November 22, 2023

வியட்நாமில் ஒரு மோட்டார் சுந்தரம் பிள்ளை

வியட்நாமில் ஒரு மோட்டார் சுந்தரம் பிள்ளை
தமாம் பாலா

வியட்நாமுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பு கிட்டத்தட்ட இரு நூற்றாண்டைத் தாண்டிய ஒன்று.

கோவிட் காலத்தில் அதற்கு பலியான சைகான் தண்டபாணி கோயில் முத்தையா குடும்பத்தினரும், மாரியம்மன் கோயில் மற்றும் சுப்ரமணிய சுவாமி கோயிலின் பராமரிப்பாளர்கள் யாரும் தமிழ் பேசுவது இல்லை, வியட்நாமிய மொழி மட்டுமே.

கடந்த சில மாதங்கள் முன், எதேச்சையாக எனது வயதை ஒத்த தமிழ் வியட்நாமிய இஸ்லாமிய நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் தமிழை சரளமாக பேசுவது கண்டு மகிழ்ந்தேன் நான்.

இந்த கதை அவர்கள் யாரையும் பற்றியது அல்ல. சமீபத்தில் நான் சந்தித்த வியட்நாமில் நிரந்தர வாசம் செய்யும் ஒரு தமிழ் நண்பர் சொன்னது இது.

வியட்நாம் போருக்கு முன், இங்கு சைகானில் உள்ள கோயிலுக்கு தமிழ் நாட்டில் இருந்து பூசாரி ஏற்பாடு செய்வது வழக்கமாம். அந்த வகையில் தமிழ் நாட்டு நவக்கிரகக் கோயிலில் இருந்து ஒருவர் வியட்நாம் வந்தாராம். வந்தவர் இங்கு ஒரு வியட்நாமிய பெண்ணை மணந்தாராம்.

போர்க் காலத்தில், தமிழ் நாடு திரும்பிய அவர், தமது வியட்நாமிய குடும்பத்தையும் தனது ஊரிலேயே ஒரு தனி வீட்டில் குடியமர்த்தினாராம். அவரது குழந்தைகள் அங்கு வளர்ந்து, பிற்காலத்தில் வியட்நாம் நாட்டில் பணி புரிந்து தற்போது தொழிலதிபராய், சிறந்த நிலையில் வாழ்கின்றனர், எனக் கதையை நிறைவு செய்தார் எனது அன்பு நண்பர்.

எனக்கு, தஞ்சையில் எனது பள்ளி நாளில் எங்கள் வீட்டின் உரிமையாளர் தங்கவேல் ஐயாவும், மலேயாவில் இருந்து அவர் வரவழைத்து பின்னாளில் மணந்து கொண்ட குடவாசல் டீச்சரும் அவரது மூன்று மகள்களும் அழகு சீனப் பதுமைகளாக மனக்கண் முன் வந்து சென்றனர்.

வாழ்க்கைதான் மனிதர்களை எங்கோ பிறக்க வைத்து, எங்கோ வாழ வைக்கும் விந்தை!

No comments: