July 29, 2008

சாதனையாளர் டாக்டர் பாலாஜி


பலித்தது என் வாழ்நாள் கனவு!
(நன்றி- ஆனந்த விகடன்)
''நான் சின்ன வயசுல இருந்தே பெரிய டாக்டர் ஆகணும். மருத்துவத் துறையின் மிக உயரிய விருதான பி.சி.ராய் விருதை வாங்கணும்னு கனவோட இருந்தேன். என்னோட கனவு மெய்ப்பட்டிருச்சு!''-விருது வாங்கிய சந்தோஷம்பொங்கப் பேசுகிறார் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி. பல் மற்றும் முகச்சீரமைப்பு நிபுணர். பல் மருத்துவத் துறையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பி.சி.ராய் விருது பெற்றிருக்கும் தமிழர்.

சென்னையில் உதடு, அண்ணப்பிளவு இம்ப்ளான்ட் மையத்தை நடத்திவரும் பாலாஜி, மொரீஷியஸ், அந்தமான், செஷல்ஸ், மாலத்தீவுகள், இலங்கை ஆகிய நாடுகளிலும் மருத்துவ ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.
''பி.சி.ராய் விருது என் வாழ்நாள் கனவு! அதைவிட சந்தோஷம், விருதைக் கொடுக்கும்போது நம்ம ஜனாதிபதி என்கிட்டே மட்டும்தான் பேசினாங்க. விழா மேடையில நான் விருது வாங்குறதுக்கு முன்னாடி என்னோட பயோடேட்டாவை வாசிச்சாங்க. அதுல நான் அந்தமான் தீவுகளுக்கு மருத்துவ ஆலோசகராக இருக்கிறதைப் பத்தி சொல்ல... ஜனாதிபதி முகத்தில் சட்டுனு ஒரு மகிழ்ச்சி. 'நீங்க அந்தமானில் வேலை பார்த்திருக்கீங்களா? நானும் அங்கே இருந்திருக்கேன், தெரியுமா?'ன்னு என்கிட்ட ஆர்வமா கேட்டாங்க. என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி அது.
இதுவரை எனக்கு எத்தனையோ விருதுகள், பதக்கங்கள் கிடைச்சிருக்கு. இதுக்கெல்லாம் ஒரே காரணம் ஓயாத உழைப்பு. அறுவை சிகிச்சையில் புதுசு புதுசாக ஏதாவது கண்டுபிடித்துக்கொண்டிருந்தால்தான் உலகம் நம்மைத் திரும்பிப் பார்க்கும். சமீபத்தில் நான் எழுதின, 'டெக்ஸ்ட் புக் ஆஃப் ஓரல் மேக்ஸில் ஃபேஷியல் சர்ஜரி' புத்தகம் உலகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுஇருக்கிறது. லண்டனின் புகழ்பெற்ற பதிப்பகமான 'எல்சிவியர்' அந்தப் புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறது. ஒரு தமிழன் இந்த சாதனை செய்திருப்பது பெரிய விஷயம் என மொரீஷியஸ் தமிழர்கள் என்னிடம் சொன்னார்கள். சின்னச் சின்ன பாராட்டுக்கள்தான் பெரிய சாதனைக்கு அடிப்படை!

உதடு பிளவு பாதிப்புகள் பற்றி இங்கே விழிப்பு உணர்வு மிகக் குறைவு. அமெரிக்காவில் மட்டுமே இருந்த பி.எம்.பி. அதாவது 'எலும்பு உருவாக்கும் புரதம்' சிகிச்சை முறையை முதன் முறையாக இந்தியாவுக்குக் கொண்டு வந்தேன். விபத்தில் அடிபட்டு எலும்புகள் உடைந்தால்கூட இந்த சிகிச்சை முறையில் எலும்புகளை வளரவைக்க முடியும். இந்த விருது இன்னும் எனக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது. மேலும், நிறைய விஷயங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற கடமையும் வந்திருக்கிறது. இந்தத் துறையில் இன்னும் நிறைய தூரம் போக வேண்டும்!''- கண்கள் மின்னச் சிரிக்கிறார் எஸ்.எம்.பாலாஜி!

No comments: