May 11, 2022

பயணிகளின் கனிவான கவனத்துக்கு

பயணிகளின் கனிவான கவனத்துக்கு
தமாம் பாலா

பயணிகளின் கனிவான கவனத்துக்கு; இரயில் நிலைய அறிவிப்பில் நாம் கேட்ட அழகான அன்பான பெண்குரல். அந்த குரலுக்குச் சொந்தக்காரர் யாரோ தெரியாது ஆனால் குரல் மட்டும் மிக பரிச்சயமானது.

எண்பதுகளில் வானொலி கேட்டவருக்கு டில்லி சரோஜ் நாராயண சாமியும், இலங்கை வானொலியில் ராஜேஸ்வரி சண்முகம் என நினைக்கிறேன் அவர் குரலும் நாம் வியந்தவை.

பிற்காலத்தில் தொலைக்காட்சியில் ஷோபனா ரவி மற்றும் அழுத்தமான வணக்கம் சொல்லும் நிர்மலா பெரியசாமி வரை குரலழகியர் பட்டியல் முடிவில்லாத ஒன்று.

பெண் வாசனையே அற்ற அரேபிய ஆணுலகத்திலும் ஆங்காங்கே பெண் குரல் தென்படுவதுண்டு. தனது காரில், கூகுள் வரைபடத்தை வழிகாட்டும் பெண்குரலைக் கேட்பதற்கே தெரிந்த வழியாயினும், மீண்டும் மீண்டும் வழி கேட்போம் என  நண்பர்கள்  கூறுவதுண்டு. யூ டர்ன் என்பதை, டர்ன் லெப்ட் அண் டர்ன் லெப்ட் என்று அவள் கூறும் அழகை ரசிக்க ஒரு ரகசிய ரசிகர் மன்றமே அமைத்து விட்டார்கள் மானசீகமாக.

அலுவலகத்துக்கு, கம்பெனி காரிலோ, க்ராப் டாக்ஸி அல்லது க்ராப் பைக்கில் செல்வதில் எந்த சுவாரசியமும் இல்லை. சைகானில் பேருந்தில் சென்றால் இன்னும் கூட நமது அந்தக்காலம் போல குழந்தைகள் எழுந்து பெரியவருக்கு இடம் தருவது அற்புதமான காட்சி.

பேருந்தில் ஒவ்வொரு நிறுத்தம் வரும் போதும், பதிவு செய்த குரலில் ஒரு பெண், பாபு காக்கா என்றும் செ சப் டிஞ்சா என்றும் அறிவிப்பு செய்கிறாள். அவள் அதை முடிக்கும் முன் அடுத்த நிறுத்தமே வந்து விடுகிறது. ஆங்கில சொற்களை வியட்நாமிய மொழியில் கொஞ்சிக் கொஞ்சி சொல்லும் அந்தப் பெண், டைகோ என்றால் டைகர்- ஹைனிக்கன் பியர் தொழிற்சாலை வந்து விட்டது என்று பொருள். கன் ட்ரி ஹவுஸஸ் என்ற உணவு மற்றும் குடிப்பிடங்களை அவள் குறிப்பிட்ட போது எனக்கு இது பற்றி எழுதா விட்டால் தலை வெடித்து விடும் விக்கிரமாதித்தா என்றே ஆகி விட்டது.

ஹோச்சி மின் சிட்டியின் இன்னொரு பக்கத்துக்கு மாறிய பின் வேறொரு பதிவுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். அது வரை வணக்க்கம்!

No comments: