல் படம் பற்றிய குறிப்பு:)?

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க‌ ராம‌ல‌க்ஷ்மி...

இந்த‌ ப‌திவிலே உள்ள‌ முத‌ல் ப‌ட‌ம் ஏதோ நினைவுச்சின்ன‌ம்.

அது என்ன‌ அப்ப‌டின்னு விவ‌ர‌ம் சேக‌ரிக்காம‌ல் விட்டு விட்டேன் :‍‍(

அது ஒரு கனாக் காலம் said...

ஸா பா ..என்று பார்த்தவுடன் ... சங்கீதம் என்று நுழைத்தேன் .... வியட்நாம் பற்றியதா ... நன்றாக இருக்கிறது... தொடர்ந்து வருகிறேன்

Venkat Raghavan said...

பாலா,
நான்கு பதிவுகளையும் இன்றுதான் படித்தேன். வியட்நாமின் ஜிலு ஜிலுவும் பயணத்தின் பரபரப்பும் எனக்கும் தொற்றிக்கொண்டுவிட்டது. (எனக்கும் முதல் படத்தை பற்றிய கேள்வி உண்டு. அது உங்கள் கட்டு சாத மூட்டை யுடன் ஒத்திசைய பானங்கள் தானே!). ஸா பா ஆலாபனை தொடரட்டும்.
அன்புடன்
வெங்கட்

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க‌ ந‌ண்ப‌ர் க‌னாக்கால‌ம்
எங்க‌(ள்) வ‌லைக்குடிலுக்கு
த‌ங்க‌ள் வ‌ர‌வு ந‌ல்வ‌ர‌வாகுக‌!

Dammam Bala (தமாம் பாலா) said...

வெங்க‌ட்! உ.பான‌ங்க‌ளை
ச‌ரியாக‌ இன‌ம் காண்ப‌தில்
உங்க‌ளை மிஞ்ச‌ யாருண்டு?

விய‌ட்னாமில் பெட்டிக்க‌டையில்
கூட‌ கொட்டிக்கிட‌க்குது த‌ண்ணி(!)
கூ.சிக் ர‌யில் கூபேயிலும் கூட‌.

வ‌லைம‌னைக்கு வ‌ந்த‌ ந‌ண்ப‌
பின்னூட்ட‌த்துக்க்கு வ‌ந்த‌ன‌ம்!

Meena said...

மிகவும் சிறப்பாக உள்ளது. சுற்றுலா இடத்திற்கே சென்று வந்தது போல் இருந்தது