January 5, 2010

க்வாட்ராங்களும் கால் டபரா காப்பியும் – ஒரு கொசுவர்த்தி சுருள்


க்வாட்ராங்களும் கால் டபரா காப்பியும் – ஒரு கொசுவர்த்தி சுருள்
தமாம் பாலா

போன மாதம், எங்கள் பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது; யங் அலுமினி (அலுமினிய பாத்திரம் இல்லைங்க, சமீபத்தில் அந்த கல்லூரியில் படிப்பை முடித்தவங்க, பழைய மாணவர்கள் :)) மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, நடைபெறும் இடம் கல்லூரி வளாகத்தின் க்வாட்ராங்கிள் என தெரிவித்து.

கல்லூரி விட்டு வந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது; இருந்தாலும் அவினாசி ரோட்டுக்கு இருபுறமும் விரிந்திருக்கும் கல்லூரி வளாகம், இன்டஸ்ட்ரியல் இன்ஸ்டிடியூட், வகுப்பு அறைகள், லேப்கள், விளையாட்டு மைதானங்கள், வட்ட வடிவ ஏ,பி,சி,டி ஹாஸ்டல் பிளாக்குகள், பெண்கள் ஹாஸ்டல்(!) மற்றும் முதல் வருட தங்கலான ஜி பிளாக் கொட்டடி எல்லாம் கண் முன்னால் வந்து போயின, ஒரே கணத்தில். ஆனால் க்வாட்ராங்கிள் மட்டும் சுத்தமாக நினைவுக்கு வரவில்லை.

கல்லூரி நண்பர்கள் யாஹூ குழுமத்தில், சக மாணவி சித்ரா கல்லூரியின் அட்மின் பில்டிங் பக்கத்து மேடையை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் இரும்பு கட்டிடம் தான் அது என மின்னஞ்சலில் அறிவுறுத்தினார். நாங்கள் படித்த காலத்தில் அந்த கட்டுமானம் இருந்ததாக நினைவு இல்லை; பிற்காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

நாங்கள் படித்த காலத்து கல்லூரி வளாகத்தை மனக்கண்ணில் பார்த்து மகிழ்ந்த போது கூடவே வேறு ஒரு சம்பவமும் நினைவுக்கு வந்தது.(அதான் உடனே கொசுவர்த்தி ஏத்திட்டேன்)

கல்லூரி காலத்தில் நான், ஆளும்கட்சி, எதிர்கட்சி என மாறிமாறி போகும் அரசியல்வாதி போல, கொஞ்சநாள் சித்தி வீட்டில், கொஞ்சநாள் கல்லூரி விடுதியில், பிறகு 2 வருடம் ஜிடிநாயுடு ஹாஸ்டலில் என மாறிக்கொண்டே இருந்தேன்.

கல்லூரிக்கு வெளியே தங்கிய காலங்களில், பெரும்பாலும் பஸ் பயணம் தான். நடுவே ஒரு மாறுதலுக்காக, தஞ்சாவூரிலிருந்து பெரியப்பாவிடம் கேட்டு ஒரு அட்லஸ் சைக்கிளை ரயில் மூலமாக இறக்குமதி செய்து கொண்டேன்; அப்போதைக்கு பென்ஸ் கார் வைத்திருப்பது போன்ற திருப்தியை தந்தது அந்த பழைய சைக்கிள்!

வழக்கம் போல கல்லூரிக்கு தாமதமாக சைக்கிளில் வந்து இறங்கி, ஹாஸ்டல் போகும் வழியில் உள்ள இரும்பு கட்டிடம் அருகே அதை நிறுத்தி விட்டு, வகுப்புக்குள் நுழையும் போது சொல்ல வேண்டிய சால்ஜாப்புடன் உள்ளே சென்றேன். மாலையில் சைக்கிள் ஸ்டாண்டுக்கு வந்து பார்த்தபோது தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது...

எப்பவும் வைத்த இடத்திலே சமர்த்தாக நின்றிருக்கும் அந்த அட்லஸ் சைக்கிள் காணாமல் போய் விட்டது! அதன் பூட்டு ஒரு சாதாரண பூட்டு; கொண்டை ஊசி போட்டால் கூட திறந்திருக்கும். சே.. ட்யூப் லாக் போட்டிருக்கலாம், முன் யோசனையே இல்லாமல் எப்பவுமே இப்படித்தான்... கையில் சைக்கிளின் சாவியை வைத்துக்கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சற்று தொலைவில் இருந்த இரும்பு கட்டிடமோ, யார் எடுத்தார் என்று எனக்குத் தெரியும், ஆனால் எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை நான் சொல்லமாட்டேன் என்பது போல அமைதியாக நின்று கொண்டிருந்தது.

அப்போது என வகுப்புத் தோழிகள் சரசவாணியும்( எங்க ஊர்ஸ்) அவளது இணைபிரியா தோழி புஷ்பலதாவும் என்னை பார்த்தவாறே லேடீஸ் ஹாஸ்டல் நோக்கி சென்றார்கள். இருந்த மன குழப்பத்தில் அவர்களுக்கு ஒரு ஹலோ சொல்லக்க்கூட தோன்றவில்லை.

‘போலீஸ்-லே கம்ப்ளெய்ண்ட் கொடுத்தாக்க, வேறே ஒரு சைக்கிளாவது கிடைக்கும்; யாரோ ஒரு புண்ணியவான் அறிவுரை சொன்னார். சரி அதையும் தான் பார்த்துடலாம்னு, இந்திய தொலைக்காட்சியில் முதல்முறையாக.. ஸாரி.. வாழ்க்கையிலேயே முதல்முறையாக, பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் காலேஜ் பக்கத்து போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர் ஆனேன்.

ஓங்கு தாங்காக முறுக்கு மீசையோடு இருந்த போலீஸ்காரர் அப்போதுதான் வந்த காபியை டபராவில் ஊற்றி குடித்துக் கொண்டிருந்தார். திக்கித்திணறி நான் சொல்லி முடிக்க அவர் எதுவும் பேசாமல், குடித்துக்கொண்டிருந்த காப்பியில் கொஞ்சம் போல டபராவில் ஊற்றி என்னிடம் நீட்டினார். நான் அதை குடித்து முடித்தவுடன், என்னிடம் க்ம்ப்ளெய்ண்ட் எழுதி வாங்கிக்கொண்டு, பார்க்கலாம் தம்பி என்று சொல்லி அனுப்பி விட்டார். அதன் பின் எந்த தகவலும் இல்லை; சைக்கிள் போனது போனது தான்.

ஏற்கனவே, மணி (நான் தாங்க!) ஏதோ படிக்கறானே தவிர அவனுக்கு சாமர்த்தியம் போதாது, பயந்தாங்கொள்ளி, போன்ற பட்டப்பெயர்களோடு ‘சைக்கிளை தொலைத்தவன்’ என்ற பெருமையும்(?!) சேர்ந்து விட்டது. காவலர் கொடுத்த கால் டபரா காப்பி மட்டுமே எனக்கு கிடைத்த ஆறுதல் பரிசு.

இத்தோடு இந்த கொசுவர்த்தி எரிந்து முடிகிறது. மீண்டும் வேறு ஒரு கொசுவர்த்தியோடு உங்களை சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் அன்பு நண்பன் தமாம் பாலா!

2 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு:)!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Dammam Bala (தமாம் பாலா) said...

///ராமலக்ஷ்மி said...
நல்ல பகிர்வு:)!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!///

வாங்க ராமலக்ஷ்மி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
வலையுலக முத்துக்களுக்கும்
எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

என்றும் அன்புடன்
தமாம் பாலா