September 7, 2010

பிடி

பிடி                                                                                  Pidi, For Audio Please Click Here

தமாம் பாலா

அது ஒரு மாலை நேரம். பறவைகள் கூட்டுக்கு திரும்புவது போல மக்கள் கூட்டம் கூட்டமாக வீடு திரும்பும் நேரம்; சூரியன் உள்பட விதிவிலக்கு இல்லாமல். வருட விடுமுறையில், நங்கநல்லூர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன்.


பிடிங்க அவன.. ஓடறாம் பாரு என்று ஒரு கூச்சல் கேட்டது. எனக்கு எதிர்புறத்திலிருந்து பக்கமாக வந்து ஒரு பையன் ஓடிச்சென்றான். பின்னால் திபு திபுவென நான்கைந்து பேர்! கொஞ்ச தொலைவில் ஒரு நடுத்தர வயது பெண்மணி, நின்று கொண்டிருந்தார். ‘என்னாச்சு மாமி? பர்ஸை பிடுங்கிட்டு ஓடறான் சார்’


பர்ஸை தொலைத்தவரும், தட்டிப்பறித்து ஓடியவனும், துரத்தியவர்களும் சென்ற பின்னரும் என் காதில், ‘பிடி, பிடி’ என்ற வார்த்தைகள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன, அவ்வப்போது; இன்று இந்த கட்டுரையை எழுதும் வரையிலும்.


‘பேனாவை சரியா பிடிக்கணும்; எழுதும் போது, மூடியை கழற்றி வைக்கணும் அப்போதான் தேர்வு எழுதும் போது வேகமா எழுத முடியும்’ ஆசிரியர் ஒருவர் சொன்னது இன்றும் நினைவுக்கு வந்தது. எழுதி எழுதி வாழ்க்கைப் பாடத்தில் ஜெயித்த அந்த பள்ளி நாட்களில். கைரேகை ஆளுக்கு ஆள் மாறுவது போல, கையெழுத்தும் மாறுகிறது.


ஒவ்வொருத்தனும் பேனாவை பிடிக்கும் விதமும், தனி வகை. கட்டைவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் பிடிப்பது பொதுவானது. குமார் அண்ணா போல சிலர் கட்டை விரலுக்கும், நடுவிரலுக்கும் இடையில் கூட பேனா பிடிப்பதுண்டு; இங்க் கறை பட்ட விரல்கள் சாட்சியாக.


கிரிக்கெட் மட்டை பிடிப்பதில் கூட, சின்ன மாறுதல் செய்தால் பெரும் வெற்றி கிடைக்கும், அதற்கு நம்ம ஊரு அசாரூதின் உதாரணம் என்றும் பாக்கிஸ்தான் வீரர் ஸாகீர் அப்பாஸ் சொல்லிக் கொடுத்தார் என்றும் எங்கோ படித்த ஞாபகம்!

எதிராளியை அடக்க இரும்பு பிடி, நண்டு பிடி, கிடுக்கி பிடி, குரங்கு பிடி, உடும்பு பிடி எது வேண்டுமானாலும் போடலாம். அரசாங்கம், நினைத்தால் எதையும் அதிகாரத்தின் பிடியால் சாதிக்கலாம். ஆனால் வீடுகளில் பெரும்பாலும் செல்லுபடியாவது, அன்புப் பிடி தான். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தம் பிடியில் வைத்திருப்பது இப்படித்தான்; அவனுக்கு என்று ஒரு பெண் வந்து, அவனை தன் கைப்பிடிக்குள் கொண்டு வரும் வரையில்.


புராணங்கள் படித்திருக்கிறீர்களா? தாடி மீசையோடு முனிவர் வருவார். ராத்திரி பகலாய் உடலை வருத்தி, தவம் செய்து வரம் வாங்குவார். யாரவது அவரது கோபத்தை கிளறி விட்டால், ‘பிடி சாபம்’ என்று பொங்கி விடுவார். சாதாரணமாக 2 நாள் வரும் நோக்கியா கைபேசியின் பேட்டரி, 3G, மீடியா ப்ளேயர், ப்ளூடூத் என்று 1/2மணிக்குள் சார்ஜ் தீர்ந்து விடுவது போல தவ வலிமை, சுழியம் (நன்றி, மக்கள் தொலைக்காட்சி) ஆகிவிடும்


‘வாழ்க்கையிலே முன்னுக்கு வரணும்னா, எப்போவும் நமக்கு பிடிச்சதையே செய்யணும் என்று’ சில தத்துவவாதிகள் கூறுகின்றனர். வேறு சிலரோ, ‘பிடிச்ச வாழ்க்கை கிடைக்க லைன்னா, கிடைச்ச வாழ்க்கையை பிடிச்சுக்கணும்’ என்றும் யதார்த்த வாதம் பேசுகின்றனர். பாதி நேரம் நமக்கு எது பிடிக்கும் என்று நமக்கே புரிபடுவதில்லை. உணவு விடுதிக்கு போய், பக்கத்து ஆள் சாப்பிடும் ஐட்டத்தை ஆர்டர் செய்து விடுவதைப் போல!


ஆங்கிலத்தில் ஆக்ஸி மோரான் என்பது போல, தமிழில் நல்ல பாம்பு என்பது போல இந்த ‘புகை பிடிப்பது’ என்ற சொல்லாடல். சிகரெட் பிடிப்பதை விட்டு விடு என்றால், அது கீழே விழுந்து விடுமே என்பது ஒரு கடி ஜோக். உண்மையில் நான் புகை(யை) பிடிப்பதே இல்லை, அதைத்தான் வெளியே விட்டு விடுகிறேனே என்கிறான், என் சங்கிலி புகை நண்பன் ஒருவன். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்கின்ற இது போன்றவர்களை, நாம் நினைத்தாலும் திருத்தவா முடியும்?


அறிவியல், சூரியன் பூமியையும், பூமி சந்திரனையும் கண்ணுக்குத் தெரியாத ஈர்ப்பு விசையால் பிடித்து வைத்திருக்கிறது என்கிறது. கடல் கூட, காற்றில் மிதக்கும் பூச்சியை பிடிக்க முயல்வது போல அலை கரங்களை வீசித் தோற்கிறது. மன ஆறுதலுக்கு நான் படிக்கும் ராசி பலன் கூட, குரு உங்களுக்கு சாதகமாக வந்தும், ஏழரை சனியின் பிடியில் சிக்கியதால் பயன் படவில்லை என்றும், ராகு கேதுவின் பிடிக்குள் சூரிய சந்திரர் சிக்கியதால் கால சர்ப்ப தோஷம் என்றும் பலவிதமாக மிரட்டுகிறது.


பிடி என்பது வினைச்சொல் மட்டுமல்லபெயர் சொல் கூட. ;கத்திக்கும், கோடாலிக்கும் மரமே கைப்பிடியாக வரும் போது! கத்திக்கு மட்டுமா, கைப்பிடி, வீட்டு ப்ரஷர் குக்கருக்கும் அது உண்டு. எங்கள் வீட்டு குக்கரை நான் சரி செய்ய முயன்று, கைப்பிடி உடைந்து, எனது (இல்லாத) ப்ரஸ்டீஜை அழித்து விட்டது. நான் கடையில் கொடுத்து சரி செய்ய நினைத்தும், ராதிகா.. பரவாயில்லை, அப்படியே இருக்கட்டும் என்று சொல்லி விட்டாள். அப்போது தானே, அதன் சாக்கில் என்னை அவ்வப்போது நன்றாக ‘ஒரு பிடி பிடிக்க முடியும்?’


இப்போதெல்லாம், வைத்தியரிடம் போனால், ஸ்டெத் வைத்து பர்ஸ் பார்த்து, மெடிக்கல் டெஸ்டுகளை மொத்தமாக எடுக்கச் சொல்கிறார்கள். அந்த காலத்து அனுபவ வைத்தியர்கள், நாடியை பிடித்து பார்த்தே வியாதியை சொல்லி விடுவார்களாம்.

அடுத்தவர் மனதை ஆழம் பார்க்கும் உரையாடலை கூட ‘நாடி பிடித்து பார்ப்பது’ என்பார்கள். பல இடங்களில், வேலை பார்த்து, பல இடங்களிலிருந்து அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் வாங்கி காட்டி, ப்ரமோஷன் வாங்கும் என் நண்பன் ஒருவன் சொல்லுவான்.. ‘கையை பிடிச்சு முறுக்கணும், ஆனா உடைக்க கூடாது’ என்று. நானும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன், இன்றும் கூட!


மாட்டை கொம்பிலும், முயலை காதிலும், வாத்தை கழுத்திலும் பிடிக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். அதில், மனிதனை பணத்திலும் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். சிக்கலான நூல்கண்டின் முடிச்சை பிடிப்பது போல, ஒரு பிரச்சினையின் மூலத்தை அறிவதை, தெரிவதை நம் மலையாளி நண்பர்கள்.. ‘பிடி கிட்டியோ’ என்பார்கள். சரிதானே, பிடி கிட்டிவிட்டால், தூக்குவதில், கையாள்வதில் ஏது சிரமம்?


கற்றது கைப்பிடி அளவு, கல்லாதது உலகளவு என்பார்கள். நாம் ஒவ்வொருத்தரும், செல்வத்தை, சௌந்தர்யத்தை, கல்வியை, கேள்வியை கைப்பிடிக்குள் கொண்டு வர இரவு பகலாய் உழைக்கிறோம்; காற்றினை கையில் பிடிக்கும் இந்த கடின முயற்சியில்,
எளிதில் உடைந்து விடக்கூடிய கனவுக்குமிழிகளில், கற்பனை கயிறு கட்டி மிதந்து, கால வெளியில் பிடி சாம்பல் ஆகும் வரை.. இலக்கின்றி பறக்கிறோம் நாம் என்றே தோன்றுகிறது எனக்கு!

காரணம் இல்லாமல் கடைத் தெருவுக்கு சென்று வருவது போல, எந்த பிடிமானமும் இன்றி, பிடியை சுற்றி வந்த என் இந்த சிந்தனையை படிக்க உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ எனக்குத் தெரியாது. பிடித்தால் விட்டு விடுங்கள்; பிடிக்கவே இல்லை என்றால், எப்படி உங்களால் அதை விட முடியும் என்ற அதிபுத்திசாலித்தனமான(?!) கேள்வியுடன், உங்கள் கவனத்திலிருந்து..என் பிடியை மெல்ல நழுவ விடுகிறேன், நண்பர்களே!!

No comments: