April 3, 2022

தோய் அன்

தோய் அன்
தமாம் பாலா

இது ஒரு ஞாயிற்றுக் கிழமை. சைகானில் ஏப்ரல் மாத மதிய வெயில் மழைச்சாரல் போல் பெய்து கொண்டிருக்கிறது. நண்பர் ஒருவரைப் பார்க்க ஒரு மணி நேரப் ப்யணம் கூடவே கைபேசியில் தோய் அன் தட்டச்சு.

வியட்நாமில் கோவிட் காலம் முடிவடைவது போல இல்லை. இருந்தாலும் பன்னாட்டு விமான சேவை தொடங்கி விட்டது. இரண்டாண்டு கடந்து, ராதிகாவும் சென்னைக்கு, ஊரெல்லாம் சுற்றி ஹோசிமின்-ஹனாய்-டில்லி-சென்னை என்று கடந்த மாதம் சென்று சேர்ந்திருக்கிறாள்.

நானும் ஹோசிமின் நகரம் விமான நிலையத்தில் இருந்து மாவட்டம் 12ல் எங்கள் குழுமத்து வீட்டுக்குக் குடி மாறி விட்டேன். முன்பு இருந்த நகரத்து 15ம் மாடி அடுக்கு மாடி குடியிருப்புக்கும், மாவட்டம் 12ந் தோய் அன் புற நகர் பகுதிக்கும் எத்தனையோ வித்தியாசங்கள் உண்டு.

குறைந்தது 1 மணி நேரப் பயணம், 10.12 கிமீ தூரத்துக்கு. காலையில் சீக்கிரம் எழுந்து கிளம்புவது சிரமமாக இருக்குமோ என நினைத்தேன், ஆனால் அது எளிதாகவே இருக்கிறது. சாப்பாட்டுப் பிரச்சினை என்பது மட்டும் எளிதில் தீர்க்க இயலாதது, அதுவும் வெளிநாடுகளில் வாழும் போது.

காலையில் கியா டிங் பூங்கா முன்பு, ஒரு பெண் அவித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கள், வேக வைத்த சோளம் ஏன் சிறு வாழைப்பழங்கள் கூட அந்த வகையில் தயார் செய்து நடைபாதையில் அமர்ந்திருப்பாள். தினமும் மாறிமாறி வாங்கி அவளது விலைப்பட்டியல் எனக்கும் அதுப்படி ஆகி விட்டது. ஒரு நாள் சோளத்துக்கு சர்க்கரை வள்ளியின் விலை போட்டு மீதி சில்லரை தந்தாள். அவளுக்கு நினைவூட்டி சரி செய்தேன். இன்னொரு நாள் ஏழாயிரம் கேட்டாள், என்னிடம் சில்லரையாக ஆறாயிரமும் முழு நோட்டாக நூறாயிரமும் இருந்தன. ஆறாயிரமே போதும் என்று சொல்லி விட்டாள். பெரிய நோட்டு வாங்கினால் மீதி சில்லரை தரும் பொறுப்பு வந்து விடும் அல்லவா?

நேற்று சனிக்கிழமை, ஊரில் தெலுங்கு வருடப்பிறப்பு பண்டிகை என ராதிகா நினைவூட்டினாள். அரைநாள் வேலை தானே என்று மதியம், மாவட்டம் 1க்கு சென்றேன். அங்கு பனானா உணவகத்தில் மலேசியத் தமிழர் ராமனின் உபயத்தில் நல்ல சைவ சாப்பாடு பரோட்டவுடன். எதேச்சையாக வந்த முன்பு சவூதியில் இணைந்து பணி செய்த தமிழ் நண்பரையும் அங்கு சந்தித்தேன், எதிர்பாராத விதமாக. பழைய கதைகள் நிறைய பேசினோம். மாரியம்மன், தண்டாயுத பாணி கோயில்கள் சென்று விட்டு, இந்திய மளிகைப் பொருள் கிடைக்கும் கடைக்குப் போய் விட்டு நண்பர் விடைபெற்று அவரது ஊருக்கு கிராப் டாக்ஸி பிடித்து சென்று விட்டார்.

நானும் மாலையில் தோய் அன்னுக்கு திரும்பி விட்டேன். இரவு உணவுக்காக அக்கம் பக்கத்து வீதிகளில் சுற்றித் திரிந்த போது, ஒரு காம் சாய் கடை கண்ணில் பட்டது. அரிசி சோறும், கொஞ்சம் போல டோபூ, காய்கறிகள், முளை கட்டிய தானியம், மிளகு சூப் என்று ஒரு வித்தியாசமான வியட்நாமிய சாப்பாடு. கடையின் உள்ளே பெண் புத்தர் படமும் உள்ளூர் மொழியில் போதனைகளும் இருந்தன. பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா என, ருசி அறியாத பசியில் ஒரு கட்டு கட்டி விட்டேன். 

அந்த தோய் அன்னின் முன்னிரவில்,ஆங்காங்கே இருட்டும் வெளிச்சமுமாக மக்கள் அவரவர் வீட்டுக்கு முன் குடும்பத்துடன் அமர்ந்து குடித்து, உண்டு, கதை பேசி மகிழ்ந்திருந்தனர். நான் சந்திர மண்டலத்தில் இறங்கிய நீல் ஆர்ம்ஸ்ட்ராங் போல, அந்த பிரதேசத்தில் காலடி எடுத்து வைத்த முதல் இந்தியனாய் என்னை நினைத்த படி, என் வீடு வந்து சேர்ந்தேன்.

எனது தோய் அன் பதிவு முடிந்தது, நண்பர் வந்து அழைத்துச் செல்ல காத்திருக்கும் இந்த நொடியில்.

No comments: